ஓசூர் அருகே, தமிழக எல்லையில், இரண்டு கிராமங்களில் பன்றி, கோழி மற்றும் எருமை வளர்த்தாலும், சாப்பிட்டாலும் ஊருக்கு கேடு என பீதியடைந்துள்ளனர். 200 ஆண்டாக இறைச்சியை சாப்பிடாமலும், வளர்க்காமலும் கட்டுப்பாட்டுடன் இருந்து வருகின்றனர்.ஓசூர் அடுத்த முத்தூலி ஊராட்சியில், தாசரப்பள்ளி தின்னா, சின்ன தின்னா ஆகிய கிராமங்கள் உள்ளன. தாசரப்பள்ளி தின்னா கிராமத்தில், 160 குடும்பத்தினரும், சின்ன தின்னா கிராமத்தில், 50 குடும்பத்தினரும் வசிக்கின்றனர்.விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இக்கிராமத்தில், 200 ஆண்டுக்கு முன், திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டு, பலர் அடுத்தடுத்து இறந்தனர். பிறக்கும் குழந்தைகளும் ஊனமாக பிறந்தன. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், ஊர் பஞ்சாயத்தை கூட்டினர்.பஞ்சாயத்தில், கோழி, மாடு மற்றும் பன்றி போன்றவற்றை சாப்பிடுவதால், அப்பகுதியில் உள்ள காவல் தெய்வமான, "நந்தியால எல்லம்மா தேவி மற்றும் "கங்கம்மா சுவாமி கோபமடைந்து, ஊருக்கு கேடு வந்துள்ளதாகவும், அதனால், இனி எந்த காலத்திலும் கோழி, மாடு மற்றும் பன்றி இறைச்சியை சாப்பிடக் கூடாது. அவற்றை ஊரில் யார் வீட்டிலும் வளர்க்க கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்தனர்.
கட்டுப்பாட்டை மீறாமல், 200 ஆண்டாக தாசரப்பள்ளி தின்னா, சின்ன தின்னா கிராம மக்கள் இருந்து வருகின்றனர்.இந்த இரண்டு கிராமத்திலும் பெண் குழந்தைகளை வெளியூரில் திருமணம் செய்து கொடுத்தால் அவர்கள், கோழி, பன்றி மற்றும் மாடு சாப்பிடவும், வளர்க்கவும் வாய்ப்புள்ளதால், இரு கிராமத்திலும் பெண் குழந்தைகளை வெளியூரில் திருமணம் செய்து கொடுப்பதில்லை. உள்ளூரில் உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொடுக்கின்றனர்.இவ்விரு கிராமத்திலும் போயர் சமூகத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த இரு ஊர் கட்டுப்பாட்டால் புதிதாக குடியேறுவதில்லை. பெண் குழந்தைகளை திருமணம் செய்தும் கொடுப்பதில்லை.அக்கிராமத்தை சேர்ந்த முதியவர் நந்தாலப்பா கூறுகையில், ""மூதாதையர் காலத்தில் இருந்தே பரம்பரை, பரம்பரையாக கோழி, மாடு மற்றும் பன்றி கறி சாப்பிடுவதில்லை. மேலும், அவற்றை வளர்க்கவும் கூடாது என்ற சம்பிராதயத்துடன் வசிக்கிறோம். நடக்கும் பூமியை கூட வணங்கி, 10 ஆண்டுக்கு முன் செருப்பு கூட ஊரில் யாரும் போட்டு நடக்க மாட்டோம். தற்போது படித்த இளைஞர்கள் செருப்பு போட துவங்கியுள்ளனர். இவற்றை செய்யாமல் இருப்பதால் ஊருக்கு நல்லது என நினைத்து கடைபிடிக்கிறோம், என்றார்.