|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 March, 2012

எழுதப்படாத விதியை மாற்றுவார் தனுஷ்...

பாலிவுட் இயக்குநர் ஆனந்த் ராய் இயக்கத்தில் உருவாகும் ரஞ்சனா படத்தில் தமிழ் சினிமா நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்க உள்ளார்.வாரணாசியில் வாழும் சாதாரண குடும்பத்துப் பையனுக்கும், பெண்ணிற்கும் ஏற்படும் காதல் கதையை அழகாக படமாக்க உள்ளது ரஞ்சனா படக்குழு. தமிழ் சினிமா ஹீரோக்கள் பாலிவுட்டில் ஜொலிக்க மாட்டார்கள் என்ற விதியை தனுஷ் நிச்சயம் மாற்றி எழுதுவார் என்று இயக்குநர் ஆனந்த் கூறியுள்ளார். பொதுவாக தமிழ் மற்றும் மலையாள நடிகைகள் பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டுகிறார்கள். ஆனால் அதுவே நடிகர்கள் என்றால் பாலிவுட்டில் வரவேற்பு இருப்பதில்லை. நிச்சயம் இந்த முறை அதில் மாற்றம் ஏற்படும் என்றார் ஆனந்த்.


தனு வெட்ஸ் மனு என்ற வெற்றி படத்தை இயக்கிய ஆனந்த்திற்கு அடுத்த படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு அவர் மீதுள்ள எதிர்பார்ப்பை ஈடுகட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடினமாக உழைத்து வருகிறார் ஆனந்த். 

இடஒதுக்கீடு வேண்டுமெனில் சாதி சான்றை இணைக்க வேண்டும்.


இடஒதுக்கீட்டின் கீழ் சலுகை கோரும் விண்ணப்பதாரர்கள், ஜாதிச் சான்றிதழை விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பவில்லை என்றால், அந்த விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2010ம் ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில் பமிலா என்பவர், தேர்வில் கலந்து கொண்டார். தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இவர் இணைக்கவில்லை. இவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் நேர்முகத் தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டபோது, ஜாதிச் சான்றிதழை இணைக்காதது தெரிய வந்தது. எனவே, அனைவருக்குமான பொதுப் பிரிவாக இவர் கருதப்பட்டார். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, ஐகோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின், அப்பீல் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பாணையின்படி, இடஒதுக்கீட்டின் கீழ்வரும் விண்ணப்பதாரர்கள், ஜாதிச் சான்றிதழை இணைக்கவில்லை என்றால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட வேண்டும். ஆனால், டி.என்.பி.எஸ்.சி., உத்தரவில் உள்ள ஒரு பிரிவின்படி, விண்ணப்பதாரருக்கு தகுதியிருந்தால், அவர்களை அனைவருக்குமான பொதுப் பிரிவாகக் கருதி, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இன்னொரு பிரிவின்படி, சான்றிதழ்கள் உரிய அதிகாரியிடம் சென்றடையவில்லை என்றால், அதைச் சமர்ப்பிக்க, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என உள்ளது. இந்த இரண்டு பிரிவுகளும், ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன.எனவே, விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, இந்த இரண்டு பிரிவுகளையும் ரத்து செய்ய வேண்டும். 2006ம் ஆண்டு நவம்பரில், பிறப்பிக்கப்பட்ட இந்த நிபந்தனை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது பொதுக் கொள்கைக்கு, நலன்களுக்கு எதிராக உள்ளதால் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

இதே நாள்...


  • சர்வதேச காசநோய் தினம்
  •  கிரீஸ் குடியரசு நாடானது (1923)
  •  இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த தினம்(1776)
  •  தமிழ் திரைப்பட பிரபல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் பிறந்த தினம்(1923)
  •  கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் இறந்த தினம்(1988)

இன்று உலக காச நோய் தினம்.


காச நோய் பரவுதலும், அதை தடுப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 24ம் தேதி உலக காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "டியூபர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இதனால் நுரையீரல், மூளை, கிட்னி, முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது. அறிகுறி: தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை இதன் அறிகுறிகள். நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவுகிறது. ஆண்டுதோறும் 90 லட்சம் பேருக்கு காசநோய் உள்ளவர்களிடமிருந்து பரவுகின்றது. இந்நோயால் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் பலியாகின்றனர். உலக சுகாதார நிறுவனம் "காச நோயைத் தடுக்கும் திட்டம் 2006-2015' என்பதை உலகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

ஆசியாவில் அதிகம்: காசநோயின் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ளது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் நாடுகளில் குறிப்பாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகம். இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 22 நாடுகளில் காசநோயால் புதிதாக பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம்.

சிகிச்சை: துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை மேற்கொள்வது, நீண்ட கால சிகிச்சை ஆகியவை இந்நோயிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை. காச நோய் உள்ளவர்கள், தயங்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு, காச நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகமெங்கும், சமமான அளவுக்கு, பாரபட்சமில்லாத மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.


சென்னை உட்பட தமிழகமெங்கும், சமமான அளவுக்கு, பாரபட்சமில்லாத மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தை, வரும் ஜூன் வரை நீட்டிக்க அனுமதி கோரி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், கடந்த ஜூன் மாதம், தமிழக மின்வாரியம் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது, பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பு நுகர்வோரின் கருத்துகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்டதில், பலரும் மின்வெட்டை குறைக்க வலியுறுத்தினர். இந்நிலையில், இந்த மனுவை, மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் வேணுகோபால் மற்றும் நாகல்சாமி விசாரித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தனர். அதன் விவரம்: மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய மின் திட்டங்கள் வரும்; ஜூன் 2012 முதல், மின்வெட்டை நீக்கி விடுவதாக, மின்சார வாரியம் கூறியுள்ளது. இதற்கான மின் உற்பத்தி திட்டங்கள், வரும் ஜூன் மாதத்திற்குள் வராது என்ற நிலை உள் ளது. எனவே, முழுமையாக மின்சார தட்டுப்பாட்டை போக்கும் அளவுக்கு, மின்சாரம் கிடைத்தால் மட்டுமே, மின்வெட்டு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத் தை, மின்வாரியம் நீக்க வேண்டும்.

கட்டளைகள்: அதை விடுத்து, ஜூன் மாதத்திற்குள் நீக்கினால், மின்சார தட்டுப்பாடு மற்றும் அதை சமாளிக்க முடியாத பிரச்னையால், பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, ஜூன் மாதம் முதல் படிப்படியாக நிலைமைக்கு ஏற்ப, மின்வெட்டை அமல்படுத்த, ஒழுங்குமுறை ஆணையத்தின் யோசனைகளை மின்வாரியம் பின்பற்ற வேண்டும்.  மே மாதம் முதல் காற்று சீசன் வந்து விடுவதால், காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிக்கும். அதனால், காற்றாலைகளை சொந்தமாக கொண்ட தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புதாரர்கள், அந்த மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

* மற்ற உயரழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக இணைப்பு நுகர்வோருக்கு, தற்போது அமலாகும், 40 சதவீத கட்டுப்பாட்டால், 800 மெகாவாட் தட்டுப்பாடு சமாளிக்கப் படுகிறது. புதிய மின் உற்பத்தி திட்டத்தில், ஒவ்வொரு, 400 மெகாவாட்டும் கூடுதலாக கிடைக்கும் போது, 40 சதவீத கட்டுப்பாட்டிலுள்ள இணைப்புதாரர்களுக்கு, 200 மெகாவாட் கூடுதல் வினியோகம் தர வேண்டும்.  ஒவ்வொரு 400 மெகாவாட் கூடுதலாக சேரும் போது, 10 சதவீத கட்டுப்பாடு குறையும். இந்த அடிப்படையில் கூடுதலாக 1,600 மெகாவாட் கிடைக்கும் போது, மொத்தமுள்ள, 40 சதவீத மின்கட்டுப்பாடும் குறைக்கப்பட வேண்டும்.

பாரபட்சமில்லா மின்வெட்டு  மாலை 6 மணி முதல், 10 மணி வரையுள்ள, 90 சதவீத கட்டுப்பாட்டில், 700 முதல் 800 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகிறது. இதற்கு ஒவ்வொரு கூடுதல், 400 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் போது, 200 மெகாவாட் மின்சாரத்தை, இந்த இணைப்புதாரர்களுக்கு தர வேண்டும். இதன் மூலம் படிப்படியாக இரவு நேர மின்சார கட்டுப்பாடு குறைக்கப்பட்டு, கூடுதலாக 1,600 மெகாவாட் கிடைக்கும்போது, மொத்தமாக 90 சதவீத கட்டுப்பாடையும் குறைக்க வேண்டும்.  தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாத, மிகவும் சமமான மின்வெட்டை அமல்படுத்தும் வகையில், தற்போதைய மின்வெட்டு திட்டத்தை, மறுசீரமைக்க வேண்டும். இந்த வகையிலான மின்வெட்டு ஓரளவு நியாயமானதாக இருக்கும் என, ஆணையம் கருது கிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பால் சென்னைக்கான மின்வெட்டு, இரண்டு மணி நேரத்திலிருந்து, மூன்று அல்லது நான்கு மணி நேரமாக அதிகரிக்கப்படும் என தெரிகிறது. இந்த உத்தரவுப்படி, சென்னைக்கு மின்வெட்டை இன்னும் அதிகரித்து, அதை மின்வாரியம் குளறுபடி இல்லாமல், சரியான முறையில் அமல்படுத்தினால், எட்டு மணி நேர மின்வெட்டு மாறி, சென்னை உட்பட அனைத்து இடங்களிலும், நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரத்திற்குள் மின்வெட்டு இருக்கும் என தெரிகிறது. பாரபட்ச சலுகை மாறுமா? ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய உத்தரவால், சென்னைக்கும் மற்ற பகுதிகளுக்கும், மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு, மின்வாரியம் தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமல்படுத்தினாலாவது, எட்டு மணி நேர மின்வெட்டு வேதனையை மின்சார வாரியம் குறைக்குமா அல்லது அப்போதும் அதே எட்டு மற்றும் பத்து மணி நேர மின்வெட்டை அமல்படுத்தி விட்டு, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும், மின்வாரியம் சலுகை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் ஆ.ராசாவுடன் பிரதமர் மன்மோகன் சிங் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு நார்வே நிறுவனம்!


யூனிடெக் நிறுவனத்துடன் சேர்ந்து நார்வே நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான டெலிநார் 2ஜி உரிமத்தை பெற்றது. ஆனால் ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 2ஜி உரிமங்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து அந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது.  ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. 2ஜி உரிமம் வழங்குவதில் பிரதமர் மன்மோகன்சிங் அப்போதைய  நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  ஆகியோருக்கும் பங்கு உண்டு என்று டெலிநார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தஸ்தாவேஜூக்கள் அடிப்படையில் இந்த மனுவை டெலிநார் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.  ஆனால் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரது சிறப்பு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.  அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். 

இந்த நிலையில் 2ஜி உரிமம் வழங்குவதில் பிரதமருக்கும், ப.சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு என்று டெலிநார் நிறுவனம் தாக்கல் செய்திருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே யூனிநாரிலிருந்து வெளியேற வேண்டுமானால் 15 கோடி டாலர் (சுமார் ரூ.750 கோடி) கொடுக்க வேண்டும் என்று டெலிநார் நிறுவனத்திடம் யூனிடெக் கோரிக்கை விடுத்துள்ளது.நார்வேயின் டெலிநார் மற்றும் இந்தியாவின் யூனிடெக் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் திட்டம் யூனிநார் ஆகும். இந்த கூட்டு நிறுவனம் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் செல்போன் சேவை வழங்கி வருகிறது. ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த யூனிடெக், இந்த கூட்டுத் திட்டத்தில் 32.7 விழுக்காடு பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. நார்வே நிறுவனம் 67.25 விழுக்காடு பங்குகளைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம், கடந்த 2009ஆம் ஆண்டில் இந்த பங்குகளை வாங்கியது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...