கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு ஆண்டுதோறும் ராமேசுவரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து வருகிற 23ந்தேதி பக்தர்கள் செல்ல உள்ளனர். 150க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் செல்ல திட்டமிட்டுள்ளனர். விழாவில் பங்கேற்க விரும்பும் பிற மாவட்டத்தினருக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையில்லாச்சான்றிதழ் தற்போது தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி, பக்தர்கள் என்ற போர்வையில், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் கச்சத்தீவில் நுழைந்து விடலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் தமிழக அகதிகள் முகாமில் இருப்பவர்களில் யாராவது, இலங்கை சென்று வர முயற்சிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதனை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதன் அடிப்படையில், இந்திய கடற்படை, தமிழக கடலோர காவல்படை, கியூ பிராஞ்ச் போலீசார், மத்திய உளவுப்பிரிவினர் என அனைத்து தரப்பினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஏர்வாடி, கீழக்கரை, மண்டபம், மண்டபம் கேம்ப், பாம்பன், தனுஷ்கோடி, ராமேசுவரம் என அனைத்து பகுதிகளிலும் சாதாரண உடைகளில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஹோவர்கிராப்ட்' கப்பலும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கடற்படை விமானமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ராமசுப்பரமணியன், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், துணை சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.