சென்னையில் கடந்த 1984-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் தேடப்படும் குற்றவாளி என சென்னை செசன்சு கோர்ட் அறிவித்துள்ளது. ஆகவே, இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு தமிழக போலீசாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக மக்கள் உரிமை கழகம் வழக்கு தொடர்ந்தது. நிலுவையில் இருந்து வருகிறது. சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அவருக்கு எதிரான வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு நீதிபதிகள் நாகப்பன், சுதந்திரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுதந்திரம், டக்ளஸ் தேவானந்தாவுக்காக வழக்கு ஒன்றில்தான் ஆஜராகி இருந்ததாகவும், ஆகவே, இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு 4 வார காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும்.
No comments:
Post a Comment