விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து, நீதிமன்றம்
அளித்த தீர்ப்புக்கு அடுத்து படம் வெளியிட பல்வேறு பிரச்சினைகள்
ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை தமிழக அரசு படத்தை தடை செய்ய
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி
சட்டம்- ஒழுங்கு கருதி படத்தை தடை செய்தது. இதுகுறித்து கமலஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-இது நான் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடி வளர்ந்த வீடு இது. இங்கு
இருந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். இது எனது சொந்த வீடு. இதில் எனது
சகோதரர்களுக்கும் உரிமை உண்டு. அவர்களிடம் இருந்து நான் விலைக்கு வாங்கி
விட்டேன். நான் கொடுத்த பணத்தை என் தந்தை எல்லா சகோதரர்களுக்கும் பிரித்து
கொடுத்து விட்டார்.
நான் எடுக்கும் படத்தில் எனது சகோதரர் சந்திரஹாசன் பங்குதாரர் என்று
வரும். அவர் சம்பளமாக பணம் எதுவும் வாங்கியது இல்லை. சிறுவயதில் இருந்து
இன்று வரை என்னை தன் பொறுப்பில் வளர்த்து வருகிறார். தற்போது என்ன
நடக்கிறது என்று எனக்கு தெரிய வில்லை. அது தெரிந்தால் நான் அரசியல்
வாதியாகி விடுவேன் என்ற பயம் இருக்கிறது.
இன்று காலை படம் வெளிவரும் என்று எதிர்பார்த்தேன். தியேட்டர்களில் எனது
ரசிகர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். என் ரசிகர்களில் இஸ்லாமியரும்
இருக்கிறார்கள். சினிமாதான் என் தொழில். நான் நேர்மையை மட்டுமே கற்று
இருக்கிறேன். இந்த படத்தில் நிறைய முதலீடு செய்து இருக்கிறேன். ரசிகர்களின்
திறமையையும், நம்பி படத்திற்கு முதலீடு செய்து இருக்கிறேன். இருக்கிற
சொத்துக்களை விட அதிகம் கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறேன். எனக்கு
மதம் முக்கியம் இல்லை. மனிதநேயம் தான் முக்கியம். ரசிகர்கள் மீதும் படத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையில் சொத்துக்களை
அடகு வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். சரியான நேரத்தில் பணத்தை
கட்டவில்லை என்றால் சொத்துக்களை தனதாக்கி கொள்ளலாம் என பணம் கொடுத்தவருக்கு
எழுதி கொடுத்துள்ளேன்.
இதுபோல் பல இடையூறுகளை ஏற்கனவே சந்தித்து உள்ளேன்.
ராஜபார்வை படத்தில் நிறைய இழந்தேன். அதில் இருந்து மீள 7, 8 வருடங்கள்
வேலை செய்ய வேண்டி இருக்கிறது.1986-ல் மறுபடியும் ஜ்ஜியம் நிலைக்கு தள்ளப்பட்டேன். அதில் இருந்து
மீண்டு இப்போது ரூ.100 கோடி செலவில் படத்தை எடுத்துள்ளேன். அதற்கும் நிறைய
தடங்கல்கள். தமிழகத்தில் நான் இருக்க வேண்டியது இல்லை என்று
நினைக்கிறார்களோ என தெரியவில்லை. எனக்கு சிறு ஆசை வந்துள்ளது. மதசார்பற்ற
மாநிலத்தில் தான் நாம் இருக்கிறோமா என்று எண்ண தோன்றுகிறது. தமிழ்நாடு
மதசார்பற்ற மாநிலம். இப்போது இங்கேயும் அந்த நிலை உருவாகி இருக்கிறது.
காஷ்மீரில் இருந்து கேரளா வரை மதசார்பற்ற இடம் கிடைக்குமா என்று தேடுவேன்.
இங்கு கிடைக்கா விட்டால் வேறு நாடுகளில் மதசார்பற்ற மாநிலம் இருக்கிறதா
என்று தேடுவேன். கோபத்தில் இதை நான் சொல்லவில்லை. புண்பட்டது போதும்,
உனக்கு தமிழர்களை பிடிக்கவில்லையா என்று கேட்கலாம். தமிழர்கள் என் உயிர். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று என் உடலையும், இந்த
மக்களுக்குத்தான் கொடுத்து இருக்கிறேன். நடந்துள்ள சம்பவங்கள் என் மனதை
உருக்கிவிட்டன. என் சொத்துக்களை எடுத்தால்தான் தேசத்துக்கு ஒற்றுமை
கிடைக்கும் என்றால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் குழந்தையாக
நடிகையர் திலகம் (சாவித்திரி) கையில் இருந்தவன். ஜெமினி கணேசன் கையைப்
பிடித்து நடை பயின்றவன். நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்தவன்.
எம்.ஜி.ஆரின் தோளில் ஏறி நிமிர்ந்து நின்றவன் அப்படி வளர்ந்த பிள்ளை நான்.
எனக்கு பயம் இல்லை. திறமை இருக்கிறது. இந்த படத்தின் கதை களம்
ஆப்கானிஸ்தானில் நடக்கிறது. இங்கே இந்திய முஸ்லிம்களை கேலி செய்வதாக எப்படி
எடுத்துக் கொள்ள முடியும். இந்த படத்தின் தீர்ப்பு எனக்கு சாதகமாக இல்லை.
தற்போது கிடைத்திருக்கும் நீதியை நான் வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் 5 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கமல்ஹாசனை
சந்தித்தனர். அவர்களுடன் சேர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:- என்னை சந்தித்த முஸ்லிம் அமைப்புகள் கேட்டுக்கொண்டபடி சர்ச்சைக்குரிய
குரான் பற்றிய காட்சிகளை மக்களின் ஒற்றுமையை கருதி நீக்குகிறேன் என்று
கூறினார். இதையடுத்து நேற்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின்
சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது விசாரணையில் தனி நீதிமன்ற
நீதிபதியின் தீர்ப்பை நிறுத்தி வைத்தும், தமிழக அரசு விதித்த தடையை
நீட்டித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை
அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடினர். இதனால்
ஆழ்வார்பேட்டை பகுதி நாள் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.