|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 March, 2012

பார்த்ததில் பிடித்தது!




வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம்!


கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் படி வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.சுகாதார சீர்கேடு பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் சுகாதார சீர்கேடுகள் தான். மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகின்றன. குப்பைகள், சாக்கடை நீர் போன்றவற்றில் இருந்து தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே சுத்தத்தை பராமரித்தால் கொசுக்களின் இனப் பெருக்கத்தை தடுத்து அதன் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

பொதுசுகாதார சட்டம் இதற்காக 1939-ல் தமிழக பொதுசுகாதார சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ராஜன் பரிந்துரையில், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த சட்டத்தை இயற்றியது. அதன்படி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு 50 பைசா முதல் 5 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு அமைந்த அரசாங்கங்கள் இந்த சட்டத்தில் உள்ள சரத்துக்களை முறையாக அமல் படுத்தவில்லை. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் தலைதூக்க தொடங்கியதும், கடந்த 2009-ல் பொது சுகாதார சட்டத்தின் பக்கம் அரசின் கவனம் திரும்பியது.

புதிய திருத்தம் இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது பற்றி பரிந்துரை செய்ய, கூடுதல் பொது சுகாதார இயக்குனர் மருத்துவர் இளங்கோ தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து, அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை செய்தது. சுகாதார துறை செயலாளர் சுப்புராஜிடம் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அபராதம் விதிப்பு இதில் முக்கிய பரிந்துரை, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்பதாகும். அந்த அறிக்கை 3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. உயிரூட்டல் தற்போது அந்த சட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுக்க, அ.தி.மு.க. அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.சட்டத்தில் இந்த காலத்துக்கு பொருந்தும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, ஆலோசனை நடத்தப்படுகிறது. சுமார் 73 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தின் மூலம் நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். சாக்கடை நீரை தேக்கி வைக்க கூடாது. கழிவுப் பொருள்களை கண்ட இடங்களில் கொட்ட கூடாது.

குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை தெருவில் வீசக் கூடாது. அதே போல தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள் மற்றும் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவைகளால் கழிவுகளை பொது இடங்களில் குவிக்க கூடாது. குடிநீர் ஆதாரப்பகுதிகளில் கழிவு நீரை வெளியேற்றக் கூடாது. அனைத்து தரப்பு சுகாதாரத்தை பேண வேண்டும் என்று வலியுறுத்தும் திருத்தங்கள் சட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.வீடுகளை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.50 ஆயிரமும், தொழிற்சாலைகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்க, சட்டத்தில் வழிவகை செய்யப்பட உள்ளது. பொது சுகாதார சட்டத்தை கடுமையாக அமல்படுத்தினால் 80 முதல் 90 சதவிகிதம் சுகாதார சீர்கேட்டை சரி செய்து விடலாம் என்பது சுகாதார துறையின் எதிர்பார்ப்பு.

புருனே சுல்தான்....


இந்தோனேசியா அருகே உள்ள, செல்வச் செழிப்பு மிகுந்த குட்டி நாடு புருனே. இங்கு மன்னராட்சி நடக்கிறது. தற்போது, மன்னராக இருப்பவர், சுல்தான் ஹசனல் போல்க்கையா. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர். இவருக்குள்ள சொத்து விவரங்கள் பற்றி கூறும்போது, ஒவ்வொரு நொடியும், 5,878 ரூபாய் அதிகரிப்பதாக கூறுவது உண்டு. அதாவது, ஒவ்வொரு நாளும், அவரது சொத்து மதிப்பு, 2.11 கோடி ரூபாய் அதிகரிக்கிறது. அப்படியானால், அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்பதை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். சாதாரண மனிதர்களுக்கு, எட்டாக் கனியாக இருக்கும் தங்கம், புருனே சுல்தானின் வாழ்வில், ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அங்கமாக இருக்கிறது. இவர் வசிக்கும் அரண்மனையை, ஒரு மினி சொர்க்கம் எனலாம். இந்த அரண்மனையில், 1,788 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும், தங்கம் மற்றும் வெள்ளியிலான வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் அந்த அரண்மனையில், 257 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. இந்த அரண்மனைக்கு வரும் விருந்தினர்கள், இங்குள்ள ஒவ்வொரு அறையையும், 30 நொடிகள் சுற்றிப் பார்த்தாலே, அனைத்து அறைகளையும் பார்த்து முடிப்பதற்கு, 24 மணி நேரம் ஆகும். தங்க மூலாம் பூசப்பட்ட, சொகுசு வசதியுடன் கூடிய விமானம் ஒன்றும், புருனே சுல்தானுக்கு சொந்தமாக உள்ளது. மேலும், ஆறு சிறிய விமானங்களும், ஹெலிகாப்டரும், இவரது அரண்மனையில் உள்ளன. புருனே சுல்தான், லண்டன் சென்றால், அவர் பயணம் செய்வதற்காகவே, லண்டனில் எப்போதும் ஒரு சொகுசு காரை ரெடியாக நிறுத்தி வைத்திருக்கிறது, பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று. சுல்தானின் மகளின் திருமண கொண்டாட்டங்கள்,  14 நாட்கள் நடந்தன. இதற்காக, கணக்கு வழக்கு இல்லாமல், பணம் வாரி இறைக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும், வி.வி.ஐ.பி.,க்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர். திருமணத்தின்போது, வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை இளவரசி அணிந்திருந்தார். அவர் வைத்திருந்த மலர்க் கொத்து, மணமக்கள் அமர்வதற்காக வைக்கப்பட்டு இருந்த சிம்மாசனம் ஆகியவற்றிலும் வைரங்கள் டாலடித்தன. பல கோடி மதிப்புள்ள காதணியையும் அவர் அணிந்திருந்தார். புருனே மன்னரிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் மட்டும், 531 உள்ளன. இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். படித்து முடிப்பதற்குள், நாம் தான் களைப்படைந்து விடுவோம். 

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்!

திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிப்பட்டதை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர். பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவளநாட்டின் மையப்பகுதியான திருச்சியின் வடக்கே 25 கி.மீ., தூரத்தில், சென்னை பை-பாஸ் அருகே உள்ள திருப்பட்டூரில் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகிலுள்ள படைப்புகளுக்கு எல்லாம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பிரம்மனுடைய தலையெழுத்தை மாற்றி எழுதி, தன்னை நோக்கி தவமிருந்த பிரம்மனுக்கு சிவன் அருள்பாலித்த திருத்தலம். இதன்மூலம் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தெல்லாம், திருமால், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சூரியபகவான் ஆகியோரால் மங்களகரமாக மாற்றியருள பிரம்மனுக்கு சிவன் வரம் அளித்த ஸ்தலம். இத்தகைய புராண சிறப்புப்பெற்ற திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில், சூரியபகவான் தனது சூரியக்கதிர்கள் மூலம் மூலவர் பிரம்மபுரீஸ்வரை வழிபடுவது வழக்கம். சூரியக்கதிர் வழிபாடு நடக்கும் முதல்நாளான நேற்று காலை ஏராளமான பக்தர்கள் சிவனை வழிபட அதிகாலையில் இருந்து காத்திருந்தனர். காலை 6.21 மணிக்கு, சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் பற்றி படர்ந்தது. சூரியக்கதிர் பட்டு சிவலிங்கம் பிரகாசித்த காட்சியை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.  * அம்மன் வழிபாடு: மூலவர் பிரம்மபுரீஸ்வரரை சூரியக்கதிர்கள் வழிபட்ட அதேநேரத்தில், பிரம்ம சம்பத் கௌரி அம்மனின் பாதங்களில் சூரியக்கதிர்கள் பணிந்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது.  * திருத்தேர்: பிரம்மபுரீஸ்வர் கோவிலில் பங்குனித் திருத்தேர் விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான பங்குனித்தேரோட்டம், வரும் ஏப்ரல் நான்காம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. கோவிலின் தேர் பழுதடைந்ததால், கோவிலுக்கு பாத்தியப்பட்ட கிராம மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் செலவில் புதிய தேர் செய்யப்பட்டு, கடந்த 25ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. 25 ஆண்டுக்கு பின், இக்கோவில் தேரோட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே நாள்...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...