ஆறாம் அறிவு இல்லை என்ற இந்த உண்மையை சிறிய சோதனைகள் மூலம் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த ஆய்வறிக்கைகள் 'பிளோஸ் ஒன்' என்ற இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், ஒரு மாற்றம் ஏற்படும்போது மக்களால் அதைப் பார்க்க இயலவில்லை என்றபோதும் உணரமுடியும் என விளக்கப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒருவருடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் உணரும்போதும் அந்த மாற்றம் அவர்களுடைய தலைமுடி திருத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்டது என்பதை நாம் உணரமுடியாமல் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள உளவியல் ஆராய்ச்சிப் பள்ளியின் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் பியர்ஸ் ஹோவே கூறுகையில், ‘மாற்றங்களை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் மனிதனால் உணரமுடியும் என்பதை உறுதிப்படுத்தும் முதல் ஆராய்ச்சி இது என்று குறிப்பிடுகின்றார். பொதுவாகக் குறிப்பிடப்படும் ஐம்புலன்களை சார்ந்து இல்லாமல் மனதின் மூலம் மாற்றங்களை உணரமுடியும். இதுவே இதுநாள்வரை ஆறாவது அறிவு என்று குறிப்பிடப்பட்டு வந்தது எனத் தெரிவித்துள்ளார்.