அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணையமாநாட்டில் முனைவர் மு.இளங்கோவன் வழங்கிய ஆய்வுரை:
தமிழ்மொழி செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் சொத்தாக இம்மொழி உள்ளது. தமிழ்மொழியைக் கற்கவும், தமிழ் இலக்கியங்களை - இலக்கணங்களைக் கற்கவும் அரசு, பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிநபர்களின் பங்களிப்பால் இணையத்தில் செய்திகள் பலவகையில் உள்ளிடப்பட்டுள்ளன. இவை இன்னும் சில தளங்களில் மேம்படுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளன.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழம்.நெட் தளங்களிலும், பிற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் தளங்களிலும் தமிழ் எழுத்துகளை அறியவும், படிக்கவும், எழுத்துகளைக் கூட்டிச் சொற்களைப் படிக்கவும் , சொல்வளம் பெருக்கவும் வசதிகள் உள்ளன. தமிழ் வழியில் தமிழ் படிக்கவும், ஆங்கில வழியில் தமிழ் படிக்கவும் வசதிகள் உள்ளன.
பல்கலைக்கழகங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றித் தனி மாந்தர்களும் தமிழ்க்கல்வியைக் கணினி, இணையத்தில் கற்க இத்துறையில் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிலரின் முயற்சி இணையத்தில் இருப்பதால் உலக அளவில் பலராலும் பயன்படுத்த முடிகின்றது. சிலரின் முயற்சி குறுவட்டுகளில் மட்டும் இருப்பதால் உலக அளவில் அவர்களின் துணையில்லாமல் பயன்படுத்த முடியவில்லை. எனவே குறுவட்டில் தமிழ்க்கல்வியைத் தயாரித்து வைத்துள்ளவர்கள் இணையத்தில் ஏற்ற வேண்டும்.
தமிழ்க்கல்வி குறித்த பாடங்களை உலக அளவில் அமைக்கும்பொழுது பிறநாட்டுச்சூழல் உணர்ந்து வடிவமைக்க வேண்டியுள்ளது. தமிழகத்துக் குழந்தைகளுக்கு உருவாக்கும்பொழுது தமிழகத்துச் சூழலை உணர்ந்து வடிவமைக்க வேண்டும். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் வடிவமைக்கப்படும் பாடங்கள் அந்தந்த நாட்டுச் சூழலை உணர்ந்து வடிவமைக்க வேண்டும். ஆனால் அண்மைக்காலம் வரை தமிழகத்தைச் சார்ந்து, பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் தமிழ்க் கல்விக்குப் பயன்படும் செய்திகள் பாடல்களாகவும், கதைகூறும் பகுதிகளாகவும் யு டீயூப் தளங்களில் பல உள்ளன. இணையத்தில் உள்ள தமிழ்க்கல்வி சார்ந்த செய்திகள் தொடக்க நிலை, அடிப்படை நிலைகளைக் கொண்டு மட்டும் உள்ளது. இவற்றின் தன்மைகளை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.
மேலும் உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி, பல்கலைக்கழகம், ஆய்வுசார்ந்த பாடத்திட்டங்கள், பேச்சுரைகள், காட்சி விளக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாகத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், காப்பியங்கள், பக்திப் பனுவல்கள், நன்னூல், இக்கால இலக்கியம் முதலான பாடங்கள் அறிஞர்களின் பேச்சுகளாகவும் (ஒலி-ஒளி), காட்சியுரைகளாகவும்(Power Point) உருவாக்கப்பட வேண்டும். இதனை எவ்வாறு உருவாக்குவது, பராமரிப்பது, இதன் பயன்பாடு, பற்றிய செய்திகளைத் தாங்கி இக்கட்டுரை அமைகின்றது.
பென்சில்வேனியாவில் பேராசிரியர் ஷிப்மேன், முனைவர் வாசு ஆகியோரின் முயற்சியில் இணையம் வழியாகத் தமிழ்கற்றல், பயிற்றுவித்தலுக்குரிய பாடப்பகுதிகளை உருவாக்கி இணையத்தில் வைத்துள்ளனர். (http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/). இதில் இடம்பெற்றுள்ள பாடப்பகுதிகள் பிறமொழிச்சூழலில் தமிழ் கற்போருக்கு உதவும் வகையில் உள்ளன.
நெடுங்கணக்கு அறிமுகப் பகுதியில் தமிழ் உயிர் எழுத்துகளையும், உயிர்மெய் எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளையும் எழுதவும் ஒலிக்கவுமான பயிற்சிகள் உள்ளன. தமிழ் எழுத்துகளும் அதனை ஒலிக்க உதவும் ஆங்கில எழுத்துகளும் இருப்பதால் ஆங்கிலம் அறிந்தார் தமிழ் கற்க இந்தப் பகுதி பயன்படும். இந்தத் தளத்தைப் பயன்படுத்த எழுத்துருக்கள் தரவிறக்கம், ஒலிப்புக்கருவி மென்பொருள் தரவிறக்கம் செய்ய வேண்டும். தமிழ் எழுத்துகளை (உயிர், மெய்) நினைவுப்படுத்திக்கொள்ள அமைக்கப்பட்டுள்ள படக்காட்சிகள் தமிழ் எழுத்துகளை அறிவோருக்கு நன்கு பயன்படும். மெய்யெழுத்தும் உயிர் எழுத்தும் இணைந்து எவ்வாறு உயிர்மெய் எழுத்து உருவாகின்றது என்ற வகையில் படக்காட்சி வழியாக நன்கு விளக்கப்பட்டுள்ளது.
எ.கா. க்+ அ = க ; ச்+அ = ச; ண்+ஓ = ணோ
ஒரு எழுத்துக்கு விளக்கம் கொடுத்து அதுபோல் பிற எழுத்துகளும் எவ்வாறு மாறும் என்பதைப் பயிற்சியில் அறிய வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
மரம்+ஐ= மரத்தை என்று சாரியை உருவாகும் விதமும் காட்டப்பட்டுள்ளது.
வீடு+இல்= வீட்டில் என்று மாறுவதும் காட்டப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஷிப்மென் அவர்களின் விளக்கம் தொடுப்புகளின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பேச்சுத் தமிழுக்குரிய அடிப்படைக் கருவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. வகுப்பறை, வீடு, பொது இடங்களில் பயன்படுத்தப்படும் உரையாடலில் இடம்பெறும் சொற்களை அறிமுகப்படுத்தும் பயிற்சிகளும் ஒலிப்பு வசதிகளுடன் உள்ளன. இவற்றில் வினா-விடை முறை காணப்படுகின்றது. தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்கி இதனைப் படிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலம்-தமிழ் ஒலிப்பு வசதிகள் இருப்பதால் பிறமொழியினர் தமிழைக் கற்க இந்தத் தளம் பேருதவியாக இருக்கும்.
வினா விடை வடிவம், ஆம் இல்லை வடிவம் எனப் பல வடிவங்களில் சொற்களையும் தொடர்களையும் அறிமுகப்படுத்தி ஆங்கிலத்தின் துணையுடன் தமிழ் கற்பிக்க இந்தத் தளம் பலவகையான நுட்பங்களைக் கொண்டு விளங்குகின்றது.
விடுபட்ட சொற்களைப் பொருத்துதல், பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்களை உருவாக்குதல் என்ற வகையில் இடம்பெற்றுள்ள பயிற்சிகளும் நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் காட்டும் பயிற்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாய்மொழியாக வழங்கப்பட்டுவரும் நாட்டுப்புறக்கதைகளை அறிமுகப் படுத்துதல் தமிழ் மரபு அறிவிக்கும் செயலாக உள்ளது. தமிழர் பண்பாடு உணர்த்தும் கலைகள், பழக்கவழக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தமிழர் மரபு அறியவிழைவார்க்குப் பேருதவியாக இருக்கும்.
ஒருங்குகுறி எழுத்துகளைப் பயன்படுத்தும்பொழுதும், தொழில்நுட்பம் எளிமைப்படுத்தித் தரும்பொழுதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் விரும்பப்படும் தளமாக இது விளங்கும்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளம் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தில் தமிழ் கற்பதற்குரிய பலவகை வசதிகள் உள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் உள்ள வசதிகள் யாவும் தமிழ்ச்சூழலில் தமிழ் கற்பாருக்கு உதவும் பொருள்களாக உள்ளன. தமிழை அறிமுக நிலையிலிருந்து பட்டக்கல்வி வரை இந்தத் தளம் சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது. மழலைக்கல்வி, பாடங்கள், பாடநூல்கள், இணையவகுப்பறை, நூலகம், அகராதி, கலைசொற்கள், சுவடிக்காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் எனும் தலைப்புகளில் உள்ள செய்திகள் யாவும் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் அறிய விழைவார்க்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மழலைக்கல்வி என்ற பகுதியில் பாடல்கள், கதைகள், உரையாடல், வழக்குச்சொற்கள், நிகழ்ச்சிகள், எண்கள், எழுத்துகள் என்னும் தலைப்புகளில் அமைந்து தொடர்புடைய செய்திகள் பொருத்தமுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாடல்கள் என்ற பகுப்பில் கோழி, காக்கை, கிளி, பசு, முத்தம் தா, நாய் என்று சிறுவர்களுக்குக் கதைப்பாட்டு வழியாகத் தமிழ் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்தப் பாடல்கள் இசையமைப்புடனும், படக்காட்சியுடனும் தரவிறக்குவதில் எந்தச் சிக்கலும் இல்லாததால் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும்.
பாடல்களும் பயிற்சிகளும் எனும் பகுதியில் பாடல்களைக் குழந்தைகள் கற்பதற்குரிய வசதிகள் உள்ளன. பயிற்சி பெறுவதற்குரிய கட்டளைகள் எளிமையாக உள்ளதால் குழந்தைகள் தாமே கற்க இயலும். பயிற்சி பெறுவதற்குரிய பகுதியில் நிலா, கைவீசம்மா, காகம், என் பொம்மை, எங்கள்வீட்டுப்பூனை, பம்பரம் எனும் தலைப்பில் மாணவர்களுக்குப் புரியும்படியான பாடல்கள் உள்ளன.
கதைகள் என்னும் தலைப்பில் குப்பனும் சுப்பனும்(கோடரிக்கதை), கொக்கும் நண்டும், புத்தியின் உத்தியால் பிழைத்த குரங்கு, தாகம் தணிந்த காகம் எனும் தலைப்பில் கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் முன்பே தமிழகத்துக் குழந்தைகளுக்கு அறிமுகமான கதைகள் அல்லது பின்புலங்களைக் கொண்டவை என்பதால் எளிமையாகப் புரியும். இந்தக் கதைகளை எடுத்துரைக்கும் முறையில் அமைத்துள்ளதால் பிறர் உதவியின்றிக் குழந்தைகள் தாமே கதைகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு. காட்சி, ஒலி வழி அமைந்துள்ளதால் எளிமையாகப் புரிந்துகொள்வர்.
உரையாடல் உரையாடல் பகுதியில் ஏழு உரையாடல் பகுதி உள்ளது. குழந்தைகளுக்கு நற்பண்புகளை ஊட்டும் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் படக்காட்சியுடன் விளக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு நற்பண்புகளை ஊட்டும் இந்தப் பயிற்சியின் வழியாகச் சொற்கள் நன்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
வழக்குச்சொற்கள் பறவைகளின் ஒலிகள், காய்கள், வீடுகள், விலங்குகளின் ஒலிகள், பழங்கள், கிழமைகள், உறவுப் பெயர்கள், நிறங்கள், சுவைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆறுவகைப் பறவைகளின் ஒலிகள் இங்குக் காட்டப்பட்டுள்ளன. காய்களின் பெயர்கள் ஒலித்துக்காட்டப்படுவதால் சொற்களை எளிமையாகக் குழந்தைகள் அறிவார்கள். நிகழ்ச்சிகள் என்ற பகுதியில் நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் குறித்த காலம் அறிவிக்கும் பயிற்சிகள் உள்ளன.
எண்கள் என்ற தலைப்பில் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாடம் - பாடல் - பயிற்சி என்னும் பகுப்பில் செய்திகள் உள்ளன. இதில் உள்ள பயிற்சிகள் பகுதியில் எண்களின் ஒலியைக் கேட்டுப் பொருத்தமான படத்தைச்சுட்டும் பகுதி அமைந்துள்ளது. குறிப்பாக ஒன்று என்னும் ஒலியைக் கேட்டு, ஒரு பொம்மை உள்ள படத்தைச் சுட்டியால் சுட்ட வேண்டும். பொருத்தமானவற்றைச் சுட்டினால் சரியான விடை எனவும் பொருத்தம் இல்லை என்றால் தவறான விடை என்றும் குறிப்புகள் ஒலிக்கும்.
பாடல் என்ற பகுப்பில் ஒன்று முதலான எண்கள் பாடல்வடிவிலும் காட்சி வடிவிலும் விளக்கப்பட்டுள்ளன.
எழுத்து என்னும் பகுப்பில் பாடம் - பயிற்சி - பாடல்கள் என்ற தலைப்பில் செய்திகள் உள்ளன. உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள், ஒரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள், மூன்று எழுத்துச் சொற்கள், நான்கு எழுத்துச் சொற்கள், ஐந்து எழுத்துச் சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் எளிமையிலிருந்து கடுமைக்குச் செல்வது என்ற அடிப்படையில் பாடங்கள் கதையும் பாட்டுமாகத் தொடங்கி நிறைவில் எழுத்து, சொல் அறிமுகமாக வளர்ந்துள்ளது.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் மழலைக்கல்வி- சான்றிதழ்க்கல்வி, மேற்சான்றிதழ்க் கல்வி, இளநிலைக் கல்வி(B.A) உள்ளிட்ட பாடப்பகுதிகளின் பாடங்களும் உள்ளிடப்பட்டுள்ளன. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள பாடங்கள் மாணவர்களின் கல்விநிலையை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பினும் அவர்களின் உள்ள நிலையை மனத்தில் கொண்டு உருவாக்கப்படவில்லை.
இணைய வகுப்பறை விரிவுரைகள் என்னும் பகுப்பில் சான்றிதழ்க்கல்விக்கான பாடங்கள் அடிப்படைநிலை, இடைநிலை, மேல்நிலை என்று வகுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் நன்னன், சித்தலிங்கையா ஆகியோர் இதற்குரிய பாடங்களை அறிமுகம் செய்கின்றனர். ஆங்கில வழியிலும் தமிழ்ப்பாடப்பகுதிகள் சித்தலிங்கையா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சைவ சமயம் சார்ந்த பகுதிகள் அறிமுகம் செய்யப்படுவது போல் தமிழின் சங்க நூல்கள், இலக்கணங்கள், இலக்கியங்கள் தமிழகத்து அறிஞர்களால் பாடமாக நடத்தப்பட்டுத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பாடப்பகுதிகளில் வைக்கப்பட வேண்டும். ஒரு பாடத்தைப் பல அறிஞர்கள் நடத்தி அந்தப் பகுதிகள் பயன்பாட்டுக்கு இருந்தால் தேவையானவர்களின் விரிவுரைகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் பயில முடியும். சான்றாகத் தொல்காப்பியப் பாடத்தை முனைவர் கு.சுந்தரமூர்த்தி, சங்க இலக்கியங்களை முனைவர் தமிழண்ணல், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்களை முனைவர் சோ.ந.கந்தசாமி, சிலப்பதிகாரத்தை முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் போன்ற அறிஞர்களின் பேச்சுப்பதிவுகளாகத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்.
பொள்ளாச்சி நசனின் முயற்சி பொள்ளாச்சி நசனின் தமிழம்.நெட் தளத்தில் தமிழ் கற்கும் வசதி அமைந்துள்ளது. இத்தளத்தில் தமிழை ஆங்கிலம் வழியாகப் பயிற்றுவிக்கும் வகையில் செய்திகள் உள்ளன. மற்ற தளங்கள் நெடுங்கணக்கு அடிப்படையில் தமிழை அறிமுகம் செய்வதிலிருந்து மாறுபட்டு எழுதுவதற்கு எளிய எழுத்துகளை முதலில் அறிமுகம் செய்து பிறகு மற்ற எழுத்துகளை நசன் அறிமுகம் செய்கின்றார். ட, ப, ம என்று இவரின் எழுத்து அறிமுகம் உள்ளது.
எடுத்துக்காட்டாக ஐந்து நிலைகளில்(Level) 19 பாடங்களை (Lesson) இவர் அமைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பயிற்சிகளை அமைத்து அடுத்த ஐந்து நிலைகளில் பதினாறு பாடங்களை அமைத்துள்ளார். ஐந்து பாடல் பகுதிகளை அமைத்து அதில் 247 எழுத்துகளையும் பாடி அறியும்படியும் நசன் செய்துள்ளார். அதுபோல் ஓரெழுத்துச்சொற்கள் ஈரெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் இவற்றையும் பட்டியலிட்டு அறிமுகம் செய்துள்ளார்.தமிழ்க்களம் தளத்தில் குறியிலக்கும் நோக்கங்களும், தமிழ் கற்றல் கற்பித்தல், வகுப்பறை என்னும் மூன்று பகுப்பில் செய்திகள் உள்ளன. தமிழ்க்களத்தில் பாடங்கள் மூன்று பெரும் பகுதிகளாக அமைந்துள்ளன.
பகுதி 1: எழுத்துகள் அறிமுகமும் அவற்றாலான சொற்களைப் படித்தலும் எழுதலும். பகுதி 2: சொற்களஞ்சியம் பெருக்கம். பகுதி 3: கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்களில் உயர்நிலை எய்துதல்
பகுதி 1: பகுதி ஒன்றில் பதினான்கு பாடங்கள் தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் அறிந்து ஒலித்துப் பயிற்சி பெற அமைந்துள்ளன. அவ்வெழுத்துகளாலான எளிய சொற்களைப் படிக்கவும் , எழுதவும் பயிற்சிபெற விரும்புவோர் அப்பாடங்களில் தொடர்ச்சியாகப் பயிற்சி பெறவும் வழியமைக்கப்பட்டுள்ளது.
வரிவடிவ எழுத்துப் பயிற்சிக்கு என எட்டுப் பாடங்கள் அமைந்துள்ளன ஒவ்வொரு பாடமும் மூன்று கூறுகளை உட்கொண்டுள்ளன. தமிழ்ப் பாடங்கள் பேராசிரியர் திரு.வி.கணபதி புலவர் இ.கோமதிநாயகம் ஆகியோரால் எழுதப் பெற்றுள்ளன. தமிழ்க்களத்தில் எழுத்துரு தரவிறக்கம், ஒலிப்புக்குரிய மென்பொருள் தரவிறக்கம் தேவைப்படுகின்றன. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி பள்ளிக் கல்வி என்னும் தமிழக அரசின் தளத்தில் பள்ளிக்கல்விக்குரிய பாடநூல்கள் இடம்பெற்றுள்ளன(கட்டுரை உருவான சமயத்தில் சமச்சீர் கல்வி குறித்த சிக்கலால் பாடநூல்கள் இடம்பெறவில்லை. எனவே விரிவாகப் பார்வையிட இயலவில்லை).
தமிழமுதம் தமிழமுதம் என்ற இணையவழி வானொலியில் தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பாடல்கள் ஒலிவழியாகக் கேட்கும் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாகத் திருவெம்பாவைப் பாடல்கள், திருமுறைகள்(பித்தா பிறைசூடி) கேட்கும்வகையில் இனிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனம் மைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தின் சார்பில் தமிழ்ப்பாடங்கள் இணையத்தில் உள்ளன. இதில் இணையம் வழியாகத் தமிழ் கற்க 500 உருவா கட்டணம் கட்டிப் படிக்க வேண்டும்(அமெரிக்க டாலர் 50). மாதிரிப்பாடங்கள் சிறிது வைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பு வசதி உண்டு. எழுத்துகளைத் தரவிறக்கிக் கற்க வேண்டும். தளம் புதுப்பிக்கப்பட வேண்டும். தரமான முயற்சியில் இத்தளம் தமிழை அறிமுகப்படுத்துகின்றது.
வடக்குக் கரோலினா பல்கலைக்கழகம் வடக்குக் கரோலினா பல்கலைக்கழகத் தளத்தில் தமிழ் கற்பதற்குரிய பல வசதிகள் உள்ளன. முன்னுரையுடன் மூன்று பகுதிகள் உள்ளன. பன்னிரு இயல்கள் உள்ளன. 38 பாடங்கள் உள்ளன. பின்னிணைப்புகளும் உள்ளன. தமிழ் கற்பதற்குரிய அடிப்படைச்செய்திகள் எழுத்துருச் சிக்கல் இன்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பு வசதி, எழுதிக்காட்டும் வசதி யாவும் கொண்டு தரமான தளமாக இந்தத் தளம் உள்ளது
இந்தியானா பல்கலைக்கழகம் இந்தியானா பல்கலைக்கழகத்தின் தளத்திலும் தமிழ் கற்பதற்குரிய வசதிகள் உள்ளன.
.
தமிழ் டியூட்டர் தமிழ் டியூட்டர் என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டால் தமிழைக் கற்கும் வசதியை இந்தத் தளம் தருகின்றது..
குழந்தைகளுக்கான தளம் குழந்தைகளுக்கான பன்மொழி கற்கும் வாய்ப்புடைய தளம் இது. இதில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழி அறிமுகம் எளிய நிலையில் செய்யப்பட்டுள்ளது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் இனிய இசைகொண்ட அறிமுகப்பாடலுடன் இந்தத் தளம் விரிகின்றது. சிங்கப்பூர் கல்வி அமைச்சின் சார்பிலான தளம். சிங்கப்பூரில் தமிழ் கற்பிக்கும் சில காணொளிப் பகுதிகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்கள் சிலவும் காட்சி விளக்கவுரைகளும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன (
http://www.uptlc.moe.edu. sg/index.php/ntlrc/primary).
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின்முயற்சிஎஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் வழியாக இணையவழிக் கல்வி, கணினித்தமிழ்க் கல்வி அளிக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. தமிழ் முதுகலை, இளம் முனைவர் பட்டத்திற்குரிய பாடப்பகுதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தளம் தமிழ் உயர்கல்விக்கான தேவைகளை நிறைவுசெய்யும் என நம்பலாம்.
தமிழ் டைசஸ்டு தமிழ் டைஜஸ்ட் திட்டம், ஆங்கில மொழியைப் பயன்படுத்தி, தொடக்க நிலையிலிருந்து மேம்பட்ட நிலைவரை தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இணையம் வழியாக இத்திட்டம் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழ்நாட்டிற்கு வெளியே, மற்றும் இந்தியாவிற்கு வெளியேயும் வாழ்ந்துவரும் தமிழ் பேசும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் டைஜஸ்ட் திட்டம் தன் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
16 வெவ்வேறு நிலைகளில் உள்ள பாடத்திட்டம் இதில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டமும் சற்றொப்ப ஒன்றரை மணி நேரம் வரை ஓடக்கூடியது. பாடத்திட்டத்தை ஹை என்ட் டிஜிடல் காணொளியிலும், எலக்ட்ரானிக் அல்லது வன்படி பயிற்சிப் புத்தகம் வழியாகவும் தமிழ் டைஜஸ்ட் திட்டம் வழங்குகிறது. இந்தப் பாடத் திட்ட முறைகள், குழந்தைகள், பெரியவர்கள் என்று வேறுபாடு இல்லாமல் தமிழ் கற்கும் பட்டறிவை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள உதவுகிறது. ஆறு மாதங்களில் தமிழ் கற்கும் வசதியை இந்தத் தளம் வழங்குகின்றது.
இந்தத் தளத்தின் பாடத்திட்டங்களைப் பயன்படுத்த கட்டணம் கட்டுதல் வேண்டும். மாதிரிப்பகுதிகள் இணையத்தில் உள்ளன. ஆங்கிலம் வழியாகத் தமிழ் மொழியைக் கற்கத், தொடக்க நிலையிலிருந்து உயர்நிலை வரை மிகச்சிறப்பாகப் பாடத்திட்டங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ப்பாடங்கள் அவரவர்களின் வாய்ப்புகள், தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. உயர்கல்விக்குரிய பாடங்கள் இனிதான் உருவாக்கப்பட வேண்டும் அகவை முதிர்ந்த நிலையில் உள்ள தமிழ்ப்பேரறிஞர்களின் வாய்மொழி வடிவில் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள் பாடமாக நடத்தப்பெற்று இணையவெளியில் பாதுகாக்கப்பட வேண்டும். அதுபோல் பிறநாட்டுத் தமிழறிஞர்களின் வாய்மொழியிலும் தமிழ்ப்பாடங்கள் நடத்தப்பெற்றுத் தொகுக்கப்பெற வேண்டும். தமிழ் சார்ந்த பாடங்கள் உருவாக்கும் முயற்சி உலக அளவில் நடந்தாலும் இவற்றை எல்லாம் ஒரு குடையில் பார்க்கவும், ஆராயவும், பாடத்திடங்களுக்கு இடையே ஓர்மை காணப்படவும் அறிஞர்கள் சிந்திக்கவேண்டும்
இணையவழித் தமிழ்க் கல்விக்குரிய தளங்கள்:
1.http://www.pallikalvi.in/Schools/Samacheerkalvi.htm
2
.http://tamilkalam.in/
3
.http://www.tamil-online.info/Introduction/design.htm
4
.http://www.plc.sas.upenn.edu/tamilweb/
5.
http://www.uptlc.moe.edu.sg/
6
.http://www.tamilvu.org/
7.http://ccat.sas.upenn.edu/~haroldfs/tamilweb/webmail.html
8
.http://www.maharashtraweb.com/learning/learningTamil.htm
9.http://www.tamilamudham.com/tamil-resources.html
10
.http://www.tamil-online.info/Introduction/learning.htm
11
.http://www.talktamil.4t.com/
12.http://www.tamiltoons.com/view/14/tamil-alphabet-/
13
.http://www.thamizham.net/
14.
http://ethirneechal.blogspot.com/2010/06/learn-tamil-online.html
15.
http://www.thetamillanguage.com/
16.
http://www.unc.edu/~echeran/paadanool/home.html http://www.learntamil.com/
17.
http://www.tamilo.com/learn-tamil-education-57.html
18.
http://www.languageshome.com/
19.
http://www.google.com/search?q=learn+tamil&hl=en&prmd=vnb&source=univ&tbs=vid:1&tbo=u&ei=4AfqS5utMIfStgODn7WiDg&sa=X&oi=video_result_group&ct=title&resnum=4&ved=0CDkQqwQwAw
20.
http://www.saivam.org.uk/saivamTamil.htm
21.
http://www.ukindia.com/zip/ztm1.htm
22.
http://www.tamilcube.com/tamil.aspx
23.
http://www.mylanguageexchange.com/Learn/tamil.asp
24.
http://kids.noolagam.com/
25.
http://www.tamilunltd.com/
26.
http://languagelab.bh.indiana.edu/tamil_archive.html#basic
27.
http://www.srmuniv.ac.in/tamil_perayam.php#
28.
http://www.tamildigest.com/
29.http://www.youtube.com/watch?v=euFzMK4LS8o&feature=relatedhttp://ccat.sas.upenn.edu/~haroldfs/tamilweb/webmail.htmlhttp://www.tamilamudham.com/tamil-resources.htmlhttp://www.tamiltoons.com/view/14/tamil-alphabet-/
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/