டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு காஸ்
சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்க வேண்டுமென்ற பார்லிமென்ட்
நிலைக்குழு பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம், இங்கு
விலையைக் கூட்டும் எண்ணெய் நிறுவனங்கள், அது குறையும் போது சத்தமே
காட்டுவதில்லை. பெட்ரோல், டீசலை அடுத்து, இந்த எண்ணெய் நிறுவனங்களின்
பார்வை, காஸ் சிலிண்டர்களின் மீது திரும்பியுள்ளது. காஸ் சிலிண்டர்
மானியத்தை குறைப்பதற்கான வேலைகளில் இவை இறங்கியுள்ளன.இதற்காக, பெட்ரோலியம்
மற்றும் இயற்கை வாயு தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் இந்த எண்ணெய்
நிறுவனங்கள் எடுத்த கணக்கெடுப்பு விபரங்கள் தரப்பட்டு, அதன்பேரில் அந்த
குழுவும் மத்திய அமைச்சரவைக்கு சில கருத்துருக்களை அனுப்பியிருக்கிறது.
அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அத்தனையும் "பகீர்' ரகமாகவுள்ளன.
காஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள நுகர்வோர் ஒருவருக்கு சொந்தமாக வீடு
அல்லது டூ வீலர் இருந்தால், அவருக்கு ஆண்டுக்கு நான்கு சிலிண்டர்கள்
மட்டுமே மானிய விலையில் தர வேண்டுமென்பது, இந்த குழுவின் முதல் பரிந்துரை;
ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில்
சிலிண்டரே தரக்கூடாது என்பது அடுத்த யோசனை.
இதன்படி, டூ வீலர் அல்லது சொந்தமாக குடிசை வீடு வைத்துள்ள ஒருவரின்
குடும்பத்துக்கு, ஆண்டுக்கு 4 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில்
கிடைக்கும்; அதற்கு மேல் தேவைப்பட்டால், ஒரு சிலிண்டரை 645 ரூபாய் கொடுத்து
வாங்க வேண்டும் என்கிறது குழுவின் பரிந்துரை. இது அமலுக்கு வரும்போது,
இந்த விலை 700லிருந்து 900 ரூபாய் வரை அதிகரிக்கலாம்.இன்றைய நிலையில்,
நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள சாதாரண விவசாயி,
கட்டுமானத் தொழிலாளி, கூலித்தொழிலாளிகள் அனைவருமே தங்களது வேலைக்காக
சொந்தமாக "டூ வீலர்'கள் வைத்துள்ளனர் என்பதே உண்மை.
அதேபோல, பெரு நகரங்களில் 50 ஆயிரம் ரூபாய் மாதச்சம்பளம் என்பது மிகச்
சாதாரணமாகி விட்டதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த சம்பளம்
வாங்கினாலும், நகரங்களில் உள்ள செலவுக்கு அந்த குடும்பத்தால் வசதியாக
வாழவோ, பெரிதாகச் சேமிக்கவோ முடியாது என்பதும் நிஜம். அதனால், இந்த 2
பரிந்துரைகளுக்கும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்புவது நிச்சயம்.
இந்த பரிந்துரைகளைவிட, நிலைக்குழு கூறியுள்ள ஒரு தகவல், எல்லோரையும்
அதிர்ச்சியடைய வைக்கிறது. பெரும்பாலான வீடுகளில், ஆண்டுக்கு 20லிருந்து 30
காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக அந்த குழு தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளது. உண்மையில், எந்த குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 12
சிலிண்டர்களுக்கு மேல் கிடைப்பதேயில்லை என்பதே யதார்த்தம்.நிலைக்குழு
பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டதாக தகவல் பரவியுள்ள
நிலையில், இதனை அமல்படுத்தக்கூடாது என்று மனுப்போரைத் துவக்கியுள்ளது
கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு. பிரதமருக்கு இவ்வமைப்பின் செயலர்
கதிர்மதியோன் அனுப்பியுள்ள கடிதம், 3 விஷயங்களை வலியுறுத்தியுள்ளது.
அதில் "மானிய விலை சிலிண்டர் கட்டுப்பாடு பட்டியலில் டூவீலர்தாரரை நீக்க
வேண்டும்; மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்க்கு மானிய விலை
சிலிண்டர்க்கு கட்டுப்பாடு விதிக்கலாம்; ஆண்டுக்கு 4 மானிய விலை சிலிண்டர்
என்பதை 12 ஆக உயர்த்தலாம்; நிலைக்குழு தகவல்படி, பார்த்தாலும் அதில் 18
சிலிண்டர்கள் குறையும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கதிர்மதியோன் கூறுகையில், இன்றைய நிலையில் டூவீலர்
வைத்திருப்பவரை "பணக்காரர்' என்று பார்லிமென்ட் நிலைக்குழு பட்டியலிடுவது,
வேடிக்கையானது. கார் வைத்திருப்பவரை அந்த பிரிவில் கொண்டு வந்தால் அதை
ஏற்றுக்கொள்ளலாம். குடும்ப நபர்களின் எண்ணிக்கையை வைத்து மானிய விலை காஸ்
சிலிண்டர் எண்ணிக்கையை நிர்ணயிக்கலாம்,'' என்றார்.
கோவையிலிருந்து மட்டுமின்றி, தேசம் முழுவதிலிருந்தும் இதேபோன்ற
கோரிக்கைகள் குவிந்துள்ளன. அதனால், இந்த பரிந்துரை அப்படியே
நடைமுறைப்படுத்தப்படுவது சந்தேகமே. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், ஊழலுக்கு
எதிராக தேசமே திரண்டது போல இதற்கும் நாடு தழுவிய எதிர்ப்பு, காங்கிரஸ்
அரசுக்கு எதிராகக்கிளம்புவது உறுதி.
எல்லாமே கொள்ளை! பெரும்பாலான குடும்பங்களில் ஆண்டுக்கு
20லிருந்து 30 காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக நிலைக்குழு சொன்ன தகவல்,
ஓர் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு குடும்பத்துக்கு
ஆண்டுக்கு அதிகபட்சமாக 12 காஸ் சிலிண்டர்கள் மட்டுமே தரப்படுகின்றன;
மீதமுள்ள 18 காஸ் சிலிண்டர்களும் நுகர்வோர் பெயர்களில் காஸ் டீலர்களால்
அல்லது அவர்களின் ஆட்களால் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன என்பதே
அந்த உண்மை.
No comments:
Post a Comment