|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2011

நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல்

புதுடில்லி: உலக கோப்பை தொடரில் இன்று டில்லியில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் பலம்குன்றிய நெதர்லாந்து அணியை நொறுக்கித்தள்ள இந்திய அணி காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு), தோனி தலைமையிலான இந்திய அணி, "கத்துக்குட்டி' அணியான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
15 ஆண்டுகளுக்கு பின்:
முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை "டை' செய்தது. பின் அயர்லாந்தை அடக்கிய முனைப்புடன் இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில், வெற்றி பெறும் பட்சத்தில் 7 புள்ளிகளுடன், சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் "நாக்-அவுட்' சுற்றான காலிறுதிக்கு முன்னேறலாம். முன்னதாக கடந்த 1996ல் இந்தியா-பாகிஸ்தான்-இலங்கை மண்ணில் நடந்த தொடரில், அரையிறுதி வரை இந்திய அணி முன்னேறியது.
பலமான பேட்டிங்:
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த சேவக், அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதேபோல மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், மீண்டும் ஒரு சதம் கடந்து சாதிக்கலாம். "சூப்பர் பார்மில்' உள்ள காம்பிர், அதிரடி காட்டும் பட்சத்தில் ரன் மழை பொழியலாம். அயர்லாந்துக்கு எதிராக "ஆல்-ரவுண்டராக' ஜொலித்த யுவராஜ் சிங், இன்றும் சாதிக்கலாம். இவருடன் கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, யூசுப் பதான் உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' அசத்தும் பட்சத்தில், 400 ரன்களுக்கு மேல் சுலபமாக எட்டலாம். சுரேஷ் ரெய்னா வாய்ப்பு பெறும் பட்சத்தில், "ஆல்-ரவுண்டராக' அசத்தலாம்.
எட்டு ஆண்டுகளுக்கு பின்...
சர்வதேச ஒருநாள் மற்றும் உலக கோப்பை அரங்கில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் ஒரே ஒரு முறை மட்டும் மோதி உள்ளன. இன்றைய போட்டி மூலம் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பின், 2வது முறையாக (2003, 2011) மோத உள்ளன. கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில், முதலில் பேட் செய்த இந்திய அணி 204 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. பின்னர் பவுலிங்கில் அசத்திய இந்தியா, நெதர்லாந்தை 136 ரன்களுக்கு சுருட்டியது

இதே நாள்


பேஸ்புக்கின் இன்றைய மதிப்பு 65 பில்லியன் டாலர்!

பாஸ்டன்: முன்னணி சோஷியல் நெட்வொர்க் தளமான பேஸ்புக்கின் இன்றைய மதிப்பு 65 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பேஸ்புக்கின் பங்குகளை வாங்க பெரும் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. லேட்டஸ்ட் நிலவரப்படி, ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 2.5 மில்லியன் பங்குகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

இவற்றை பேஸ்புக்கின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து வாங்கத் திட்டமிட்டுள்ளது இந்த நிறுவனம். பங்குகளை விற்க முன்னாள் ஊழியர்கள் சம்மதித்துவிட்டாலும், பேஸ்புக் இன்னும் முறையாக அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நிறுவனத்தில் ஏற்கெனவே, கோல்ட்மென் சாஷ் நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. அப்போது பேஸ்புக் மதிப்பு 50 பில்லியன் டாலராக இருந்தது. அடுத்த இரண்டே மாதங்களில் பேஸ்புக்கின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது இன்டர்நெட் நிறுவனங்களை வியக்க வைத்துள்ளது.

ஜாதிக்கு போடும் ஓட்டு...ஜனநாயகத்துக்கு வைக்கும் வேட்டு...

தென் மாவட்டங்களில் தேவர், வடக்கு மாவட்டங்களில் வன்னியர், கொங்கு மண்டலத்தில் கவுண்டர் என சமுதாய ஓட்டு வங்கியைக் குறி வைத்தே, முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தனித் தொகுதிகளாக இருந்தாலும், தலித் சமூகத்தில் எந்தச் சாதிக்கு ஓட்டு வங்கி அதிகம் என்பதைப் பார்த்தே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆட்சியின் சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளரின் தகுதி இவற்றையெல்லாம் தாண்டி, "ஜாதிக்காரர்' என்ற அடிப்படையில் ஓட்டு கிடைக்கும் என்பதே தமிழக மக்களின் மீது திராவிட மற்றும் தேசியக்கட்சிகள் குத்தியிருக்கும் நிரந்தர முத்திரை. ஒரு தொகுதியில் எண்ணிக்கையில் குறைவாகவுள்ள ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எல்லாத் தகுதியும் இருந்தாலும் "சீட்' கிடைக்காமல் போக அடிப்படையும் இதுவே. கட்சிக்காக மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்தாலும் அதிகபட்சமாய் கட்சிப் பதவி அல்லது உள்ளாட்சிப் பதவிகளோடு அவர்களின் வளர்ச்சி நின்று விடுகிறது. பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கட்சிக்காகவும், மக்களுக்காகவும் (!?) உழைப்பதில் சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கின்றனர். பல்வேறு திறமைகள் இருந்தும் "ஜாதி அரசியலை' தாண்ட முடியாமல், இளைஞர்கள் அரசியலை வெறுக்கின்றனர்.

பல்வேறு ஜாதிகளிலும், கல்வியறிவு, அரசியல் அறிவு, சமூக அக்கறை என எல்லாத்திறமைகளையும் கொண்ட நேர்மையான கட்சி நிர்வாகி ஒருவர் இருந்தாலும், அவரை தேர்தல் களத்தில் நிறுத்திப் பார்க்கும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. இந்த விஷயத்தில் திராவிடக்கட்சிகள் வழிகாட்டுகின்றன; தேசியக் கட்சிகள் பின்பற்றுகின்றன. ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் ஓட்டுப் போட்டதால்,ஜாதியின் வேட்பாளரை கட்சிகள் தேர்வு செய்கின்றனவா, ஜாதி வேட்பாளரை முன் நிறுத்துவதால் அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்களா என்பது ஆழமாய் ஆராய வேண்டிய விஷயம். சில ஆண்டுகளில் நடந்துள்ள தேர்தல் முடிவுகளை அலசி, ஆராய்ந்து பார்த்தால் ஒரே ஒரு விஷயம் மட்டும் புலப்படுகிறது.

கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதிகளில், ஜாதி என்கிற மாயை இன்னும் அரசியலில் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் இதன் ஆதிக்கம் குறைந்து, மறைந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நகர மயமாதலில், எல்லா மக்களும் எல்லா இடங்களிலும் கலந்து வாழ்வதைத்தவிர வேறு வழியில்லை என்றாகி விட்டது. நகரங்களில் உள்ள தொகுதிகளில் ஜாதி ஓட்டுக்களைக் கணக்கெடுப்பது, பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பது போன்றது. நகர மக்களைப் பொறுத்தவரை, விலைவாசி, குடிநீர், மின் தடை என அன்றாடப் பிரச்னைகளுக்கும், உள்ளூரில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகளுக்குளே அதிக முக்கியத்துவம் கொடுத்து ஓட்டுக்களைப் பதிவு செய்கின்றனர்.

இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டு, இந்த தேர்தலிலாவது ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யாமல், கட்சிக்கும், மக்களுக்கும் உண்மையாக உழைக்கத் தயாராயிருப்பவர்களை வேட்பாளராக அறிவிக்க அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும். குறைந்தபட்சமாக, இந்த ஒரு மாற்றத்தையாவது கொண்டு வருகிற தேர்தலாக இது அமைந்தால், அதுவே மக்களுக்குக் கிடைக்கிற முதல் வெற்றி
""விரல்களே தூரிகையாய், எண்ணங்களே வண்ணங்களாய்'' ஒரு கரி துண்டு, செங்கல், பச்சிலைகள்... இவற்றுடன் ஒரு சுவர் மட்டும் போதும்; காண்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் அழகில் ஓவியம் உதயமாகி விடும்; ஒரு மணி நேரத்துக்குள் வரையப்பட்ட இந்த சுவர் ஓவியம் அவ்வழியாக சென்ற அனைவரின் கண்களையும் ஒரு நிமிடம் நிறுத்தி, நிதானித்து பார்த்து ரசிக்க வைத்தது. இயற்கையின் ரசிகனாய், திருப்பூர் வந்த "நாடோடி' ஓவியனின் கைவிரல்கள் நாட்டியமாடிய இடம்: எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரி அருகில், திருப்பூர்
தமிழை வளர்க்கதான் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இதன் நினைவாக சென்னையில் செம்மொழி பூங்கா முதல்வரால் திறக்கப்பட்டது.இந்த பூங்காவின் பெயர்பலகையில் செம்மொழி படும் பாட்டை பாரீர்

பூமிக்கு வெளியே மனித உயிர்கள்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

லண்டன்: பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களை சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார். பூமியில் எப்படி மனித வாழ்க்கை துவங்கியது என்பதை, நட்சத்திர எரி கல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அன்னிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது: அண்டார்டிகா, சைபீரியா, அலாஸ்கா ஆகிய இடங்களில் கிடைத்த நட்சத்திர எரி கற்கள் வித்தியாசமானவை. இந்த நட்சத்திர கற்களில் பலவற்றை முன்பு நான் பார்த்தது இல்லை. இங்கு கிடைத்த நட்சத்திர எரி கற்களில் ஒன்பது தான் பூமியில் உள்ளது. பூமிக்குள் மட்டும் மனித வாழ்க்கை அடங்கிவிடவில்லை. பூமிக்கு வெளியேவும் மனித வாழ்க்கை தொடர்கிறது என்பதை இவை காட்டுகின்றன. இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் மேலாக, பூமியில் வாழும் மனித இனத்துடன் நட்சத்திர எரி கற்களில் கண்டறிந்த பாக்டீரியாக்கள் தொடர்புடையவை என்பது தான். நைட்ரஜன் இல்லாத இடத்தில் எப்படி பாக்டீரியாக்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம். இதுதொடர்பாக பல விஞ்ஞானிகளிடம் கருத்து கேட்டேன். ஆனால், அவர்களால் இதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. இவ்வாறு ஹூப்பர் தெரிவித்துள்ளார். இவரது இந்த ஆராய்ச்சி அண்டத்தின் அமைப்பு பற்றிய விஞ்ஞான பத்திரிகையில் வெளியாகி உள்ளது. இதுபற்றி மறுஆய்வு மேற்கொள்ள உலக அளவில் இருந்து ஐந்தாயிரம் விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்

பணிந்தது தி.மு.க., காங்.,க்கு 63 சீட்


புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண்

பத்ம விபூஷன் விருது, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த விருது பெறுபவர்கள் பட்டியலில், இந்த வருடம் இடம் பெற்றிருப்பவர்களில் ஒருவர், 98 வயதான மூதாட்டி ஹோமய் வைதரலா. இவர்தான், நம் நாட்டின் முதல் பெண் பத்திரிகை போட்டோகிராபர். இவர் விருது பெறுவதற்கு, இது மட்டுமே தகுதி இல்லை. இவர், தன் வேலையின் போது காட்டிய சாதனைகளே, இவரை விருது பெற வைத்துள்ளது.
அப்படி என்ன சாதித்தார்? கொஞ்சம் பின்னோக்கி போவோமா...
குஜராத் மாநிலம், நவசார் பகுதியில், 1913ல் பிறந்தார். ஆண்களே பள்ளிப் படிப்பை தாண்டாத அந்தக் காலத்தில், படிப்பது பிடித்து போனதால், பிடிவாதமாக படித்து, கல்லூரி வரை சென்றவர், அந்த ஊரில் இவர் ஒருவரே. மும்பையில் உள்ள கலைக் கல்லூரியில், ஓவியம் தொடர்பான பாடப் பிரிவை எடுத்து படித்தார். அப்போது, அதே கல்லூரியில் மானேக்ஷா என்பவர் புகைப்படம் தொடர்பாக பாடம் எடுக்க வந்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தது. காதல் கணவர் மானேக்ஷாவின் பிரதான தொழில், பத்திரிகைக்கு படம் எடுப்பதுதான். உனக்கு எதற்கு இதெல்லாம் என்று சொல்லாமல், புகைப்படம் தொடர்பான அனைத்தையும் மனைவிக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு கட்டத்தில், அவசரமாக எடுக்க வேண்டிய ஒரு படத்தை, தன் மனைவியை எடுக்கச் சொன்னார். எந்தவித பதட்டமும் இல்லாமல், அவர் எடுத்த புகைப்படம் அருமையாக இருக்கவே, தன்னால் போக முடியாத இடத்திற்கு, தன் மனைவியை அனுப்பி வைத்தார். அந்த வகையில், இவர் எடுத்த படம், முதல் முறையாக இவரது பெயருடன் மும்பை பத்திரிகை ஒன்றில் வெளியானது. அதற்கு, ஒரு ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டது. இது, அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை என்பதால், ஓவியமா, புகைப்படமா என எண்ணியவர், இனி, புகைப்படமே தன் வாழ்க்கை என்று முடிவு செய்தார். அதன் பிறகு, "யார் இவர்?' என கேட்கும் அளவிற்கு, பல படங்கள் வெளிவந்தன. இதன் காரணமாக, டில்லியில் இருந்த பிரிட்டிஷ் அரசு, இவரை புகைப்படக்காரராக பணியாற்ற அழைப்பு விடுத்தது; அழைப்பை ஏற்று, டில்லி சென்றார். டில்லியில் இவரது வளர்ச்சி வேகமெடுத்தது. அதற்கு, இவர் தந்த விலையும் அதிகம். பாலுக்காக எப்போது அழும் எனத் தெரியாத, மூன்று மாத கைக் குழந்தையுடனேயே வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அப்போது, புகைப்படக் கருவிகளும் சற்று கடினமானவை, எடை கூடுதலானவை, வேலையும் அதிகம் வைப்பவை.
அதே போல், படம் எடுக்க எவ்வளவு நேரமும், சிரமமும் உண்டோ, அதே போல, எடுத்த படத்தை பிரின்ட் போடவும் ஆகும். படத்தில் நேர்த்தி வேண்டும் என்பதற்காக, புகைப்படம் எடுத்த காலம் முழுவதும் இவர் உதவியாளர் யாரையும் வைத்துக் கொள்ளாமல், தானே அனைத்து வேலைகளையும் செய்வார். இதனால், தூங்கிய நேரம் மிகக்குறைவே! இவர் படம் எடுக்கும் விதம், பலருக்கும் பிடித்து போனது. இதன் காரணமாக, நேருவின் நெருங்கிய தோழி போல இருந்தார். இன்றைக்கு காணக்கூடிய நேருவின் நல்ல படங்கள் பல, இவருடையது தான். இருபதாம் நூற்றாண்டில் இடம் பிடித்த சரித்திர நாயகர்கள் மவுண்ட்பேட்டன், கென்னடி, குருசேவ், நிக்சன், சூ-என்-லாய் உள்ளிட்ட டில்லி வந்த விருந்தினர்கள் பலர், இவரது கேமராவில் சிக்கியுள்ளனர். இரண்டாம் உலகப்போரின் போது, "நாட்டின் நிஜ தரிசனத்தை காட்ட வேண்டும், கொஞ்சம் சவாலான விஷயம், களத்தில் இறங்க முடியுமா?' என்று கேட்டு முடிப்பதற்குள், களமிறங்கி, ஆண் போட்டோகிராபர்கள் பலரும் அஞ்சி தவிர்த்த விஷயங்களைக் கூட, இவர் அஞ்சாமல் சென்று, அற்புதமாக பதிவு செய்தார். நாடு சுதந்திரமடைந்ததும், டில்லி செங்கோட்டையில் பிரதமராக, நேரு கொடியேற்றும் முதல் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியை படம் எடுத்தார்.
காந்தி, நேரு, சாஸ்திரியின் இறுதி சடங்குகளை பதிவு செய்தவர் என்று, சரித்திரத்தின் பல பக்கங்கள் இவரது படங்களால் நிரப்பப் பட்டுள்ளன. இப்படி, 57 வருடங்கள் பம்பரமாக சுற்றி, சுழன்று படம் எடுத்தவருக்கு, திடீரென இடி, இவரது கணவர் மறைவு என்ற ரூபத்தில் வந்தது. தனக்கு எல்லாமாக இருந்த கணவரின் மறைவிற்கு பின், வாழ்க்கையே சூன்யமாகிப் போனதாக உணர்ந்தவர், அதன்பின், புகைப்படக் கருவியை தொடவில்லை; அதுவரை எடுத்த படங்களை பாதுகாப்பதிலும் பெரும் அக்கறை காட்டவில்லை. பேராசிரியராக வதோராவில் பணியாற்றிய தன் ஒரே மகனிடம் போனார். அங்கும், அவருக்கு அடுத்த அதிர்ச்சி. அவரது மகன், புற்றுநோயால் எதிர்பாராத விதமாக இறந்து போக, அதன் பிறகு எந்தப் பிடிப்பும் இல்லாமல், வதோராவில் உள்ள வீட்டில், யாருடைய உதவியும் இல்லாமல், தனியாக, தன் சேமிப்பில், வாழ்ந்து வருகிறார். யாரையும் வேலை வாங்குவது, அவருக்கு எப்போதுமே பிடிக்காது. ஆகவே, இந்த வயதிலும் தனக்கான துணிகளை துவைப்பது முதல், சமையல் செய்து கொள்வது வரையிலான சகல வேலைகளையும் செய்து, வாழும் அவரை, அரசு இப்போது அடையாளம் கண்டு, பத்மவிபூஷன் விருதை அறிவித்தது. இதற்கு, அவரிடம் இருந்து இப்போதைக்கு கிடைத்திருக்கும் பதில், சின்ன புன்னகை மட்டுமே!
விருதால் பலருக்கு பெருமை; சிலரால் மட்டுமே விருதிற்கு பெருமை.

மகளிர் தினத்தன்று மாணவி சுட்டுக் கொலை


புதுடில்லி : டில்லியில் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி வாசலிலேயே மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டில்லி, சாந்திநிகேதன் பகுதியில் இருக்கிறது ராம்லால் ஆனந்த் கல்லூரி. இக்கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி ராதிகா தன்வார். இவர் இன்று காலை 10.20 மணியளவில் கல்லூரியில் இருந்து வெளியில் வரும் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த மாணவி படுகாயமடைந்தார். உடனடியாக டில்லி ராம் மனோகர் லொஹாரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மாணவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்று சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. மகளிர் தினத்தன்று இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவர் கிரிஜா வியாஸ் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதோடு, குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார். டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மார்க்சிஸ்ட் கம்யூ., பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா கராத் ஆகியோரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...