|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 July, 2011

வெற்றிலை முக்கிய இடம் வகிப்பது ஏன்?



வெற்றிலை. இது வெற்று இலை அல்ல. இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக்கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது. தேவியின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண்மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தியின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண்மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாததுபோல் வெற்றிலையின்றி வழிபாடு இல்லை.


திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலைபாக்கு கொடுத்துவிட்டால் அது தாம்பூல சத்தியம். பிறகு அதை யாரும் மீறத் துணிய மாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த்தம் செய்யும் போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம் கொடுப்பவர்கள் வெற்றிலை பாக்கின் மீது உத்திரணியால் நீர் வார்த்துக் கொடுப்பது வழக்கம். வடஇந்தியாவிலும் இந்த வழக்கம் பரவலாக இருக்கிறது. வடநாட்டவர்கள், தீபாவளியன்று லக்ஷ்மி பூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையையும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்துவைப்பார். லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்காவை இது குறிக்குமாம். மாங்கல்யதாரணம் முடிந்ததும் வந்தோரனைவரும் வாழ்த்திவிட்டு விருத்துண்டு விட்டுப் புறப்படுகையில் முகூர்த்த வெற்றிலைபாக்கு கொடுக்காமல் அனுப்பமாட்டார்கள். திருமணத்தின்போது கணவன் மனைவி இருவருக்கும் பெண்ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம். நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு.
கம்பராமாயணத்தில் ஒரு உருக்கமானகட்டம். ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை. இளம் வெற்றிலையையார் மடித்து வாயில் போட ராமன் உண்பான் என்று வருந்தினாளாம். தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம் பூலத்தை கண்ணன் பெற்றுக் கொண்டான் என்று மகாபாரதம் சொல்கிறது. திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம்பெருமான் என்றென்றே கண்களில் நீர்மல்கி என்று மனம் உருகிப்பாடுகிறார் நம்மாழ்வார். காளமேகப்புலவர் ஆதி நாளில் திருவானைக்கா கோயிலில் பரிசாரகராக இருந்தாராம். அங்கே தாசியாக இருந்த மோகனாங்கி என்பவளின் அழகில் மயங்கி ஒருநாள், கோயில் பிரகாரத்திலேயே அவள் வருகைக்காக காத்திருந்த நிலையில் கண்ணயர்ந்தார். நள்ளிரவில் அகிலாண்டநாயகி அம்மன் அவர் முன் தோன்றி, தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ்ந்தாளாம், அவர் அதைச் சுவைக்க, தெய்வப் பிரசாதமான தாம்பூலம் நாவில் பட்டதும் நாவன்மை பெற்ற காளமேகம், ஆசுகவி பாடுவதில் வல்லவரானாராம். இதுபோன்றே, கூத்தனூரில் தேவி சரஸ்வதி தன் வாய்த்தாம் பூலத்தின் சாறை அளித்து ஒட்டக்கூத்தரை கவி வித்தகர் ஆக்கியதாகவும் ஒரு வரலாறு உண்டு. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

இதே நாள்...


  • தமிழக முன்னாள் முதல்வர் கே.காமராஜ் பிறந்த தினம்(1903)
  •  தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)
  •  சிப்பாய் கலகம் ஆரம்பமானது(1857)
  •  மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)
  •  அணு ஆயுதங்களுக்கு ‌எதிராக 18 நோபல் விருதாளர்கள் உ‌டன்படிக்கையில் கையெழுத்திட்டனர்(1955)
  • பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மீண்டும் தோல்வி!

    பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தலைமையில், நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அதனால், மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, 2010 மார்ச்சில் ராஜ்யசபாவில் நிறைவேறியது. இருப்பினும், லோக்சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்ற, பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், பெண்கள் மசோதா தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கூட்டினார். இதில், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இருப்பினும், இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், லோக்சபாவில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வது மற்றும் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற சமாஜ்வாடி முலாயம் சிங் யாதவ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது: பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், மசோதாவின் தற்போதைய வடிவத்தை தான் எதிர்க்கிறோம். ஏழைகள், பின்தங்கிய மக்கள் மற்றும்கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பலன் அடைய முடியாத வகையில் தற்போதைய பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா உள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடும் வேண்டும் என்று தான் கேட்கிறோம். முஸ்லிம் மற்றும் தலித் சமுதாயத்திலிருந்து சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த வகையில், பெண்கள் மசோதாவில் 60 சதவீத அளவுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதை மற்ற அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா என்பது தான் கேள்வி. ஆனால், நாங்கள் இருவரும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரானவர்களைப் போன்று சித்தரிக்கப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சிறு வயதில் "பெரிய மனுஷி'யாக மாறும் பிஞ்சுகள்

     பிழைப்பு தேடி பெற்றோர் வெளியூர் சென்று விடுவதால், மேட்டூர் கிராமங்களில், குழந்தைகள் தனியாக வாழ்க்கை நடத்தும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, காவிரி கரையோரத்தில் கோல்நாயக்கன்பட்டி, பொறையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாய தொழிலாளர்களே அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கரும்பு வெட்டுதல், மரம் வெட்டும் வேலைக்காக, குடும்பத்துடன் வெளியூர் சென்று தங்கி விடுகின்றனர். தொடர்ந்து, மூன்று முதல் ஆறு மாதம் வரை வெளியூர்களில் முகாமிட்டு வேலை செய்கின்றனர். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் பெற்றோர், குழந்தைகளை சொந்த ஊரில் உள்ள உறவினர், வயதான பெற்றோர் பராமரிப்பில் விட்டுச் செல்கின்றனர். வெளியூர் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் தனியாகவும், மற்றவர்கள் பராமரிப்பில் இருந்து, பள்ளிக்கு சென்று படிக்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் உறவினர் ஆதரவின்றி தனியாக சமைத்து, சாப்பிட்டு பள்ளிக்கும் செல்லும் அவலமும் நடக்கிறது.

    பொறையூரை சேர்ந்த செந்தில் மகள் தவசியம்மாள் (10), நந்தினி (8). தவசியம்மாள், பொறையூர் அரசு பள்ளியில், 5ம் வகுப்பும், நந்தினி, 3ம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்களின் பெற்றோர் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று, பல மாதங்கள் அங்கேயே தங்குவதால், குழந்தைகள் இருவரும் கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசிக்கின்றனர். உறவினர்கள் அருகில் இருந்த போதிலும், அவசர உதவி மட்டும் செய்கின்றனர்.

    தவசியம்மாள் கூறியதாவது: என் பெற்றோர், பெரும்பாலான மாதங்களில் வெளியூரிலேயே தங்கி விடுகின்றனர். நாங்கள் படிக்க வேண்டும் என்பதால், கிராமத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். நான் சிறு வயதிலேயே சமையல் செய்ய கற்று கொண்டேன். காலையில் சமையல் செய்து, தங்கையையும் சாப்பிட வைத்து பள்ளிக்கு அழைத்து செல்வேன். மதியம் பள்ளியில் சாப்பிடுவோம். மாலை வீட்டுக்கு வந்ததும் துணிகளை துவைத்து விடுவோம். காலையில் சமைத்த சாப்பாடு மீதம் இருந்தால், இரவில் சாப்பிடுவோம். இல்லாவிட்டால், மீண்டும் சமையல் செய்து சாப்பிடுவோம். தங்கை உடன் இருப்பதால், ஆறுதலாக உள்ளது. இரவு படுக்கும்போது பெற்றோர் நினைவு வரும். அப்போது, அழுதவாறு அப்படியே தூங்கி விடுவேன் என்றார். கோல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பல குடும்பங்கள் கரும்பு வெட்டும் வேலைக்காக வெளியூர்களுக்கு சென்று விடுவதால், தவசியம்மாள், நந்தினி போல ஏராளமான குழந்தைகள் பெற்றோர் அரவணைப்பின்றி வயதான பாட்டி வீட்டிலும், உறவினர்கள் வீட்டிலும் வசிக்கின்றனர். குழந்தைகள் பிஞ்சு வயதிலேயே, பெரிய மனுஷிகள் போல் மாறி, தங்கள் தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது

    இன்று காமராஜரின் 109 வது பிறந்தநாள்!

    தமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தான் இலவச கல்வி சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகையை பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58ம் ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர். ஆண்டு வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச கல்வி என 1960ம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது. அதுவே, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962ல் மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954ம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம் குழந்தைகள், பள்ளிக்கு சென்றனர். அதாவது, 1954ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963 பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.

    இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல் ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது. 1954ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது. கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் "ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன் கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக அமைந்தன. ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும் அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.

    கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர் : முன்னாள் முதல்வர் காமராஜருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் விருதுநகர் புட்டு தெருவை சேர்ந்த சகோதாரர்கள் என்.கணேசன், என்.ஜெயராமன். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான என். ஜெயராமன்(77) பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து கூறியதாவது: காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார். ""பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் . கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும் இத்திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .

    பஞ்சு வியாபாரி என். கணேசன் (79) கூறியதாவது: காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், ""ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.

    யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார். தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது. காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம், என்றார்.

    காமராஜ் இருந்தால் "காம்ராஜ்' : நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். பேசும் போது சுதந்திரத்திற்கு காரணமான மகாத்மா காந்தியடிகள் பற்றி குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிகாரிகளை அழைக்கும் போது "ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,""காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்

    40 திருக்குறள்களை டைப் அடித்து ஒன்றாம் வகுப்பு மாணவி சாதனை!

    ஒன்றாம் வகுப்பு மாணவி மூன்றரை மணி நேரத்தில் 40 திருக்குறள்களை டைப் அடித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார். புதுச்@சரி, முத்தியால்பேட்டையில் வசிப்பவர் அலைச்சந்திரன். பெயிண்டர். இவரது மகள் தனலட்சுமி(6). நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனலட்சுமி டைப்பிங்கில் படுசுட்டி. கம்ப்யூட்டரில் திருக்குறள்களை டைப் அடிக்கும் தனலட்சுமியின் சாதனை நிகழ்ச்சி சுசீலா பாய் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. சாதனை நிகழ்ச்சியை லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., காலை 11.10 மணிக்கு துவக்கி வைத்தார். கடவுள் வாழ்த்து அதிகாரத்தை முதலில் தொட்ட சிறுமி அசத்தலாக அடுத்தடுத்த அதிகாரத்தின் குறள்களையும் தொடர்ச்சியாக டைப்பிங் செய்தார். சிறுமி மதியம் 2.40 மணிக்கு சாதனை நிகழ்ச்சியை முடித்து கொண்டார். மூன்றரை மணி நேரத்தில் சிறுமி தனலட்சுமி மொத்தம் 40 திருக்குறள்களை தமிழில் டைப் செய்திருந்தார். மாணவியின் சாதனை நிகழ்ச்சி சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தும் ஹரியானா மாநிலத்தில் உள்ள இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பபட்டுள்ளது.

    அச்சம் அகன்றால் உச்சம் அடையலாம்!

    தாம்பத்ய சுகம் என்பது பிறவியிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. கற்றுக் கொள்வதில்தான் அதன் முழு இன்பமும் கை கூடும். செக்ஸ் பற்றியும் அதனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதும் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டியது இரு பாலாருக்கும் அவசியம்.

    தாம்பத்ய சுகத்திற்கான உணர்வுகளை எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அதை நாம் நமது பார்ட்னருக்குத் தருவதிலும் முழுமையாக இருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்குக் கிடைப்பது போன்ற எக்ஸ்போசர்கள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும், வெளிப்படையாக இதுகுறித்து யாரிடம் விளக்கம் பெறலாம் என்பதில் பெண்களுக்கு இருக்கும் அடிப்படை சிக்கலும், பல பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த முழுமையான அறிவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்கின்றனர் உளவிலாளர்கள்.

    உச்சநிலை விழிப்புணர்வு: ஆர்கசம் எனப்படும் உச்சநிலையை அடைவதில் சிரமம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். இதுகுறித்து முதலில் கவலைப்படுவதை விட்டு விட வேண்டும். மன நிலை முழுமையாக தாம்பத்ய உறவில் ஈடுபடாதபோது இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. இது மனோ ரீதியான பிரச்சினைதான் என்றாலும் சில டிப்ஸ்களை கடைப்பிடித்தால் இதிலிருந்து விடுபடலாம் என்பது உளவியல் வல்லுநர்களின் அறிவுரை.

    இயலாமையால் ஏற்படும் ஏமாற்றம்: சில பெண்களுக்கு ஏதேனும் ஒரு நிலையில் உச்சக்கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு உறவின் போது குறிப்பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை. உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள், என்றோ அவர்கள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை.

    அவசரம் வேண்டாமே! உறவின் போது பெரும்பாலான பெண்களின் கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதிலேயே அவர்களின் கவனம் போய் விடுவதால் தன்னை எது உச்சக் கட்டம் அடையச் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கத் தவறி விடுகிறார்கள்.

    இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிரியான ஸ்பரிசம் தனக்குக் கிளர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும். அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவின் போது அவசரம் இருக்கக் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

    பிறப்புறுப்பு வறட்சி: பெண்களுக்கு உணர்வின் போது எழுச்சி ஏற்படுவதிலும் சில சமயங்களில் குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக பிறப்புறுப்பில் வழவழப்புத் தன்மை குறைந்து, அது அவர்களது பார்ட்னர்களுக்கு சிரமத்தைத் தர நேரிடும். இதையும் தவிர்க்கலாம். அதேபோல உறவுக்கு முன்பும், உறவின்போதும் மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பது மிக மிக அவசியம். அப்படி ஏற்பட்டால் டெஸ்டோஸ்டிரான் அளவு குறைந்து போகும். இதனால் உறவு கசந்து போகும்.

    பிறப்புறுப்பில் வறட்சி ஏற்பட இரண்டு காரணங்கள் உண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலு}ட்டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹார்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.

    குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. ஆல்கஹால்தான் இந்த வறட்சிக்குக் காரணம். குடியை நிறுத்தவதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்பதன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம்.

    இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஒரு மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறலாம். அதன்படி நடக்கலாம். நாமே கூட மன ரீதியாக இதை சரி செய்ய முடியும். இதற்காகவே பல புத்தகங்கள், வீடியோக்கள் உள்ளன. அவற்றை அணுகி சுயமாக அறிந்து கொள்ளலாம். எனவே உச்சத்தை அடைவது சிக்கலா இருக்கே என்ற கவலையை விட்டு விட்டு அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினால், எல்லாம் இன்ப மயமாகும்!.

    குடி, புகை, நிலை தடுமாறும் இளைய தலைமுறை!

    இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்லதை தெரிந்து கொள்ள நான்கு வழிகள் இருக்கிறது என்றால் கெட்டதை அறிந்து கொள்ள ஆயிரம் வழிகள் கிடைக்கின்றன. வளர் இளம் பருவத்தில் உள்ள 10,11,12-ம் வகுப்பு மாணவர்களே அதிகம் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் ஆய்வுக்கு சென்ற முதன்மை கல்வி அதிகாரியை அதிர்ச்சியடையச் செய்யும் சம்பவங்கள் நடந்துள்ளன.

    பாடப்புத்தகங்களுக்குள் ஆபாசப் புத்தகங்கள், காதல் கடிதங்கள், செல்போன்களை ஒழித்து வைத்திருக்கின்றனர் மாணவ, மாணவியர்கள். இதைக் கேள்விப்பட்டவுடன் நமது இளைய தலைமுறையினர் எங்கே போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது.

    தடுமாறும் இளைய தலைமுறை: மாணவர்களை சொல்லியும் குற்றமில்லை. அவர்கள் நல்லவர்களாக இருக்க கிடைக்கும் வாய்ப்புகளை விட கெட்டுப் போகத்தான் இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    சினிமாவும், தொலைக்காட்சியும் ஏற்படுத்தி வரும் கலாச்சால சீர்கேடு தவிர தகவல் தொழில்நுட்ப புரட்சியினால் கையில் தவழும் செல்போன், தெருவுக்கு தெரு பரவலாக இருக்கும் இண்டர்நெட் சென்டர்கள் மாணவர்களின் மனதை அலைபாயச் செய்கின்றன.

    பள்ளி மாணவிகளின் பைகளில் இருந்த காதல் கடிதங்கள்தான் சற்று யோசிக்கச் செய்கிறது. மாணவிகளுக்கு எதனால் இந்த தடுமாற்றம்?. இன்றைய கல்வி முறை எப்படிப்பட்டது?, மனப்பாடம் செய்யும் இயந்திரங்களை மட்டுமா ஆசியர்கள் தயார் செய்கின்றனர்?, பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை மட்டும் நடத்தி விட்டு போதனை எதுவும் தராமல் விட்டுவிடுகின்றனரா?, பள்ளிகளில் பாலியல் கல்வி பற்றிய பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு காற்றோடு போய்விட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

    இரண்டு பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையிலேயே அதிக அளவிலான ஆபாச புத்தகங்களும், காதல் கடிதங்களும் சிக்கியுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனை செய்தால் என்னென்ன சிக்குமோ? எத்தனை சமூக விரோதிகள் மாணவர்களை குற்றச்செயல்களுக்கு தூதுவர்களாக பயன்படுத்துகின்றனரோ என்ற ஐயம் தோன்றுகின்றது.

    புகையும், மதுவும்: இதற்கிடையே, இன்றைய தலைமுறையினர் ஏராளமானோர் புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. 12 வயது முதல் 16 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினர் அதிக அளவில் புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வருவதாக அந்த ஆய்வு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

    டெல்லியில் 3ஆயிரத்து 956 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சினிமாவை பார்த்தே புகைப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிவித்துள்ளனர். 162 பேர் தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்கள் புகைப் பிடிப்பதை பார்த்து இதனை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். மாணவிகளை விட மாணவர்கள்தான் அதிகளவில் சினிமாக்களை பார்த்து கெட்டுப்போய் உள்ளனர். புகையிலை பயன்பாடு குறித்த மற்ற விளம்பரங்கள் மாணவர்களை அதிகமாக கவரவில்லை. விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்பட்டவர்கள் மிகவும் குறைவுதான்.

    பெற்றோர்களின் கண்காணிப்பு: உலகம் முழுவதும் புகையிலைக்கு எதிரான பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இளைஞர்களை கவர்ந்த சினிமா நட்சத்திரங்களை பயன்படுத்தினால், அது பயனுள்ளதாக இருக்கும். சினிமாக்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். 

    புகையிலையினால் ஏற்படும் தீமைகளை விளக்கி குறும்படங்கள் தயாரித்து, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் திரையிடலாம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியா முழுவதும் பெரும்பாலும் 10,11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக அளவிலான தவறுகளில், குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். தங்களது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எப்படிப் படிக்கிறார்கள் என்பது குறித்து கவலையும், அக்கறையும் செலுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்க முடியும்.

    தடுப்பூசி போட வேண்டிய நாளை எஸ்.எம்.எஸ். மூலம் நினைவூட்டும் ஹலோவேக்சின்!

    குழந்தை பெற்றுக்கொள்வதை விட அவர்களை நோய் நொடியின்றி பேணிப் பாதுகாப்பதுதான் இன்றைய பெற்றோர்களுக்கு சிரமமான காரியம். பிறந்த 6 வது வாரம் முதல் 5 வயது வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசி போட வேண்டியது மிகவும் அவசியமானது. தடுப்பூசி போட வேண்டிய நாட்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்று ஏங்கித் தவித்த பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது “ஹலோ வேக்சின்" எஸ்.எம். எஸ்.

    மும்பையை அடிப்படையாக கொண்ட மைன்ட்ஸ்டார்ம் சாப்ட்வேர் கன்சல்டன்சி நிறுவனம் இதனை அறிமுகம் செய்துள்ளது. குழந்தையின் பெயரில் ஒரு கணக்கை தொடங்கி அவர்களின் பிறந்த நாள் தேதியை பதிவு செய்து விட்டால் போதும். குழந்தைக்குப் போட வேண்டிய தடுப்பூசியை ஒவ்வொரு முறையும் எஸ்.எம்.எஸ் மூலம் “ஹலோ வேக்சின் ”நினைவுபடுத்திவிடும்.

    ஒவ்வொரு தடுப்பூசிக்கும் மூன்று முறை நினைவூட்டுகிறது ஹலோவேக்சின். தடுப்பூசியின் தேதி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே குறுந்தகவல் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த சேவை ஒருசில நிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. தனது நிறுவன ஊழியர்களுக்கும் இந்த சேவையை அளிக்க ஹலோ சாப்ட்வேர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்தந்த ஏரியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தவும் ஹலோ வேசின் முடிவு செய்துள்ளது.

    சேவைக்கட்டணம்: தடுப்பூசி சேவைக்காக 5 ஆண்டுகளுக்கு 10 கணக்குகளுக்கு 2000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. ஒரு கணக்கு 200 ரூபாய் மதிப்பு பெறுகிறது. ஆனால் 25 கணக்குகளுக்கு 4000 ஆயிரம் ரூபாயும், 50 கணக்குகளுக்கு 7500 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தனிநபர் ஒருவருக்கான கட்டணம் குறைகிறது.

    ஹலோ வேக்சின்ஸ் நிறுவனம் ஜேஸ்பரின் பேபி பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. பிறந்த குழந்தைகளுக்கு தேவையான சாதனங்களை இலவசமாக அளிக்கிறது. பரிசுகளையும் சலுகைக் கூப்பன்களையும் அளிப்பதோடு குழந்தைகளின் சுயவிபரங்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.

    போலியோ சொட்டு மருந்து தினத்திற்காக அரசு சார்பில் ஏற்கனவே எஸ்.எம்.எஸ் அனுப்பி நினைவூட்டும் பணியை இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    165 வருடங்கள்...

    நெப்டியூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 165 வருடங்கள் ஆகின்றன. இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இப்போது தான் சூரியனை முழுமையாக சுற்றி முடித்துள்ளது. அதாவது, சூரியனை இந்த கிரகம் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 165 ஆண்டுகளாகும்.

    18ம் நூற்றாண்டில் யுரேனஸ் தான் நமது சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாகக் கருதப்பட்டது. ஆனால், யுரேனஸின் சுற்றுப் பாதையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அதற்குக் காரணம், அருகில் உள்ள வேறு ஏதோ ஒரு கோள் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து யுரேனசுக்கு அப்பாலும் கிரகங்கள் இருக்கின்றனவா என்ற ஆராய்ச்சிகள் தொடங்கின. இந் நிலையில் பிரிட்டிஷ் வானியல் ஆய்வாளரான வில்லியம் ஹெர்செல் மற்றும் அவரது சகோதரி கரோலின் ஆகியோர் 1781ம் ஆண்டு யுரேனஸ் என்ற கிரகம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால், அதை அவர்கள் பார்க்கவில்லை.

    நெப்டியூன் இருக்கும் இடத்தை மிகச் சரியாக கணித்தவர்கள், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டு கணிதவியல்-வானியல் ஆய்வாளர்களான லெ வெர்ரியர் மற்றும் ஜான் கெளச் ஆடம்ஸ் ஆகியோர் தான். இவர்களும் யுரேனஸை பார்க்கவில்லை. இந் நிலையில் லெ வெர்ரியர் தந்த தகவலின்பேரில் 1846ம் ஆண்டு ஜெர்மனியின் வானியல் ஆய்வாளரான ஜோஹன் கல்லே, இந்த கிரகத்தை தொலைநோக்கி மூலம் முதன் முதலாக அடையாளம் கண்டார்.

    இவருக்கு முன்பே இத்தாலியின் பிரபலமான வானியல் ஆய்வாளரான கலிலியோ கலிலி, 1612ம் ஆண்டு டிசம்பரிலேயே இந்த கிரகத்தை தொலைநோக்கியில் பார்த்தாலும், அதை நட்சத்திரம் என நினைத்துவிட்டுவிட்டார். ஆனால், அவரது நோட்ஸ்களில் உள்ள தகவல்களின்படி, அவர் பார்த்தது நட்சத்திரம் இல்லை, நெப்டியூன் தான் என பின்னாளில் தெரியவந்தது. இதனால் இந்த கிரகம் அதிகாரப்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது 1846ம் ஆண்டு தான் என்றாகிவிட்டது.

    சூரியனிலிருந்து 4.5 பில்லியன் மைல்கள் தொலைவி்ல் உள்ள இந்த கிரகத்தில் இருப்பதெல்லாம் ஹைட்ரஜனும், மீத்தேனும், ஹீலியமும் தான். இதனால் இதன் நிறம் நீல நிறமாக உள்ளது. இங்கு தரை என்று ஏதும் கிடையாது. இது ஒரு 'கேஸ் ஜயண்ட்'.

    1846ம் ஆண்டு இந்த கிரகம் எந்த இடத்தில் இருந்ததோ, அந்த இடத்தை கிட்டத்தட்ட 164.8 ஆண்டுகளுக்குப் பின் இன்று வந்து அடைந்துள்ளது நெப்டியூன். அதாவது, நெப்டியூன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது, 165 வருடங்கள். கண்ணால் பார்க்காமலேயே காதல் மாதிரி, தொலைநோக்கி மூலம் பார்க்கப்படாமலேயே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் நெப்டியூன் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

    எப்படி யுரேனஸின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் 'டிஸ்டர்ப்' செய்கிறது என்ற ஆராய்ச்சியின் மூலம் நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டதோ, அதே மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது தான் புளுட்டோவும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெப்டியூனின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் பாதிக்கிறது என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் நடந்தபோது தான் புளுட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இது முழுமையான கிரகமே அல்ல.. ஒரு முழுமை பெறாத கோள் (dwarf planet) என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகம் இன்றைய தேதியில் நெப்டியூன் தான். நெப்டியூன் என்பது ரோமன் பெயராகும். இதற்கு அர்த்தம், 'கடல் சாமி'

    45 லட்சம் கேட்டு மிரட்டல்: இணையதள ஆசிரியர் மீது நடிகர் வடிவலு போலீசில் புகார்!

    ரூ 45 லட்சம் கேட்டு தன்னை இணையதள ஆசிரியர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக சென்னை மாநகர போலீசில் புகார் செய்துள்ளார் நடிகர் வடிவேலு. நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். 

    அதில், "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை இணையதள ஆசிரியர் ஒருவர் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டல் நபர் அடிக்கடி பேசுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் 87 தமிழ் அகதிகளுடன் பிடிபட்ட கப்பல்!

    இலங்கையைச் சேர்ந்த 87 தமிழ் அகதிகளுடன் சென்ற கப்பலை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிய 87 தமிழர்கள் மலேசியாவில் இருந்து எம்.வி.அலிஸியா (MV Alicia) என்ற கப்பல் மூலம் நியூசிலாந்தில் தஞ்சமடைய புறப்பட்டனர். வழியில் அந்தக் கப்பலை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து, பறிமுதல் செய்தனர்.

    அதிலிருந்து தமிழர்களை இந்தோனேஷியாவில் இறங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் இறங்க மறுத்து விட்டனர். இந்நிலையில், அவர்கள் பயணம் செய்த கப்பல் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என இந்தோனேசிய போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த அகதிகளின் பயணத்துக்கு நார்வேயில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இவர்கள் தஞ்சம் புக அனுமதிக்க முடியாது என்று நியூசிலாந்து கூறியுள்ளது. ஆனால் அரசியல் தஞ்சம் வழங்கும் வரை கப்பலில் இருந்து இறங்க மாட்டோம் என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந் நிலையில் இந்தக் கப்பல் நியூசிலாந்துக்குச் செல்லவில்லை என்றும், அது கனடாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் டோராண்டோவிலிருந்து வெளியாகும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. இந்தக் கப்பலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உள்ளனர்.

    அரசு கேபிளுக்கு ஒத்துழைக்காவிட்டால் பணம் தரமாட்டோம்!-கட்டண சேனல்களுக்கு எச்சரிக்கை!

    அரசு கேபிள் டிவிக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் கட்டண சேனல்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய 1200 கேபிள் ஆபரேட்டர்களும் பங்கேற்று அரசு கேபிள் டி.வி.யில் இணைவதற்கு சம்மதம் அளித்தனர்.

    அரசு கேபிள் டி.வி.க்கு கட்டண சேனல்கள் ஒத்துழைக்க மறுத்தால் அந்த கட்டண சேனலுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் யாரும் பணம் கட்ட கூடாது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அரசு கேபிள் டி.வி. செயல்படத் தொடங்கும் போது 50 லட்சம் இணைப்புகளுடன் செயல்பட ஏற்பாடு மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

    கோவையில் நடுரோட்டில் துடிக்க துடிக்க வாலிபர் கொலை: வேடிக்கை பார்த்த மக்கள்!

    கோவையில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை வைத்து கொலையாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த கொடுமையான சம்பவத்தில் குற்றத்தைத் தடுக்க முன்வராமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர் என்பதுதான் மிகவும் வேதனையானது.

    கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் ( 29). பெயிண்டிங் தொழிலாளி. அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் நண்பர்களுடன் சேர்ந்து டாஸ்மாக் கடையில் மது குடிக்கையில் அவருக்கும் ரத்தினபுரியைச் சேர்ந்த கிருஷ்ணன், முருகன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பாரில் இருந்து கிளம்பிய சந்தோஷ்குமார் மேட்டுப்பாளையம் ஏ.ஆர்.சி. சிக்னல் அருகே செல்கையில் அவரை கிருஷ்ணன், முருகன் உள்பட 4 பேர் வழிமறித்து சரமாரியாக அடித்தனர்.

    கீழே கிடந்த கல்லை எடுத்து சந்தோஷ்குமாரின் தலையில் போட்டு கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்து விழுந்தார் சந்தோஷ்குமார். குடிபோதையில் அந்த நான்கு பேரும் வெறித்தனமாக பொதுமக்கள் முன்னிலையில் பட்டப் பகலில் நடந்து கொண்ட இந்த வெறிச்செயலைத் தடுக்க முன்வரவில்லை யாரும்.

    மாறாக, ஏதோ சர்க்கஸைப் பார்ப்பது போல சாலையில் போனவர்களும், நின்றிருந்தவர்களும் அப்படியே அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர்.
    படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து விட்டார்.

    இதற்கிடையே சிக்னலில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராவில் இந்த கொடூரச் சம்பவம் பதிவாகியிருந்தது. அதை வைத்துக் கொண்டு போலீசார் கிருஷ்ணன், ராமச்சந்திரன், முருகன், கணேசன் ஆகியோரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்கள் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் சந்தோஷ்குமார் இறந்ததைத் தொடர்ந்து கொலை வழக்காக அது மாற்றப்பட்டது.

    இந்தக் கொடூரச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமாரின் மனைவி சரோஜா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பிணத்தை வாங்க மறுத்து மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வந்து அவர்களை கலைந்துபோகச் செய்தனர். உடனே அவர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சரோஜாவுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    சந்தோஷ்குமார் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...