|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 November, 2011

'செக்ஸ்' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!


பாதுகாப்பான தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக இதயநோய், ரத்த அழுத்தம் தொடர்புடைய நோய்கள் குணம்மடைகின்றன என்று தெரியவந்துள்ளது. நியூ இங்கிலாந்து ரிசர்ச் இன்ஸ்டிடியூடினை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி வாரத்திற்கு இரண்டு முறை உறவில் ஈடுபடுபவர்களுக்கு இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்று கண்டறிந்துள்ளனர். ஆண்களை விட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு அமெரிக்காவில் வெளியாகும் இதயநோய் குறித்த மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

எரிக்கப்படும் கலோரி உறவிற்கு முந்தைய முன் விளையாட்டுக்களினாலும், உறவின் போது ஏற்படும் உச்சக்கட்டத்தின் போதும் 200 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம், இது நடை பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரிக்கு சமமாகும். உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட கலவி குறைக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இளைமைக்கு மருந்து உறவின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அதிக கலோரிகளை உறவானது கரைக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பான உறவில் ஈடுபட்டவர்களை பரிசோதனை செய்தபோது அவர்களின் உடலில் ரத்த அழுத்தம் 120/80 சராசரி நிலையில் காணப்பட்டது. கெட்ட கொழுப்புச்சத்தை விட நல்ல கொழுப்பு சத்தின் சதவிகிதம் அதிகரித்திருந்தது. இதயதுடிப்பு சராசரியாக விநாடிக்கு 60 லிருந்து 100 அளவாக இருந்து. சுவாசத்தின் அளவு, உள்ளிட்ட மனித உடலின் இயக்கம் சராசரி அளவினை கொண்டிருந்தது.

கலவியானது உடலை உறுதியாக்கி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று சிலிர்ப்பூட்டும் அறிக்கையை வெளியிட்டதன் மூலம் தம்பதியர்களை உற்சாகமூட்டியிருக்கிறது அந்த மருத்துவ இதழ். இருப்பினும் இது முறையான கலவியை மேற்கொள்பவர்களுக்கே கை கொடுக்கும். மாறாக, இயற்கைக்குப் புறம்பாக, பலருடன் உறவு கொள்வோருக்கு, பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்வோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி வராது, மாறாக பல்வேறு நோய்கள்தான் வந்து சேரும். எனவே கலவியில் கவனம்!.

2010ல் ம.பி.யில் 1.08 லட்சம் பச்சிளம் குழந்தைகள் பட்டினிச் சாவு!

 கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மத்திய பிரதேசத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் பட்டினியால் இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் 23,000 குழந்தைகள் தான் இறந்துள்ளனர் என்கிறது மாநில அரசு. இன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்ட நேரத்தில் குழந்தைகளைப் பற்றிய சில அதிர்ச்சகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2005-2009ல் நாள் ஒன்றுக்கு 83 குழந்தைகள் இறந்துள்ளன. 2009ல் மொத்த குழந்தைகளில் 60 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1000 குழந்தைகளில் 70 குழந்தைகள் 1 வயதை அடைவதற்கு முன்பு இறந்துள்ளன.  மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பழங்குடியின குழந்தைகள் பலர் பசிக்கு பலியாகின்றனர். ஒரு புறம் தானியங்கள் அரசுக் கிடங்குகளில் மக்கிப் போக, மறுபுறம் ஏழைக் குழந்தைகள் உண்ண உணவின்றி பசியால் இறக்கின்றனர்.ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சஹாரியா பழங்குடியின மக்களின் குழந்தைகள் பலர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பட்டினியால் வாடி இறந்து கொண்டிருக்கையில் மாநில அரசு இது குறித்து பாராமுகமாகவே இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மத்திய பிரதேசத்தில் மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர். ஆனால் 23,000 குழந்தைகள் தான் இறந்துள்ளனர் என்கிறது மாநில அரசு.

அதி வேகமாக அதிகரித்து வரும் சர்க்கரை வியாதி!


உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. அதன் கோரப் பிடியில் சிக்கி கோடிக்கணக்கான இந்தியர்கள் தவித்து வரும் நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலும் நீரிழிவு நோய் அதி வேகமாக பரவி வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். முன்பெல்லாம் 30 வயதுக்கு மேற்பட்டோரைத்தான் நீரிழிவு நோய் பீடிக்கும். ஆனால் இன்று குழந்தை முதல் எந்த வயதினரையும் அது விடுவதில்லை. சென்னையைப் பொறுத்தவரை அதிக அளவில், அதி வேகமாக நீரிழிவு நோய் பரவி வருவதாக பிரபல நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் மோகன் எச்சரிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னையில் மிக வேகமாக சர்க்கரை வியாதி பரவி வருகிறது. இது கவலை தருவதாக உள்ளது. எங்களது மையத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஐந்து மடங்கு அதிக அளவிலான நோயாளிகள் வரத் தொடங்கியுள்ளனர். இது நிச்சயம் கவலைக்குரிய ஒன்று. டைப் 2 எனப்படும் நீரிழிவு நோய்தான் தற்போது 30 வயதுக்கு உட்பட்டவர்களை பெருமளவில் தாக்குகிறது. முன்பெல்லாம் இதற்கான வாய்ப்பே இல்லாத நிலைதான் இருந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக 30 வயதுக்குட்பட்டவர்களை பெருமளவில் இந்த டைப் 2 நீரிழிவு தாக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மக்களின் வாழ்க்கை முறை மாறிப் போயிருப்பது, உணவுப் பழக்க வழக்கம், உடல் பருமன் ஆகியவையே காரணம்.

குறிப்பாக குழந்தைகளிடம் காணப்படும் நொறுக்குத் தீணி உண்ணும் பழக்கம், உடல் பருமன், சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு அவர்கள் டிவி, வீடியோ கேம்ஸ் உள்ளிட்டவற்றுக்கு அடிமையாகிப் போயிருப்பது என பல காரணங்களால் டைப் 2 நீரிழிவுக்கு அவர்கள் ஆட்படுகிறார்கள். சிறார்கள் மத்தியில் நீரிழிவுநோய் அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரிய ஒன்று. நாம் விரைவாகவும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். முன்பு அச்சப்பட்டதை விட தற்போது அதிக அளவிலான சிறார் நீரிழிவு நோயாளிகள் நாட்டில் உள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

இந்தியாவில் டைப் 1 நீரிழிவு கொண்ட சிறார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேலாக இருக்கும் என்று தகவல் கூறுகிறது என்றார் அவர். உலக அளவில் ஆண்டுதோறும் நீரிழிவால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும் 12 முதல் 14 வயதுடையவர்களின் எண்ணிக்கை 27,000 என்று கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 12,000 பேர் உள்ளனர் என்பது அதிர்ச்சித் தகவலாக உள்ளது. தமிழகத்தில் இன்சுலின் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியாத நிலையை நோக்கி பெருமளவிலான சிறார்கள் போய்க் கொண்டுள்ளனர் என்கிறார் மோகன்.

மேலும் பிறந்து 6 மாதத்தைக் கூட தாண்டாத நிலையில் பல குழந்தைகளையும் சர்க்கரை வியாதி பீடிக்கிறதாம். இப்படிப்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 பேர் வரை தங்களது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதாக டாக்டர் மோகன் கூறுகிறார். அமெரிக்கா மற்றும் சீனாவில் சிறார் நீரிழிவு நோயைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது. அதேபோல இந்தியாவிலும் செய்ய வேண்டியது அவசியம் என்பது டாக்டர் மோகனின் கருத்தாகும். 
மத்திய அரசும், மாநில அரசுகளும் விரைந்து செயல்பட்டு சிறார்களிடையே அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டாவிட்டால் நீரிழிவின் தாக்கம் அபாயகரமான அளவைத் தாண்டி விடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

8 ஆண்டுகளில் 20,000 இளம்பெண்கள் கடத்தி, விற்பனை!


கடந்த 8 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்நத பழங்குடியினப் பெண்கள் 20,000 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் எம்.பியுமான அஜித் ஜோகி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடியினப் பெண்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 20,000 பழங்குடியினப் பெண்கள் கடத்தப்பட்டு டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய பெருநகரங்களில் விற்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, அந்த பெண்கள் ஜஷ்பூர், சர்குஜா மற்றும் ராய்கர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள் கடத்தப்பட்டார்கள். பெண்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவிக்கு வந்ததில் இருந்தே பாஜக அரசு இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதனால் தான் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆள் கடத்தல் அதிகரித்துள்ளது என்றார். சத்தீஸ்கரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சர்குஜா, கோர்பா, ஜஷ்பூர், கொய்ரா மற்றும் ராய்கர் மாவட்டங்கள் ஆள்கடத்தலுக்கு பெயர் போனவை. அந்த பகுதிகளில் வாழும் ஏழைப் பெண்களை வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பெரிய நகரங்களில் விபச்சாரத்தில் தள்ளிவிடுகின்றனர். கடந்த 10ம் தேதி ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் 14 பெண்கள் உள்பட 20 பேரைக் கடத்தியுள்ளார்.

குளறுபடியால் யுபி குழுமம் ரூ 21800 கோடியை இழந்துள்ளது!


கிங்ஃபிஷர் விமான நிறுவன குளறுபடி காரணமாக விஜய் மல்லையாவின் யுபி குழுமம் ரூ 21800 கோடியை (4 பில்லியன் டாலர்கள்) இழந்துள்ளது. யுபி குழுமத்தைச் சேர்ந்த கிங்பிஷர், யுபி ஹோல்டிங்ஸ், யுனைடட் ப்ரூவரிஸ், யுனைடட் ஸ்பிரிட்ஸ், மங்களூர் கெமிகல்ஸ் மற்றும் பெர்டிலைஸர்ஸ் லிமிடட் மற்றும் யுபி எஞ்ஜினீயரிங் ஆகிய 6 நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சடசடவென சரிந்துவிட்டதால், இந்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளது மல்லையாவின் நிறுவனம்.

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விமான இயக்கு செயலவுகள் அதிகரித்துவிட்டதால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதைச் சரிகட்ட, கடன் அளவை உயர்த்தித் தருமாறு வங்கிகளைக் கேட்டுக் கொண்டது கிங்ஃபிஷர். ஆனால் வங்கிகள் இதற்கு மறுத்துவிட்ட நிலையில் அரசு உதவியை நாடியுள்ளது. ஆனால் அரசு உதவக் கூடாது என எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இந்த நிலையில் கிங்ஃபிஷரின் இந்த வீழ்ச்சி, விஜய் மல்லையாவின் மற்ற நிறுவனப் பங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த சில தினங்களாக யுபி குழுமத்தின் அனைத்து நிறுவனப் பங்குகள் விலையும் வீழ்ச்சியடைந்துவிட்டன. இதில் யுபி குழும பங்குகளை வைத்துள்ள புரமோட்டர்களுக்கு மட்டும் 50 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியர்களில் 5 கோடி பேருக்கு நீரிழிவு!


இந்தியாவில் சர்க்கரை நோயினால் தற்போது நான்கு முதல் 5 கோடி மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 1995 ஆம் ஆண்டு 20 லட்சம் பேராக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2007ம் ஆண்டு 4 கோடியாக உயர்ந்தது. 2025ம் ஆண்டில் 7 கோடியாக உயரும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சர்க்கரை நோய் பாதிப்பில் சீனா இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி (இன்று) நீரிழிவு விழிப்புணர்வு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. தற்போது உலக அளவில் 346 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030 ம் ஆண்டில் இது இருமடங்காகும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர் என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு.

நீரிழிவின் வகைகள்: ரத்தத்தில் குறிப்பிட்ட அளவை விட அதிக அளவு சர்க்கரை கலந்திருப்பது நீரிழிவு நோய் எனப்படுகிறது. கணையத்தில் உள்ள இன்சுலின் எனப்படும் சுரப்பியின் செயல்பாடு குறையும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. மேலும் மன அழுத்தம் காரணமாகவும், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் பருவத்தில் எற்படும் ஹார்மோன் சுரப்பு மாறுபாட்டால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே 30 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சர்க்கரை நோயை சமாளிக்கலாம்: எந்த நோய் என்றாலும் வந்த பின் அதற்கான மருந்துகளை உட்கொள்வதை விட வரும்முன் பாதுகாப்பதே சிறந்தது. சர்க்கரை நோயை மூன்று வழிகளில் கட்டுப்படுத்தலாம். முறையான உணவுக்கட்டுப்பாடு, சரியான உடற்பயிற்சி, சர்க்கரை நோய்க்கான மருந்துகளை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உணவுக்கட்டுப்பாடு: உடலின் எடையை பாதுகாப்பாக வைக்கவேண்டும். தினமும் காலையில் எழுந்த உடன் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அவசியம் மேற்கொள்ளவேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு இருப்பவர்கள் தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும். கொழுப்பு குறைவான, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள், பச்சை காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள், உண்ணவேண்டும் அவ்வப்போது எடையை கண்காணிக்க வேண்டும்.

பாதங்களை பாதுகாப்போம்: சர்க்கரை நோயாளிகளை எளிதில் பாதிப்பது பாதங்களும், கண்களும்தான். எனவே எங்கு சென்றாலும் செருப்பு அணியவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. பாதங்களில் சிறு புண் ஏற்பட்டால் கூட உடனடியாக கவனிக்க வேண்டும். நீண்டநேரம் ஈரமான இடத்தில் பாதங்களை வைத்திருக்கக் கூடாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பாதங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் குறித்த சரியான விழிப்புணர்வு இன்மையினாலேயே பெரும்பாலோனோர் அதிகம் பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவர்கள் தெரிவித்தள்ளனர். எனவே சர்க்கரை நோயின்றி ஆரோக்கியமாக வாழ உணவுக்கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

நான்கு நிமிடத்திற்கு ஒரு தற்கொலை!


ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை மூலம் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் என்றாவது ஒருநாள் மரணம் நிகழும். இயற்கையான நிகழவேண்டிய நிகழ்வினை எண்ணற்றோர் இயற்கைக்கு மாறாக சமூகத்தின் எற்பட்ட கோபத்தினால் தங்களின் இன்னுயிரை தாங்களாகவே மாய்த்துக்கொள்கின்றனர். இந்தியாவில் நாளொன்றுக்கு 368 பேர் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் கணக்கெடுப்பு. இதன்படி மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் தற்கொலை மூலம் மரண மடைந்துள்ளனர்.

தென்னிந்தியர்கள் அதிகம்; தற்கொலை செய்து கொள்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா கர்நாடகா மற்றும் மகராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்தான். பொருளாதார ரீதியில் முன்னணியில் உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள சென்னை, பெங்களூருவில்தான் தற்கொலைகள் அதிகம் பதிவாகியிருக்கின்றன.அதேபோல் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள திருப்பூரில் தற்கொலைகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. தற்கொலை செய்து கொண்டவர்களில் 41 சதவிகிதத்தினர் சுயதொழில் புரிந்தவர்கள். மாணவர்களின் தற்கொலை விகிதம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. ஐந்தாண்டுகளில் மட்டும் 26 சதவிகித மாணவர்கள் தற்கொலை மூலம் மரணமடைந்துள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை: இந்தியாவில் அரை மணிநேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். கடந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பாவில்தான் கடந்த 16 ஆண்டுகளில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள இடமாக பதிவாகியுள்ளது இவ்வாறு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மென்பொருள் விஞ்ஞானிகள் முதல் மாணவர்கள் வரை தற்கொலைக்கான காரணம் பலவாக உள்ளது.

ஆலோசனை அவசியம் ; பணிச்சூழலில் ஏற்படும் மன அழுத்தம், விவசாயத்தில் ஏற்படும் ஏமாற்றம். கல்வி நிலையங்களில் ஏற்படும் அழுத்தம் என பல சூழல்கள் தற்கொலைக்கான காரணங்களாக கூறப்படுகின்றன. பொதுவாக தன்னை சமூகத்தில் யாரும் மதிக்கவில்லை என்றோ, சமூக அநாதை என்ற எண்ணம் தோன்றும் போதோ தற்கொலை எண்ணம் உருவாவதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவயதில் இருந்தே வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை பெற்றோர்கள் கற்றுத்தரவேண்டும். கல்வி நிறுவனங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் ஆலோசனை மையங்களை மனிதவளப் பிரிவுகளில் உருவாக்க வேண்டும் என்றும் உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அணுமின் நிலையத்தில் மத்திய குழு 3 நாட்கள் ஆய்வு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 நாட்களுக்கு மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர். அணுமின் நிலையம் தொடர்பாக மக்களின் அச்சத்தைப் போக்க நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையில் சென்னை அடையார் புற்று நோய் சிகிச்சை மையத்தின் தலைவர் சாந்தா, வியன்னாவில் உள்ள சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கதிரியிக்க பாதுகாப்பு பிரிவின் ஓய்வு பெற்ற இயக்குனர் அய்யர், மும்பை டாடா நினைவு மருத்துவமனை டாக்டர் பரமேஷ், மங்களூர் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் மத்யஸ்தா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் துறை இயக்குனர் சுகுமாறன், மும்பை மீன்வள கல்வி மையத்தின் பேராசிரியர் பாய், ஹைதராபாத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஹர்ஸ் கே குப்தா உள்ளிட்ட 15 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்தது. அந்த குழுவினரில் 10 பேர் கடந்த 8ம் தேதி நெல்லை வந்தனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய குழுவும், மாநில குழுவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடந்தின. பின்னர் மத்திய குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மணி நேரம் முதற்கட்ட ஆய்வு பணியை மேற்கொண்டது. மக்களின் சந்தேகங்களுக்கு மத்திய குழுவினர் அளிக்கும் பதில்களை தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். 2ம் கட்டமாக நாளை முதல் 3 நாட்கள் இக்குழுவினர் அணுமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். வரும் 17ம் தேதி ஆய்வு நிறைவடைகிறது. அதன் பிறகு போராட்டக் குழுவினர் மற்றும் மக்கள் கேட்ட 50 கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார்கள் என்று தெரிகிறது.

கிங்பிஷர் கேலண்டர் என்ன ஆகும்?


நஷ்டம் ஏற்படுத்தும் ரூட்களில் மத்திய அரசு விமானங்களை இயக்கச் சொல்வதாலும், விமான எரிபொருள் விலை உயர்வாலும், எரிபொருளுக்கு மாநில அரசுகள் விதிக்கும் கடும் வரிகளாலும் தனது நிறுவனம் கடும் நிதித் தட்டுப்பாட்டில் சிக்கிவிட்டதாகக் கூறிவரும் கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா தொடர்ந்து பல விமான சேவைகளை ரத்து செய்து வருகிறார்.

இதற்கிடையே தனது நிறுவனத்தை காப்பதற்காக, மத்திய அரசின் சில கொள்கைகளையே மாற்றச் சொல்லியும் வலியுறுத்தி வருகிறார். அதில் ஒன்று, விமானத்துறையில் வெளிநாட்டு விமான நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதிப்பது. இதுவரை இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று மல்லையா வைத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.

இந் நிலையில் நிறுவனத்தின் காலாண்டு செயல்பாடு குறித்து விவாதிக்க கிங்பிஷர் நிர்வாகத்தின் இயக்குனர் குழு இன்று மும்பையில் கூடி விவாதிக்கவுள்ளது. அதில், கிங்பிஷருக்கு மல்லையாவின் யு.பி மதுபான தயாரிப்பு நிறுவனம் தந்துள்ள கடன்களை பங்குகளாக மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. கிங்பிஷர் சுமார் 7,000 கோடி கடனில் மூழ்கியுள்ளது. இதில், யு.பி நிறுவனம் தந்த கடன், ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 13 வங்கிகள் தந்த கடனும் அடக்கம். இந் நிலையில் யு.பி. நிறுவனம் தந்த கடனை பங்குகளாக மாற்றிவிட்டால், கிங்பிஷரின் கடன் கொஞ்சம் குறையும்.

கிங்பிஷர் இயக்குனர்கள் குழு இன்று கூடி, பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து விவாதிக்கவுள்ளது என்றவுடனேயே மும்பை பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை 7 சதவீதம் அதிகரித்துவிட்டது (இது எப்டி இருக்கு!!!). கடந்த வெள்ளிக்கிழமை வரலாறு காணாத அளவுக்கு 18 சதவீதம் இந்த பங்குகள் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இன்று சிக்கல்கள் குறித்துப் பேசப் போகிறார்கள் என்றவுடனேயே அதன் விலையை 7 சதவீதம் அளவுக்கு ஏற்றிவிட்டுவிட்டனர் பங்குச் சந்தை யூக வியாபாரிகளும் முதலீட்டாளர்களும்.

இதற்கிடையே அடுத்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விமானங்களை வாங்க கிங்பிஷர் நிறுவனம் ஆர்டர் வேறு தந்துள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலையில் உள்ள இந்த நிறுவனம் இந்த விமானங்களை வாங்குமா என்பது சந்தேகமே. தனது யு.பி நிறுவனத்தை விரிவாக்கவும் ஐரோப்பாவில் மார்க்கூ லிக்கர் பிராண்ட்டை வாங்கவும் திட்டமிட்டுள்ள விஜய் மல்லையா, கிங்பிஷர் நிறுவனத்தில் மேலும் தனது சொந்த நிதியைப் போடத் தயாராக இல்லை. இதனால், வங்கிகளின் உதவியையும் மத்திய அரசின் உதவியையும் நாடி வருகிறார்.

கிங்பிஷர் நிறுவனத்தில் மல்லையாவின் துணை நிறுவனங்கள் 58.61% பங்குகளை வைத்துள்ளன. 13 வங்கிகள் 23.27% சதவீத பங்குகளை வைத்துள்ளன. ஆனால், கிங்பிஷரில் முதலீடு செய்த வங்கிகளின் அதிகாரிகள் இன்று கூடி விவாதித்தனர். அதில், நஷ்டத்திலிருந்து வெளியே வர கிங்பிஷர் உரிய திட்டங்களை வகுத்தாத வரை அதில் இனியும் முதலீடு செய்வதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் மும்பையில் உள்ள இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தை விற்கவும் மல்லையா முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

சிக்கல்கள் இவ்வளவு இருந்தாலும் ஒரு 'ரொம்ப முக்கியமான கவலையும்' சிலரை வாட்டி வருகிறது. வருடாவருடம் கிங்பிஷர் காலண்டருக்காக பல்வேறு நாட்டு மாடல்களை வைத்து, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில், கிட்டத்தட்ட முக்கால் நிர்வாண படங்களை எடுப்பார்கள். இந்த போட்டோ ஷூட் பற்றிய செய்திகள், வீடியோக்கள், படங்களை பரபரப்பாக பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடுவார்கள். படங்கள் தயாரானதும் அதை கிங்பிஷர் கேலண்டராக வெளியிடுவார்கள். இந்த கேலண்டருக்கு உலகம் முழுவதும் ஏராளமான விசிறிகள் உண்டு. ஜனவரி மாதம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் கிங்பிஷர், தனது கேலண்டர் தயாரிப்பை (குஜால் படங்களை எடுப்பதை) வழக்கம் போல் மேற்கொள்ளுமா அல்லது நிறுத்தி விடுமா என்ற கவலையை பலரும் தங்களது பிளாக், ட்விட்டர், பேஸ்புக் தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ 2- ம் பாகம் விரைவில்!

 12ம் நூற்றாண்டு சோழர் கால வரலாற்றை பின்னணியாக வைத்து செல்வராகவன் இயக்கிய படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இதன் ஷூட்டிங் சுமார் 2 வருடம் நடந்தது. இதன் 2ம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது. கடந்த 2 நாட்களாக அதை மெருகேற்றும் பணியில் ஈடுபட்டேன். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.  முதல்பாகம் வெளியானபோது இப்படம் பற்றி விமர்சனங்கள் எழுந்தன. அதில் இருந்த குறைகளை போக்கும்விதமாக 2ம் பாகத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார்.  முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் காட்சி முடியும்போதே 2ம் பாகத்துக்கான தொடக்கத்தை அறிவிக்கும்விதமாக முடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டக்ளஸ் தேவானந்தா வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம் !


சென்னையில் கடந்த 1984-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.   இவர் தேடப்படும் குற்றவாளி என சென்னை செசன்சு கோர்ட் அறிவித்துள்ளது. ஆகவே, இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு தமிழக போலீசாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக மக்கள் உரிமை கழகம் வழக்கு தொடர்ந்தது. நிலுவையில் இருந்து வருகிறது. சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அவருக்கு எதிரான வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு நீதிபதிகள் நாகப்பன், சுதந்திரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி சுதந்திரம், டக்ளஸ் தேவானந்தாவுக்காக வழக்கு ஒன்றில்தான் ஆஜராகி இருந்ததாகவும், ஆகவே, இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.  இதையடுத்து இந்த வழக்கு 4 வார காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும்.

காதலன் வீட்டை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தி திருமணம் செய்துகொண்ட பெண் தீக்குளித்து!


திருமணத்திற்கு மறுத்த காதலன் வீட்டை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தி, பிடிவாதமாக காதலனை மணந்த பெண், வரதட்சணைக் கொடுமையால் தீக்குளித்து பலியானார்.  கும்மிடிப்பூண்டி அடுத்த, துராபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜம் மகள் பிரமிளா, 21. ஆசிரியர் பயிற்சி படித்து முடித்தவர். இவருக்கும், தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ஜெயின், 24, என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.  இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, குடும்பத்தினருக்கு தெரியாமல், பிப்ரவரி மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டு, தனித்தனியே அவர்கள் வீட்டில் வசித்து வந்தனர்.

முறையாக திருமணம் செய்து சேர்ந்து வாழ பிரமிளா கட்டாயப்படுத்திய போது, வீட்டினர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடியாது என, காதலன் தெரிவித்திருக்கிறார்.  காதலனை கரம் பிடிக்க வேண்டும் என்ற முடிவோடு, ஜெயின் வீட்டின் முன், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து, ஊர் பெரியவர்கள் கேட்டுக் கொண்டதன்படி, இருவருக்கும் செப்டம்பர் மாதம் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் கணவன் வீட்டார், பிரமிளாவிடம், 50 சவரன் நகை, இரண்டரை லட்சம் பணம் ஆகியவற்றை வரதட்சணையாகக் கேட்டு கொடுமைப்படுத்தினர்.

இதில் மனமுடைந்த பிரமிளா, 9ம் தேதி மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை, சிகிச்சைக்கென சென்னை கே.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து, பிரமிளாவின் தந்தை ராமானுஜம் கொடுத்த புகாரின்படி, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி சில மாதங்களே ஆனதால், பொன்னேரி ஆர்.டி.ஓ., கந்தசாமி விசாரித்து வருகிறார்.

உண்மையான குழந்தைகள் தினம்!


உலகின் சிறப்புவாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்கால உலகை ஆளப்போகிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்களால் சுட்டப்படும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியும், பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேசமயம்,சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1954ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டது. கடந்த 1925ம் ஆண்டே, ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்தியாவின் முதல் பிரதமராகவும், சக்திவாய்ந்த அரசியல் தலைவராகவும் இருந்த நேரு, குழந்தைகளிடம் அளப்பரிய அன்பும், பிரியமும் கொண்டவர். அவரது சிறந்த புகைப்படங்களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.
உலகிலேயே, அதிகளவிலான குழந்தை மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை பரிதாபத்திலும், பரிதாபமாக உள்ளது. கோடிக்கணக்காக குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமான சகவிகித குழந்தைகள் "குழந்தை தொழிலாளர்களாக" உள்ளனர். அதிகளவிலான குழந்தைகள் நாள்தோறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம் பேர். மூன்று வேளை உணவுகூட கிடைக்காமலும், சரியான உடை கிடைக்காமலும், முறையான தங்குமிடம் இல்லாமலும் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், நம் நாட்டில் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் துன்பங்களுக்கு சரியான பதில் சொல்வதாக அமையுமா, வருடா வருடம் நடக்கும் குழந்தைகள் தின கொண்டாட்டங்கள்?
ஆள்வோர்களும், அதிகாரிகளும் குழந்தைகளின் நல்வாழ்வு தொடர்பாக விடைகாண வேண்டிய கேள்விகள் எவ்வளவோ உள்ளன! உலகளாவிய அமைப்பான ஐ.நா. சபை, குழந்தைகள் உரிமை மற்றும் நல்வாழ்வு தொடர்பாக பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. உலகின் ஏராளமான நாடுகள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் காகித அளவிலேயே, பேச்சளவிலேயே உள்ளன. குழந்தைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. உலகிலேயே எந்தவிதமான வன்முறைக்கும் எளிதாக இலக்காகிறவர்கள் குழந்தைகள்தான்.ஆப்ரிக்க நாடுகளின் குழந்தைகள் உட்பட, மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகள் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளார்கள். அந்த நாடுகளில் வருங்கால தலைமுறைகளே அழிந்து வருகின்றன.குழந்தைகள் சமூகத்தின் மீது செலுத்தப்படும் எந்தவொரு அநீதியும், எதிர்கால உலகின் மீது செலுத்தப்படும் அநீதியே ஆகும். எதிர்கால உலகை அது நிச்சயம் சீரழிக்கும்.
குழந்தைகள் தின கொண்டாட்டங்களில், குழந்தைகளுக்கு விதவிதமாக வேஷமிடுவதும், பல்வேறுவிதமான போட்டிகளை நடத்துவது மட்டுமே நமக்கு திருப்தியை தந்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மேம்படுத்துவதன் பொருட்டே, சிறப்பு விழாக்களும், நிகழ்ச்சிகளும் அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், நமது சமூகத்தில் அவை சம்பிரதாயங்களாக மாறிவிட்டன. அதுபோலத்தான் குழந்தைகள் தினமும் மாறிவிட்டது. நமது நாட்டின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, இந்த உலகின் குழந்தைகளுக்கே, என்று விமோச்சனமும், நல்வாழ்வும் கிடைக்கிறதோ, அன்றுதான் உலகெங்கிலும் உண்மையான குழந்தைகள் தினம்கொண்டாடப்படும்.

இதே நாள்...


  • பிரேசில் குடியரசு தினம்(1889)
  •  பாலஸ்தீன விடுதலை தினம்(1988)
  •  இந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது(2000)
  •  உலகின் முதல் மைக்ரோபுரோசசரான 4004 ஐ இன்டெல் நிறுவனம் வெளியிட்டது(1971)
  •  வெனின்சுலா ஐநாவில் இணைந்தது(1945)

சினிமாவில் தான் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்வில் நான் நடிக்காதவன்!


சினிமாவில் தான் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்வில் நான் நடிக்காதவன் என்று, பேராசிரியர்.ஞானசம்பந்தனின் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். பேராசிரியர் கு.ஞானசம்பந்தமின் "இலக்கியச் சாரல்", "ஜெயிக்கப்போவது நீதான்", "மேடைப் பயணங்கள்", "சந்தித்ததும் சிந்தித்ததும்", "சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்" ஆகிய 5 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது, நானும், ஞானசம்பந்தமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். மறைந்த எழுத்தாளர் சுஜாதா தான் ஞானசம்பந்தம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதில் இருந்து நண்பர்களாகிவிட்ட நாங்கள் அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் பேசுவோம். சந்திக்க முடியவில்லை என்றால் தொலைபேசியிலாவது தொடர்பு கொண்டு பேசுவோம். சொல்லப்போனால், நான் ஒரு வகையில் சுயநலவாதியும் கூட. எனக்கும் ஒரு சுயநலம் உண்டு. கற்றறிந்தவர்கள், ஞானம் உள்ளவர்களுடன் பேசிப் பழகி அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சுயநலம். நானும், ஞானசம்பந்தமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். அவரிடம் நான் பல அறிவுப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.


ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. மறைந்த நடிகர் வி.கே.ராமசாமி கையை ஆட்டாமலேயே அனைவரையும் சிரிக்கை வைப்பார். நாகேஷோ தன் பாடி லாங்குவேஜால் அனைவரையும் சிரிக்க வைப்பார். அதுபோல, ஞானசம்பந்தமுக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. அவர் ஒரு சிறந்த இலக்கியவாதி. அவருடைய நகைச்சுவை இயல்பாக இருக்கும். தான் அறிந்த விஷயங்களை, புலமையை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இயல்பான நகைச்சுவையில் தெரிவித்துவிடுவார். இந்த புத்தகங்களிலும் அந்த எளிமை உள்ளது. அதனால் இவை நிச்சயம் மக்களைச் சென்றடையும். நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் கைகளை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து நாடக மேதை டி.கே.எஸ்.சண்முகத்திடம் பல முறை கேட்டிருக்கிறேன். அது தெரிந்தால் நீ பெரிய நடிகனாகிவிடுவாய் என்று கூறிய அவர் எனக்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்துள்ளார். பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காததால் தான் நான் இன்னும் என்னை ஒரு மாணவனாகவே கருதி பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். பள்ளிப் படிப்பை முடித்திருந்தால் இந்த கற்கும் ஆர்வம் இருந்திருக்குமோ, இல்லையோ? ஆத்திகம், நாத்திகம் பேசுவர்களிடம் நான் பேசியிருக்கிறேன். அவ்வாறு பேசும்போது எனக்குத் தேவையான விஷயங்களை மட்டும் நான் எடுத்துக் கொள்வேன். நான் சினிமாவில் கடவுள் பக்தன், குள்ளன் போன்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்வில் நடித்ததில்லை.

இவ்வாறு கமல் பேசினார்.

அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பலுக்கு மாதம் ரூ.24 லட்சம் மாமூல்!


மேட்டூர் அனல் மின் நிலையத்தில், இலவசமாக வழங்கப்படும் சாம்பல், டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம், மாதந்தோறும் 24 லட்ச ரூபாய், வெளிப்படையாகவே மாமூல் வசூலிப்பதாக, ஹாலோ பிரிக்ஸ் செங்கல் உற்பத்தியாளர்கள், பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இப்பிரச்னையில், தமிழக முதல்வர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில், நான்கு மின் நிலையங்களில், மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்கு எரிபொருளாகப் பயன்படும் நிலக்கரி, பயன்பாட்டுக்குப் பின், சாம்பல் கழிவாக வெளியேறுகிறது.வெளியேறும், 4,000 டன் சாம்பல், நீரில் பதப்படுத்தப்பட்டு, உலர் சாம்பல், ஈரச் சாம்பல் என, இரு ரகமாகப் பிரிக்கப்படுகிறது. இந்த வகை சாம்பல், சிமென்ட் மற்றும் ஹாலோ பிரிக்ஸ் செங்கல் உற்பத்திக்கு, மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.இதில், ஹாலோ பிரிக்ஸ் உற்பத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீதப்படி, 800 டன், சிமெண்ட் ஆலைகளுக்கு 80 சதவீதப்படி, 3,200 டன் உலர், ஈரச் சாம்பல் வினியோகிக்கப்படுகிறது.

இவற்றில், மத்திய அரசின் சிறு தொழில் சட்டத்தின் கீழ், 106 ஹாலோ பிரிக்ஸ் செங்கல் கம்பெனிக்கு இலவசமாகவும், 16 உயர்நிலை செங்கல் உற்பத்தி கம்பெனிக்கு, டன் 300 ரூபாய் வீதமும், சிமென்ட் ஆலைகளுக்கு டன் 350 ரூபாய் வீதம், உலர், ஈரச் சாம்பல் விற்பனை நடக்கிறது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருச்சி, கோவை உட்பட, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், ஹாலோ பிரிக்ஸ் செங்கல் உற்பத்திக்கு, உலர், ஈரச் சாம்பல் பயன்படுத்தப்படுகிறது.இலவசமாக வழங்க வேண்டிய இந்த சாம்பலுக்கு, வசூல் வேட்டை நடத்துவதாக, ஆணித்தரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின் வாரிய அதிகாரிகள் துணையோடு, நோட்டு போட்டு வசூல் வேட்டை கன ஜோராக நடந்து வருகிறது. ஞாயிறு தவிர, 6 நாள் சாம்பல் விற்பனை மேற்கொள்ளப்படும். திங்கள்தோறும், செங்கல் கம்பெனிக்கு தேவையான சாம்பல் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6 நாட்களில் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும்.ஆனால், டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம், "கவனிப்பு' நடந்தால் மட்டுமே, இலவச சாம்பல் வினியோகம் நடக்கிறது. இல்லையெனில், ஒதுக்கீட்டைப் பாதியாகக் குறைத்து, காலதாமதப்படுத்தி வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஹாலோ பிரிக்ஸ் செங்கல் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:மத்திய அரசு உத்தரவுப்படி, 106 சிறு தொழில் செங்கல் உற்பத்திக்கு, 800 டன் சாம்பல் இலவசமாகத் தர வேண்டும். ஆனால், டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் வசூல் செய்து கொண்டு சாம்பல் தருகின்றனர். தர மறுத்தால் 35 டன் கொண்ட ஒரு லோடு சாம்பலுக்குப் பதிலாக, வெறும் 20 டன்னாக குறைத்துத் தருகின்றனர்.லாரி வாடகை, டிரைவர் படி, வழியில் அதிகாரிகளுக்கு மாமூல் கவனிப்பு என, கட்டுபடி ஆகாது எனக் கூறி, டிரைவர்கள் வரமறுக்கின்றனர். எனவே, வேறு வழியின்றி, டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் லஞ்சம் கொடுத்து சாம்பல் வாங்க வேண்டியுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு, 80 ஆயிரம் ரூபாய் வீதம், மாதம், 24 லட்ச ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டி உள்ளது. அனல் மின் நிலைய தலைமை இன்ஜினியர் மாது, மேற்பார்வைப் பொறியாளர் (மெக்கானிக்கல்-2) கிருஷ்ணசாமி ஆகியோர் தான், சாம்பல் அளவு ஒதுக்கீடு செய்வர். ஆனால், மூன்று மாதமாக, இவர்களுக்குத் தெரியாமலேயே சாம்பல் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.மாமூல் வசூலிக்க கிருஷ்ணசாமி உடன்படாததால், அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்னை, மின் வாரிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் வரை சென்று, கிருஷ்ணசாமி பணி ஓய்வு பெற, இன்னும் 3 மாத காலமே உள்ளதால், அவரை இடம் மாற்றுவதற்கான முயற்சி கைவிடப்பட்டது.

"பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் முறை, அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்!


பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் முறை, அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்' என்ற அறிவிப்பை, கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இதன் மூலம், பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்ததும், அவர்களது வருகைப் பதிவு குறித்த விவரங்கள், அந்தந்த வட்டார வள மையத்துக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும். தமிழக மாவட்ட கலெக்டர்கள் இரண்டாம் நாள் மாநாடு, நேற்று காலை நடந்தது. பிற்பகலில், போலீஸ் எஸ்.பி.,க்கள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. கலெக்டர்கள் மாநாட்டில், ஒவ்வொரு கலெக்டர்களிடமும் மாவட்டத்தில் உள்ள தேவை குறித்து கேட்டறிந்து, தனது இறுதி உரையில், அவற்றை அறிவிப்புகளாக முதல்வர் வெளியிட்டார்.

கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் நிறைவுரை:நிர்வாகம் செய்யும் நடைமுறைகள், தற்போது சிக்கலாகிவிட்டன. மக்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். எனது அரசின் முக்கிய கவனம் வேளாண்மைத் துறை மீது தான். அனைத்துமே சீசனுக்குரியது. தேவை முடிந்த பின், உரங்களை வினியோகிப்பது, "கிரிமினல் வேஸ்ட்' ஆகும். எனவே, கலெக்டர்கள் அறிவுப்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்.எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமானது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும், கல்வி கற்க, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க வாய்ப்பளித்து, சமூகத்துக்கு மிகவும் அர்த்தமுள்ள, மதிப்புமிக்க சொத்தாக மாற்ற வேண்டுமென விரும்புகிறேன். எனவே, பள்ளிகளின் சுற்றுச்சூழல், விடுதிகள் மற்றும் அவற்றில் வழங்கப்படும் உணவுகள் குறித்து, கலெக்டர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பல நலத்திட்டங்கள் உள்ளன. துறைகளுக்கு இடையேயான சிக்கல் ஏதும் ஏற்படாத வகையில், கலெக்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகின்றன. ஆனால், நாம் இலக்கை எட்ட முடியவில்லை.பெண்கள் சிறப்பு இலக்காக இருக்க வேண்டும். பெண்களின் ஆரோக்கியம், சுகாதாரம், கல்வி மற்றும் வருமான ஈட்டு திட்டங்களில், கலெக்டர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் பொருளாதார வளத்தைப் பெருக்கத் தான், கால்நடைகள் வழங்கப்படுகின்றன. மிக்சி, கிரைண்டர்களும், அவர்களது தினசரி சிரமத்தைக் குறைக்கவே வழங்கப்படுகின்றன. குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டு வாசலுக்கு தண்ணீர் வராவிட்டாலும், அருகிலாவது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அரசு நிலங்களை பொறுத்தவரை, சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்படுவது, முதலில் அரசு சொத்து தான். கோவில் நிலங்கள், உள்ளாட்சி நிலங்கள், மத்திய அரசின் புறம்போக்கு நிலங்கள் என அனைத்து வித நிலங்களும், கண்காணிப்பு மற்றும் உளவுக்கு உட்பட்டவை.கலெக்டர்கள் குழுவுடன், மாதந்தோறும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் கலந்தாய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். அப்போது, மதிய உணவு மையங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், மகளிர் சுகாதார வளாகங்கள், கிராமப்புற சாலைகள், ரேஷன் கடைகள் போன்றவற்றை, கலெக்டர்கள், வீடியோ முறையில் எனக்கு காண்பிக்க வேண்டும்.எஸ்.எம்.எஸ்., அடிப்படையிலான வருகைப் பதிவேடு முறை, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

ஏற்கனவே, எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் நடைமுறை, கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப் போவதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன்படி, ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டதும், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அப்பகுதி வட்டார வள மையத்துக்கு, எத்தனை ஆசிரியர்கள் வந்துள்ளனர், யார், யார் வரவில்லை என்பது பற்றிய விவரத்தை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்ப வேண்டும். அதனடிப்படையில், பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவு பராமரிக்கப்படும். இதன் மூலம் பள்ளிக்கு வராமல் இருப்பது, ஒரு மணி நேரத்துக்கு பின் வருவது, விரைவாக புறப்பட்டுச் செல்வது போன்றவற்றை ஆசிரியர்கள் செய்ய முடியாது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உயரதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத பள்ளிகளில், சரியாக பள்ளிக்கு வராமல் வேறு வேலையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு, இந்த வருகைப் பதிவு முறை, கிடுக்கிப்பிடியாக அமைந்துள்ளது.

அஸ்வின்-பிரீத்தி ஜோடி திருமணம்!





நவம்பர் 14-ம் நாள் 'உலக நீரிழிவு தினமான இன்று!



நீரிழிவு நோய்.. 21-ம் நூற்றாண்டின் மனித இனத்துக்கே சவால் விடும் ஒரு சுகாதாரம் மற்றும் சமூகவியல் சார்ந்த பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த 1922-ம் ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து நீரிழிவு நோயாளிகளின் உயிர் காக்கும் இன்சுலினைக் கண்டுபிடித்தார். பொதுமக்களிடையே நீரிழிவைப் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பன்னாட்டு நீரிழிவு நோய் கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க்கின் பிறந்தநாளை உலக நீரிழிவு தினமாக அறிவித்தது. அதன்படி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் நாள் 'உலக நீரிழிவு தினமாக' அனுசரிக்கப்படுகிறது. 

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, தற்போது உலக அளவில் 346 மில்லியன் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் நீரிழிவின் பாதிப்பு மிக அதிகம். எவ்வளவு தெரியுமா? 62.4 மில்லியன். மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் 77.2 மில்லியன் பேருக்கு நீரிழிவு பிரச்னை வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாம். நமது உடலில் நீரிழிவினால் அதிகம் பாதிக்கக்கூடிய உடல் உறுப்புகள் - இதயம், கண், சிறுநீரகம் மற்றும் பாதம் ஆகும்.உலக நீரிழிவு தினமான இன்று, நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic Retinopathy) பற்றி இங்கே பகிர விரும்புகிறேன்.

1. பார்வையிழப்பு முதலிடம் இப்பரந்த பூமியில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் தாங்கிக்கொண்டிருக்கும் தேசம் நமது தேசம். 108 கோடி மக்களைக் கொண்ட நமது தேசத்தில் 270 லட்சம் பேர் பார்வைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2. டயபெடிஸ் மெல்லிடஸ் டயபெடிஸ் மெல்லிடஸ் (diabetes mellitus) எனும் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாடானது, நம் உடலின் சர்க்கரை சேமிப்பையும் அதன் உபயோகத்தையும் சேதப்படுத்துகிறது. நீரிழிவு குறைபாடானது கண்களில் ஏற்படும் புரை (கேடராக்ட்), கண் நீர் அழுத்த நோய் (க்ளகோமா), மற்றும் டயபீடிக் ரெட்டினோபதி எனப்படும் கண்ணில் உள்ளே உள்ள விழித்திரையின் ரத்தகுழாய்களை சிதைத்தல் போன்றவற்றிற்க்கும் காரணமாகிறது. 

3. கேட்டராக்ட் நமது கண்களில் உள்ள லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்படுவது கேட்டராக்ட் (cataract) எனப்படுகிறது. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த நிலை மிகக்குரைந்த வயதிலேயே ஏற்ப்படுகிறது.

4. க்ளகோமா நமது கண்ணின் முன் அறையில் சுரக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகமாகும்போது, பார்வை நரம்பில் ஏற்படும் பாதிப்பு க்ளகோமா (Glaucoma) எனப்படுகிறது. மற்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கையோடு கணக்கிடும்போது,  நீரிழிவு பிரச்னை காரணமாக க்ளகோமா உள்ளவர்கள் இரண்டு மடங்கு என்கிறது புள்ளி விவரங்கள்.

5. டயபீடிக் ரெட்டினோபதி நீரிழிவு பிரச்னை உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பு நீரிழிவு விழித்திரை நோய் (டயபீடிக் ரெட்டினோபதி - Diabetic Retinopathy) எனப்படுகிறது.

6. விழித்திரை (Retina) என்பது என்ன? நமது கண்க்ளை போட்டொ கேமராவுக்கு ஒப்பிடலாம். (ஃப்லிம் கேமரா - டிஜிட்டல் கேமரா இல்லை). விழித்திரை என்பது கேமராவினுள் இருக்கும் காணப்படும் ஃப்லிம் போன்றது. நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்ணின் முன்புறம் உள்ள கார்னியா (Cornea) எனப்படும் விழிவெண்படலத்தின் வழியே சென்று,லென்ஸில் ஊடுருவிச் சென்று கண்ணின் பின்புறம் - உட்புறச் சுவரான விழித்திரையில் பிம்பம் பதிவாகிறது. விழித்திரையிலுள்ள சிறப்பான செல்கள் பார்வைக்கான தூண்டல்களைப் பெற்று பார்வை நரம்பு வழியாக மூளைக்கு மாற்றியனுப்புகிறது. மேலும் விழித்திரையின் மையப்பகுதில் உள்ள மாக்குலா (Macula) என்னும் பகுதி நுட்பமான பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதியாகும். 


7. நீரிழிவு விழித்திரை நோய் யாருக்கு அதிகமாக வருகிறது? நீரிழிவு விழித்திரை நோய், நீரிழிவு பிரச்னை உள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீண்ட நாட்களாக நீரிழிவு பிரச்னை உள்ள ஆண்கள் பெண்கள் இருபாலாருக்குமே அதிகமாக வருகிறது. நீரிழிவு உள்ளவர்களில் பாதிபேருக்கு அவர்கள் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட அளவு டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.

8. டயபீடிக் ரெட்டினொபதியின் பல்வேறு நிலைகள் a. Mild Non-proliferative Retinopathy எனப்படும் லேசான ஃபைப்ரோ வாஸ்க்குலார் ப்ராலிஃபரேஷன் என்னும் இழை போன்ற திசு உருவாகாத நிலை நீரிழிவு விழித்திரை நோய். விழித்திரையில் உள்ள மிகவும் சிறிய ரத்தக்குழாய்களில் நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் மைக்ரோ அனெரிஸம்  அல்லது மைக்ரோ ஆஞ்சியோபதி எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது.இந்நிலையில் ரத்தக்குழாய்களில் சிறிய பலூன் போன்ற வீக்கம் ஏற்படுகிறது. 

b. Moderate Non-proliferative Retinopathy எனப்படும் சாதாரண ஃபைப்ரோ வாஸ்க்குலார் ப்ராலிஃபரேஷன் என்னும் இழை போன்ற திசு உருவாகாத நிலை நீரிழிவு விழித்திரை நோய். விழித்திரையில் உள்ள மிகவும் சிறிய ரத்தக்குழாய்களில் நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் மைக்ரோ அனெரிஸம் எனப்படும் மாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் ரத்தக்குழாய்களில் சிறிய பலூன் போன்ற வீக்கம் காரணமாக விழித்திரைக்கு சத்துக்களை எடுத்துச் செல்லும் ரத்தக்குழய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

c. Severe Non-proliferative Retinopathy எனப்படும் தீவிரமான ஃபைப்ரோ வாஸ்க்குலார் ப்ராலிஃபரேஷன் என்னும் இழை போன்ற திசு உருவாகாத நிலை நீரிழிவு விழித்திரை நோய் நிலையில் மேலும் பல ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் விழித்திரை தனது பல பகுதிகளில் சத்து குறைவதனால் ஏற்படும் சிரமத்தை உடலுக்கு சிக்னல்களாக வெளிப்படுத்தி, விழித்திரையின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குவதற்க்காக மேலும் புதிய ரத்தக்குழாய்களை வளரவைக்கிறது.

d. Proliferative Retinopathy எனப்படும் முதிர்ச்சியடைந்த ஃபைப்ரோ வாஸ்க்குலார் ப்ராலிஃபரேஷன் என்னும் இழை போன்ற திசு உருவாகியுள்ள நிலை நீரிழிவு விழித்திரை நோய் நிலையில் விழித்திரை தனக்கு தேவையான சத்துக்களைப் பெறுவதற்க்காக சிக்னல்களை அனுப்பியதன் காரணமாக புதிய ரத்தக்குழாய்கள் உருவாகின. அந்த புதிய ரத்தக்குழாய்கள் அசாதாரணமானவை மற்றும் பலவீனமான ரத்தக்குழாய்கள் ஆகும். அவை விழித்திரையின் அடுக்குகளிலும், விட்ரியஸ் ஜெல் திரவத்தின் படிமத்திலும் உருவாகுகின்றன.எனவே இந்த ரத்தக்குழாய்கள் சத்துகுறைவின் காரணமாக ஏற்படும் பார்வையிழப்பிற்க்கு காரணமாகவோ அல்லது அறிகுறிகளுக்கு காரணமாகவோ  இருப்பதில்லை.  ஆனால் இந்த ரத்தக்குழாய்கள் அசாதாரணமானதாகவும் மற்றும் பலவீனமானதாகவும் இருப்பதால் உடைந்து ரத்தம் வெளியேற காரணமாகின்றன. எனவே பார்வைக்குறைவு அல்லது பார்வையிழப்பு நேரிடுவதற்கு காரணமாகின்றன. 

9. டயபீடிக் ரெட்டினொபதியினால் பார்வையிழப்பு எவ்வாறு நிகழ்கிறது? Proliferative Retinopathy எனப்படும் முதிர்ச்சியடைந்த ஃபைப்ரோ வாஸ்க்குலார் ப்ராலிஃபரேஷன் என்னும் இழை போன்ற திசு உருவாகியுள்ள நிலை என்கிற நான்காவது நிலையில் புதிய ரத்தக்குழாய்கள் அசாதாரணமானதாகவும் மற்றும் பலவீனமானதாகவும் இருப்பதால் உடைந்து ரத்தம் வெளியேறுகின்றன. அந்த ரத்தமானது கண்ணின் மையப்பகுதிக்கு வருவதால் மங்கலான அல்லது தெளிவற்ற பார்வை அல்லது பார்வைக்குறைபாட்டிற்க்கு காரணமாகின்றன. அடுத்து அந்த ரத்தம் மற்றும் நீர்க்கசிவு விழித்திரையின் மையப்பகுதில் உள்ள மாக்குலா (Macula) என்னும்  நுட்பமான பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதியையும் பாதிக்கிறது. இதன் காரணமாக நடுப்பகுதி பார்வை பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலை மாக்குலா இடிமா (Macula Edema) எனப்படுகிறது. 

 
10. டயபீடிக் ரெட்டினொபதியினால் விழித்திரையில் என்ன நிகழ்கிறது? நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய ரத்தக்குழாய்களில் மைக்ரோ ஆஞ்சியோபதி எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது. இந்த கசிவுகள் ரெட்டினல் இடிமா மற்றும் கடின கசிவு (Hard exudated) எனப்படும் லைப்போ புரோட்டீன் வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு விழித்திரையின் முக்கிய பகுதியான மாக்குலாவை பாதிக்கும்போது பார்வை குரையும். படித்தல் மற்றும் நுண்ணிய பொருட்களை பார்ப்பதில் சிரமம் ஏற்படும்.

11. டயபீடிக் ரெட்டினோபதி முழுமையான பார்வையிழப்பினை எற்படுத்துமா?இந்த நோயினை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்க்கு தொடர்ந்த கண் பரிசோதனை மற்றும் கண் மருத்துவரின் ஆலோசனை தேவை. அதனை தவிர்ப்பது முழுமையான பார்வையிழப்பிற்க்கு காரணமாகலாம்.

12. டயபீடிக் ரெட்டினோபதி ஒருவருக்கு இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ளமுடியும்? உங்களுக்கோ அல்லது தாய் அல்லது தந்தை அல்லது இருவருக்குமே நீரிழிவு நோய் இருந்தால் நீங்கள் உங்களுக்கும் நீரிழிவு பிரச்சினை இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.  உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருக்கிறது என்றால் ஒரு கண் மருத்துவமனைக்குச் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. டயபீடிக் ரெட்டினோபதி எப்போதும் தீவிரமான நிலைக்கு வரும் வரை நம் பார்வையை பாதிப்பதில்லை. ஆனால் தீவிரமான நிலையில் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும். தொடர்ந்த பரிசோதனை, ஆரம்ப கட்ட நிலையில் நோயை கண்டுபிடித்தல், வெற்றிகரமான சிகிச்சை இவையே பார்வையிழப்பிற்க்கான சாத்தியக்கூறினை குறைக்கிறது. 

13. டயபீடிக் ரெட்டினோபதி ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அறிய அவரது கண்கள் எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது?
- கண்ணின் வெளிப்புறத் தோற்றம் 
- பார்வைத் திறன் 
- கண் நீர் அழுத்தம் 
- பார்வைக்குறைபாடு 
- நிறக்குறைபாடு 


இவ்வாறான அடிப்படை பரிசோதனைகளை செய்துவிட்டு கண்ணின் பாப்பா (pupil) விரிவதற்க்காக சொட்டு மருந்திடப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, கண்ணின் உள்ளறையை - கண்ணின் பின்புறத்தை இன்டைரக்ட் ஆப்தால்மாஸ்கோப் என்னும் கருவியைக் கொண்டு விழித்திரையை முழுமையாகப் பார்ப்பதற்கு உதவும் வலியேதும் இல்லாத பரிசோதனையை செய்யபடுகிறது.  குறிப்பு 8-ல் கூறப்பட்டுள்ள மாற்றங்கள் ஏதும் விழித்திரையில் ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படுகிறது. விழித்திரையில் பாதிப்பு ஏதும் இருக்குமேயானால் மேலும் சில பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவையும் செய்யப்பட்டு நோய் இருக்கிறதா இல்லையா என்பது உறுதி படுத்தப்படுகிறது. 


* குறிப்பாக உங்கள் கண் மருத்துவர் உங்கள் விழித்திரையில் ரத்தகசிவு அல்லது நீர்க்கசிவு உள்ளதா என்று கவனமாக சோதனை செய்வார்.
* விழித்திரையில் வீக்கம் ஏதும் உள்ளதா? அல்லது மாக்குலாவில் பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்பதை கவனிப்பார்.
* விழித்திரையை ஒட்டி ஏதேனும் கசிவு அல்லது கலங்கலான திட்டு ஏதும் சேர்ந்துள்ளதா என்பதனை கவனிப்பார். (இது ரத்தக்கசிவு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்க்காக).
* பார்வை நரம்பில் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்று ஆராய்வார்.
* வேறு ஏதேனும் மாற்றங்கள் ரத்தக்குழாயில் ஏற்ப்பட்டுள்ளதா என்று கவனிப்பார்.
* ஒருவேளை உங்களுக்கு மாக்குலாவில் பாதிப்பு ஏதும் ஏற்ப்பட்டிருப்பதாக அல்லது சிகிச்சை தேவைப்படுவதாக உங்கள் கண் மருத்துவ நிபுணர் கருதினால் fundus fluorescein angiogram என்ற பரிசோதனையை செய்ய அறிவுறுத்தலாம். இந்த சோதனையின்போது உங்கள் கையில் ரத்தக்குழாயின் வழியாக ஒரு கரைசல் செழுத்தப்பட்டு அது உங்கள் கண்ணின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாயில் செல்வது புகைப்படமாக எடுக்கப்படுகிறது. அது விழித்திரையில் உள்ள ரத்தக்குழாயில் ரத்தக்கசிவு இருக்கும் இடத்தையும், அளவையும் தெரிந்து சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.

14. டயபீடிக் ரெட்டினோபதிக்கு தீர்வு என்ன?  முதல் நிலையில் சிகிச்சை ஏதும் தேவைப்படுவதில்லை என்றாலும், நீரிழிவு விழித்திரை நோயைத் தவிர்ப்பதற்க்காக, நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் ரத்த சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்த அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு போன்றவை கட்டுக்குள் இருக்கும்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துவார்கள்.  நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் அளவைப்பொறுத்து மருந்துகள், அல்லது லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையை உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்யலாம். உங்கள் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதே சிறந்தது.

15. டயபீடிக் ரெட்டினோபதிக்கான அறிகுறிகள் என்ன?
* அடிப்படையில்  டயபீடிக் ரெட்டினோபதிக்கு என்று ஆரம்ப கட்ட நிலையில் எந்த அறிகுறியுமே கிடையாது என்பதே உண்மை. உங்களுக்கு நீரிழிவு இருப்பதாக நிச்சயிக்கப்பட்டால் வருடம் ஒரு முறை முழுமையான கண் பரிசோதனையை செய்து கொள்வதே நல்லது.(அவ்வாறு பரிசோதனை செய்துகொள்ளச் செல்லும்போது உங்கள் கண் மருத்துவரிடம் உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருப்பதை மறக்காமல் முதலிலேயே சொல்லவும்)
* ஒரு பொருளைப்பார்க்கும்போது அந்தப் பொருளின் மையப்பகுதி தெளிவாகத் தெரியவில்லை என்றால், அல்லது கலங்கலாகத் தெரிந்தால், கண்ணின் மாக்குலா என்ற பகுதியில் மாக்குலா இடிமா என்ற நோயின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். உடனடியாக கண் மருத்துவரின் கவனம் தேவை என்பதை மறவாதீர்கள்.
* ஒருவேளை முதலில் குறிப்பிட்ட விழித்திரையின் மேலடுக்குகளில் உருவான புதிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு ரத்தம் கசிந்தால், பார்வை மறைக்கலாம். 
* ஒரு சில நேரங்களில் மறைக்கப்பட்ட பகுதிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலேயே தெளிவாகி பார்வை தெளிவாகத் தெரியலாம். இருந்தாலும் ரத்தக்கசிவு மற்றும் நீர்க்கசிவு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஏற்படலாம். எனவே முதல் முறையாக பார்வையில் தெளிவின்மை உணர்ந்தால் உடனடியாக கண் சிகிச்சை நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறுவதே பார்வையிழப்பை காப்பாற்றுவதற்க்கான வழி.
* Proliferative டயபீடிக் ரெட்டினோபதிக்கான சிகிச்சையை இடையிலேயே நிறுத்துவதும் முழுமையான பார்வையிழப்பை ஏற்படுத்தலாம். எனவே தொடர்ந்த கண்காணிப்பு மிகவும் அவசியம்.

16.  லேசர் சிகிச்சை எதற்காக தேவைப்படுகிறது? Proliferative Retinopathy எனப்படும் நிலையில் ரத்தக்குழாய்கள் அசாதாரணமானதாகவும் மற்றும் பலவீனமானதாகவும் இருப்பதால் உடைந்து ரத்தம் வெளியேற காரணமாகின்றன. எனவே பார்வைக்குறைவு அல்லது பார்வையிழப்பு நேரிடுவதற்கு காரணமாகின்றன. இழந்த பார்வையை மீட்க முடியாவிட்டாலும் இருக்கின்ற பார்வையை காப்பாற்ற வேண்டி லேசர் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த லேசர் சிகிச்சையில் 1000 முதல் 2000 லேசர் கற்றைகள் பாய்ச்சப்பட்டு பாதிப்பை ஏற்ப்படுத்தக்கூடிய புதிதாக உருவான அசாதரணமான மற்றும் பலவீனமான ரத்தக்குழாய்கள் எரிக்கப்படுகின்றன. அதன் மூலம் ரத்தம் மற்றும் நீர்க்கசிவு ஏற்ப்பட்டு பார்வை பாதிப்பது அல்லது பறிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. பொதுவாக சிகிச்சை முழுமையடைய இரண்டு அல்லது மூன்று  அமர்வுகள் ஒவ்வொரு நோயாளிக்கும் தேவைப்படலாம். இந்த புதிய ரத்தக்குழாய்கள் ரத்தக்கசிவை ஏற்படுத்துவதற்க்கு முன்பே லேசர் சிகிச்சை அளிப்பது பார்வையை தக்க வைத்துக்கொள்வதற்க்கு பயன்படும். புதிய பலவீனமான அசாதாரணமான ரத்தக்குழாய்கள் எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம். எனவேதான் லேசர் சிகிச்சை சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் தொடர்ச்சியான  கண் மருத்துவரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ரத்தக்கசிவு இருந்தாலும், கசிவின் அளவு மற்றும் தன்மையை பொறுத்து சிகிச்சை வழங்கப்படலாம். பொதுவாக பல நோயாளிகளுக்கு சிகிச்சை பார்வையை பாதுகாத்து மேலும் பார்வை குறைவதை தடுக்க உதவுகிறது. பார்வையிழப்பின் சிரமத்தை 50 சதவீதம் வரை குறைக்கிறது.இது கரும்புள்ளிகளி நீக்குவதில்லை. மேலும், விட்ரியஸ் பகுதியில் ஏற்க்கெனெவே ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றை சரி செய்வதில்லை. லேசர் சிகிச்சையின் மூலம் நோயில் முன்னேற்றம் கண்டாலும், சிறிதளவு பார்வையிழப்புக்கும் வாய்ப்பு உள்ளது. 


17. லேசர் சிகிச்சை பாதுகாப்பானதா? லேசர் சிகிச்சை பாதுகாப்பானதே. டயபீடிக் ரெட்டினோபதிக்கான லேசர் சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரங்கள் பார்வை மங்கலாகத் தெரியும். பக்கவாட்டுப்பார்வையும், இருட்டுக்குள் பழகுவதும் பாதிக்கப்படலாம். ரத்தக்கசிவு மற்றும் நீர்க்கசிவு மிக அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சைக்குப்பின்னரும் பொஆர்வையிழப்பிற்க்கான வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு விட்ரெக்டமி எனப்படும் ஆபரேஷன் தேவைப்படும் என்பதையும்  டயபீடிக் ரெட்டினோபதி நோயாளிகள் தெரிந்து கொள்ளவேண்டியதாகும்.

18. விட்ரெக்டமி ஆபரேஷன்... புதிய வளர்ச்சியடைந்த ஆபரேஷன் முறையில் விட்ரெக்டமி மற்றும் விட்ரியஸ் மைக்ரோ சர்ஜரி மூலமாக 60 % முதல் 70% வரை  டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வையில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விட்ரெக்டமி ஆபரேஷனின் நோக்கம், கண்ணின் மையப்பகுதியில் உள்ள ரத்தத்தையும் அசாதரணமாக பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்குவதுமே ஆகும். விட்ரெக்டமி ஆபரேஷனில் கண்ணின் மையப்பகுதியில் உள்ள அதிகமான ரத்தக்கசிவினால் பாதிக்கப்பட்ட, பார்வையிழப்பை ஏற்படுத்தும் விட்ரியஸ் திரவம் நீக்கப்பட்டு வேறு உப்புக்கரைசல் நிரப்பப்படுகிறது. இந்த ஆபரேஷன் மூலம் பார்வை மேலும் குறையும் அபாயத்தையும், விழித்திரை பிரிதல் (Retinal Detachment) எனப்படும் நோயின் இறுதிக்கட்டத்தையும் தடுக்க முடியும்.   


19. நீரிழிவு பற்றியும் டயபீடிக் ரெட்டினோபதி பற்றியும் சரியாகத் தெரிந்திராத காரணத்தால் அல்லது வேறு காரணத்தால்   டயபீடிக் ரெட்டினோபதியினால் அதிக அளவில் பார்வையை இழந்து விட்டேன். பார்வையை மீட்டுக் கொள்ள எனக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். டயபீடிக் ரெட்டினோபதிக்கான சிகிச்சை என்பது இழந்த பார்வையை மீட்பதற்க்கான முயற்சி அல்ல. இருக்கின்ற பார்வையை காத்துக் கொள்வதும், மேலும் அதிக அளவில் ஏற்படவிருக்கும் பார்வையிழப்பை தடுப்பதற்க்கான வாய்ப்பே.டயபீடிக் ரெட்டினோபதியினால் அதிகமான அளவில் பார்வையை இழந்தவர்கள், இழந்ததை எண்ணி கவலைப்படாமல், உங்கள் கண் மருத்துவரை சந்தித்து, நீங்கள் பெற்றுக்கொண்ட சிகிச்சையின் முழு விவரத்தையும் அதற்கான மருத்துவ அறிக்கைகளோடு ஆலோசனை செய்யலாம். குறைவான பார்வையோடு நிறைவான பயனுள்ள வாழ்க்கையை வாழ "லோ விஷன் எய்டு" எனப்படும் பார்வை உபகரண்ங்கள் மற்றும் கருவிகள் வந்துவிட்டன. அவற்றின் உதவியோடு ஒளிமயமான வாழ்க்கை வாழ முடியும்.

20. நீரிழிவு நோயாளிகள் தங்கள் கண் பார்வையை பாதுகாத்துக்கொள்ளசில முக்கியமான குறிப்புகளை கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவை:
* நீரிழிவு நோயாளிகள் பத்தில் இரண்டு பேர்  டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
* ஆரம்ப காலத்தில் இந்த  டயபீடிக் ரெட்டினோபதிக்கு எந்த விதமான முன்னறிவிப்பும் இருப்பதில்லை.
* நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் பாதிப்பு மிகச்சிறிய அளவில் பாதித்தாலும் நாளடைவில் அது பார்வையை இழக்கச் செய்யலாம்.
* இந்தியாவில் இன்று கண் பார்வை இஅழப்பிற்க்கு நீரிழிவு நோய் ஒரு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது.
* நீரிழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருந்தாலும் கண் பார்வையில் பழுது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
* முறையான திட்டமிட்ட கண் பரிசோதனைகள் மூலமும் தக்க சமயத்தில் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையும் கண் பார்வையை பாதுகாக்கும்.
* லேசர் சிகிச்சை மூலம் பலருக்கு பார்வை இழப்பை தடுக்கலாம்.
* நீரிழிவு நோய் உள்ளவர்கள் வருடம்தோறும் கண் பரிசோதனை செய்துகொள்வது தற்காப்பு நடவடிக்கையாகும்.
* அநேகமாக அனவருக்கும் தக்க சமயத்தில் டயபீடிக் ரெட்டினோபதி கண்டறியப்பட்டால் நல்ல முறையில் சிகிச்சை பெற்று கண் பார்வையை பாதுகாத்துக் கொள்ளலாம்.
* கண் பார்வை நமக்கு மிக மிக முக்கியம். நாம் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்றால் வருடாந்திர கண் பரிசோதனை மனதிற்கு நிம்மதி கொடுக்கும். வரும் முன் காப்போம்.  ஆரம்பத்திலேயே கண்டறிவோம். உடன் சிகிச்சை பெறுவோம். கண் பார்வையை தக்க வைப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...