திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி,மு,க.,
வேட்பாளர் நேரு, டெபாசிட் இழக்கும்வகையில் ஓட்டளித்து மக்கள்
அ.தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவளிக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர்
ஜெயலலிதா, பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு ஓட்டு கேட்டு
வந்தேன். அப்போது, உங்களின் அமோக ஆதரவோடு வெற்றி பெற்று முதல்வரானேன்.
இங்கு அப்போது போட்டியிட்ட மரியம்பிச்சையையும் வெற்றி பெறச்செய்தீர்கள்.
அவரும் அமைச்சராக பொறுப்பேற்ற பின், துரதிஷ்டவசமாக விபத்தில் மரணமடைந்தார்.
ஆகையால், நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் பரஞ்ஜோதிக்காக ஓட்டு
கேட்டு உங்களிடம் வந்துள்ளேன். பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம்
திட்டம், மீனவர்களுக்கு உதவித்தொகை உயர்வு, இல்லத்தரசிகளுக்கு மிக்சி,
கிரைண்டர், பேன் ஆகியவையும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்-டாப் என,
பல்வேறு நலத்திட்டங்களை ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கே மாதத்தில் செயல்படுத்தி
வருகிறோம். அவற்றின் பயனை வாக்காளர்கள் அடைந்துள்ளனர். உங்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்துவதே எங்களின் லட்சியம்.முந்தைய மைனாரிட்டி தி.மு.க.,
ஆட்சியில், தமிழகமே சூறையாடப்பட்டது. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருந்தது.
ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக
மாற்றியுள்ளேன். மின்வெட்டு படிப்படியாக குறைந்து வருகிறது. அடுத்த
ஆண்டுக்குள், மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் வரும்.இடைத்தேர்தலில்
தி.மு.க.,வுக்காக முன்னாள் அமைச்சர் நேரு போட்டியிடுகிறார். அவர் பெயருக்கு
பொருத்தமில்லாதவர். நேர்மாறாக செயல்படக்கூடியவர் என்பதை நான் சொல்லி தெரிய
வேண்டியதில்லை. பினாமிகள் பெயரில் ஆயிரக்கணக்கில் நிலங்களை வாங்கிக்
குவித்துள்ளார். இவ்விஷயத்தில், தன்னுடைய தலைவர் கருணாநிதி வழியையே நேரு
பின்பற்றியுள்ளார்.
"சென்னையில் உள்ள நான்கரை ஏக்கர் தி.மு.க., தலைமை அலுவலகம் இடம் எப்படி
வந்தது?' என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த இடம், தண்டையார்
பேட்டை ஜமீனுக்கு சொந்தமானது. அந்த இடத்தை, 1972ல் சொத்து வரி கட்ட
தி.மு.க., அரசு நிர்பந்தித்தது. நில உச்சவரம்பு சட்டத்தை காட்டியும்
மிரட்டியது.அப்போது, ஜமீனின் இளைய மகன் சுப்புரத்தினம் நாயுடு சென்னை
வரவழைக்கப்பட்டு, அந்த இடத்தை தி.மு.க.,வுக்கு கொடுத்து விடுமாறு
மிரட்டப்பட்டார். இல்லாவிட்டால் நில உச்சவரம்பு சட்டம் பாயும் என்று
மிரட்டினர். இதையடுத்து, சுப்புரத்தினம் அந்த இடத்தை தி.மு.க.,
அறக்கட்டளைக்கு கடந்த 1972ல் எழுதிக் கொடுத்தார்.அதன்பின், நில உச்ச வரம்பு
சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அந்த சொத்துக்கு
உரிமையாளரான, 10 பேரில் ஒருவர் மட்டுமே அந்த பத்திரத்தில்
கையெழுத்திட்டுள்ளார். கடைசியில் சுப்புரத்தினத்துக்கு கூட அந்த இடத்தில்
உரிமையில்லை. இதை நான் சொல்லவில்லை. சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது. அதே
வழியில், திருச்சியில் நில அபகரிப்பு நடந்து, தி.மு.க., அலுவலகம்
கட்டப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின், நில அபகரிப்பு
தடுப்புப்பிரிவு அமைக்கப்பட்டது. நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க, 25
சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
இதுவரை தமிழகம் முழுவதும், 17 ஆயிரத்து 431 புகார்கள் வந்துள்ளது. அதன்
பேரில், 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 28 வழக்குகளில் இதுவரை
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 755 பேர் கைது செய்யப்பட்டு,
624 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பர்.தமிழகம்
சுபிட்சமான பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது. வேட்பாளர் பரஞ்ஜோதி,
உங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றித் தருவார். ஆட்சிப் பொறுப்பேற்ற
நான்கு மாதங்களில் நாடே போற்றி புகழும் திட்டங்களை செயல்படுத்தியதை
கருத்தில் கொண்டு, நேருவின் அராஜக, அட்டூழியங்களுக்கு முடிவு கட்டவேண்டும்.
நேருவை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும்.அதேபோல், தமிழகத்தின் உள்ளாட்சித்
தேர்தலும், வரும் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின்
மூலம் அடிப்படை வசதிகளை பெற அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆரின்
இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க கேட்டுக் கொள்கிறேன்.திருச்சி மாநகராட்சி
மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஜெயா மற்றும் கவுன்சிலர் பதவிக்கு
போட்டியிடும் வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.இவ்வாறு
முதல்வர் ஜெயலலிதா பேசினார்.