|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 January, 2012

மனநோயை குணமாக்கும் பச்சைப் பட்டாணி.


காடுகளில் தானாகவே வளர ஆரம்பித்த பச்சைப்பட்டாணி குளிர்காலத்தில் மட்டுமே வளரும். பச்சைப்பட்டாணியில் 1300 இனங்கள் இருந்தலும் வீடுகளில் வளர்த்துச் சமைக்கப்படும் வகையே புகழ்பெற்றது. பச்சைப் பட்டாணிக்கு தோட்டப் பட்டாணி என்றும் பெயர் உண்டு. 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் பயன்படுத்திய பச்சைப் பட்டாணி இன்று உலகம் முழுவதும் பயிராகிறது.

எல்லாக் காய்கறிகளையும்விட ஊட்டச் சத்து மிகுந்த காய்கறி, பச்சைப்பட்டாணி ஆகும். பச்சை பட்டாணியின் தாயகம் தென்மேற்கு ஆசியாவும் தெற்கு ஐரோப்பாவும் ஆகும். கி.மு. 2000 ஆம் ஆண்டிலேயே சீனர்கள் பச்சைப் பட்டாணியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பைபிளில் பச்சைப் பட்டாணியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இங்கிலாந்தில் கி.பி.1600 ஆம் ஆண்டு இறுதியில்தான் பச்சைப் பட்டாணி அறிமுகமானது.

பச்சைப் பட்டாணியின் சத்துக்கள் மாமிச உணவுக்கு மாற்றாகப் பச்சைப் பட்டாணியைச் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’, நார்ப்பொருள்கள் முதலியவற்றால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் இன்றி இளமைத் துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாம். பச்சைப் பட்டாணியில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தயாமின், நியாஸின், ரிபோபிலவின், போன்றவை காணப்படுகின்றன.

செரிமான உறுப்புகள் பலமடையும் கண்பார்வைத் திறனுக்கு வைட்டமின் ‘ஏ’ இன்றியமையாதது. உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது, வாய் நாற்றமும் அகன்றுவிடுகிறது. நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற ‘பி’ குரூப் வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன. வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் ‘பி’ நன்கு பயன்படுகிறது.

மூளை வளர்ச்சி அதிகரிக்கும் சிறு குழந்தைகள் பச்சைப்பட்டாணியைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். வளரும் குழந்தைகள் மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்றுமடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப்பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.

உடல் பலமடையும் ஒல்லியாய் இருப்பவர்கள் நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.

நுரையீரல் நோய் குணமடையும் நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப்பட்டாணி. எனவே, அதைத் தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பின்பற்றும் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமலிருக்கவும், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மனநோய் குணமடையும் பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள். சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும். பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

கட்சிகள் ஒன்றுபட எம்பி எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிட முடிவு!


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும், கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மாட்டு தாவணி சாலையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட்டு போராடுவதாக மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர். தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும் விஷயத்தில் கூட அதுபோன்ற ஒற்றுமை இங்கு இருப்பது இல்லை அவர்கள் தெரிவித்தனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட வலியுறுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றகையிடப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஏ.கே.ராமசாமி தெரிவித்துள்ளார். 

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்...


தரமான தங்கம் என்பதை உறுதிப்படுத்த, தங்க நகைகளுக்கு `பி.ஐ.எஸ். ஹால்மார்க்' முத்திரை போடப்படுகிறது. தங்கத்தின் தரம் குறித்து பொதுமக்களுக்கு கூடுதல் நம்பிக்கை அளிப்பதற்காக, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் யோசனை தெரிவித்தது. இதற்காக, 1986-ம் ஆண்டின் தர நிர்ணய சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்தது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் ஆகிறது.

சொர்க்க வாசல் திறப்பு...


பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய அம்சமான சொர்க்க வாசல் திறப்பு வியாழக்கிழமையன்று நடைபெறுகிறது. பரமபத வாசல் வழியே வரும் ரங்கநாதரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ரங்கத்தில் திரண்டுள்ளனர். மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கடந்த 25ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் இந்த விழா துவங்கியது. திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து 10 நாட்களும், திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து திருநாட்கள் பத்து நாட்களும் என 21 நாட்கள் நடைபெறுகிறது.

21 நாள் உற்சவம் கடந்த 26ம் தேதி முதல் திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து திருநாள் துவங்கியது. தொடர்ந்து காலை நம்பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அப்பொழுது பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடினர். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர் களால் சேவிக்கப்படும். பத்தாம் நாள் மட்டும்தான் அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவால் திருவரங்கனுக்கு அளிக் கப்பட்டது இந்த ரத்ன அங்கி.

பரமபத வாசல் மகாவிஷ்ணு பிரளய காலத்தில் ஆலிலை மேல் பள்ளி கொண்டு நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத் தார். அப்போது பிரம்மாவுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதனால் எம்பெருமாள் காதுகளில் இருந்து இரு அசுரர்கள் தோன்றி பிரம்மனைக் கொல்ல முயன்றனர். அதை திருமால் தடுத்ததால் அசுரர்கள் திருமாலுடன் போரிட் டனர். முடிவில் திருமால் அவ்விருவருக்கும் சுக்லபட்ச ஏகாதசியன்று வடக்கு வாசல் திறந்து வைகுண்டத்தில் சேர்த்துக் கொண்டார். அப்போது அவ்வசுரர்கள், "எங்களுக்குப் பரமபதம் அளித்ததுபோல இந்நாளில் தங்களை விரதமிருந்து வழிபடுபவர் அனைவருக்கும் இவ்வாசல் திறந்து இவ்வழியே பரமபதம் அருளவேண்டும்' என்று கேட்டனர். அதன்படிதான் வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. 

நம்மாழ்வாரின் மோட்சத்துக்காக இந்த வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் இப்போதும் பரமபத வாசல் திறப்பு விழா என கொண்டாடுகின்றனர். பெருமாள் ஆலயங்களில் உள்ள வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து நான்கு வேதங்களும் ஓதப்பட்ட பிறகு, தங்க அங்கி அணிந்த பெருமாள் மங்களவாத்தியம் முழங்க இந்த வாசலைக் கடந்து வருவார். பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பகவானைப் பின்தொடர்ந்து செல்வார்கள்- "ரங்கா, ரங்கா' என முழங்க அந்த ஓசை சொர்க்கத்தில் இருக்கும் ரங்கனுக்கே கேட்கும். பரமபத வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் இந்த வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் போவதாக ஐதீகம். 

பரமபத விளையாட்டு வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங் கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரனம், அர்ச்சி ராத்திரி, திவ்ய தேசப்பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம். 

சொர்க்கத்தில் இடம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை என்கின்றன புரணங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து, நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் அளவற்ற பயன் பெறலாம். ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசியன்று நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும்கூட விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு சொர்க்கத்தில் இடம் தருவார் என்கின்றனர் முன்னோர்கள். 

ஏகாதசி விரத மகிமை வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ் டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங் களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர். இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை இவ்விரதத்தை ஆண்- பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்.

புராண கதை கூறும் விரதம்  கிருதா யுகத்தில் நதிஜஸ் என்ற அசுரன் மகன் முரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட் டனர். விஷ்ணு முரனுடன் கடும்போர் செய்தார். ஒரு சமயம் அவர் களைப் படைந்து ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முரன் விஷ்ணுவைக் கொல்ல முயன்றான்.

அச்சமயம் விஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந்தும் சக்தி உருவாகி, ஒரு சௌந்தர்ய தேவதை தோன்றி முரனை அழித்தாள். விஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, "உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்றார். "இந்த நன்னாளில் எவர் விரதம் இருந்து தங்கள் நாமத்தை உச்சரித்து வழிபடுகிறார்களோ, அவர்கள் செய்த பாவத்தை விலக்கி வைகுண்ட பதவி தரும் சக்தியை எனக்குத் தாருங்கள்' என்றாள். அப்படியே திருமால் வரம் அருளினார். இப்படி உருவானதுதான் மார்கழி வளர்பிறை ஏகாதசி விரதம்

ராப்பத்து விரதம் வைகுண்ட ஏகாதசியன்று இராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. நம்மாழ்வார், மதுரகவியாழ்வார்களை திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் எழுந்தருளச் செய்வார். பின் பெருமாள் முன்னிலையில் சமஸ்கிருத வேதத் துடன் தமிழ் வேதமாகிய திருவாய்மொழி பிர பந்தத்தையும் பாடச் செய்து விழா நடத்துவார் கள். கடைசி நாள் நம்மாழ்வாரை பெருமாள் தம் திருவடியில் சேர்த்துக் கொள்வார். வைகுண்ட ஏகாதசியிலிருந்து ஏழு நாட்கள் மூலவருக்கு முத்துக் களாலான அங்கியை அணிவிப்பார்கள். இதற்கு "முத்தங்கி சேவை' எனப் பெயர். இந்த வெண்மைத் திருக்கோலம் கண்களையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும். இராப்பத்தின் ஏழாம் நாள் கைத்தல சேவையும்; எட்டாம் நாள் திருமங்கை மன்ன னின் வேடுபறி உற்சவமும்; பத்தாம் நாள் நம்மாழ்வாரின் மோட்சமும் நடைபெறும். இராப்பத்தின் 11-ஆம் நாள் இயற்பாவை அமுதனார் மூலம் சேவித்து சாற்று முறை நடக்கும். இப்படி 21 நாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.

மார்பகப்புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்.


மார்பகப்புற்றுநோய் தடுக்கும் ஆற்றல் மாதுளம் பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் "கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்" பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது எண்ணற்ற பெண்களின் மனதில் பாலை வார்த்திருக்கிறது. மார்பகப்புற்றுநோயும், கர்ப்பப்பை புற்றுநோயும் பெண்கள் அதிகம் அச்சப்படும் விசயமாகும். பெண்களின் உடலில் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண்களின் மார்பகப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் மாதுளம் பழத்திற்கு உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிதான அமிலம் மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பைட்டோகெமிக்கலானது ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது" என கலிபோர்னியாவின் டாரேட்டில் உள்ள சிட்டி ஆப் ஹோப் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை தலைவர் ஷியுவான் சென் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் செல்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் உள்ள எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இந்த அமிலம் புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்தியாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர், மாதுளையில் மருத்துவ குணங்கள் அதிகம் எனினும், இது ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது என தெரிவித்துள்ளார்.

நானோவுக்கு போட்டியாக பஜாஜ் ஆட்டோ...



டாடா நிறுவனத்தின் நானோவுக்குப் போட்டியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் குட்டிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்இ60 என்ற பெயரிலான இந்தக் கார் டெல்லியில் (03.01.2012) அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ரகக் கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார். ஆர்இ60 ரகக் காரில் 200 சிசி திறன் கொண்ட இன்ஜின் உள்ளது. இதில் மணிக்கு அதிகபட்சம் 70 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கி.மீ. தூரம் ஓடக்கூடியது என்று ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கார் உருவாக்க முயற்சியில் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக அவர் கூறினார். நகர்ப்புற மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார் தயாரிப்பில் ஈடுபடுவதென முடிவு செய்து சிறிய ரகக் காரை அறிமுகப்படுத்தப் போவதாக 2008ம் ஆண்டு பஜாஜ் நிறுவனம் அறிவித்தது. ரெனால்ட் நிசான் நிறுவனங்களின் தொழில்நுட்பக் கூட்டுடன் இந்தக் கார் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தக் காரின் விலை 3,000 டாலராக (ரூ. 1.5 லட்சம்) நிர்ணயிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 2011 ம் ஆண்டு இந்தக் கார்கள் சாலைகளில் ஓடும் எனஅறிவிக்கப்பட்டது. 

ஆனால் விலை நிர்ணயிப்பது தொடர்பாக நிறுவனங்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ரெனால்ட் நிசான் நிறுவனங்கள் புதிய ரக சிறிய காரின் விலையை 2,500 டாலர் (ரூ. 1.25 லட்சம்) என நிர்ணயிக்கலாம் என தெரிவித்தது. ஆனால் அதற்கு பஜாஜ் நிறுவனம் சம்மதிக்காததால் அத்திட்டம் பாதியில் நின்றுபோனது. 2010ம் ஆண்டில் ரெனால்ட் நிசான் நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து குட்டிக் காரைத் தயாரிக்க முடிவு செய்தன. இதன்படி புதிய ரகக் கார் உருவானது.

புதிய காரை வடிவமைத்து தயாரிக்கும் பொறுப்பை பஜாஜ் நிறுவனம் மேற்கொள்ளும். இருப்பினும் மூன்று நிறுவன கூட்டுத் தயாரிப்பாக இந்தக் கார் வெளிவரும் என்று ராஜீவ் பஜாஜ் தெரிவித்தார். இந்தக்காரின் விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி நிறுவனங்கள் இந்தக் காரை இதுவரை பார்க்கவில்லை என்றும், ஆட்டோமொபைல் கண்காட்சியில்தான் அவை பார்க்க உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். இத்தகைய குட்டிக் கார் தயாரிப்பில் தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வம் இல்லையெனில் அவர்கள் வெளியேறலாம் என்றார் பஜாஜ்.

பெண் டாக்டர் கொலை: 6 பேர் கைது!




தூத்துக்குடியில் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் மருத்துவர் சேதுலட்சுமியை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் இன்று இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி 3ம் மைலில் அரசு மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள காமராஜ்நகரை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (50). கல்லூரி பேராசிரியர். இவருடைய மனைவி சேதுலட்சுமி (48). இவர், தூத்துக்குடி இ.எஸ்.ஐ. மருந்தகத்தில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மேலும், தனது வீட்டையொட்டி கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே மருத்துவர்கள். மகள் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறாராம்.



தூத்துக்குடி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மனைவி நித்யா (24). 6 மாத கர்ப்பிணியாக இருந்த நித்யா, மருத்துவர் சேதுலட்சுமியின் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்று வந்தாராம். கடந்த 30ம் தேதி நித்யாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாம். அவரை சேதுலட்சுமியின் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அவரை பரிசோதித்ததில், வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது தெரியவந்ததால், அறுவைச் சிகிச்சை செய்து இறந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சையின்போது நித்யாவின் உடல்நிலை மோசமானதால், அவரை தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர் சேதுலட்சுமி அனுப்பிவைத்தாராம். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் நித்யா இறந்தார். இது தொடர்பாக, நித்யாவின் கணவர் மகேஷ் அன்றைய தினமே மருத்துவர் சேதுலட்சுமியிடம் தகராறு செய்தாராம். இந்நிலையில், கடந்த 02.01.2012 அன்று இரவு 10.30 மணியளவில் மருத்துவர் சேதுலட்சுமி தனது கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது மகேஷ் மற்றும் 3 பேர் அரிவாள், கத்தி, வாள் போன்ற ஆயுதங்களுடன் கிளினிக்கில் நுழைந்து அவரை வெட்டினராம். இதில் சேதுலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைத் தடுக்க முயன்ற மருத்துவமனை ஊழியர் வள்ளி என்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. வரதராஜு, மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ஜெ. ராஜேந்திரன், தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. சோனல் சந்த்ரா, கூடுதல் கண்காணிப்பாளர் சாமிதுரைவேலு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனக் கூறப்படும் மகேஷின் நண்பர்களான தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்த வேல்சாமி மகன் குருமுத்து (19), ஆவுடையார்புரத்தை சேர்ந்த நீலசந்திரன் மகன் ராஜா (27), இஸ்மாயில் மகன் அப்பாஸ் (27) ஆகிய மூவரையும் சில மணி நேரத்தில் போலீஸார் கைது செய்தனர். மகேஷ் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கைது செய்யப்பட்டார். "ஆட்டோ டிரைவரான மகேஷ் தன் மனைவி மற்றும் குழந்தை இறந்ததற்கு டாக்டர் சேதுலட்சுமிதான் காரணம் எனக் கருதி இந்தக் கொலையைச் செய்துள்ளார். அவர் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கும், ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளன. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது' என மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் கூறினார். இந்த சம்பவத்தில் இன்று ஆறுமுகம் மற்றும் வெற்றிவேல் என்ற மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 3 ஆட்டோக்கள் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

புற்றுநோயை குணப்படுத்தும் மீன் எண்ணெய்.


கடல்வாழ் உணவுகளில் மீன் அளப்பரிய சத்துக்களை கொண்டுள்ளது. மீனில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மனிதர்களுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பதோடு, நோய் தாக்குவதில் இருந்தும் பாதுகாக்கிறது. மீன்களில் உள்ள எண்ணெய் உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோயை குணமாக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு சிறப்பான உணவு படிக்கும் குழந்தகளுக்கு மீன் உணவு ஒரு மிகச் சிறந்த உணவு என்கின்றனர் ஆய்வாளர்கள். அதில் உள்ள டிஹெச்ஏ சத்தானது மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மீன் எண்ணெயில் டிஹெச்ஏ சத்து அதிகம் உள்ள மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு அதிகம் பயனளிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உடல்பருமன் குறையும் உடல் பருமனாக உள்ளவர்களின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மீன் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமனாக உள்ள 13 முதல் 15 வயதுக்குப்பட்ட 78 இளைஞர்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினருக்கு தினமும் பிரெட் உடன் 1.5 கிராம் மீன் எண்ணெய் சேர்த்து வழங்கப்பட்டது. இதுபோல் மற்றொரு பிரிவினருக்கு பிரெட் உடன் வெஜிடபிள் ஆயில் வழங்கப்பட்டது. பின்னர் 16 வாரங்கள் கழித்து அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு பரிசோதிக்கப்பட்டது.

உயர் ரத்த அழுத்தத்துக்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது மீன் எண்ணெய் சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை குறைந்திருந்தது. ஆனால் வெஜிடபிள் ஆயில் சாப்பிட்டவர்களின் ரத்த அழுத்தம் குறையவில்லை. எனவே உடல் பருமனாக உள்ள இளைஞர்கள், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க மீன் எண்ணெய் தொடர்ந்து சாப்பிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ரத்தப் புற்றுநோய் கட்டுப்படும் மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மம் ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது. பின்னர் பரிசோதித்தபோது அந்த எலிகள் அனைத்தும் குணமடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என இந்திய ஆராய்ச்சியாளர் சந்தீப் பிரபு தெரிவித்துள்ளார். எனவே நோய்களை கட்டுப்படும் மீன்களையும், மீன் எண்ணெய்களையும் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இருளர் பெண்கள் பலாத்கார வழக்கு- போலீஸாரைக் கைது செய்யாத தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!


இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 5 பேரை திருக்கோவிலூர் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பது புகாராகும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார் மீது நடவடிக்கைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதாரண பாலியல் வழக்கிற்கு போலீசார் நடவடிக்கை எடுக்கும் நிலையில், திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீசார் 5 பேரை தமிழக அரசு இதுவரை கைது செய்யாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சட்டத்திற்கு புறம்பாக பெண்களை காவலில் வைத்தது தவறு என தமிழக அரசே ஒப்புக் கொண்ட பின்னரும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது சரியல்ல எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட போலீசார் விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதி அளித்துள்ளார். மேலும் போலீஸ் மீதான விசாரணையை முடிக்க, அரசு தரப்பில் 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...