|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 January, 2012

நண்பன் மூவி...

பங்கு சந்தையில் 5 % வெளிநாட்டவர் நேரடியாக முதலீடு செய்யலாம்!

வெளிநாட்டவர் நேரடியாக இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என்ற மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பை தொடர்ந்து, ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மொத்தப் பங்கு மூலதனத்தில், ஐந்து சதவிகிதம் வரை, ஒரு வெளிநாட்டவர் முதலீடு செய்யலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு 54 ஆக கடந்த டிசம்பர் மாத மத்தியில் குறைந்தது. எனவே, மீண்டும் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்க, தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக இந்திய பங்குச்சந்டிதயில் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மொத்தப் பங்கு மூலதனத்தில், ஐந்து சதவிகிதம் வரை, ஒரு வெளிநாட்டவர் முதலீடு செய்யலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை முதலீட்டாளர்கள், டீமேட் கணக்கு வழங்கும் செபியால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் பங்கு வர்த்தகம் தொடர்பான நபர்கள் மூலம், தகுதியுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். ஒரு வெளிநாட்டவரிடமிருந்து வரும் பணத்தை, ஐந்து நாட்களுக்குள் பங்குகளில் முதலீடு செய்யத் தவறினால், மீண்டும் அந்த வெளிநாட்டவரின் வங்கிக் கணக்குக்கு, அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2010 ல் வெளிநாட்டவரின் பணம் 2700 கோடி ரூபாய் அளவுக்கு, இந்தியாவை விட்டு வெளியேறியது. இதன் தாக்கத்தினால், அமெரிக்க டாலருக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு 54 என்னும் அளவுக்கு, டிசம்பர் மாத மத்தியில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

புயல் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி - புதுச்சேரியில் விஜய்!

தானே புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுவை மாநில மக்களுக்கு உதவ இன்று புதுவை வந்தார் நடிகர் விஜய். ஆரம்பத்திலிருந்தே புதுச்சேரி மீது தனி கவனம் செலுத்தி வருபவர் நடிகர் விஜய். தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏற்கெனவே இங்குதான் முதலில் உதவிகளை வழங்கினார். புதுவை முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி ஆனந்த் இவரது ரசிகர் மன்றத் தலைவரும் கூட. எனவே புதுவைக்கு விஜய் தனி முக்கியத்துவம் தந்து வருகிறார்.

தானே புயலால் புதுவை பகுதி முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடிகர் விஜய் இன்று(சனிக்கிழமை) புதுவை வந்தார். புதுவை சுப்பையா சாலையில் குபேர் திருமண மண்டபம் அருகே காலை 9 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உதவிகளை வழங்கினார் விஜய். இதில் விஜய் மன்ற நிர்வாகிகள் தவிர, ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக வந்து பங்கேற்றனர். விஜய்யைக் காணவும், அவரிடம் உதவி பெறவும் ஆர்வத்துடன் முண்டியடித்தனர் புதுவை மக்கள்.

செல்வி மீது ரூ 69 லட்சம் மோசடி!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக தன்னிடம் ரூ.69 லட்சம் பணம் மோசடி செய்ததாக கருணாநிதி மகள் செல்வி மீது போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி வக்கீல் நல்லதம்பி இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். மதுரை வண்டியூர் மெயின்ரோடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் நல்லதம்பி. வக்கீலான இவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆவார்.

இவர் நேற்று காலை 11 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் அளித்த புகார் மனுவில், "2006-ல் விருதுநகர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தி.மு.க.வில் இணைந்தேன். சென்னை வேளச்சேரி தி.மு.க. பகுதிச்செயலாளர் ரவி, எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர், என்னிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 5 உறுப்பினர்களின் பதவி காலியாக உள்ளது என்றும், அதில் ஒரு உறுப்பினர் பதவியை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

செல்வியைச் சந்தித்தேன் 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு நான் சென்றேன். அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி இருந்தார். அவரிடம், என்னை வேளச்சேரி ரவி அறிமுகம் செய்துவைத்தார். செல்வியின் மருமகன் டாக்டர் ஜோதிமணியின் அக்காள் உமாமகேஸ்வரியும் அப்போது அங்கு இருந்தார்.

எனது கல்வித்தகுதி பற்றி கேட்டறிந்தனர். முன்பணமாக ரூ.25 லட்சம் வேண்டும் என்றார்கள். நான் அடுத்த 2 நாட்களில் எனது மனைவியின் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் பணத்தை அதே ஓட்டலில் உமாமகேஸ்வரியிடம் கொடுத்தேன். 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 23, 24 தேதிகளில் செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக ரூ.50 லட்சமும், மாநாட்டுக்கு பின்பு ரூ.19 லட்சமும், ஆக மொத்தம் ரூ.69 லட்சம் உமாமகேஸ்வரியிடம் வேளச்சேரி ரவி முன்னிலையில் அதே நட்சத்திர ஓட்டலில் கொடுத்தேன்.

பதவி கிடைக்கவில்லை ஆனால், அவர்கள் பேசியபடி தேர்வாணைய உறுப்பினர் பதவி எனக்கு கிடைக்கவில்லை. வேறு 5 பேரை உறுப்பினர்களாக நியமித்தார்கள். உடனே நான் பணத்தை திருப்பி கேட்டேன். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால், கட்சியின் பெரிய பதவி பெற்றுத்தருவதாக கூறினார்கள். நான் கட்சியை விட்டு ஒதுங்கிவிட்டேன். எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்று தெரிவித்தேன். வேளச்சேரி ரவி பணத்தை திருப்பித்தருவதாக சொல்லி ஏமாற்றினார்.

கடந்த 12-ந் தேதி வேளச்சேரி ரவியை சந்தித்து எனது பணத்தை கொடுக்காவிட்டால், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுப்பேன் என்று தெரிவித்தேன். அதற்கு அவர், 'உன்னை யார் என்றே தெரியாது என சொல்லிவிடுவேன்' என்று பதில் அளித்தார். பின்னர் என்னை மிரட்டினார். அப்போது எனது நண்பர் அழகேசன் மற்றும் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

என்னை ஏமாற்றி மோசடி செய்து தற்போது மிரட்டி வரும் வேளச்சேரி ரவி, உமாமகேஸ்வரி மற்றும் செல்வி ஆகியோர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்", என்று கூறியுள்ளார். இந்தப் பணத்தை அவர் ரொக்கமாகவே பல தவணைகளில் கொடுத்தேன்.ஆனால் இதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை, என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

உமா மகேஸ்வரி மறுப்பு இந்த நிலையில், வக்கீல் நல்லதம்பி கொடுத்துள்ள புகார் மனுவில் இடம்பெற்றுள்ள உமாமகேஸ்வரி நேற்று மாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கூறுகையில், "நான் கோபாலபுரத்தில் வசிக்கிறேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். எனது கணவர் சென்னை துறைமுகத்தில் வேலைபார்க்கிறார். என்மீது புகார் கொடுத்துள்ள நல்லதம்பி என்பவரை ஒரேயொரு முறை மட்டும் நட்சத்திர ஓட்டலில் வைத்து பார்த்துள்ளேன். வேளச்சேரி ரவிதான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இவர்தான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி என்று அறிமுகப்படுத்தினார். அவ்வளவுதான் எனக்கு தெரியும். அதன்பிறகு நல்லதம்பியை நான் பார்த்ததே இல்லை.

அவர் என்மீது கொடுத்துள்ள புகார் அனைத்தும் அப்பட்டமான பொய் ஆகும். வேளச்சேரி ரவிக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்த பிரச்சினையில் வேண்டுமென்றே என்னை சிக்க வைத்து, எனது பெயருக்கு களங்கம் உண்டாக்கியுள்ளனர். கடந்த வாரம் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நல்லதம்பியின் பிரச்சினை குறித்து என்னிடம் தெரிவித்தார். நான் அப்போதே இந்த பிரச்சினையில் எனக்கு தொடர்பில்லை என்றும், மிரட்டி பணம் பறிப்பதற்காக என்னையும் இந்த பிரச்சினையில் சிக்கவைக்கிறார்கள் என்றும் கூறிவிட்டேன்.

செல்வியை சந்திக்கவில்லை மேலும் நட்சத்திர ஓட்டலில் செல்வியை சந்தித்ததாகவும் நல்லதம்பி கூறியுள்ளார். அதுவும் தவறான தகவல் ஆகும். நல்லதம்பி எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது செல்வி அங்கு இல்லை. என்மீது கொடுத்துள்ள புகாரை சட்டப்பூர்வமாக சந்திப்பேன்," என்றார்.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் குறித்த விசாரணை, அதிரடி ரெய்டுகள் என பரபரப்பாக உள்ள சூழலில் இந்தப் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பூஜை எவ்வாறு செய்ய வேண்டும்?

பொங்கல் வைக்க உகந்த நேரம்: காலை 7.30 மணி முதல் காலை 9 மணிக்குள்; பொங்கல் வைத்து, பரப்பிரும்மத்தின் பிரத்யக்ஷ ஸ்வரூபமாக விளங்கும் சூரிய பகவானை வணங்குங்கள்! பொங்கல் திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது என்றால், பொங்கலுக்கு முதல் நாளான போகிப்பண்டிகையின் போது நம்மிடமுள்ள கெட்ட குணங்கம் போகின்றன.பொங்கல்  பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கிப் பெருக ஆரம்பிக்கின்றன. மறுநாள் காணும் பொங்கல் எதிர்வரும் (காணும்) காலங்களில் நல்ல எண்ணங்கள் எங்கும் எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள்புரிய கொண்டாடப்படுகிறது.

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை. சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு. அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாகக் கூறுவதாகும். இப்பழமொழி கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு என்று குறிப்பிடுகிறது.

பொங்கல் பூஜை செய்வது எப்படி? இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.  வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புஅளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.

பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும். பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும்,  ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும்.

சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.

இதே நாள்...

  •  தாய்லாந்து தேசிய வன பாதுகாப்பு தினம்
  •  தமிழக கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பிறந்த தினம்(1977)
  •  திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது(1974)
  •  ஸ்‌பெயின் க்யூபாவை இணைத்துக் கொண்டது(1539)
  •  உலகின் முதலாவது 24 மணி நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு துவக்கப்பட்டது(1996)

டாக்டர் அந்தஸ்து மீதான ஆவல்!


வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு, ஸ்டெதஸ்கோப்புடன் பவனிவரும் டாக்டர் என்ற அந்தஸ்து மீதான ஆவல், மாணவர் பருவத்திலிருந்தே பலருக்கும் உருவாக்கப்படுகிறது. நாட்டில் பல லட்சக்கணக்கான மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர ஒவ்வொரு வருடமும் ஆசைப்பட்டாலும், 50 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்களே, ஒவ்வொரு வருடமும் மருத்துவ கல்லூரிகளில் இடம் பெறுகிறார்கள்.

நாட்டின் முக்கிய மாநிலங்களிலுள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கை
மராட்டியம் - 4410, கர்நாடகம் - 4255, ஆந்திரம் - 3675, தமிழகம் - 2865, கேரளா - 1850, உத்திரப் பிரதேசம் - 1662, குஜராத் - 1655, மேற்கு வங்கம் - 1105, மத்தியப் பிரதேசம் - 970, ராஜஸ்தான் - 850, புதுச்சேரி - 775, பஞ்சாப் - 670, டெல்லி - 560, பீகார் - 510, ஒரிசா - 464, அசாம் - 391, ஹரியானா - 350, ஜம்மு-காஷ்மீர் - 350, உத்ரகாண்ட் - 300, சத்தீஷ்கர் - 250, திரிபுரா - 200, ஜார்க்கண்ட் - 190, இமாச்சல் பிரதேஷ் - 115.

மருத்துவக் கல்லூரிகளில் இடம் மாநில மருத்துவக் கல்லூரிகள் அளவில் சற்று பெரியவை என்பதால், வருடத்திற்கு 150-200 மாணவர்களை சேர்க்கின்றன. மேலும், சில தனியார் கல்லூரிகளைத் தவிர்த்து, AIIMS, ஜிப்மர் மற்றும் CMS-Vellore போன்ற பல மத்திய மற்றும் டிரஸ்ட் நிதியுதவி பெறும் கல்லூரிகள், 50-75 இடங்களையே வழங்குகின்றன. எனவே, இந்த புகழ்பெற்ற கல்லூரிகளில், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான போட்டி மிக அதிகமாகவே உள்ளது.மேலும், அதிகளவிலான வெளிநாட்டு மாணவர்களும், மருத்துவம் படிக்க இதுபோன்ற கல்லூரிகளுக்கு வருவதால், உள்நாட்டு மாணவர்களுக்கு இன்னும் நெருக்கடி அதிகரிக்கிறது. உதாரணமாக, கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 1953ம் ஆண்டு நிறுவப்பட்ட கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, தனது மாணவர் எண்ணிக்கையில் 3ல் 2 பங்கு மாணவர்களை வெளிநாடுகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது. அதேபோன்று, தமிழகம், மராட்டியம், ஆந்திரம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலுள்ள சில கல்லூரிகளும் அதிக வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதோடு, அதிக கட்டணங்களுக்கு, தங்களுடைய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளை வழங்குகின்றன.

மருத்துவ படிப்பு மொத்தம் 4.5 வருடங்களைக் கொண்ட மருத்துவப் படிப்பானது, 3 பகுதிகளாகவும், 9 செமஸ்டர்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டரும், 120 கற்பித்தல் நாட்களைக் கொண்டவை. இந்திய மருத்துவக் கவுன்சிலின்(MCI) விதிப்படி, மருத்துவ படிப்பு பயிற்சியானது, அடிப்படை அறிவியல் மற்றும் கிளீனிக் நிலைக்கு முந்தையப் பாடங்களை 1 வருடமும், துணை மருத்துவ அறிவியல் பாடங்களை 1.5 வருடங்களும், கிளீனிக்கல் பாடங்களை 2 வருடங்களும் கொண்டதாக இருக்கும். 1 வருட கட்டாய சுழற்சி இன்டர்ன்ஷிப் -க்கு பிறகு பதிவை பெறலாம். பல மருத்துவக் கல்லூரிகளில், அடிப்படை அறிவியலுடன், கிளீனிக்கல் பாடங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மிக சிறியளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மாணவர்களின், செயல்பாடு, தகவல்தொடர்பு அல்லது நடத்தை மாற்றங்கள் குறித்து மிக சிறிதளவே கவனம் செலுத்தப்படுகிறது.

இன்டர்ன்ஷிப் இறுதி MBBS தேர்வை முடித்தப்பிறகு, முழு பதிவு மற்றும் MBBS பட்டத்தைப் பெறுவதற்கு ஒரு மாணவர், 12 மாதங்களுக்கு கட்டாய ரொட்டேஷனல் இன்டர்ன்ஷிப் செல்ல வேண்டும். இதன்மூலம் ஒருவர் தனது பணியின் நடைமுறை தன்மையை கற்றுக்கொள்ள முடிகிறது. இந்த 12 மாதங்கள் இன்டர்ன்ஷிப்பில் 6 மாதங்கள், ஒருவர் படிக்கும் கல்லூரி மருத்துவமனை அல்லது மாவட்ட மருத்துவமனையிலும், 3 மாதங்கள் சிறியளவிலான மாவட்ட/தாலுகா/சமூக சுகாதார மையங்களிலும், 3 மாதங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணிபுரிய வேண்டும்.

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்க வேண்டும்!

டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இதேபோல் ராகுல் திராவிட், லட்சுமண் ஆகியோரும் ஓய்வுபெறுவதை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், முன்னாள் வீரர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது, தோனி உள்ளிட்டோருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் மதன்லால், டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "தோனி மகிழ்ச்சியோடு விளையாடவில்லை. அதனால் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன். அவருக்குப் பதிலாக புதிய சிந்தனையுள்ள ஒருவரை கேப்டனாக கொண்டுவர வேண்டிய நேரம் இது' என்றார்.  

முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈடன் கார்டனில் லட்சுமணும், திராவிடும் சிறப்பாக விளையாடியதைப் போன்று இப்போதும் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் அப்போது இளமையாக இருந்தார்கள். இப்போது 40 வயதை நெருங்கிவிட்டனர். மூத்த வீரர்கள் சரியான நேரத்தில் அவர்களாகவே ஓய்வுபெற்றுவிட வேண்டும் என்று நான் எப்பொழுதுமே கூறி வருகிறேன். வெளிநாட்டில் நடைபெறவுள்ள அடுத்த டெஸ்ட் தொடரில் அவர்களுக்குப் பதிலாக மாற்றுவீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். திராவிட், லட்சுமண் இருவரும் இந்திய ஆடுகளங்களில் தொடர்ந்து ரன் குவிப்பார்கள். அடுத்த டெஸ்ட் தொடர் 2013-ல் தான் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு திராவிட், லட்சுமண் இருவரும் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும். பெர்த் டெஸ்டில் இந்தியாவின் தோல்வியைத் தவிர்க்க முடியாது. அடிலெய்டில் நடைபெறவுள்ள 4-வது டெஸ்டிலும் இந்தியா தோல்வியடையலாம். இந்த டெஸ்ட் தொடருக்குப் பின் இந்திய அணியில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். அவ்வாறு செய்தால்தான் இந்திய கிரிக்கெட் நன்றாக இருக்கும். அடுத்த 3 இன்னிங்ஸ்களில் தோனி சிறப்பாக ஆடி தன்னை ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் ஆடும் லெவனில் அவர் விளையாடுவது சந்தேகமாகிவிடும் என்றார்.

முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை போதிய அளவு மேற்கொள்ளவில்லை. பிசிசிஐ கிரிக்கெட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதிலும், பணம் சம்பாதிப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் என்ன பயன்? இந்திய அணி, வெளிநாடுகளில் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறதே. அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது போன்ற நிலையே காணப்படுகிறது. தோனி தொடர்ந்து இதுபோன்று மோசமாகவும், டெஸ்ட் போட்டியில் வேண்டா வெறுப்பாகவும் விளையாடினால், அவர் தனது கேப்டன் பதவியை இழக்கக்கூடிய நாள் வெகுவிரைவில் இருக்கும் என்றார். அணியில் உள்ள சில வீரர்கள், சேவாக் கேப்டனாக வரவேண்டும் என்று கூறியதாக சில நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தோனிக்கு இப்போது மூத்த வீரர்கள் மூலம் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...