|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 September, 2011

கயானாவில் பிடிபட்ட 18 அடி அனகோண்டா!


அரசுப் பள்ளிகளில் பாடவேளை நேரம் 35 நிமிடம் அதிகரிப்பு!

தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பாடவேளை நேரம் 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

பள்ளி தொடங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுகட்டும் வகையிலும், பாடங்களை விரைவில் முடிக்கவும், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்தது. 2011-ல் இருந்து 2, 3, 4, 5, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், "முந்தைய அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி தரமில்லாததால், இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது. எனவே, பழைய பாடப்புத்தகமே வழங்கப்படும்' என்று அரசு அறிவித்தது. இதனால் ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருந்த பள்ளிகள், ஜூன் 15-ம் தேதி தான் தொடங்கின.
இதனிடையே சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றமும், சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்ததால், மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படாமல் இணைப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதையடுத்து, ஆகஸ்ட் 2-வது வாரத்திலிருந்து பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இப்போது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 22-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடவேளை நேரம் 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கு பாடங்களை முடிக்கும் வகையில் பள்ளி பாடவேளை நேரம் 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடவேளை நேரமும் 40 முதல் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும். இத்துடன் மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த வேண்டும். பாடவேளை நேரத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்வார்கள்.

இந்த உத்தரவு குறித்த விவரம் மாநிலம் முழுவதுமுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்வி மாவட்டங்களில் இப்போது புதிய பாடவேளை நேர அறிவிப்பின்படி வகுப்புகள் நடந்து வருவதாக, பள்ளிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலாண்டுத் தேர்வுக்கு 5 நாள் மட்டுமே விடுமுறை பள்ளிகளில் பாடவேளை நேரம் அதிகரித்துள்ள நிலையில், காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை நாள்களை 15 நாளில் இருந்து 5 நாளாகக் குறைக்கும்படி பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. வகுப்புகள் 15 நாள்கள் காலதாமதமாக தொடங்கியதால் பாடங்களை முடிக்க தினமும் 35 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 22-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்வு விடுமுறையை 15 நாள்களில் இருந்து 5 நாள்களாக குறைத்துக் கொள்ளும்படி பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது

மனித பார்வையில் சிக்காத உயிரினம்!



பத்தி தலை எங்கே?


இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் !

 மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் சராசரியாக, 30 சதவீதம் அதிகரித்துள்ளது' என, அரசு சார்பற்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அரசு சார்பற்ற நிறுவனம், மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் தற்போதைய சொத்து மதிப்பு, சராசரியாக 10.6 கோடி ரூபாயாக உள்ளது.கடந்த 2009ம் ஆண்டில், அமைச்சர்களின் சொத்து மதிப்பு 7.3 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது, சராசரியாக 3.3 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, 77 சதவீத அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்.

மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பிரபுல் படேலின் தற்போதைய சொத்து மதிப்பு 122 கோடி ரூபாய். கடந்த 2009ம் ஆண்டில், இவரது சொத்து மதிப்பு 79.8 கோடி ரூபாய். இவருக்கு அடுத்ததாக, தி.மு.க., அமைச்சர் ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு, 2009ம் ஆண்டில், 5.9 கோடி ரூபாயாக இருந்தது, 64.5 கோடி ரூபாய் அதிகரித்து, தற்போது, 70 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத்தின் தற்போதைய சொத்து மதிப்பு, 41 கோடி ரூபாய்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவரது சொத்து மதிப்பு 14 கோடி ரூபாய். அதன்பின், இரண்டு ஆண்டுகளில், 26 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதேபோன்று, மேலும் பல அமைச்சர்களின் சொத்து மதிப்பு, இரண்டு ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் கமிட்டி பதவி போச்சு: ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., சுரேஷ் கல்மாடி ஆகிய மூன்று பேரும், பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர் பதவியை, தற்காலிகமாக இழந்துள்ளனர்.
இருந்தாலும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடர்பான, பார்லிமென்ட் நிலைக் குழு உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ராஜா உட்பட மூன்று எம்.பி.,க்களை, பார்லிமென்ட் நிலைக்குழுவில் இருந்து நீக்கியதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பார்லிமென்ட் விதிகளின்படி, எம்.பி.,யாக இருப்பவர் நிலைக்குழுவில் இடம் பெற தகுதியுடையவர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குருதாஸ் தாஸ் குப்தா, பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பாரத்ருகாரி மகதாப், மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களை கடுமையாக விமர்சிப்பவர்கள்.அவர்கள் நிதி தொடர்பான நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே நாள்...


  • சர்வதேச நீர் கண்காணிப்பு தினம்
  •  சிலி விடுதலை தினம்(1810)
  •  இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா அமைப்பு உருவாக்கப்பட்டது(1968)
  •  லண்டனில் ராயல் ஒப்பேரா மாளிகை திறக்கப்பட்டது(1809)
  •  நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது(1851)
  • தெலுங்கானா பிரச்னையால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு!


    தனித் தெலுங்கானா அமைக்கக் கோரி, ஆந்திராவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், தமிழகத்திற்கு வரும் மத்திய தொகுப்பு மின்சார அளவு குறைந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தமிழகத்திற்கு கூடுதல் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    ஆந்திர மாநிலத்தில், தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி, பல வகைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், ஐதராபாத் அருகிலுள்ள சிங்கரேனி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், தினமும் எடுக்கப்படும், 1.20 லட்சம் டன் நிலக்கரிக்குப் பதிலாக, 30 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால், அருகிலுள்ள அனல்மின் நிலையங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கரீம் நகர் மாவட்டத்தில், தேசிய அனல்மின் கழகத்திற்குச் சொந்தமான, ராமகுண்டம் அனல்மின் நிலையம், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில், 2,600 மெகாவாட் திறன் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஏழு யூனிட்கள் இயங்குகின்றன.

    இங்கிருந்து, மத்திய அரசின் தொகுப்பாக, தமிழகத்திற்கு, 659 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. கடந்த இரு தினங்களாக ராமகுண்டம் அனல்மின் நிலையத்தில், சில யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நிலைமையைச் சமாளிக்க, ஒடிசாவிலிருந்து ரயில் மூலம் நிலக்கரி பெற்று, மீண்டும் அனைத்து யூனிட்களும் இயக்கப்படுகின்றன. ஆனாலும், நேற்றைய நிலவரப்படி, தமிழகத்திற்கு, 659 மெகாவாட் ஒதுக்கீட்டில், 400 மெகாவாட் மட்டுமே கிடைத்துள்ளது. நேற்று முன்தினமும் குறைவான மின்சாரமே கிடைத்தது.

    இதுகுறித்து, தமிழக மின் துறை அதிகாரி கூறும்போது,"சுரங்கத் தொழிலாளர்கள் விரைவில் பணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளதால், ராமகுண்டம் மின் நிலையப் பணிகளில் பாதிப்பு ஏற்படாது.இதுவரை, அங்கிருந்து மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் குறைவாகக் கிடைத்தாலும், தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்திருப்பதால், அதை வைத்து நிலைமையைச் சமாளித்துக் கொண்டிருக்கிறோம்' என்றார். 

    வாழைப்பழ மின்சாரம்!

    வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. அந்நாட்டில் உள்ள வாழைப்பழ உற்பத்தியாளர் சங்கத்தினர் எங்களிடம் ஆண்டுதோறும் 20 ஆயிரம் டன் வாழைப்பழங்கள் அழுகி குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றன என்று கூறினர். உடனே ஆராய்ச்சியில் இறங்கிய பல்கலைக்கழகம், அழுகிய வாழைப்பழங்களை ஒரு பெரிய தொட்டியில் போட்டு, அது மேலும் அழுகுவதற்கான வேதிப்பொருள்களைக் கலந்தனர். நன்றாக அழுகியதும் அதிலிருந்து மீதேன் வாயு வெளியானது. அந்த வாயுவின் மூலம் ஜெனரேட்டரை இயங்க வைத்து, அதன் மூலம் மின்சாரம் தயாரித்து மின்சாதனப் பொருள்களை இயங்க வைத்தனர். இது குறித்து ஆய்வுகள் விரிவடையும் போது அதிக அளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள்

     தெரிவித்துள்ளனர்.

    தேசம் எங்களை ஒதுக்கவில்லை திருநங்கைகள்!

    அங்கீகாரம்' என்ற கனமான உரிமைக் குரலுக்கு மத்தியில் ஹிமாச்சல் மலைப்பிரதேசத்தில் நடந்த அந்த ஏழு நாள்கள் முகாம், இதமான மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது, திருச்சியைச் சேர்ந்த நான்கு திருநங்கைகளுக்கு.

    காந்தி அமைதி அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதுதில்லியைச் சேர்ந்த "தேசிய இளைஞர் திட்டம்' தேசிய இளைஞர் ஒருமைப்பாட்டு முகாமை நடத்தி வருகிறது. 83 வயது நிரம்பிய பழுத்த காந்தியவாதியான எஸ்.என். சுப்பாராவ், இதன் இயக்குநர்.

    இந்த முகாமில், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சிகள், வன்முறை, போதை, பாலியல் ஒடுக்குமுறை, ஊழல், குற்றமயமாகிவிட்ட அரசியல் போன்றவற்றுக்கு எதிரான எண்ணங்கள் எதிர்காலத் தலைமுறையிடம் உருவாக்கப்படுகிறது. 


    இந்த முறை ஹிமாச்சலப் பிரதேசம், சிம்லாவுக்கு அருகேயுள்ள "சோழன்' என்ற மலைப்பகுதியில் ஜூன் இறுதியில் தொடங்கி 7 நாள்கள் முகாம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த முகாமில் நாடு முழுவதுமிருந்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 800 இளைஞர், இளைஞிகளுடன் திருச்சியிலிருந்து பங்கேற்றவர்கள்தான் இந்த நான்கு திருநங்கைகள். இதுபோன்ற பொது முகாம்களில் திருநங்கைககளும் பங்கேற்பது அநேகமாக இதுதான் முதல் முறை என்கின்றனர். உற்சாகத்தின் எல்லைக்கே சென்றிருக்கும் திருநங்கை பி. கஜோலிடம் பேசினோம்: திருச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் "சேஃப்' அமைப்பின் தலைவிதான் கஜோல். அவர் சொல்கிறார்:

    "தமிழ்நாட்டிலிருந்து 26 பேர். அதில் திருச்சியிலிருந்து நான் (கஜோல்), தாமரை, ஆர்த்தி, உமா நால்வர் மட்டுமே திருநங்கைகள். ரயில் பயணத்துக்குப் பாதிக் கட்டணம்தான். முகாம் பதிவுக் கட்டணம் ஒருவருக்கு ரூ. 150.

    இதுவரை எங்களது சமூகத்தின் முகாம்கள், கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றுவந்த எங்களுக்கு முதல் முறையாக சிறப்பான அனுபவம். வெவ்வேறு மொழி பேசுபவர்கள்; கலாசாரத்தினருடன் ஏழு நாள்கள் இருந்ததை இனி எக்காலமும் மறக்கவே முடியாது.

    "சமூகம் வெறுத்து ஒதுக்கிய எங்களை தேசம் வெறுத்து ஒதுக்கவில்லை. எங்கள் ரத்தத்திலும் தேசப்பற்று இருக்கிறது. இளைஞர்கள், இளைஞிகள் பலர் எங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விட வேண்டும். தேசியப் பாடல் பாட வேண்டும். பிறகு "டீ'. எளிய யோகா, கராத்தே பயிற்சிகள். சிறிது நேரம் சிரிப்பு யோகா(!). பிறகு, தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி.


    நம்முடைய மூவண்ணக் கொடியை அத்தனை பவ்யமாக, மரியாதையாக எடுத்துச் சென்று, முறைப்படி கயிற்றில் கட்டி ஏற்றும் முறையை அங்குதான் பார்த்தேன். கொடியேற்றுவதற்கு முன்பு, வரிசையாக நிற்பவர்கள் எல்லோரும் வரிசையாகத்தான் நிற்கிறார்களா? என்று முதலாவதாக இருப்பவர் சற்று முன்வந்து வரிசையைத் திரும்பிப் பார்த்து "ஓகே' சொல்ல வேண்டும்.

    கொடிக்குரிய மரியாதை என்ன என்பதை இந்தளவுக்கு யாரும் எங்களுக்குச்  சொல்லித்தரவில்லை. காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை களப்பணி. தங்கியிருந்த விடுதி, கூட்ட அரங்கு, வளாகத்தை சுத்தப்படுத்துவது. அருகிலுள்ள மலைக்கிராமங்கள், ரயில்வே நிலையங்களைச் சுத்தப்படுத்துவது போன்ற பணிகள். எங்கு சென்றாலும் மேடு, பள்ளம் நிறைந்த சில தொலைவை நடந்தே கடக்க வேண்டும். குறிப்பாக தங்கியிருந்த விடுதியிலிருந்து ஒரு நாளில் பல முறை கீழே இறங்கி, ஏறி- அதாவது 66 படிகள் ஏறி, இறங்கிச் செல்ல வேண்டும். 9 மணிக்கு காலைச் சிற்றுண்டி.


    பிறகு முற்பகல் 11 மணிக்கு உரை. பெரும்பாலான நாள்களில் சுப்பாராவ் பேசினார். காந்தியடிகளுடன் இருந்தவராம். அவரை "பாய்ஜி' என்றுதான் அழைத்தோம். 83 வயது நிரம்பிய அந்த "இளைஞர்' எங்களுடன் எல்லா பணிகளிலும் பங்கேற்றது எங்களை இன்னும் உற்சாகப்படுத்தியது.

    பட்டியலிடப்பட்ட 25 வாக்கியங்களை ஒவ்வொரு மொழியிலும் பெயர்த்து பயிற்றுவிக்க வேண்டும். முகாமில் இதுவொரு பகுதி. இது முடிந்து மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது, "சாப்பிட்டாச்சா' என பஞ்சாபி பெண்களும், ஒரியப் பெண்களும் கொஞ்சும் தமிழில் கேட்டது ஆச்சர்யமாக இருந்தது.


    திறமைகளைக் கற்றுக் கொடுக்கும் பகுதியில், நான் சிலருக்கு அழகுக்கலையை சொல்லித் தந்தேன். இப்படியொரு வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தே திருச்சியில் நிறைய அழகு சாதனப் பொருள்களை வாங்கி வைத்திருந்தேன்.

    நிறைவு நாளில் முகாம் பற்றிய கருத்தை பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். 800 பேரில் இருந்து 6 பேர். அந்த 6 பேரில் நானும் ஒருத்தி. மகிழ்ச்சித் திளைப்புக்கு, சொல்லவா வேண்டும்?

    "இதுவரை எந்தத் திட்டமும் இல்லாமல் வாழ்ந்தோம். இப்போது தேசத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த முகாமுக்கு நாங்கள் நாற்பது பேர் வருவோம்' என்று சொல்லிவிட்டு இறங்கினேன்' என்றார் கஜோல். சாதி- மதம் கடந்த, மொழி கடந்த, வட்டாரம் கடந்த மனிதத்துவத்தை நோக்கிய பயணம் சாத்தியப்படுமா? அந்த 83 வயது இளைஞர் சுப்பாராவ் தமிழகம் வந்தால் முதல் கேள்வி இதுதான்.

    உயிருள்ள வரை பாடிக் கொண்டிருக்க வேண்டும்!

    திருமண விழாக்களில் 50 ஆண்டுகளாக நீங்கள் கேட்கும் பாடல் "வாராயோ என் தோழி வாராயோ'. தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஒலிக்கும் பாடல் "செல்லாத்தா எங்க மாரியாத்தா'. இப்படித் தமிழ் மக்களின் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் பாடல்களைப் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்படங்களில் பாடல்களைப் பாட ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதைக் கொண்டாடும் வகையில் சென்னையில் அவருக்கு விழா எடுக்க இருக்கிறார்கள். "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' என்ற பாடலைப் பாடிய அந்தப் பாட்டு ராணி நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...


     ""1961 ஆம் ஆண்டு வெளிவந்த "பாசமலர்' படத்தில் நான் பாடிய பாடலான "வாராயோயென் தோழி வாராயோ' பாட்டு ஹிட் ஆனதிலிருந்து இன்று வரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடிவிட்டேன். ஆனால் அன்று இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் என்னிடம் சொன்ன வார்த்தைகள் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன: ""நல்லா பாடி உன் திறமையாலே மேலே வரணும்''
     ஆனால் நான் முதன்முதலாகப் பாடியது கே.வி.மகாதேவன் இசையமைப்பில்தான். 1958-ல் கே.சோமு இயக்கத்தில் வெளிவந்த "நல்ல இடத்துச் சம்பந்தம்' என்ற படத்தில் "இவரேதான் அவரு... அவரேதான் இவரு...' என்ற பாடல்தான் அது.
     
    என் அம்மா ஆர்.எம்.நிர்மலா ஒரு பாடகி. அவருடன் நான் எப்போதும் சென்று கொண்டிருப்பேன். சிறுவயதில் ரொம்பவும் துறுதுறுவென இருப்பேன். அதைப் பார்த்த கே.வி.மகாதேவன் எனக்குப் பாட்டுக் கற்றுக் கொடுக்கச் சொன்னார். பின்னர் அவரே எனக்கு முதன்முதலாகப் பாடுவதற்கும் வாய்ப்புக் கொடுத்தார். எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரும் அவரே.
     
    ஜெயலலிதா அவர்களுக்கு திரைப்படத்தில் முதலில் பின்னணி பாடியது நான்தான். "நீ என்பது என்ன.. நான் என்பது என்ன' என்ற பாடலை நான் அவருக்காகப் பாடினேன். அது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது. இந்த அளவுக்கு அவர்கள் புகழ்பெறுவார்கள் என்று அப்போது எனக்கும் தெரியாது; அவர்களுக்கும் தெரியாது.

     "வெள்ளிவிழா' படத்துக்காக நான் பாடிய "காதோடுதான் நான் பேசுவேன்' பாடல் மிகவும் புகழ் பெற்றது. அதற்காக எனக்குத் தேசிய விருதும் கிடைத்தது. அந்தப் பெருமை இயக்குநர் சிகரம் கே.பி.சாருக்குத்தான் போக வேண்டும். இப்போது விருதுகள் மலிந்து போய்விட்டன. அப்போது தேசிய விருது கிடைப்பது மிகவும் அரிது.
     
    தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி, ஏன் ஆங்கிலத்தில் கூட நான் பாடிவிட்டேன். தெலுங்கில் பாடியதற்காக "நந்தி அவார்ட்' கிடைத்தது.
     எல்லாரும் என்னைப் பார்த்து, பக்திப் பாடல்களிலும் நீங்கள் இந்த அளவுக்கு வெற்றி பெற்றது எப்படி என்று கேட்கிறார்கள். பக்திப் பாடல்களை நான் உணர்ந்து பாடுவேன். ஈடுபாட்டோடு பாடுவேன். அதனால் நான் பாடிய பக்திப் பாடல்கள் எல்லாருடைய மனதையும் தொட்டிருக்கின்றன. இமயமலையில் ஏறியவர் ஒரு சிகரத்தைத் தொட்டார் என்றால் நான் இரண்டு சிகரங்களைத் தொட்டுவிட்டேன் என்றுதான் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும்.
     "சிவந்த மண்' படத்துக்காக நான் பாடிய "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' பாட்டைக் கேட்டுவிட்டு சிவாஜி அண்ணன் என்னிடம் வந்து, ""என்னமா பாடிருக்க!'' என்று வியந்து பாராட்டினார். அந்தப் பாட்டுப் பாட நான் பட்ட கஷ்டமெல்லாம் அந்தப் பாராட்டைக் கேட்டதும் மறந்து போனது. அந்தப் பாட்டைக் கேட்ட லதா மங்கேஷ்கர் என்னைப் பாராட்ட சென்னைக்கே வந்துவிட்டார்.
     
    நான் பாடிய "முத்துக்குளிக்க வாரீகளா' என்ற பாடலை ஆஷா போன்ஸ்லே ஹிந்தியில் பாடினார். என்னைப் போல பாட முடியவில்லை என்று வருத்தப்பட்டாராம். அந்தப் பாடலுக்காக இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் என்னைப் பாராட்டினார்.
     
    இப்போது பாடக் கூடிய எல்லாப் பாடகிகளின் பாடல்களையும் ரசிக்கிறேன். சர்க்கரை ஒன்றுதான். அதில் ஏராளமான ஸ்வீட்களைத் தயாரிக்கிறோம். அதைப் போல இசை ஒன்றுதான். ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்திறமையாலும், தனித்தன்மை வாய்ந்த குரல் வளத்தாலும் ரசிக்கும்படியாகப் பாடுகிறார்கள். இதில் யாரைத் தவிர்க்க முடியும்? அதனால் எல்லாருடைய பாடல்களையும் ரசிக்கிறேன்.
     
    அன்றைக்கிருந்த பாடல்களைப் போலவே இப்போதுள்ள பாடல்களையும் நான் மிகவும் ரசிக்கிறேன். என்னைப் பொறுத்தளவில் எல்லாச் சப்தங்களும் இசைதான். ஒரு முழுப்பாடலைப் பாடக் கூப்பிட்டால் எப்படி மகிழ்ச்சியோடு பாடப் போவேனோ, அதைப் போல நான்கு வரிகளை மட்டும் பாடக் கூப்பிட்டாலும் மகிழ்ச்சியோடு போவேன்.  எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறேன். அவர்கள் கொடுத்த ஊக்கம், ரசிகர்களின் பேராதரவு இல்லாவிட்டால் நான் இத்தனை ஆண்டுகளாகப் பாடிக் கொண்டு இருக்க முடியாது. ரசிகர்கள் இல்லாவிட்டால் நான் இல்லை.

    உயிருள்ளவரை நான் பாடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் ஆசை'' என்றார்.

    குழந்தைகளை பாதிக்கும் மூளை செயல்திறன் குறைபாடு!

    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
    அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல்” என்றார் ஔவையார்.

    மண்ணில் பிறக்கும் குழந்தைகள் அனைவருமே ஒரே மாதிரியான உடல் நலத்துடன் இருப்பதில்லை. ஒரு சிலர் அசாதரணமாகத் தோற்றமளிப்பர். நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் அவர்கள் பேசவோ, அமரவோ மாட்டர். இந்த பாதிப்பை, "மூளை செயல்திறன் குறைபாடு’ என்று அழைக்கின்றனர்.

    மூளை குறைபாடு ஒரு நோயல்ல: மனிதர்களின் தலைமைச்செயலகம் என்று அழைக்கப்படும் மூளையானது சரியான வளர்ச்சியுடன் இல்லை என்றால் பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கால்கள் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும். கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர்.

    தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன. மூளை வளர்ச்சி குறைவதற்கு, முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவர்கள் மீது பழி போடப்பட்டது. இப்போது மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு கூட, மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் பிறப்பு எண்ணிக்கை குறையவில்லை. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர், பிறப்பிலேயே மூச்சுத் திணறலால் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக, மருத்துவக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.

    ஆயிரத்தில் இருவர்

    பிறக்கும்போது சாதாரண நிலையில் உள்ள குழந்தை, பின் மூளையில் ரத்தக்கசிவோ, தொற்றோ, மூளையின் மேற்புறத்தில் தொற்றோ ஏற்பட்டால், மூளை செயல்திறன் குறைபாடு உருவாகும். தாய்க்கும், சேய்க்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் போகும்போது, குழந்தைக்கு மஞ்சள் காமாலை உருவாகும் போது அதை கண்டறியாமல், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், மூளை பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு விடும்.

    ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடும் சீராக இருக்காது என்பதால், இவர்களை கவனமாகக் கையாள வேண்டும். பார்வைக் குறைபாடு, காதுகேளா நிலையும் இவர்களிடையே காணப்படும்.

    அம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால், குணப்படுத்த முடியாது. எனினும், வருமுன் காக்கலாம்.

    மத்திய நரம்பு மண்டல பாதிப்பு: மூளை செயல் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மூளை நரம்பியல் நிபுணர்கள் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். இக் குறைபாட்டினால் பிரதான தாக்குதலுக்கு உள்ளாவது, மத்திய நரம்பு மண்டலம் தான். மூளை கொடுக்கும் உத்தரவுகளை, தசைகள் செயல்படுத்தாது. தசைகள் தானாகவே விரைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது இயக்கமே இல்லாமல் கிடக்கும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் தன்மை கொண்டதல்ல. குழந்தை வளரும் போது, நோயும் வளரும் என்ற நிலை ஏற்படாது. தசை செயல் திறன் இழப்பு போன்ற, வளரும் தன்மை கொண்ட நோய்களிலிருந்து, இதை எளிதில் வித்தியாசம் காணலாம்.

    மூளை செயல்திறன் குறைபாடு, பல வகைகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காணப்படுவது, தசை இறுக்க நோய். தசைகள் இறுக்கமாக, விரைப்பாகக் காணப்படும். இதனால் கால், கைகளை வளைப்பது கடினம். உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம்; கால்கள் மட்டுமோ, கைகள் மட்டுமோ அல்லது கால், கை மட்டுமோ பாதிக்கப்படலாம். குழந்தைக்குத் துணி மாற்றும் போது, தாய் இதை கண்டுபிடிக்கலாம்.

    விரைத்த காலை மடக்க முடியாமல் போவது தான் இதன் அறிகுறி. தவழும் போது, காலுக்கு விசை கொடுக்காமல், அதை இழுத்து இழுத்து தவழ்வதும் ஒரு அறிகுறி. நடக்க துவங்கும் போது, கால் பின்னிக் கொண்டு, சீரான நடை இல்லாமல் போகும்.

    இதில் இன்னொரு வகை, தசைகளின் வளர்ச்சி குறையும். இதனால், குழந்தையின் தலை, ஆடிக் கொண்டே இருக்கும். தலை சீராக நிற்க வேண்டிய மாதத்தில் நிற்காது. தலை சாய்ந்த நிலையிலேயே இருக்கும். இதனால், குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டிருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்தபடி இருக்கும். பேச்சும் சீராக இருக்காது; சொல்லின் வடிவம் மாறும்.

    மூன்றாவது வகையில், உடலின் இயக்கம் நடுக்கத்துடன் காணப்படும். எனவே, எந்த வகை பாதிப்பு என்பதை, நுணுக்கமாகக் கவனித்துக் கண்டறிய வேண்டும். 3 வயது நிரம்பியதும், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இதைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும். பார்வைத் திறன், செவித்திறனையும் ஆராய வேண்டும். மயக்கம் ஏற்பட்டால், இ.இ.ஜி., (எலக்ட்ரோ என்செபலோகிராம்) எடுத்து பார்க்க வேண்டும். இதில் ஏதும் தெரியவில்லை எனில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும் என்கின்றனர் மூளை நரம்பியல் வல்லுநர்கள்

    அறிவில் சிறந்தவர்கள்: மூளை செயல்திறன் குறைபாடு கொண்டவர்கள், தாமதச் செயல்பாடு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால், அவர்கள் திறமையை மேம்படுத்த, பல்திறன் மேம்பாட்டு அணுகுமுறை தேவை என்கின்றனர் மருத்துவர்கள்

    உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை பராமரிக்கவும், மூச்சு திணறல், நுரையீரல் பிரச்னை, வலிப்பு ஆகியவற்றின் கடுமையைக் குறைப்பதற்காகவும், நிரந்தரமாக குழந்தை நல மருத்துவரை பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்.

    மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள், அறிவுத் திறனில் சிறந்தவர்களாகவே உள்ளனர். கல்வியில் முழுமையாக ஈடுபட்டு, சிறப்புப் பணி தகுதிகள் பெற்று, கை நிறைய சம்பாதிக்கும் திறனுடன் திகழலாம். அவர்களுக்கு முக்கிய தேவை, மற்றவர்களின் உதவி, பெற்றோரின் ஊக்குவிப்பும்தான் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

    விஷம் நீக்கும் புளியம்பழம்!

    அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் புளி. சுவைக்காக பயன்படுத்தப்படும் புளியில் சத்துக்களும் மருத்துவப்பயன்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளியமரம் இந்தியா முழுவதிலும் வெட்ட வெளிப்பிரதேசங்களிலும், தென்னிந்தியாவிலும், இமயமலைப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்க்கப்படுகிறது. விதையின் பருப்பு, கனிகள், தண்டுப் பட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை.

    செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: விதையின் பருப்பில் பாலசாக்கரைடுகள் உள்ளன. பாலசமைன், கட்டிக்கின், நாஸ்டர்ஷியம் டமரின், ஃபாஸ்ஃபாட்டிக் அமிலம், எத்தனாலமைன், செரீன் ஐனோசிட்டால், மற்றும் ஹார்டனைன் என்னும் இரசாயனப் பொருட்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின்,நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

    அஜீரணம் போக்கும்: புளியானது குளுமைஅகற்றி, வாய்வு அகற்றி, மலமிளக்கி, துவர்ப்பி, ஊக்கமூட்டி. விதையின் பருப்பு பாலுடன் கலந்து பேதி மருந்தாக பயன்படும். ஊக்கமூட்டும். கனிந்த கனிகள் பூச்சிகளை அகற்றும், அஜீரணத்தைப் போக்கும் மிதமான பேதி மருந்தாகும். உடலைக்குளிரச்செய்யும். ஈரலுக்கு நன்மருந்து. இலைகளின் சாறு இரத்த மூலத்திற்கும் சிறுநீர் கழித்தலின் போது வலியையும் குணப்படுத்தும். தண்டுப்பட்டை துவர்ப்புள்ளது காய்ச்சலைப் போக்கும்.

    புளியம்பழம் உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும்,வாதம் தொடர்பான வியாதிகளைத் தணித்துக் குணப்படுத்தும்.புளியம்பழத்தின் உஷ்ண சக்தி 82 காலோரியாகும். புளியம்பழத்தில் பழைய புளி, புதிய புளி என்ற இரண்டு வகை உண்டு. இருவகைப்புளியின் குணமும் ஒன்றே என்றாலும் புதுப்புளியை விட பழைய புளிக்கே வேகம் அதிகம். சூலை தொடர்பான வியாதிகளைக் குணமாக்கும். அதிக அளவு புளியை சாப்பிட்டால் ரத்தம் சுண்டும்

    தேள்விஷம் இறங்கும்: தேள் கடித்தவருக்கு புளியம் பழம் மருந்தாக செயல்படுகிறது. களாக்காய் அளவு நார் இல்லாத புளியம்பழத்தை எடுத்துக்கொண்டு அதே அளவு காரம் உள்ள சுண்ணாம்புடன் சேர்த்து இரண்டையும் நன்றாக அழுத்திப் பிசைந்தால் உடனே அது சூடேறும். சூடு ஆறும் முன் அதை அடையாக எடுத்து தேள் விஷம் உள்ள இடத்தில் வைத்து அழுத்த வேண்டும். இந்த மருந்து அப்படியே ஒட்டிக்கொள்ளும். விஷம் புளியம்பழத்தில் ஏறியவுடன் கடுப்பு நின்றுவிடும். படிப்படியாக குணமடையும்.

    ரத்த கட்டு அகற்றும்: உடலில் எங்காவது அடிபட்டு ரத்தம் கட்டி வீக்கம் ஏற்பட்டால் புளியை ஒரு அளவு எடுத்து அதே அளவிற்கு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து அதை சுண்டக்குழம்பு போல கரைத்து எடுத்து வடிகட்டி ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு, அதை அடுப்பில் வைத்து,நன்றாக கொதிக்க வைத்து அதை தாளக்கூடிய சூட்டுடன் வீக்கத்தின் மேல் கனமாகப் பற்றுப் போட்டுவிட வேண்டும். தினசரி காலை, மாலை பழைய மருந்தைக் கழுவி விட்டு புதிதாகப் பற்றுப் போட வேண்டும். இந்த விதமான மூன்று நாள் பற்றுப் போட்டால் வீக்கம் வாடிவிடும். வலி தீரும்.

    பல்வலி குணமாகும்: பல்வலி ஏற்பட்டால் தேவையான அளவு கொஞ்சம் புளியை எடுத்து அதே அளவு உப்புத்தூளையும் எடுத்து இரண்டையும் நன்றாகப் பிசைந்து பல்லில் வலியுள்ள இடத்தில் அடையாக வைத்து அழுத்திவிட வேண்டும், பின் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வாயில் உமிழ்நீர் ஊறினால் அதை துப்பிவிட வேண்டும். கால் மணி நேரம் கழித்து புளியையும் துப்பிவிட்டு வெது வெதுப்பான வெந்நீர் கொண்டு வாயை பலமுறை கொப்பளிக்க பல்வலி குணமாகும். தினசரி காலை, மாலை தேவையானால் மதியம் கூட இந்த முறையை கையாளலாம்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...