|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 June, 2011

சென்னையில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20

வென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டாவில் உள்ள மைதானங்களில் நடக்கவுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து, சர்வதேச அளவில் உள்ளூர் போட்டிகளில் சாதித்த அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை ஆண்டுதோரும் நடத்துகின்றன. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் செப்.23ம் தேதி முதல் அக்.9ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.
சென்னையில் பைனல்:
இப்போட்டிகள் அனைத்தும் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட மூன்று முக்கிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடக்கவுள்ளது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வரும் செப்.23ம் தேதி தொடரின் முதல் போட்டி நடக்கவுள்ளது. தவிர இங்கு, ஒரு அரையிறுதிப் போட்டியும் நடக்கவுள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் அக்.9ம் தேதி பைனல் நடக்கவுள்ளது. இங்கு, ஒரு அரையிறுதிப் போட்டியும் நடக்கிறது.
தகுதிச் சுற்று:
இத்தொடரில் 13 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏழு அணிகள் நேரடியாக சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றுவிட்டன. மீதி அணிகளுக்கு, தகுதிச் சுற்று நடத்தப்படும். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே, சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க முடியும். இதன்மூலம் 10 அணிகள் (நேரடி 7 + தகுதிச் சுற்று 3) இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
கோல்கட்டா வாய்ப்பு:
சமீபத்தில் நடந்த நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டாவது இடம் பிடித்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், மூன்றாவது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ், சவுத் ஆஸ்திரேலியன் ரெட்பேக்ஸ் (ஆஸ்திரேலியா), நியூ சவுத் வேல்ஸ் புளூ (ஆஸ்திரேலியா), வாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), கேப் கோப்ரா (தென் ஆப்ரிக்கா) உள்ளிட்ட ஏழு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. நான்காவது ஐ.பி.எல்., தொடரில் நான்காவது இடம் பிடித்த கோல்கட்டா நைட்ரைடர்ஸ், ஆக்லாந்து ஆசஸ் (நியூசிலாந்து), டிரினிடாட் அன்ட் டுபாகோ (வெஸ்ட் இண்டீஸ்), இங்கிலாந்து கவுன்டி சாம்பியன் மற்றும் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிகள், இலங்கையில் நடக்கும் "டுவென்டி-20' சாம்பியன் உட்பட ஆறு அணிகள் தகுதிச் சுற்றில் மோத உள்ளன. இப்போட்டிகள் செப்.19-21ம் தேதிகளில் ஐதராபாத்தில் நடக்கவுள்ளது.
இத்தொடருக்கான முழு அட்டவணை, விரைவில் வெளியிடப்படும் என சாம்பியன்ஸ் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது

இன்று சர்வதேச இசை தினம்...!


இசை ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. இசை, நமது வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. இசை, அமைதி மற்றும் அழகான விஷயம்.

அனைவரிடத்திலும் இசையை பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி, சர்வதேச இசை தினம் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக 1982ல் தொடங்கப்பட்ட இது, தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் இசைக்கலைஞர்கள் இலவசமாக கலையரங்கம், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவர். இதன் மூலம், இசையின் முக்கியத்துவத்தை வரும் தலைமுறைக்கு உணர்த்துவர்.

தோன்றிய விதம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது, மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து, தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் செல்ல தொடங்கிவிட்டது.

இசைகள் பலவிதம்: பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசைகளை உருவாக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள், உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் பின்பற்றப்படுகிறது. ஒன்று, வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடக இசை.

இசை என்பது பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாசாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையிலும் இசைக்கும் பொறுப்பு கலைஞர்களுக்கு உள்ளது. இசை மேலும் வளர்ச்சிப்பாதையில் செல்ல இசைக்கலைஞர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

அறிஞர்களின் பார்வையில்...

* இசை ஒரு அன்பின் உணவு; விளையாடுங்கள் - ஷேக்ஸ்பியர்
* இசை எனது மதம் - ஜிமி ஹென்றிக்ஸ்
* இசை, உன் மனதை வெளிக்கொண்டு வரவேண்டும் - மிஸி எலியாட்
* இசை, உணர்ச்சியின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய்
* கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டமாக இசை இருக்க வேண்டும் - பிளாட்டோ
* இசை, உலகை மாற்றும். ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது - போனோ.

இசையில் வசமாகா இதயம் உண்டோ? எல்லோருக்கும் கிடைக்காத பெரும் செல்வம் இசை. இசையில் வசமாகாத ஜீவராசிகள் உண்டோ. நம்மை மகிழ்விப்பதும், மயங்க வைப்பதும் இசை. பல வடிவங்களில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள இசைக் கலையில் சாதித்தவர்கள் பலர். இசைப்பெருங்கடலில் மூழ்கி முத்தெடுத்த இசைவித்தகர்கள் பலர். உலக இசை தினமான இன்று, இசையை மூச்சாக சுவாசித்து, சாதித்துக்கொண்டிருக்கும் சிறுவனை பற்றி அறிந்து கொள்வோம். மதுரை திருப்பரங்குன்றத்தில், தவில் வாசிப்பதில் திறமையை காட்டி வருகிறார் 11 வயது சிறுவன் சிவராம கணேசன். இவரது தந்தை தவில் வித்வான் ஆலடி அருணா. தாய் கிருஷ்ணவேணி நாதஸ்வர கலைஞர். மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தரவேண்டுமா என்பது போன்று, சிவராம கணேசன் மூன்றரை வயதில் தவில் வாசிக்க துவங்கினார். ஆலடி அருணா, கச்சேரி இல்லாத நாட்களில் வீட்டில் தினம் மாலையில் தவில் வாசிப்பதை வழக்கமாக கொண்டவர். அவர் வாசிப்பதை அருகில் அமர்ந்து கூர்மையாக கவனித்த மூன்றரை வயது சிவராம கணேசன், ஒருநாள் தந்தையின் தவிலில் வாசித்தார். தாளம் தப்பாமல் வாசிப்பதை கவனித்த தந்தை, ஆச்சரியம் அடைந்தார். சில நாட்கள் மகனுக்கு தவில் வாசிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். ஒரே மாதத்தில் தேர்ந்த கலைஞன் போன்று வாசித்த சிவராம கணேசனின் தவில் கச்சேரி அரங்கேற்றம், மதுரையில் 2003ல் நடந்தது. கும்பாபிஷேகங்கள் உட்பட இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டிலும் 10க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பங்கேற்றார். 2006ல் கன்னியாகுமரியில் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிவராம கணேசனின் வாசிப்பை ரசித்த, அப்துல்கலாம் அவரை பாராட்டினார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து அரசு எச்சரிக்கை


கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் நான்கு பள்ளிகள் உட்பட பல பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை உயர்த்தக் கோரி, 6,355 தனியார் பள்ளிகள், ரவிராஜபாண்டியன் குழுவிடம் மேல்முறையீடு செய்திருந்தன. இந்தப் பள்ளிகளுக்கு கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் புதிய கட்டணம் நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, பெற்றோர் அமைப்புகளும், பெற்றோர்களும் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பள்ளிகள் திறந்து சில தினங்கள் கடந்த நிலையிலும், பள்ளி நிர்வாகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவது, அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பல பள்ளிகளில், குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலிப்பதால், கல்வித் துறைக்கு தலைவலியை ஏ ற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: குழு நிர்ணயித்த கட்டணத்தை விட பல பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களுக்கு உட்பட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். சென்னையில் நான்கு பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலிப்பது குறித்த புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்.

இதே நாள்...


  •  சர்வதேச இசை தினம்
  •  சர்வதேச மனிதநேய ஆதரவாளர்கள் தினம்
  •  கிரீன்லாந்து தேசிய தினம்
  •  ஆப்பிள் கணினி நிறுவனம், தனது முதல் ஐபுக் வெளியிட்டது(1999)
  •  உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது(2002)

மாணவிகளுக்கு ஒஸ்தி படக்குழு பரிசு1












ப்ளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிம்பு நடிக்கும் ஒஸ்தி படக்குழு சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ப்ளஸ் டூ மற்றும் எஸ்எஸ்எல்சி வகுப்புகளுக்கு நடந்த பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒஸ்தி படக் குழு சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்போவதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

இதற்கான விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் ப்ளஸி டூவில் அதிக மதிப்பெண் பெற்ற ஓசூர் மாணவி கே. ரேகாவுக்கு ரூ 1 லட்சம் பரிசளிக்கப்பட்டது. இவர் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றவர்.

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி எம் நித்யா, கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ரம்யா, சேலம் சங்கீதா, திருவெற்றியூர் ஹரிணி ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

பரிசுகளை நடிகர் சிம்பு வழங்கினார். விழாவில் இயக்குநர் தரணி, நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...