படிப்பிற்காக,
இந்திய மாணவர்களை கவர்ந்திழுக்கும் வெளிநாடுகளில் முதன்மையான இடத்தை
அமெரிக்காவே இப்போதும் தக்க வைத்துள்ளது. அதற்கு பலவித காரணங்கள்
சொல்லப்படுகின்றன. கல்வி கற்பித்தலுக்கான இயல்பான
சூழ்நிலை, பரந்த அனுபவம், சிறப்பான கல்வித்திட்டம் போன்றவை முக்கிய
காரணங்கள். மேலும், இன்று உலகளவில் சிறந்தப் பல்கலைகளாக
பட்டியலிடப்பட்டுள்ள 100 பல்கலைக்கழகங்களில் சுமார் 60% பல்கலைகள்
அமெரிக்காவில் உள்ளதும் மாணவர்கள் அதை நோக்கிப் படையெடுப்பதற்கு முக்கிய
காரணம். எனவேதான், அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்தாலும்,
அந்நாட்டை நோக்கி படிப்பதற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில்
எழுச்சிக் குறையவில்லை. அந்நாட்டு கல்விச் சூழலானது, சுதந்திரம், நடைமுறை
மற்றும் அறிவுப்பூர்வமானதாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் எல்லாம்
சில குறிப்பிட்ட ஆலோசனை மையங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கல்விக்கான
அமைப்புகள் கூறுபவை.
மாற்று வாய்ப்புகள்; சமூக கல்லூரிகள்(Community colleges)
அமெரிக்காவில், 4,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும்
பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை, சமூக(Community) கல்லூரிகள், தனியார் மற்றும்
பொது பல்கலைகள் என்று மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இளநிலைப்
பட்டப்படிப்பானது அமெரிக்காவில் 4 வருடங்களைக் கொண்டதாகும். பல இந்திய
மாணவர்கள் மத்தியில் இந்த 4 வருட படிப்புதான் முன்னுரிமை பெற்றுள்ளது. இந்தப் படிப்பைத் தவிர்த்து வேறொரு முறையும் உள்ளது. அது, அறிவியல்
மற்றும் கலைத்துறையில் துணைநிலைப் பட்டம் பெறுவதாகும். 2 வருட காலஅளவைக்
கொண்ட இந்த துணைநிலைப் பட்டத்தை, சமூக கல்லூரிகள் வழங்குகின்றன.
வெளிநாட்டில் அதிகப் பணம் செலவழிக்க இயலாத மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த
மாற்று வழியாகும். மேலும், வேறுபல தனியார் மற்றும் பொது கல்வி
நிறுவனங்களைவிட, இந்த சமூக கல்லூரிகளில் கட்டணம் குறைவு.
சமூக கல்லூரிகளில் இடம்பெறுவதற்கு குறைந்த காலமே ஆகும் மற்றும் இதற்கான
போட்டியும் குறைவு. சமூகக் கல்லூரிகளில் 2 வருட படிப்பை முடித்துவிட்டு,
தமக்கான ஒரு வேலையையும் மாணவர்கள் தேடிக் கொள்ளலாம் அல்லது 4 வருட இளநிலைப்
படிப்பில் நேராக 3ம் வருடத்திலும் சேரலாம். பல சமூகக் கல்லூரிகள், வேறு
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் எளிதாக இடம்பெறும் வகையிலான படிப்புகளை
வழங்குகின்றன.
மேலும், தொலைநிலைக் கல்வி முறையிலும் மாணவர்கள் பட்டம் பெற முடியும்.
ஆனால், இந்திய கல்வி நிறுவனங்களில் தொலைநிலைப் படிப்பை மேற்கொள்வதோடு
ஒப்பிடுகையில் இது மிகவும் செலவு மிகுந்தது. ஒரு கல்லூரி மற்றும் படிப்பை
அமெரிக்காவில் தேர்வு செய்யும் முன்பாக, அவற்றின் அங்கீகாரத்தை பற்றி நன்கு
தெரிந்துகொள்ள மாணவர்கள் ஒருபோதும் தவறிவிடக்கூடாது.
சேர்க்கைக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்தப் பல்கலை அல்லது கல்லூரி ஆகியவற்றில் சேர்க்கை நடைமுறைகள்
தொடங்குவதற்கு 14 முதல் 18 மாதங்கள் முன்பாகவே, ஒரு மாணவர் அதற்கான
முன்னேற்பாடுகளை ஆரம்பித்துவிட வேண்டும். கல்வி நிறுவனத்தைப் பொறுத்து, ஒரு
வருடத்திற்கான செலவு $18,000 முதல் $50,000 வரை செலவாகும். மிகவும் விரும்பப்படும் படிப்புகளாக பொறியியல், கணிப்பொறி அறிவியல்
மற்றும் பயோ டெக்னாலஜி போன்றவை உள்ளன. அதேசமயம், வான்வெளி பொறியியல்,
சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் சிவில் ஆகிய துறைகளில் சிறப்பு படிப்பை
மேற்கொண்டவர்களுக்கு கிராக்கி உள்ளது.
சேர்க்கை முறை அமெரிக்க கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, மாணவரின் கல்வி ஆவணங்கள்
முக்கியமானவை. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தமக்கென தனி நடைமுறையைக் கொண்டவை.
இளநிலை பட்டப்படிப்பில் சேர, 9 மற்றும் 12ம் வகுப்புகளின் சான்றிதழ்கள்
மற்றும் செயல்பாடுகள் சரிபார்க்கப்படும். முதுநிலை படிப்பில் சேர 4வருட
இளநிலைப் படிப்பின் சான்றிதழ்கள் மற்றும் செயல்பாடுகள் சரிபார்க்கப்படும். தரமுள்ள தேர்வு மதிப்பெண்கள், டோபல்(TOEFL) தேர்வு மதிப்பெண்கள்,
படிப்பைத் தவிர இதர திறன் போட்டிகளில் மாணவர்கள் பெற்ற நற்சான்று ஆவணங்கள்,
பரிந்துரைக் கடிதங்கள் போன்றவை, அமெரிக்க கல்வி நிறுவனங்களில் இடம்
பிடிக்க உதவும் சில முக்கிய அம்சங்கள்.
நிதி உதவிகள் மற்றும் உதவித்தொகைகள் வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை பெறுவது
என்பது அதிக போட்டிகள் நிறைந்த விஷயம். முழு அளவிலான அல்லது பகுதியளவிலான
நிதி உதவிகள் கிடைக்கும். பகுதியளவு நிதி உதவுகள் ஒரு மாணவரின் கல்வி
செயல்பாட்டை வைத்து வழங்கப்படுகின்றன.
இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகள் தேவையான இன்டர்ன்ஷிப் -ஐ முடிக்க, ஒரு மாணவர், பாடத்திட்ட பிராக்டிகல்
பயிற்சி(CPT) அங்கீகாரத்தையும், விருப்ப பிராக்டிகல் பயிற்சி(OPT)
அங்கீகாரத்தையும், தனது படிப்பு முடிந்தபிறகு பெற்றிருக்க வேண்டும்.
அப்போதுதான், படிப்பிற்கு பிறகான காலகட்டத்தில் 12 மாதங்கள் வரை
அந்நாட்டில் பணிபுரிய முடியும். அதேசமயம், மாணவர்கள் 17 மாதங்கள்
நீட்டிப்பையும் பெற முடியும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும்
கணிதம் போன்ற பாடங்களில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டங்களை
வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அமெரிக்கப் பட்டங்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வேலை வாய்ப்புகள்
கிடைக்கின்றன. குறிப்பாக, இந்தியா, சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற
நாடுகளில் நல்ல பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
அமெரிக்க கல்வி குறித்து பலவித விபரங்களை அறிந்து கொள்வதற்கான சில வலைத்தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.