|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 April, 2012

எழுச்சி பெறுமா சென்னை கிங்ஸ்



சென்னையில் இன்று நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் பொறுப்பாக ஆடி, வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணி காத்திருக்கிறது.சென்னை அணியின் ஆட்டம் நிலையில்லாமல் உள்ளது. முதலில் மும்பையிடம் வீழ்ந்தது. பின் டெக்கான் அணியை வென்றது. அடுத்து டில்லி அணியிடம் தோல்வியை சந்தித்தது. இன்று சொந்த மண்ணில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

சாதிப்பாரா ஜடேஜா:சென்னை அணிக்கு கடந்த மூன்று போட்டியிலும் சிறந்த துவக்கம் கிடைக்கவில்லை. பிளசிஸ், முரளி விஜய் ஜோடி எழுச்சி பெறும் பட்சத்தில் நல்ல துவக்கம் கொடுக்கலாம். ரெய்னா நிலைத்து நின்று ஆட வேண்டும். தோனி, பத்ரிநாத், டுவைன் பிராவோ ஆகியோர் மந்தமான ஆட்டத்துக்கு விடைகொடுத்து, அதிரடிக்கு மாறுவது அவசியம். ரவிந்திர ஜடேஜா தனது திறமையை தொடர்ந்து நிரூபிக்க வேண்டும். கடந்த போட்டியில் நான்கு பேர் ரன் அவுட்டானது சிக்கலை ஏற்படுத்தியது. இத்தவறு தொடரக் கூடாது.சென்னை அணியின் வேகப்பந்துவீச்சில் ஆல்பி மார்கல், போலிஞ்சர் நம்பிக்கை அளிக்கின்றனர். சொந்த மண்ணில் இன்று அஷ்வின், ஜகாதி. ஜடேஜா "சுழல்' ஜாலம் காட்டினால் நல்லது. 

கெய்ல் எதிர்பார்ப்பு:பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. கோல்கட்டா அணிக்கு எதிராக ஏமாற்றிய கிறிஸ் கெய்ல், இன்று சிக்சர் மழை பொழியலாம். இவருக்கு புஜாரா ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், சிறந்த துவக்கம் கிடைக்கும். "மிடில்-ஆர்டரில்' விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ், சவுரப் திவாரி அதிரடி காட்டும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை பெறலாம். 

ஜாகிர் நம்பிக்கை:கோல்கட்டாவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சில் ஆறுதல் அளித்த ஜாகிர் கான், இன்றும் கைகொடுக்கலாம். இவருக்கு வினய் குமார் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், விக்கெட் வேட்டை நடத்தலாம். சுழலில் அனுபவ முரளிதரன் இருப்பது பலம். ஏற்கனவே இவர், சென்னை அணியில் இருந்ததால், வீரர்களின் பலம், பலவீனம் குறித்து நன்கு அறிந்திருப்பார். இவருக்கு கேப்டன் வெட்டோரி கைகொடுக்கும் பட்சத்தில், சென்னை அணிக்கு சிக்கல் தான்.

இதுவரை...ஐ.பி.எல்., அரங்கில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் 12வது முறையாக மோத உள்ளன. முன்னதாக விளையாடிய 11 போட்டியில் சென்னை 6, பெங்களூரு 5 போட்டியில் வெற்றி பெற்றன

இதே நாள்...


  • சர்வதேச விண்வெளி பயண தினம்
  • இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது(2007)
  • ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது(1606)
  • ஜிம்பாப்வே டாலர், ஜிம்பாப்வேவின் நாணயமாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது(2009)

தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு குறித்து ஐநா யோசனை!!

தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா? என்பது குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டுவிடுவது என்ற நிலையை ஐ.நா. சபை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது.இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐநாவில் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படை சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர் ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன.அதே போல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சில ஆலோசனைகள் துவங்கியுள்ளனர். அவ்வாறு வாக்கெடுப்பு நடந்தால் அதில் பங்கேற்று வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தயாநிதி வழக்கில் முரண்பட்ட நிலை ஏன்? உச்ச நீதிமன்றம்!

"2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனுக்கு எதிராகப் புகார் கூறிவிட்டு, இப்போது அதற்கு முரணாக சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதியது ஏன்?' என்று "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற சமூக அமைப்பை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."2ஜி அலைக்கற்றை' முறைகேடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். பணிக்கர் ராதாகிருஷ்ணன் கொண்ட அமர்வு முன் விசாரணை நடந்தது.


இந்த வழக்கில் "பொதுநல வழக்கு மையம்' (சென்டர் ஃபார் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் லிட்டிகேஷன்) என்ற அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜர் ஆனார்.
தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்' என்று அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.அத்துடன், "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற அமைப்பு சார்பிலும் பத்திரிகையாளர் பரஞ்சாய் குஹா தாகூர்த்தா சார்பிலும் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். இவை தொடர்பான வழக்குகளில் சி.பி.ஐ. சார்பில் வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜரானார். அவரது வாதம்:இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் ஆஜராகியுள்ள டெலிகாம் வாட்ச் டாக் அமைப்பின் செயலர் அனில் குமார் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.


அதில், தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு தயாநிதி நெருக்கடி கொடுத்தார் என்று அனில்குமார் தனது மனுவில் கூறியுள்ளார். ஆனால், அவரே சி.பி.ஐ. அலுவலகத்துக்கு பிப்ரவரி 5ம் தேதி அனுப்பிய கடிதத்தில், அதற்கு முரணான கருத்தைத் தெரிவித்துள்ளார். தயாநிதி மாறனுக்கு எதிராக ஒரு வார இதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் புகார் அளித்ததாகவும், உள்நோக்கத்துடன் மாறனுக்கு எதிராக சிவசங்கரன் புகார் கூறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தயாநிதிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறலாம் என முடிவு செய்துள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனில் குமார், வழக்கில் சிவசங்கரனையே எதிரியாகச் சேர்க்கலாம் என்பதையும் கூறியுள்ளார்.


ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, புகார் கொடுத்த நபர் திடீரென்று அதற்கு மாறான கருத்தை எப்படிக் கூறலாம்? இதனால், அனில் குமாரின் நம்பகத் தன்மை மீது சி.பி.ஐ.க்கு சந்தேகம் தோன்றுகிறது'' என்று கே.கே. வேணுகோபால் வாதிட்டார்.அது மட்டுமின்றி, வழக்கில் ஆஜராகும் பிரசாந்த் பூஷண் மேலும் இரு மனு தாரர்களுக்காக வாதாடுகிறார். அவர்கள் கூறும் புகார்களின் நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகம் எழுகிறது'' என்றார் வேணுகோபால்.இதைக் கேட்ட நீதிபதிகள், இது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அனில்குமாருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனர்.அனில் குமார் எந்தச் சூழலில் சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதினார் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு முரணாகக் கடிதம் எழுதவேண்டிய நிர்பந்தம் என்ன என்பதையும் அவர் ஒரு வாரத்தில் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

மறக்கப்பட்ட 1947 மே 31 சம்பவம்!

 வேற்று கிரகங்களில் மனிதர்கள் வசிக்கின்றனர், நம்மைவிட நாகரிகமும் அறிவியல் முன்னேற்றமும் உள்ள அவர்கள் ஓசையே இல்லாத வான ஊர்திகளில் வந்து பூமியில் இறங்கி சுற்றிப்பார்த்துவிட்டுச் செல்கின்றனர் என்றெல்லாம் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் அடிக்கடி பேசியும் எழுதியும் வருகின்றனர்.ஆனால் திட்டவட்டமான நிரூபணங்கள் இல்லாததால் இவற்றையெல்லாம் கற்பனை என்றோ, கனவுகளின் வெளிப்பாடு என்றோ இதுவரை கூறி வருகிறார்கள்.அதே வேளையில் இது சாத்தியம் இல்லை என்று எவராலும் கூற முடிவதில்லை. இந்தியாவைப் பிற நாடுகள் பார்த்த பார்வையைவிட இந்தியர்களான நம்முடைய பார்வையே அவநம்பிக்கையுடனும் அவமதிப்புடனும் இன்னமும் தொடர்வதால் இங்குள்ளவர்களின் கூற்று எதுவும் நம்பப்படுவதில்லை.அப்படித்தான் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஒடிசா மாநிலத்துக்கு சில வேற்றுகிரக மனிதர்கள் வந்ததும் அங்கிருந்த ஒடிசா வாசிகளைத் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சுற்றிக்காண்பித்ததும் நம்பப்படாததுடன் இகழ்ச்சியாகப் பேசப்பட்டது.


ஆனால் கிராமப்புறக்கலைஞர் ஒருவர் அதை பனையோலைச் சுவடியில் சித்திரமாகவே பதிவு செய்து குறிப்புகளும் எழுதியிருக்கிறார். நல்ல வேளையாக அது இன்னமும் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.வேற்றுகிரகவாசிகள்: ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் வேற்றுகிரகவாசிகள் தங்களுடைய விசித்திரமான விண்கலத்துடன் 1947-ம் ஆண்டு மே 31-ம் தேதி வந்து இறங்கினர். தீரம் மிக்க 2 இளைஞர்கள் அஞ்சி ஓடாமல் அந்த விண்கலத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே இருந்தவர்கள் அந்த இரு இளைஞர்களையும் அழைத்து தங்களுடைய விண்கலத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். அவர்களையும் ஏற்றிக்கொண்டு விண்ணில் ஒரு சுற்று சுற்றிவந்தனர். பிறகு அவர்களை அந்த இடத்திலேயே இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.


அவ்விரு இளைஞர்களும் அதை அக்கிராமவாசிகளிடம் தெரிவித்தனர். அதை யாரும் நம்பவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ""பட்ட சித்திரக்காரர்'' என்று அழைக்கப்படும் ஓவியரிடம் தங்கள் அனுபவத்தை அப்படியே விவரித்தனர். அவர் அதை அப்படியே கேட்டு ஓலைச் சுவடியில் சித்திரமாக வரைந்து வைத்துள்ளார்.அந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. ஆனால் ஒடியா வார இதழ் ஒன்று ஜூன் 15-ம் தேதி அச் செய்தியை ஒற்றைப் பத்திச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதுவும் எப்படி என்றால் ""கிராமவாசிகளின் அதீத கற்பனை'' என்ற காட்டமான விமர்சனத்தோடு.இந்தச் செய்தி உண்மையாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையே இல்லாமல் அச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.


எந்திர புருஷர்கள்: கிராமவாசிகள் கூறக் கேட்டவர் வரைந்த சித்திரத்தில் வேற்றுகிரக மனிதர்கள் எந்திர புருஷர்களாக வரையப்பட்டுள்ளனர். அவர்களுடைய தலையில் அரைவட்ட வடிவில் சாதனங்கள் இருக்கின்றன. விண்வெளி வீரர்கள் அணிவதைப் போன்ற ஆடையையே அவர்கள் அணிந்துள்ளனர். கைகள் கூரான கத்தியைப் போல இருந்தன. ஆனால் அவர்கள் கையை உயர்த்தியிருந்த விதம் வாழ்த்து கூறுவது போலவோ, ஆசிர்வதிப்பது போலவோ இருந்தது.சிலருடைய கைகள் வட்டவடிவில் பந்து போல உருண்டிருந்தது. சிலருடைய கைகளில் 5 விரல்கள் இருந்தன.இந்த விண்கலத்தையும் விண்வெளி மனிதர்களையும் பார்த்தவர்கள் சமீபத்தில்தான் இறந்தனர். ஆனால் அவர்கள் உயிரோடு இருந்தவரையில் அவர்கள் கூறுவதைப் பொறுமையோடு கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே ஏற்படவில்லை.


இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்கெல்லாம் அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலத்தில் ரோஸ்வெல் என்ற இடத்தில் வேற்றுகிரக மனிதர்களின் கலம் ஒன்று பூமியில் வேகமாக வந்து மோதி சிதறியதாகப் பதிவாகியிருக்கிறது.இப்போதும்கூட இதை நம்புகிறார்களோ இல்லையோ இதையும் வியாபார தந்திரத்தோடு சில நினைவுப் பொருள்களைத் தயாரித்து புரியில் விற்றுக்கொண்டிருக்கின்றனர்.விண்வெளியியல் விஞ்ஞானிகள் அவ்விருவரைக் கேட்டு பதிவு செய்திருந்தால், வேற்றுகிரகவாசிகள் பூமியில் உள்ளவர்களுடன் நேருக்கு நேர் ""முதலில் சந்தித்த'' வரலாற்று உண்மை வெளிவந்திருக்கக்கூடும்

7 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 48 மணி நேரம் கெடு!

 தூக்கு தண்டனை அளிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் தொடர்பான விவரங்களை 48 மணி நேரத்துக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் என்று 7 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.அந்தந்த மாநில ஆளுநர்களின் பரிசீலனையில் உள்ள இந்த மனுக்கள் பற்றிய விவரங்களை 48 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உள்துறை செயலர்கள் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே. முகோபாத்யாய அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை வெளியிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த உத்தரவை, சில மாநிலங்கள் கடைபிடிக்காததை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து இந்த உத்தரவு அளிக்கப்பட்டது.நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த உத்தரவை பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழகம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் நிறைவேற்றவில்லை.மரண தண்டனை அளிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரிடம் கருணை மனுக்கள் அனுப்பியுள்ள, அதே நேரத்தில் பல்வேறு காரணங்களால் உச்ச நீதிமன்றத்தை அணுகாத அவர்களது வழக்குகளை ஆராய விரும்புவதாக இருவர் பெஞ்ச் தெரிவித்தது.


"அவர்களது வழக்குகள் ஊடகங்களால் பேசப்படவில்லை.நாட்டிற்கு வெளியில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் பின்னணி கொண்ட வழக்குகளைத்தான் ஊடகங்கள் பேசுகின்றன' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.மரண தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகளில் காலதாமதம் ஏற்பட்டதற்கு நீதித்துறை எந்த அளவுக்கு பொறுப்பாளியாக உள்ளது என்பதை ஆராய விரும்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


18 கருணை மனுக்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு ஏப்ரல் 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.குண்டு வெடிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்ற தேவேந்திர பால் சிங் புல்லரின் புகார் மனுவை விசாரித்தபோது இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தான் சமர்ப்பித்த கருணை மனு தொடர்பாக இறுதி முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் அளவுக்கு அதிகமான காலம் எடுத்துக் கொண்டதாக புல்லர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது ஜெயலலிதா

இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செயல்களில் அதிபர் ராஜபட்ச அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் அந்நாட்டு அரசிடம் எவ்விதமான மாற்றமும் தெரியாததாலும் இலங்கைக்குச் செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது என அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்துவது, மறுவாழ்வு அளிப்பது, இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஏப்ரல் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. அதில் அதிமுக சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதற்கிணங்க அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டை அனுப்ப முடிவு செய்தேன்.


இலங்கையில் வாழும் தமிழர்கள், பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும், போரினால் இடம்பெயர நேர்ந்த தமிழர்களை அவர்கள் முன்னர் வசித்த இடத்திலேயே மீள்குடியமர்த்த வேண்டும் என்பதிலும் அதிமுக உறுதியாக உள்ளது.இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க ஐ.நா. சபையை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்றும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை மற்ற நாடுகளுடன் இணைந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தேன்.


இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் கடுமையைக் குறைத்து அதை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெற்று பின் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இருப்பினும் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு இது முதல் படியாக இருக்கும் என்பதால் அதை நான் பாராட்டினேன்.நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகக் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்றும் நம்பினேன்.


அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு அவற்றில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவும் உதவும் என்ற எண்ணத்தில்தான் அதிமுக சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப சம்மதித்தேன். ஆனால், சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவினர் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களைக் கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாதது போல் அமைந்துள்ளது. அதிபர் ராஜபட்ச உள்பட சிங்கள அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள், விருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது ஏதோ சம்பிரதாயத்துக்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் ஏற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும்தான் தெரிகிறது.ஜெனீவாவில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மென்மையான தீர்மானத்தை கூட இலங்கை அதிபர் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபட்ச அரசு தடுத்து நிறுத்தவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.


தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபட்ச அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் உண்மைகளைப் பற்றி இலங்கை அதிபருடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப்பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபட்சவுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.எனவே, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்றார் ஜெயலலிதா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...