|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 August, 2014

படம் அல்ல பாடம்!

நம் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பும், இப்போதும் திடீரென சில ஏமாற்றுக்காரர்களின் செயலால் ஏமாந்தவர்கள் என்ற செய்தி தலைகாட்டும். அந்த செய்தி ஓய்ந்து மூன்று மாதங்களில் இன்னோரு பகுதியில் இதே போன்று வேறு ஒரு ஏமாற்று வேலை நடந்திருப்பதாக செய்தி வெளியாகும். அதில் ஈடுபட்ட ஏமாற்றுகாரன் தன் தவறை நியாயபடுத்த ஏதாவது ஒரு கதையை கூறுவான். அப்படி நம்மை சுற்றி  நடக்கும் ஊழலை பற்றி வந்திருக்கும் படம் தான் சதுரங்க வேட்டை. சமூகத்தால் ஏமாற்றப்படும் ஓர் இளைஞன், பெரியவனானதும் அதே ஏமாற்று வேலையை கையில் எடுத்தால் என்னவாகும் என்பதுதான் 'சதுரங்க வேட்டை’ படத்தின் ஒன்லைன்! 
ஊரில் திடீரென நோட்டீஸ் அடித்து கொடுத்து தங்கத்துக்கு ஆஃபர் என அறிவித்துவிட்டு ஊர்மக்கள் அனைவரையும் தங்கநகை சீட்டில் சேர வைத்து அதில் மோசடி செய்து விட்டு ஊரை விட்டே ஓடும் கதாநாயகன். அவன் வார்த்தையை நம்பி அவனுக்கு உதவும் பிரபல ரவுடி என்றவாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அந்த காட்சி அதேபோல் இன்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தங்க நகை சீட்டின் மூலம் பெண்களிடன் ஆசை வார்த்தை பேசி சீட்டில் சேர சொல்லி அவர்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல்கள் தினம் தினம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
அடுத்ததான் இன்று வேலை இல்லா பட்டதாரிகளாய் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் சுற்றி திரிபவர்கள் முதலில் பாக்கெட்டை சமாளிக்க எடுக்கும் முடிவு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங். ஒரு பொருளை பொய் சொல்லி ஏமாற்றி விற்கும் வேலை டார்கெட் தான் முக்கியம் என்பதால் ஒரு பொய்க்கு 10 பொய்களை சொல்லி விற்கிறார்கள் கடைசியில் முதலாளி தப்பித்து ஓடி விடுவான் என்பதையும் அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர் வினோத்.தமிழ்நாட்டில் ஈமு கோழி வளர்ப்பு மோசடி மிகவும் பிரபலம். அதை பற்றி செய்திதாள்களின் அனைத்து பக்கங்களிலும் செய்தி வந்தாலும் மக்கள் அதில் மீண்டும் மீண்டும் ஏமாறுவார்கள் என்பதையும் பதிவு செய்திருப்பார். ஆண்மைக் குறைவுக்கு அற்புத மருந்து மண்ணுளி பாம்பு... லட்சாதிபதியாக்கும் குள்ள மனிதன் லில்லிபுட் என ஆசைக்காக அலைபவர்களை ஏமாற்றுபவன் ஈஸியாக ஏமாற்றிவிடுவான் என்பதற்கு இந்த படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம் தந்திரமாய் காட்டப்பட்டிருக்கும். இதுபோன்ற மோசடிகளில் சிக்கி ஏமாந்து போகாமல் இருப்பது எப்படி என்பதை, ஏமாற்றுபவரின் பக்கமிருந்தே படம்பிடித்து காட்டுகிறது திரைக்கதை. 
 
தினம் தினம் டிவிக்களிலும் பத்திரிக்கைகளிலும் வரும் செய்திகளை மக்கள் எவ்வளவு அசாதாரணமாக எடுத்து கொண்டு அதனை பற்றி கவலை படாமல் அடுத்த ஏமாறுதலுக்கு தயாராகிறார்கள் அதனை ஏமாற்றுக்காரர்கள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார்கள். ஏமாற்றுக்காரனான கதாநாயகன் கைதாகும்போது '' நான் யாரையும் ஏமாற்றவில்லை, ஏமாறுபவர்களுக்கு வாய்ப்பளிக்கிறேன்'' '' Money is always ultimate'' '''நீதியை நிதி கொடுத்து வாங்கலாம்'' போன்று இன்றைய அரசியலையும், நாட்டு நடப்பையும் சேர்த்து பதிவு செய்திருக்கிறார். பெரிய தவறு செய்பவன் சிறிய விஷயத்தை கோட்டை விட்டு விடுவான் என்பதற்கு உதாரணமாக '' பல கோடி கொள்ளையடிக்கும் போது போலிஸிடம் மாட்டாதவர்கள். மண்ணுளி பாம்பை பொய் சொல்லி விற்கும் போது மாட்டுவது" போலிஸ் ஸ்டேஷன் பேக்ஸ் மிஷினில் பேப்பர் தீரும் அளவுக்கு குற்றம் செய்தாலும் லஞ்சம் கொடுத்தால் வெளியே வந்துவிடலாம் போன்ற சீன்கள் அரசியல் ஹியூமர்!! இவ்வளவு தவறு செய்பவன் அனாதை ஆஸ்ரமத்திற்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் நிதி அளிப்பதை விளம்பரமாக்கி மக்களை நம்ப வைப்பான் என்பதையும் நாசூக்காக திரைக்கதையில் சொல்லி இருப்பது க்ளாஸ்!
 
ஏமாற்றுவேலை செய்பவனுக்கு பின்னால் அதை நியாயபடுத்த ஒரு பிளாஷ்பேக் என்றாலும் கடைசி சீன் வரை அவனை பணத்திற்காக பயணிக்கும் மனிதனாக காட்டி இருப்பது. ஆசை வார்த்தைக்கு ஏமாறும் மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் அவர்களது ஆசை என்பதை எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதையும் நறுக்கென்று சொல்லி இருக்கிறார்கள். இறுதியாக ரைஸ் புல்லிங் எனும் கோவில் கலசத்தை திருடுவது என்ற மோசடி அதனை ந்மப வைக்க ஆன்மீக பத்திரிக்கைகளில் வரும் செய்தியை காட்டி நம்ப வைப்பது அதனை நம்பி வாங்கும் தொழிலதிபருக்கு தெரியாமல் எப்படி ரைஸ் புல்லிங் நடக்க வைக்கிறார்கள் இரும்புதுகள்களுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்து அரிசி போல் மாற்றி அதனை காந்தவிசை உள்ள பொய் கலசத்தின் அருகில் கொண்டு சென்றால் அது உள்ளே இழுக்கப்படும் என்பதை தத்ரூபமாக படமாக்கி இருக்கிறார்கள். இவ்வளவு தவறு செய்யும் ஹீரோ இறுதியில் என்ன ஆனான் என்பது தான் படத்தின் கதை. 

இவ்வளவு மோசடிகளை பார்த்தபிறகும் மக்கள் ஆசை வார்த்தைக்கு ஏமாந்தால் அது அவர்கள் விதி! என்னதான் ஊடகங்களும், சினிமாக்களும் தவறுகளை காட்டினாலும் மக்கள் அதனை பொருட்படுதாமல் மீண்டும் அதே தவறை செய்வது குறையவில்லை. அப்படி இருப்பவர்களுக்கு இந்த படம் கொஞ்சம் அழுத்தமாகவே தன் பதிவை சொல்லி இருக்கிறது. ஏமாற்று வேலைகளை எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதை பார்த்து அதில் சிக்கி கொள்ளாமல் இருக்க ''சதுரங்கவேட்டை'' படம் அல்ல பாடம்!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...