|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 August, 2011

இதே நாள்...


  • காங்கோ விடுதலை தினம்(1960)
  •  பாகிஸ்தான் சுதந்திர தினம்(1947)
  •  பராகுவே கொடி நாள்
  •  பசிபிக் போர் முடிவுற்றது(1945)
  •  முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் நடைபெற்றது(1908)
  • அரசு மருத்துவர்களுக்கு கலெக்டர் சகாயம் எச்சரிக்கை!


    இந்நிலையை மருத்துவர்கள் மாற்ற வேண்டும். அனைத்து மருத்துவ மனைகளிலும் உள்நோயாளி கள் பிரிவில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்றால் தான் உணவு மற்றும் மருந்துகள் சரியான நேரத்தில் எடுத்து கொள்வதுடன் நோயாளிகள் ஓய்வு எடுக்கவும் ஏதுவாக விளங்கும். 
    மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் நடைபெற்றது. 

    இக்கூட்டத்தில் கலெக்டர் சகாயம்,   ’’பொதுவாக கிராமப் புறங்களில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக்கு சென்ற பொழுது பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்நோயாளிகள் பிரிவு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் நிலை இல்லை. 

    அப்பொழுது தான் சிறிய நோயை விரைவில் குணப்படுத்தி பெரிய நோய் வராமல் தடுக்க முடியும். எனவே உள்நோயாளிகள் பிரிவுக்கு மருத்துவர்கள் முக்கியத்துவம் தரவேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் கருவிகள், உபகரணங்கள், கட்டிடங்கள் தேவையான அளவு உள்ளன. மேலும் மருத்துவமனைகளுக்கு தேவையான கருவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

    தேவையான உபகரணங்களை மருத்துவர்கள் கேட்டு பெற்று கொள்ளலாம். அதேபோன்று காலி பணியிடங்களை நிரப்ப வும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மருத்துவ வசதி அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கிடைக்க மருத்துவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    மருத்துவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட இலக்கீடுகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். நமது அறிவு சமூகத்திற்கு பயன் படக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.   மருத்துவர்கள் முடிந்த அளவு அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையாக பிரசவம் பார்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை ஏற்படும்.

    மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் முன் மாதிரி மருத்துவமனையாக திகழ வேண்டும். கிராம மற்றும் ஊரகப் பகுதியில் மருத்துவ சேவையை பரவலாக்குவது மற்றும் தரமானதாக வழங்கு வதே தமிழக அரசின் நோக்கமாகும். எனவே மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள குடியிருப்புகளில் தங்கி மருத்துவ சேவை செய்ய வேண்டும். மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருகை தர வேண்டும்.பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவர்கள் மற்ற அலுவலர்களுக்கு முன் மாதிரியானவர்களாக திகழ வேண்டும். கிராமங்களில் அதிகமான அளவில் காசநோய் குறித்து சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். அதேபோன்று எச்.ஐ.வி. நோயாளிகள் சரியான முறையில் தொடர்ந்து சிகிச்சை எடுக்கிறார்களா? என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

    ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே முடிந்த வரை அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கொடுத்து விட்டால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிக நோயாளிகள் வருவதை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிடலாம் என்பதை உணர்ந்து நாம் இலக்கு அலுவலராக இல்லாமல் லட்சிய அலுவலர்களாக திகழ வேண்டும்’’ என்று  பேசினார்.

    கூடுதல் கட்டணம் வசூலித்த பொறியியல் கல்லூரிகள்!


    சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சில மாணவர்களிடம் இருந்து கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்கள் உண்மை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவ்வாறு மாணவர்களிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த தொகையை மாணவர்களிடமேய திரும்ப வழங்குமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    சுயநிதி பொறியியல் கல்லூரிகள் குறித்து வரும் புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு துவக்கப்பட்ட ஒரு வார காலத்திற்குள் 14 கல்லூரிகள் மீது புகார்கள் வந்தன. புகார்கள் மீதான விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

    சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மீது நடத்தப்படும் விசாரணை குறித்து குழுவின் தலைவர் வி. ஜெயபாலன் கூறுகையில், மாணவர்களிடம் இருந்து வந்த புகாரினை அடுத்து சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.சென்னை அருகே உள்ள மற்றொரு கல்லூரியில் மாணவர்களிடம் இருந்து கூடுதலாக 20 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரசீது தராததால், வங்கிக் கடன் பெற முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியும், முதல்தலைமுறை மாணவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை கல்விக் கட்டணமாக வசூலித்திருப்பது தெரிய வந்தது.விசாரணை நடத்தப்பட்ட கல்லூரிகளிடம், மாணவர்களிடம் இருந்து வசூலித்த கூடுதல் கட்டணத் தொகையை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளன என்றார்.

    புதிய ஒலி வடிவில் 'ஜனகண மன' !


    பஞ்சு போன்ற பாதங்களுக்கு...!

    மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் பாதுகாக்கப் படவேண்டியவையே. முகத்திற்கு காட்டும் அக்கறையை யாரும் கை, கால்களுக்கு காட்டுவதில்லை. இதனால்தான் அழகு நிலையங்களில் மெனிக்யூர், பெடிக்யூர் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பாதங்களை பராமரிக்காமல் இருப்பதானால் பலருக்கு பாதமானது பொலிவு இழந்துவிடுகின்றன. இதனால் சேற்றுப்புண், பித்தவெடிப்பு போன்றவை ஏற்படுகின்றன. நம்மை வழிநடத்திச் செல்லும் பாதங்களிடம் நாம் அக்கறை செலுத்தினால் அவை ஏன் நம்மை மருத்துவமனை வாசலுக்கு அழைத்துச் செல்லப்போகின்றன. பாதங்கள் பொலிவடைய சில ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.

    மென்மையான பாதங்கள்: கஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சை பயிறை பவுடராக்கி அதனுடன் கோதுமை மாவு மற்றும் கடலை மாவு ஆகியவற்றையும் சேர்த்து பன்னீரில் கலந்து பாதத்தில் பூசவேண்டும். 20 நிமிடம் கழித்து பாதங்களை கழுவினால் அவை பளபளப்பாகும்.

    ரோஜா இதழ்கள், எலுமிச்சை சாறு, வேப்பிலை ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். பின்பு மிதமான சூட்டில் கால்களை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதுபோல் செய்துவந்தால் கால்கள் சொரசொரப்பு இன்றி மிருதுவாக மாறும்.மிதமான சுடுதண்ணீரில் சிறிதளவு ஷாம்பு, சிறிது உப்பு, பாதி எலுமிச்சை சாறு கலந்து அந்த தண்ணீரில் பாதங்களை பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின்பு ஸ்க்ரப்பர் கிரீமை தடவி மசாஜ் செய்யவும்.

    நகப்பூச்சு உபயோகிப்பவர்கள் வாரம் ஒரு முறை நகங்களில் உள்ள நகப்பூச்சு நீக்கி (நெயில்பாலிஷ் ரிமூவர்) மூலம் சுத்தம் செய்துவிட்டு ஒரு நாள் முழுவதும் நகப்பூச்சை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம். இப்படி செய்வது நகங்களுக்கு நல்லது.

    பாதவெடிப்பு சரியாக; தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் எண்ணெயிலுள்ள இரசாயனம், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும். அதைப் போக்க சில எளிய வழிகள் இதோ:

    ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளையும் ஒழிக்கும்.

    வெடிப்பு உள்ள பாதங்களை ஐஸ் கட்டியில் சிறிது நேரம் ஊறவைத்து பின் சந்தனத்தூளை பூசி 10 நிமிடங்கள் கழித்து பாதங்களை அலசவும். இதுபோல் செய்து வந்தால் வெடிப்பு சரியாகும். முகத்திற்கு போடும் ப்ளீச் கிரீம், க்யோலின் பவுடர், ஹைட்ரஜன் பெராக்ஸை டு ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து கால்களில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.

    கால்வலி நீங்கும்: கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, தோல் மிருதுவாகும். கடுகு எண்ணெய் வாங்கி சூடாக்கி பாதங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாதங்கள் அழகாவதுடன் கால்வலி உள்ளவர்களுக்கு கால்வலி நீங்கும்.

    பாத வெடிப்பு அதிகம் உள்ளவர்கள் மருதாணியை அரைத்து பூசி வந்தால் கால்கள் குளிர்ச்சியாக இருப்பதோடு வெடிப்புகள் சரியாகும். மருதாணி தூளுடன் தேயிலைத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

    உருளைக்கிழங்கைக் காய வைத்து தூளாக்கிப் பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.
    தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று அழகாகும். வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

    மார்பகப் புற்றுநோயும்....?

    மார்பகப் புற்றுநோயும், கருப்பை வாய் புற்றுநோயும் பெண்களை தாக்கும் நோய்களில் மிக முக்கியமானதாகும். உலக அளவில் மார்பக புற்றுநோய் 11.5 லட்சம் பெண்களுக்கு உள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 2.3 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மருத்துவ பரிசோதனை:குறைந்த வயதிலேயே பூப்படைவதும், குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருப்பதுமே பெண்களுக்கான மார்பக புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. 9-வயதுக்குள்ளே பெண்கள் பூப்படைப்டைவதற்கு முக்கிய காரணம் அதிகளவில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் தான். இந்த ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதன் காரணமாத்தான் புற்றுநோய் செல்கள் தோன்றுகிறது.

    குறைந்து வயதில் பூப்படையும் பெண்கள் 20-வயதுக்கு மேல் குழந்தைகள் பெற்ற பின் கண்டிப்பாக மருத்துவபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்து கொண்டால் அவர்களுக்கு புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்று முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். அப்போது அவர்களது மார்பகங்களில் ஏதாவது கட்டி தென்பட்டால் அவற்றை கண்டுபிடித்து உடனடியாக அகற்றி அவர்களின் உயிரை காப்பாற்றி விடலாம். இல்லை என்றால் நோய் முற்றி மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இருக்கும் வரை நோயின்றி வாழ சோதனைகள் எடுத்துக்கொள்வது அவசியம்.

    தாய்ப்பாலின் அவசியம்: இதே போல் 50 அல்லது 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது நிற்காவிட்டாலும் புற்றுநோய் ஏற்படும். மாதவிடாய் ஏற்படுவதற்கு ஈஸ்ட்ரோஜன் முக்கிய காரணம். இது அதிக அளவில் சுரந்தால் தான் புற்றுநோய் உண்டாகும். எனவே இது போல் உள்ள பெண்களும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.

    இதே போல் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு காலை, மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பால் கொடுக்கின்றனர். இது போல் பால் கொடுக்கும் பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும். எனவே குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளும் நன்றாக இருக்கும். தாய்மார்களும் புற்றுநோய் வராமல் தப்பித்து கொள்ளலாம்.

    ஆண்களுக்கும் வரும்; மார்பகப்புற்றுநோய் பெண்களைத்தான் அதிகம் தாக்குவதாக கண்டறியப்பட்டது. ஆனால் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே புகை பிடித்தல் காரணமாகவே ஆண்களுக்கு 15 சதவீதம் மார்பக புற்றுநோய் ஏற்படும் நிலை இருக்கிறது. மேலும் மரபு வழியிலும் மார்பக புற்றுநோய் 15 சதவீதம் வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஜீன்கள் பி.ஆர்.சி. ஏ-1. பி.ஆர்.சி. ஏ-2 என்று அழைக்கப்படுகிறது. ஒரு வீட்டில் ஏற்கனவே புற்றுநோய் யாருக்காவது இருந்தால் அவர்கள் மேமோகிராபி சோதனை செய்து கொண்டு நோயை தடுக்கலாம்.

    மரபு வழி நோய்: மரபு வழியில் வரும் இந்த புற்றுநோயையும் சரியான நேரத்தில் வந்தால் நாம் சரிசெய்து கொள்ளலாம். மேலும் பெண்கள் தங்களது மார்பகங்களில் ஏதேனும் கட்டி தென்பட்டாலோ அல்லது, நீர், ரத்தம், சீழ் முதலியவை வடிந்து வந்தாலோ, இயல்பு நிலையில் இருந்து மாறி இருந்தாலோ, இரு மார்பகங்களில் ஒன்று பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் இருந்தாலோ, தடித்து இருந்தாலோ உடனடியாக டாக்ரை அணுகி தேவையான சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

    மேமோ கிராபி சோதனையின் மூலம் பொதுவாகவே நம் கைகளுக்கு தட்டுப்படாத தடிப்புகள், சிறுகட்டிகள் கூட இந்த மேமோ கிராபியில் மிக துல்லியமாக தெரிந்து விடும். எனவே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்து கொண்டால் மார்பக புற்றுநோயை மிக ஆரம்ப கட்டத்திலேயே கண்டு பிடிக்க முடியும். அதனால் அவர்கள் நவீன சிகிச்சை முறைகளால் மற்ற பெண்களை போல இயல்பான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் பெற முடியும்.

    சூரிய ஒளி சிகிச்சை ; தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி உடல் மேல் பட்டால் மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: சூரிய ஒளி உடல் மேல் படும் போது வைட்டமின் டி உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை ஒருவித ஹோர்மோனாக மாற்றும் திறன் பெற்றவை. இந்த ஹோர்மோன் தான் மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம், நடுத்தர மற்றும் வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி உடல் மேல் படும் படி பார்த்துக் கொண்டால் மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபடலாம். ஆண்களை பொறுத்தவரை வைட்டமின் டி மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.

    உயிரிழப்பு குறைவு: இந்தியாவை காட்டிலும் அமெரிக்காவில் அதிகளவில் நோய் தாக்கப்பட்டு இருந்தாலும், அங்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் மட்டுமே மரணம் அடைகிறார்கள். இதற்கு காரணம் மார்பகப் புற்றுநோய் பற்றி அமெரிக்க பெண்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சிதான். அங்குள்ள மக்கள் உடலில் ஏதாவது ஒரு மாற்றம் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் நோய் இருப்பது முதலிலேயே கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொண்டு நோயை குணப்படுத்துகின்றர். சிலர் மார்பகங்களை அகற்றவும் ஆபரேசன் செய்து கொள்கிறார்கள். இதனால் அங்கு இறப்பு சதவீதம் குறைகிறது.

    தேவை விழிப்புணர்வு:இந்தியாவில் முறையாக நோயாளிகள் பதிவு செய்வதில்லை. இதனால் யாருக்கு என்ன நோய் இருக்கிறது என்று கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் இங்குள்ள பெண்கள் நோய் முற்றி ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற நேரத்தில் தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருத்துவஆலோசனைகள், சிகிச்சை முறைகள் குறித்து தெரிவித்தாலும், அவர்கள் மருத்துவர்கள் சொல்வதை கேட்காமல் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு, சிகிச்சை பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இதுவே இந்தியாவில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம்.

    சகோதரிகள் ராக்கி கட்டும் ரக்ஷாபந்தன் விழா!

    உடன் பிறவாவிட்டாலும், சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி கட்டும் ரக்ஷாபந்தன் விழாவை இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டு இந்தியர்களிடையேயும் சகோதர அன்பை பகிர்ந்துக் கொள்ள அன்பின் பிணைப்பாக கட்டப்படுவது, ராக்கி. ராக்கி கயிறுகளை ஆண்களின் கைகளில் பெண்கள் கட்டுவார்கள். இதன் மூலம் அந்த ஆண், ராக்கி கட்டிய பெண்ணுக்கு சகோதரன் முறையாகிவிடுகிறான்.
    வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா, தமிழகத்திலும் சமீபக்காலமாக பிரபலமடைந்து வருகிறது. ஆவணி மாத துவக்கத்தில் வரும் பவுர்ணமி அன்று இது கொண்டாடப்படுகிறது.

    ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, மகாபலியின் தீவிர பக்தியில் அகம் குளிர்ந்த விஷ்ணு, என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு மகாபலி, தனது நாட்டை விஷ்ணு தான் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தான். அதையேற்றுக் கொண்ட விஷ்ணு, வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.

    கணவனை காணாத லட்சுமி, மகாபலியின் நாட்டிற்கு வந்தார். அங்கு காவலனாக இருந்த கணவனை காப்பாற்ற லட்சுமி ஏழை பெண்ணாக உருமாறினார். பின்னர் மகாபலியிடம் சென்று ஒரு கயிறை கட்டிவிட்டு, தனது நிலையை கூறியுள்ளார். இதில் மகிழ்ச்சியடைந்த மகாபலி, விஷ்ணுவை அனுப்பி வைத்தான். இந்த கயிறே பின்னாளில் ராக்கி கயிறாக மாறியதாக கூறப்படுகிறது.

    ராக்கி கட்டும் போது, சகோதரரின் சுக வாழ்விற்காக சகோதரிகள் சாமியை வேண்டுகின்றனர். அதன்பின், சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டுகின்றனர். கயிறு கட்டும் போது, சகோதரிகளுக்கு அன்பின் காணிக்கையாக பணம், நகை, பரிசுப் பொருட்களை சகோதர்கள் அளிக்கின்றனர். ஜாதி,மாத, இன, மொழி என எல்லாவற்றை கடந்து, ராக்கி காட்டும் பழக்கம் சகோதர அன்பை தெரிவிப்பதன் ஒரு முக்கிய வெளிப்பாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்ரெஸ் 2 பி.... புதிய கறுப்பு கிரகம் கண்டுபிடிப்பு!

    விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ட்ரெஸ் 2 பி என்று இந்தக் கிரகத்துக்கு பெயரும் சூட்டியுள்ளனர். விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. அதற்கு 'ட்ரெஸ்-2 பி' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்னர்.

    இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. இதுவரை கண்டுபிடித்துளள கிரகங்களிலேயே மிகவும கறுப்பான கிரகம் என்றால் அது இந்த ட்ரெஸ் 2 பி-தான். சூரிய ஒளியில் 1 சதவீதத்தை மட்டுமே இந்த கிரகம் பிரதிபலிக்கிறது. இதனால் நிலக்கரியை விட கறுப்பாக இந்தக் கிரகம் காட்சி தருகிறது.

    இதன் மேற்பரப்பில் பல வாயுக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் இந்த கிரகம் கடும் வெப்பமாக உள்ளது. இங்கு 1800 டிகிரி பாரன்கீட் வெப்பம் நிலவுகிறது. அதிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது. ட்ரெஸ்- 2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த புதிய கிரகம் 750 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது (ஒரு ஒளி ஆண்டு என்பது 6 ட்ரில்லியன் மைல் தூரம் கொண்டது!)

    ஆட்டம் காணும் பொருளாதார நிலை:உலக வங்கி தலைவர்!

    உலக பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கால், பல ஆபத்தான கட்டங்களை எதிர்நோக்கும் அபாயம் இருக்கிறது," என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஸோயலிக் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ரேட்டிங்கை, கடந்த வாரம் ஸ்டான்டர்டு அன்ட் புவர் நிறுவனம் குறைத்து அறிவி்த்தது. இதன் எதிரொலியால் சர்வதேச பங்கு சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. போதாக்குறைக்கு ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார நிலையிலும் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால், அடுத்த பொருளாதார சரிவை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.

    இந்த நிலையில், உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஸோயலிக் ஆஸ்திரேலியாவின் பிரபல செய்தித்தாள் வீக்ண்டுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:"தற்போது நாம் புதிய பொருளாதார சரிவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். ஆனால், இது கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவு போன்று இருக்காது.

    கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. ஆனால், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளன.வளர்ந்த நாடுகள் பொருளாதார கொள்கைகளை சீர்படுத்தினால், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப முடியும்," என்று கூறினார்.

    ரூ 25 கோடி நில அபகரிப்பு புகார்...கைதானார் லாட்டரி மார்ட்டின்!

    ரூ 25 கோடி நில அபகரிப்பு புகாரில் பிரபல லாட்டரி அதிபரும் சினிமா பட தயாரிப்பாளருமான மார்ட்டின் கைது செய்யப்பட்டார்.கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் கருணாநிதி கதை வசனம் எழுதிய இளைஞன், பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

    இவர் மீது ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த எம்.அங்குராஜ் என்பவர் பூந்தமல்லி நசரத்பேட்டை போலீசில் நில அபகரிப்பு புகார் கொடுத்தார். அதில், "கடந்த 2005-ம் ஆண்டு மார்ட்டின் என்னை சந்தித்து நசரத்பேட்டை அருகில் உள்ள எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை விலைக்கு கேட்டார். நான் விற்க மறுத்து விட்டேன்.

    அதன் பிறகு அவர் எனது மாமாவை அணுகி அவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்துக் கொண்டார். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 25 கோடியாகும். இதுபற்றி நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.

    அதன் பேரில் நசரத் பேட்டை போலீசார் மார்ட்டின் அவரது உறவினர் பெஞ்சமின் உள்பட 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு நில அபகரிப்பு தனிப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மார்ட்டின் உள்பட 7 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அவர்கள் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

    அதன்படி மார்ட்டின், பெஞ்சமின் உள்பட 6 பேர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவு போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்து போட்டனர். அப்போது நில அபகரிப்பு புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். மார்ட்டினிடம் 5 போலீஸ் அதிகாரிகள் தனி விசாரணை மேற்கொண்டனர்.

    கைது: விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், மேலும் மேலும் நிலமோசடி புகார்கள் வருவதாலும் அவர் கைது செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    பின்னர் சேலம் புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் சேலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மு.க.அழகிரி மனைவி காந்திக்கு மதுரையில் கோவில் நிலத்தை குறைந்த விலைக்கு மார்ட்டின் விற்றதாகவும் மார்ட்டின் மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உயிரைப் பற்றி கவலையில்லை... திட்டமிட்டபடி உண்ணாவிரதம்! - ஹஸாரே!

    மத்திய அரசின் லோக்பால் மசோதாவுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்துக்கு 3 நாட்கள் மட்டுமே டெல்லி போலீஸ் அனுமதி அளித்துள்ளதால் கடுப்பிலிருக்கும் ஹஸாரே, 'என் உயிரைப் பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் தொடங்கும். காலவரையின்றி நடக்கும்," என்று அறிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள லோக்பால் மசோதாவுக்கு பிரதமர், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரம் இல்லை. எனவே அதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று அன்னா ஹஸாரே அறிவித்துள்ளார். வருகிற 16-ந்தேதி டெல்லியில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தை தொடங்குகிறார்.

    ஆரம்பத்தில் டெல்லி போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் டெல்லி பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்துக்கு அருகில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தனக்கு திருப்திகரமாக உள்ளது என்று ஹஸாரே கூறியிருந்தார். அமைதியாக உண்ணாவிரதம் நடத்துவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில், ஹஸாரேவின் போராட்டம் அநீதியானது என மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார்.

    3 நாட்கள் மட்டும்...இதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு 3 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதன்படி, அன்னா ஹஸாரேவும் அவரது ஆதரவாளர்களும் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மட்டுமே உண்ணாவிரதம் இருக்க முடியும். அதற்கு மேல் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    தனது கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க ஹசாரே முடிவு செய்து இருந்தார். ஆனால் 3 நாட்கள் மட்டுமே போராட்டத்துக்கு அனுமதி என்று டெல்லி போலீசார் அறிவித்து இருப்பதால் ஹசாரேவும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அரசுடன் பேச்சுவார்த்தை: இதைத் தொடர்ந்து அரசுடன் பேச்சு நடத்த அன்னா ஹஸாரேவின் பிரதிநிதி நீரஜ்குமார் இரு முறை சென்று வந்துள்ளார்.

    ஆனாலும் திருப்திகரமான முடிவு எட்டப்படவில்லை. எனவே உண்ணாவிரதத்துக்கு அனுமதி உண்டா இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள். என் உயிரைப்பற்றி கவலையில்லை. தடையை மீறி உண்ணாவிரதமிருப்பேன், என்று ஹஸாரே அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

    'நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு' - ஒபாமா!

    அமெரிக்காவின் கடன் ரேட்டிங் குறைந்ததற்கு காரணம் எதிர்க்கட்சிதான். இதன் மூலம் நமக்கு நாமே சூடு போட்டுக் கொண்டோம் என்று பாரக் ஒபாமா கூறினார்.

    இப்போதுதான் பதவி ஏற்றதுபோல உள்ளது. ஆனால் அதற்குள் அடுத்த தேர்தலைச் சந்திக்கிறார் பாரக் ஒபாமா. 2012-ம் ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கும் ஒபாமா அதற்கான பிரசாரத்தில் இறங்கிவிட்டார்.

    மிச்சிகன் நகரில் ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் நேற்று அவர் பேசினார்.

    அவர் கூறுகையில், "கடன்களை திருப்பி செலுத்த அமெரிக்காவுக்கு உள்ள திறனுக்கான மதிப்பீட்டை, தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஒரு புள்ளி குறைத்து விட்டது. 'ஏஏஏ' என்ற தர மதிப்பீட்டில் இருந்து 'ஏஏ பிளஸ்' என்ற மதிப்பீட்டை கொடுத்துள்ளது. இது நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு ஆகும்.

    அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சிக்கு ஆதாயம் தேடுவதற்காக நாட்டின் நலனை பலிகொடுத்து விட்டார்கள். கடனுக்கான உச்சவரம்பை உயர்த்துவதற்கு குடியரசு கட்சியினர் தொடக்கத்தில் மறுத்து விட்டனர். இதன்மூலம் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அவர்கள் நாசப்படுத்தி விட்டார்கள். இவர்களுக்கு நாட்டின் வெற்றியை விட எதிரிகளின் தோல்வி தான் முக்கியம். இந்த போக்கை அவர்கள் கைவிட வேண்டும்.

    பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். வேலை இல்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இதை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். தொழில் வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுப்பேன். தர சான்றிதழ் வழங்கும் கம்பெனிகளின் நம்பிக்கையை பெறுவதில் வெற்றி பெறுவேன்.

    தீர்க்க முடியாத பிரச்சினையே இல்லை: வாரா வாரம் புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவேன். அந்த திட்டங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாண்பேன். இதன்மூலம் அதிகம் பேருக்கு வேலை கொடுப்பேன்.

    இப்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகள் எதுவும் தீர்க்க முடியாதது அல்ல. அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பொருளாதார பலம் இன்னும் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து வைத்து இருக்கிறார்கள்,'' என்றார்.

    இதே நாள்...

  • சர்வதேச இடது கையாளர்கள் தினம்
  •  மத்திய ஆப்பிரிக்க குடியரசின் விடுதலை தினம்(1960)
  •  ஹரி பிறியர்லி, துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார்(1913)
  •  பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது(1954)
  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...