சில நாட்களுக்கு முன்னால, டூத்
பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேட்டாங்க. இப்ப என்னடான்னா எலுமிச்சையும்,
உப்பும் இருக்கான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இது இப்படியே
போயிட்டிருந்தா, இன்னும் பத்து வருசத்துக்கு அப்புறம் விளம்பரங்கள் எப்படி
இருக்கும்னு ஒரு முன்னோட்டம். பாப்போமா...
டூத்பேஸ்ட் விளம்பரங்களின் அடுத்த கட்டம் :
'' உங்க பல்லுல
4,48,937 கிருமி இருக்குனு எங்க கம்ப்யூட்டர் சொல்லுது. நீங்க சரியாவே
பிரஸ் பண்ணுறது இல்லை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து தடவையாவது எங்க
டூத்பேஸ்ட் யூஸ் பண்ணினாதான் உங்க பல்லு பளபளப்பா இருக்கும். இதனால கரன்ட்
போயிட்டாக்கூட உங்க பல்லுல இருந்துவர்ற வெளிச்சத்தை வெச்சே ஊரையே ஒளி
வெள்ளத்துல மிதக்கவிட முடியும். அது எங்க டூத்பேஸ்ட்ல உப்பு, எலுமிச்சை,
மிளகாய்ப்பொடி, மசாலாப்பொடி, அரிசிப்பொடி, கோலப்பொடினு எல்லாமே
சேர்த்திருக்கோம். நீங்க இதை டூத்பேஸ்ட்டாவும் பயன்படுத்தலாம். அப்படியே
சமைக்கிறதுக்கும் பயன்படுத்தலாம். உங்களுக்குப் பல்லே இல்லைன்னாக்கூட எங்க
டூத்பேஸ்ட் வாங்கி ஒரு வாரம் ஈறுகள்ல தேச்சுட்டே இருந்தா, அடுத்த ஒரே
வாரத்துக்குள்ள 32 பல்லும் முளைச்சுடும். சாதாரண டூத்பேஸ்ட்
உபயோகிச்சீங்கன்னா, அது வெறும் கத்தி வெச்சுத்தான் கிருமிகளைக் கொல்லும்.
ஆனா எங்க டூத்பேஸ்ட்டுக்குத் துப்பாக்கி, அணுகுண்டுனு இப்படி ஏகப்பட்ட
வித்தைகள் தெரியும். இதை வெச்சுக் கிருமிகளை அடிச்சு தொம்சம் பண்ணிடும்.
அதனால ஒழுங்கு மரியாதையா எங்க டூத்பேஸ்ட்டை வாங்கிடுங்க. இல்லைனா உங்க
பல்லுல இன்னும் அதிகக் கிருமிகளை எங்க கம்ப்யூட்டர் மூலமா
ஏத்திவிட்ருவோம்.'
ஷாம்பூ விளம்பரங்களின் அடுத்த கட்டம்:
'உங்களுக்கு தலையில முடி இருக்குதா?
அப்படி இருந்தா, எங்க ஷாம்பூ வாங்கிப் போடுங்க. இது தலையில இருக்கிற
முடிகளை அப்படியே ஜெராக்ஸ் எடுக்கும் திறமையோட தயாரிக்கப்பட்டது. இதன்
மூலமா உங்க தலையில ஒரே ஒரு முடி இருந்தாக் கூட அதை எங்க ஷாம்பூ ஒரு கோடியா
மாத்திடும். மேலும் உங்களுக்கு என்ன கலர்ல முடி வேணும்னு எங்க ஷாம்பூ
கம்பெனிக்கு எழுதிப் போட்டீங்கன்னா, அதுவே ஆட்டோமேட்டிக்கா உங்க முடியோட
கலரை மாத்திடும். எங்க ஷாம்பூ பயன்படுத்துறவங்களோட தலைமுடியை வெச்சுத்தான்
இப்போ நிலாவுக்கும் பூமிக்கும் இடையில கயிற்றுப் பாலம்
தயாரிச்சுட்டிருக்காங்க. அந்த அளவு ரொம்ப நீளமான தலைமுடி வேணும்னா, எங்க
ஷாம்பூ மட்டும் பயன்படுத்துங்க. அதோட இது உங்க தலையில இருக்கிற பொடுகு
மட்டுமில்லாம, உங்க ஊர்ல இருக்கிற எல்லோர் தலையில இருக்கிற பொடுகையும்
சுத்தமா ஒழிச்சுடும். ஒரே ஒரு தடவையாச்சும் வாங்கி யூஸ் பன்னுங்க
சோப்பு விளம்பரங்களின் அடுத்த கட்டம்
எங்க சோப்புல உலகத்துல இருக்கிற
3,00,00,000 கோடி வகையான மூலிகைகள் இருக்கு. அமேசான் காடுகளில் இருக்கிற
அற்புத மூலிகைகளில் இருந்து அனகோண்டா மலையில இருக்கிற பாம்பு மாத்திரை
வரைக்கும் இருக்கு. அதனால உங்களுக்கு எந்த விதமான நோய்களும் வரவே வராது.
உலகத்துல மொத்தமா 8,000 வகையான ஸ்கின் பிராப்ளங்கள்
கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த எட்டாயிரம் வகையான ஸ்கின் பிராப்ளங்களுக்கும்
ஒரே சொல்யூஷன் எங்க சோப்பு மட்டும்தான். எங்க சோப்பு மாதிரி நறுமணம் வீசுற
சோப்பை இதுவரைக்கும் யாரும் உருவாக்கினதே இல்லை. உருவாக்கவும் முடியாது.
எங்க சோப்பைப் போட்டுட்டுத் தெருவுல நடந்து போனீங்கன்னா, அந்த மணத்துல
மயங்கி கரன்ட் கம்பம், தந்திக் கம்பம், வீடு, சேர், டிவி, சோபா, கட்டில்,
மெத்தை... ஏன் வானத்துல சுத்திட்டிருக்கிற செயற்கைக்கோள்கூட உங்க
பின்னாடியே வரும். எங்க சோப்பைப் போட்டதுக்கு அப்புறமா நீங்க ஏடிஎம்
சென்டருக்குப் போனா, ஏடிஎம் மெஷின் கூட மெய் மறந்து உங்க பின்னாடியே
வந்துடும். எங்க சோப்பைப் போட்டதுக்கு அப்புறமா வேற சோப்பைப் போட முயற்சி
பண்ணினா, உங்களுக்கு சொறி, சிரங்குனு பத்து லட்சம் வகையான சரும நோய்களும்
வர்ற மாதிரி எங்க சோப்பு சாபம் விட்ரும். அதனால எங்க சோப்பைப்
பகைச்சுக்காதீங்க.'