நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிஸ் அளிக்கும் பாதிக்கும் மேலான படிப்புகளுக்கு தேசிய அங்கீகாரக் கழகத்தின் அங்கீகாரம் பெறவில்லை என்று நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது தேசிய கணக்காளர் ஒருவர் இது குறித்து சுட்டிக்காட்டிப் பேசுகையில், "என்.ஐ.டி. கல்வி நிறுவனம் 88 இளநிலை படிப்புகளையும், 191 முதுநிலை படிப்புகளையும் வழங்குகிறது. இதில் 45 இளநிலை படிப்புகளும், 137 முதுநிலை படிப்புகளும் அங்கீகாரம் பெறாதவை. இதன் மூலம், தேசிய அங்கீகாரக் கழகம் நிர்ணயித்த தரத்துடன் இப்படிப்புகள் அமையவில்லை என்பது நிரூபணமாகிறது. சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி இன்ஜினியரிங் படிப்புகளில் சில சமயம், நிர்ணயிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாகவும், ஒரு சில ஆண்டுகளில் குறைவாகவும் சேர்க்கை நடைபெறுகிறது. சில கல்வியாண்டுகளில், 1.38 முதல் 42.31 சதவீதம் இடங்கள் இளநிலை படிப்புகளிலும், 3.13 முதல் 87 சதவீத இடங்கள் முதுநிலை படிப்புகளிலும் காலியாகவே இருந்துள்ளன. இதேப்போல ஒரு சில கல்வியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட மாணவ எண்ணிக்கையை விட 0.83 முதல் 23.89 சதவீதம் இளநிலை படிப்புகளிலும், 3.30 முதல் 116.67 சதவீதம் முதுநிலை படிப்புகளிலும் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொது கணக்காளர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் சில புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பாடப்பிரிவுகளின் தேவையை எந்த தரப்பிலும் கருத்துக் கணிப்பை நடத்தாமலும், அதற்கான தேவையை ஆராயாமலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துர்காபுர் மற்றும் சில்சார் என்.ஐ.டி.க்களில் 2009-10ம் கல்வியாண்டில் 2 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பாடப்பிரிவுகளில் தொடர்ந்து காலியிடங்களே நீடிக்கிறது. இதேப்போல குருக்ஷேத்ரா, போபால், சிலாச்சர், சூரத்கல் என்.ஐ.டி.க்களில் கடந்த கல்வியாண்டுகளில் அறிமுகமான 12 பாடப்பிரிவுகளுக்கும் மாணவர்களிடையே வரவேற்பில்லை என்பது தொடர்ந்து நிலவும் காலியிடங்களே சான்றாக உள்ளது" என்றார். எனவே, என்.ஐ.டி.க்களின் உள்கட்டமைப்புப் பணிகளை சீராக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.