இலங்கையைச் சேர்ந்த 87 தமிழ் அகதிகளுடன் சென்ற கப்பலை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிய 87 தமிழர்கள் மலேசியாவில் இருந்து எம்.வி.அலிஸியா (MV Alicia) என்ற கப்பல் மூலம் நியூசிலாந்தில் தஞ்சமடைய புறப்பட்டனர். வழியில் அந்தக் கப்பலை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து, பறிமுதல் செய்தனர்.
அதிலிருந்து தமிழர்களை இந்தோனேஷியாவில் இறங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் இறங்க மறுத்து விட்டனர். இந்நிலையில், அவர்கள் பயணம் செய்த கப்பல் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என இந்தோனேசிய போலீசார் கூறியுள்ளனர்.
இந்த அகதிகளின் பயணத்துக்கு நார்வேயில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இவர்கள் தஞ்சம் புக அனுமதிக்க முடியாது என்று நியூசிலாந்து கூறியுள்ளது. ஆனால் அரசியல் தஞ்சம் வழங்கும் வரை கப்பலில் இருந்து இறங்க மாட்டோம் என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இந்தக் கப்பல் நியூசிலாந்துக்குச் செல்லவில்லை என்றும், அது கனடாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் டோராண்டோவிலிருந்து வெளியாகும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. இந்தக் கப்பலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உள்ளனர்.
No comments:
Post a Comment