|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 August, 2011

முதலில் யாருக்கு தூக்கு? : குலுக்கல் முறையில் தேர்வு!

வேலூர் சிறையில், செப்., 9ம் தேதி தூக்கிலிடப்படும் மூவரிடமும், கடைசி ஆசை தெரிவிக்கும்படி கேட்கப்பட்டு, அவர்களுக்கான தூக்கிலிடும் நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வேலூர் மத்திய சிறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறை உள்கேட் வரை, பத்திரிகையாளர்கள், போட்டோ கிராபர்கள் செல்ல, நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறை அலுவலர்கள் வாகனங்கள், சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சிறையைச் சுற்றி நான்கு இடங்களில் தடுப்புகள் அமைத்து, 24 மணி நேரம் வாகனச் சோதனை நடக்கிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில், 19 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில், 7,500 பேர் தங்கியுள்ளனர். அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேரறிவாளன் கடிதம்: "என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் சாவின் மடியில் இருக்கிறேன். இவ்வழக்கில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு நேற்று, பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போடும் வரை, பார்வையாளர்கள் சிறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, மூவரின் ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தூக்கிலிடும் நேரம்: செப்., 9ம் தேதி அதிகாலை, 4.30 மணி, 5:00 மணி, 5.30க்குள் என, அடுத்தடுத்து மூன்று பேரையும் தூக்கில் போட முடிவு செய்துள்ளனர். முதலில் யாரை தூக்கிலிடுவது என்பது, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஒரே சமயத்தில் இருவரை மட்டுமே, வேலூர் சிறையில் தூக்கு போட வசதி உள்ளதால், சேலம் சிறையில் ஒருவரை தூக்கில் போட, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடைசி ஆசை: மூன்று பேரிடம், "கடைசி ஆசை என்ன?' என்று தெரிவிக்கும்படி, எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ளது. முருகன் தினமும் காலை, 6 மணிக்கு வாக்கிங் செல்வார். நேற்று முதல், வாக்கிங் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் துறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பி நேரடி கண்காணிப்பில், தனித்தனி செல்களில் அடைக்கப்பட்ட இம்மூவருக்கும், சிறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த பின் உணவு தரப்படுகிறது.
பத்திரிகைகள் படிக்க, "டிவி' பார்க்க, ரேடியோ கேட்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, தினம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை, மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஐ.ஜி., சைலேந்திர பாபு நேற்று சிறைக்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,யுடன் நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

28 ஆண்டுகளுக்கு பின் மூன்று பேருக்கு தூக்கு : சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த சேட்டு என்ற சந்துரு, 35. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொன்று, குழந்தை தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு, 1983, நவம்பர் மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பின், செப்., 9ம் தேதி, ராஜிவ் கொலை வழக்கில் கைதான மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காத்திருக்கும் கைதிகள்: ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன்; தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ரவிச்சந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன்; சென்னை சிறுவன் கொலை வழக்கில் மோகனரங்கன், கோபி ஆகிய எட்டு பேருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இவர்கள் தூக்கு கயிற்றை எதிர்நோக்கியுள்ளனர்.

வேலூர் சிறையில் தூக்கு மேடை தயார் : முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு, செப்டம்பர் 9ம் தேதி, வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்காக, சிறை மதில் சுவர்களுக்கு வெளியே, சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தூக்கு மேடை சரிபடுத்தும் பணி, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு துவங்கி, நேற்று மாலை 3 மணிக்கு முடிந்தது. சிறைக்கு வெளியே உள்ள தோட்டப் பகுதியை ஒட்டி, தூக்கு போடும் இடம் சிறிய கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக, இங்கு சேட்டு என்பவரை தூக்கில் போட்டனர். அதன் பின், 28 ஆண்டுகளாக இங்கு யாரையும் தூக்கில் போடவில்லை. இதனால், இந்த இடம், காடு போல இருந்தது. பொதுவாக இந்த இடத்தில், ஒருவரை தூக்கில் போட்டு விட்டால், அதற்குப் பின் யாரும் பார்க்க முடியாதபடி, துணியால் மூடி வைத்திருப்பர். கடந்த 28 ஆண்டுகளாக இந்த இடம் மூடி இருந்ததால், துணியும் கிழிந்து கந்தை போல தொங்கிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தூக்கு மேடை கம்பிகள் சரிப்படுத்தப்பட்டன.
ஆனால், மூன்று பேரும் ஜனாதிபதிக்கும், தமிழக முதல்வருக்கும் கருணை மனுக்கள் அனுப்பியதால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இப்போது, ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கும், செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போடுவது நிச்சயமான பின், அவசர கதியில் இந்த இடம் சரி செய்யும் பணி துவங்கியது. இதற்காக, 16 அடி ஆழத்தில் கிணறு போல காணப்படும் தூக்கு மேடையின் கீழ்ப் பகுதி, சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்பட்டது. மேடையைத் தாங்கி நிறுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பி, தூக்கு பள்ளத்தில் இருந்து கீழே உடல் விழும் போது தூக்கும் இரும்புத் தகடுக்கும், கறுப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், தூக்கு போடும் இரும்பு விசை, கிரீஸ் போட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தூக்கு மேடையின் மேற்கூரையும் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் மிகவும் வலுவான நிலையில், இரு தூண்கள், அதனிடையே பலமான இரும்புக் கம்பியும் அமைக்கப்பட்டன. அவை இன்றும், நல்ல கண்டிசனில் இருப்பதாக, சிறை அதிகாரிகள் கூறினர். தற்போது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு தூக்கு போடும் நிலை இங்குள்ளது. தூக்கு மேடை தயாராக இருப்பதாக, வேலூர் சிறைத்துறை அதிகாரிகள், சிறைத் துறை தலைவருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

தூக்கு மேடை சீர் செய்ய பூஜை : ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில், ஆரம்பம் முதல் இந்த தூக்கு மேடை மட்டும் தான் உள்ளது. இங்கு இதுவரை, 1,500க்கும் மேற்பட்டவர்களை தூக்கில் போட்டிருப்பதாக, சிறைத் துறையினர் கூறினர். தற்போது, இந்த தூக்கு மேடையை சரிப்படுத்த வேண்டும் என, சிறைத் துறையினர் பல மேஸ்திரிகள், இரும்புக் கம்பிகளை சரிசெய்பவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மறுத்து விட்டனர். 25க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்களிடம் கேட்டும், யாரும் முன்வரவில்லை. இதனால், வெறுத்துப் போன சிறைத்துறை அதிகாரிகள், சிறை வார்டன்களை கொண்டே இதை சரிசெய்தனர். உள்ளே செல்லும் முன், சூடம் ஏற்றி பூஜை செய்தனர். பின்னர், பணி முடிந்ததும், இதே போல பூஜை செய்தனர். சரிசெய்து முடிக்கும் வரை, 50 சிறைக்காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

நாணயத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள மொய் கவர் !

நாடு முழுவதுமாக சில்லரை தட்டுப்பாட்டால், மக்கள் அவதியுறும் நிலையில், ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய மொய் கவர் விற்பனைக்கு வந்துள்ளது. பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் மாற்றித் தருவதன் மூலம், ஓரளவு சில்லரை தட்டுப்பாடு நீங்குகிறது. எனினும், வர்த்தக நிறுவனங்கள் முதல், பஸ், ரயில்கள் வரை, சில்லரை தட்டுப்பாடு பிரச்னை, பெரிய தகராறாக மாறி விடுகிறது. ஈரோடு கடைகளில், ஒரு ரூபாய் நாணயம் மொய் கவரின் உட்பகுதியில் ஒட்டப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. திருமணம், காது குத்து, சீர் உள்ளிட்ட விசேஷங்களில் மொய் வைக்க, பணத்தை கவரில் வைத்து கொடுப்பது வழக்கம். பலரும், 101 ரூபாய், 201 ரூபாய், 501 ரூபாய்... என, எவ்வளவு தொகை வைத்தாலும், அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அதுபோன்ற சமயங்களில், ஒரு ரூபாய் நாணயம் கிடைப்பது அரிதாகி விட்டதால், கவர் தயாரிப்பு நிறுவனங்களே, ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, கவரை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளன. ஸ்டேஷனரி,பேன்சி, கிப்ட் விற்பனை கடைகளில், இத்தகைய கவர் விற்கப்படுகிறது.



ஈரோடு கடைக்காரர் கூறியதாவது: பொதுமக்கள் வசதிக்காகவே, ஒரு ரூபாய் நாணயம் வைக்கப்பட்ட மொய் கவர், விற்பனைக்கு வந்துள்ளது. மும்பை, டில்லி ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு, இங்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய சாதாரண கவரை நான்கு ரூபாய்க்கும், பார்டர் வைத்து, குஞ்சம் வைத்த கவரை ஆறு ரூபாய்க்கும் விற்கிறோம். 100 கவர் கொண்ட கட்டு, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கவராக வாங்கினால் ஆறு ரூபாயாக விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

ஆஸ்திரேலியாவில் படிப்பதற்கு முன்பாக செய்ய வேண்டியவை-28-08-2011


ஆஸ்திரேலியாவிற்கு கல்வி கற்க செல்லும் முன்பாக, எந்தெந்த வகையில் முன்னேற்பாடாக இருக்க வேண்டும் மற்றும் அதன்மூலம் பயணத்தை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வது குறித்து மாணாக்கர்கள் அனைவரும் அறிந்து வைத்துக் கொள்வது நலம்.


பலவிதமான பிரச்சினைகளுக்குப் பிறகும், ஆஸ்திரேலிய நாடானது, சர்வதேச அளவில் அதிகளவு மாணவர்களை இழுக்கும் ஒரு முக்கிய கேந்திரமாக திகழ்கிறது. எனவேதான், மாணவர்களுக்கு அவசியமாக தேவைப்படும் முன்னேற்பாடு குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
புறப்படும் முன்பாக

* பாஸ்போட்டிற்கு விண்ணப்பம் செய்து, அதன் Validity, நீங்கள் படிக்கும் காலம் வரை போதுமானதா என்பதை உறுதிசெய்யவும்.
* மாணவர் விசாவுக்கு ஏற்பாடு செய்யவும்
* நீங்கள் அந்நாட்டில் படிக்கவிருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை தொடர்புகொண்டு, உங்களின் சேர்க்கை மற்றும் ஆரம்பத் தேதியை உறுதிசெய்து கொள்ளுங்கள். மேலும், அந்த நிறுவனங்கள் விமான நிலையத்திற்கே வந்து மாணவர்களை அழைத்துச் செல்லும் விதிமுறையை வைத்துள்ளனவா என்பதையும் உறுதிசெய்யவும்.
* உங்கள் மருத்துவரிடமிருந்து தேவையான நோய் காப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும்.
* ஆஸ்திரேலியாவில் தேவைப்படும் நிதிக்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.
* உங்கள் வங்கியின் வெளிநாட்டுப் பயன்பாட்டு வசதியைப் பற்றி நன்கு விசாரித்து தெரிந்துகொள்ளவும்.
* பயணக் காப்பீடு உட்பட, தேவையான பயண ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.

* ஆஸ்திரேலியாவில் குறைந்தபட்சம் நீங்கள் தங்கியிருக்கும் முதல் வாரத்திற்கான தங்கும் ஏற்பாடுகளை செய்துகொள்ளவும்.
* விமான நிலையத்திலிருந்து, தங்குமிடம் செல்வதற்கான பயண ஏற்பாடுகளைத் திட்டமிட்டுக் கொள்ளவும் மற்றும் அந்நாட்டில் உங்களின் அவசர பயன்பாட்டிற்குத் தேவைப்படும் பணத்தை ஆஸ்திரேலிய பணமாக மாற்றிக் கொள்ளவும்.
* பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்கையில், நீங்கள் படிக்கவிருக்கும் கல்வி நிலையத்தினுடைய சர்வதேச பிரதிநிதியின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களைக் குறித்துக் கொண்டீர்களா? என்பதையும் உறுதிசெய்து கொள்ளவும்.
முக்கியமான ஆவணங்கள்
* தகுதியான பாஸ்போர்ட்
* உங்களுடைய மாணவர் விசா உறுதியளிப்பு கடிதம்
* கல்வி நிறுவனம் வழங்கிய இடம் மற்றும் சேர்க்கை கடிதம்
* சேர்க்கைக்கான மின்னணு உறுதியளிப்பு
* பணம் கட்டியதற்கான ரசீதுகள்
* காப்பீட்டு பாலிசிகள்
* உங்கள் கல்வித்தகுதிப் பற்றிய சான்றளிக்கப்பட்ட நகல்கள்
* மருத்துவப் ஆவணங்கள் மற்றும் பரிந்துரை சீட்டுகள்
* கிரெடிட் மற்றும் ATM அட்டைகளின் நகல்கள்
* மருந்து விபரச் சீட்டுகள்
இதுபோன்ற தேவையான ஆவணங்களுடன் நீங்கள் புறப்படும்போது, அவற்றின் நகல்களை வீட்டில் விட்டுச்செல்லவும். ஏனெனில், ஆஸ்திரேலியாவில், உங்களது அசல் ஆவணங்கள் எதுவும் தொலைந்துவிட்டால், இந்த நகல்களை நீங்கள் பெறலாம். பயணத்தின்போது, முக்கிய ஆவணங்களை உங்களுடனேயே வைத்துக்கொள்ளவும். காப்பீடு பயணக்காப்பீடு பயணக் காப்பீட்டை வைத்துக்கொள்வது எப்போதுமே புத்திசாலித்தனமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், விமானங்கள் ரத்தாகும்போது, உங்களின் பொருட்கள் தொலையும்போது உங்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகமாக இருக்கும். எனவே, காப்பீட்டின் மூலம் இத்தகைய இழப்புகளைக் குறைக்கலாம்.
மருத்துவக் காப்பீடு 
ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவின் கீழ் தரையிறங்கும் ஒவ்வொருவரும், வெளிநாட்டு மாணவர் மருத்துவ வசதியை(Overseas student health cover), அவர் தங்கியிருக்கும் காலம் வரையில் வைத்திருக்க வேண்டும். அந்த வசதியானது, நீங்கள் அந்நாட்டில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள உதவும்.
உங்களுக்கு தேவையான பணம்
ஆஸ்திரேலியாவின் ஆரம்ப நாட்களை சமாளிக்க, உங்களிடம் தேவையான பணத்தை வைத்துக் கொள்ளவும். அதேசமயம், மிக அதிகளவிலான பணத்தை உங்களிடம் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணர் காசோலையில் A$1,500 முதல் A$3,000 வரை வைத்திருந்தால், அங்கே உங்களுக்கான ஆரம்பகட்ட தேவைகளை நிறைவுசெய்துகொள்ள ஏதுவாய் இருக்கும். அதேசமயம், உங்களிடம் A$10,000 தொகைக்கு அதிகமாக இருந்தால், அந்நாட்டில் நுழையும்போது, அந்த சுங்க அதிகாரிகளிடம் அதைப்பற்றி தெரிவிக்க வேண்டும்.
தங்குமிட ஏற்பாடுகள்
நீங்கள் பள்ளிப் பருவ வயது மாணவனாக இருந்தால், அந்நாட்டை சென்றடைவதற்கு முன்பாகவே ஒரு தங்குமிட ஏற்பாட்டை செய்துகொள்ள வேண்டும். அதேசமயம், கல்லுரி அல்லது பல்கலைக்கழக நிலையிலான மாணவராக இருந்தால், அங்கே சென்ற ஆரம்ப நாட்களில் ஏதேனும் ஒரு தற்காலிக ஏற்பாட்டை செய்துகொள்ள வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் சேரப்போகும் கல்வி நிறுவனம் உங்களுக்கு துணை நிற்கலாம். இல்லையெனில் www.yha.com.au என்ற இணையதளத்தில் தேடவும்.
மேலும், ஹோட்டல் அறைகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்துகொள்ளும் பொருட்டு, கடைசிநேர இணையதள பதிவு வசதிகள் அதிகளவில் உள்ளன. இவற்றில் www.getaroom.com.au மற்றும் www.wotif.com என்பவை முக்கியமானவை. ஆஸ்திரேலியாவில் பொதுவாக ஹோட்டல் அறைகளுக்கு அதிக செலவாகும். பல முக்கிய நகரங்களில் ஒரு இரவிற்கான செலவு குறைந்தபட்சம் A$150 -இலிருந்து தொடங்குகிறது.
பொருட்களுக்கான அளவு
நீங்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கான எடை வரைமுறைகளை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. வெளிநாட்டு விமானங்களில் அதிகபட்சமாக 23 கிலோவிற்கு கூடாமல் இருக்க வேண்டும். அதேசமயம், ஆஸ்திரேலியாவிற்குள் செய்யும் பயணங்களின் பொருள் எடை 20 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆடை வரையறைகள்
பொதுவாக ஆஸ்திரேலிய மாணவர்கள், பாரம்பரிய முறையில்(formal) அன்றி, இலகுவான(informal) முறையில் உடையணிகிறார்கள். கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்கள் பொதுவாக டீ-ஷர்ட், ஜீன்ஸ் அணிகிறார்கள். அதேசமயம், பல பள்ளி மாணவர்கள் சீருடை அணிகிறார்கள்.
அந்நாட்டில் கோடைகாலம் என்பது டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலும், இலையுதிர் காலம் மார்ச் முதல் மே வரையிலும், குளிர்காலம் ஜுன் முதல் ஆகஸ்ட் வரையிலும், வசந்தகாலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலும் இருக்கும். அந்நாட்டில் ஜனவரியும், பிப்ரவரியும் அதிக வெப்பமுடைய மாதங்கள். எனவே நீங்கள் எப்போது அங்கே செல்கிறீர்களோ, அதற்கேற்ற ஆடை ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்.
மருந்துக் கட்டுப்பாடுகள்
நீங்கள் உங்கள் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட வகை மருந்துகளை அந்நாட்டிற்கு எடுத்துச்செல்ல விரும்பினால், அதற்கு அந்நாட்டு சட்டப்படி அனுமதி உண்டா? என்பதை முதலிலேயே தெரிந்துகொள்ள வேண்டும். இதைப்பற்றிய முழுமையான தகவலுக்கு www.tga.gov.au என்ற இணையதளம் செல்லவும்.
அதிகளவிலான மருந்துகள் ஆஸ்திரேலியாவில் கிடைக்கின்றன. நம் நாட்டைப் போன்று அங்கு நினைத்தவுடன், மருத்துவர் பரிந்துரையின்றி(prescription) மருந்துகளை வாங்கிவிட இயலாது. எனவே, அங்கு சென்றவுடன் ஒரு சரியான மருத்துவரை அணுகி, அவரிடம் பரிந்துரை சீட்டை பெற்றுக்கொள்ளவும்.
மின்சாதனப் பயன்பாடு
ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் மின்சாதனப் பொருட்களின் நிலையான வோல்டேஜ் 240 வோல்ட்டுகள். பெரும்பாலான கணினிகள், செல்போன் மின்னேற்றிகள்(chargers), MP3 ப்ளேயர்கள், டிஜிட்டல் கேமராக்கள், 110 முதல் 240 வோல்டேஜ்களுக்குள் ஒத்துவந்து இயங்கக்கூடியவை. ஆனால் சிலவகை மின்சாதனப் பொருட்களுக்கு மாற்றிகள் தேவைப்படும்.
எனவே ஆஸ்திரேலிய பயன்பாட்டிற்கு ஏற்ற Plugs, Adaptors ஆகியவற்றை அங்குப் பெற்றுக்கொள்ளவும்.

கணினிப் பயன்பாடு
கணினி என்பது பலரின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. எனவே, ஆஸ்திரேலியா செல்கையில், உங்களது கணியை எடுத்துச்செல்லும்போது அந்நாட்டு சுங்க விதிமுறைகளை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
குறுகியகால படிப்புகள் மற்றும் நீண்டகால படிப்புகள், குறுகியகால கணினிப் பயன்பாடுகள் மற்றும் நீண்டகால கணினிப் பயன்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தும், அந்தக் கணினி எவ்வளவு நாட்களாக உங்களின் பயன்பாட்டில் இருக்கிறது என்பதைப் பொறுத்தும், அதனுடைய விலை மதிப்பை பொறுத்தும் வரி விதிப்பு மற்றும் வரி விலக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதைப்பற்றி தெளிவான தகவல்களை அறிந்துகொள்ள www.customs.gov.au என்ற இணையதளம் செல்க.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியர், அனைவருக்கும் இலவச லேப்டாப்!

மாணவ, மாணவியருக்கான இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்தில், ஆண்டு வாரியாக பயன்பெறும் மாணவ - மாணவியர் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை வெளியிட்ட அரசாணை: தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்-டாப் திட்டம், வரும் 15ம் தேதி முதல்வரால் துவக்கப்படும். இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்கள் என, நடப்பு நிதியாண்டில் 9.12 லட்சம் பேருக்கு, இலவச லேப்-டாப்கள் வழங்கப்படும். இதற்காக, நடப்பாண்டில், 912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, தமிழக எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன்(எல்காட்) மேற்கொள்ளும்.

இதில், கல்வியாண்டு வாரியாக பயன்பெறும் மாணவ, மாணவியர் விவரம்
கல்வி நிறுவனம் 2011-12 2012-13 2013-14: பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பிளஸ் 2 பிளஸ் 2 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் முதல் மற்றும் 3ம் ஆண்டு மூன்றாம் ஆண்டு -பாலிடெக்னிக் கல்லூரிகள் முதல் மற்றும் 3ம் ஆண்டு முதல் மற்றும் 3ம் ஆண்டு முதலாம் ஆண்டுபொறியியல் கல்லூரிகள் இரண்டு மற்றும் 4ம் ஆண்டு இரண்டு மற்றும் 4ம் ஆண்டு.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

2013-14ல், அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் லேப்-டாப் பெற்று விடுவர் என்பதால், அதன்பின் கல்லூரியில் லேப்-டாப் வழங்க வேண்டிய தேவை இல்லை. அதேநேரம், 10ம் வகுப்பு முடித்து விட்டு, பாலிடெக்னிக் சேரும் மாணவர்களுக்கு மட்டும் முதலாமாண்டில், லேப்-டாப் வழங்கப்படும் என தெரிகிறது.

இதே நாள்...


  • வில்லியம் ஹேர்ச்செல், சனிக்கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
  •  சயின்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்‌தது(1845)
  •  காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த ம்பொனத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)
  •  சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது(1991)
  • உண்ணாவிரதத்தை முடித்தார் அண்ணா ஹசாரே!

    தில்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த அண்ணா ஹசாரே 288 மணிநேர உண்ணாவிரதத்துக்குப் பிறகு இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இதை மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியாக அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடி வருகின்றனர். அண்ணா ஹசாரேவின் 3 முக்கிய கோரிக்கைகளை ஏற்பதாக நாடாளுமன்றம் நேற்று அறிவித்ததையடுத்து அவர் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.



    ஐந்து வயதுடைய சிறுமிகள் இருவர் ஹசாரேவுக்கு இளநீரும், தேனும் வழங்கி அவரது உண்ணாவிரதத்தை முடித்துவைத்ததனர்.

    உண்ணாவிரதத்தை முடித்த அண்ணா ஹசாரே, பொதுமக்கள் அளித்த ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
    மேலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்காக ஊடகத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

    தேர்தலுக்கு முன் திமுக! தேர்தலுக்கு பின் அதிமுக! பலத்தை காட்டும் விஜய்!

    வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று (28.08.2011) மதுரையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த மூன்று நாட்களாக மதுரையில் முகாமிட்டிருந்தார்.


    கடந்த 4 வருடமாக விஜய் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் அதை சமாளிக்க இரவு பகலாக படாத பாடுபட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். இனியும் விஜய்யின் படங்கள் தோல்வி அடையக்கூடாது, ரசிகர்களை இழக்கக் கூடாது என்பதற்காகவும், வேலாயுதம் படத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், ரசிகர்களை திரட்டவும், விழாவுக்கான அனுமதி, பாதுகாப்பு போன்ற விஷயங்கள், வரவேற்பு தட்டிகள் போன்றவைகளை கவனிக்கவும் மதுரையில் எஸ்.ஏ.சந்திரசேகர் முகாமிட்டிருந்தார்.

    வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட ஏற்பாடு செய்து வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், ரசிகர்களை திரட்டி விஜய்யின் பலத்தை காண்பிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இதனை வைத்து உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கதுக்காக அதிமுக தலைமையிடம் அதிக இடங்களை கேட்டு பெறலாம் என்றும் நம்பிக்கை வைத்துள்ளார்.

    ஏற்கனவே சட்டமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்ளை பெற இரண்டு நடிகர்கள் கட்சியும் போட்டிப் போட்டுக்கொண்டு முதல்வருக்கு பாராட்டு மழை பொழிகிறது. இந்நிலையில் விஜய்யும் தனது கூட்டத்தை காண்பிப்பதால் அதிமுக என்ன முடிவு எடுக்கிறது என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும். 
    தேர்தலுக்கு முன்னர் திமுகவுக்கு தங்களது பலத்தை காட்டிய விஜய் மற்றும் அவரது தந்தையும், தற்போது அதிமுகவுக்கு தங்களது பலத்தை காட்ட உள்ளனர். 

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...