கேரளா அருகே 2 மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஒரு கோடி நிவாரணமாக கொடுத்து சட்டத்தை வளைக்க இத்தாலி நாட்டினர் பார்க்கின்றனர். இது பெரும் கண்டனத்திற்குரியது, இந்திய அரசியல் சட்டமைப்புடன் விளையாட வேண்டாம் என இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியுள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொல்லம் அருகே கடல் பகுதியில் 2 மீனவர்களை இத்தாலி கப்பலில் வந்த படையினர் சுட்டு கொன்றனர். கடற்கொள்ளையர்கள் என நினைத்து சுட்டதாக கூறினர். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து இரு இத்தாலியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தாலியர்களை மீட்க அந்நாட்டு அரசு அதிகாரிகள் இந்தியா வந்து கடும் முயற்சி மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக பலியான மீனவர் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி வழங்குவதாக பேரம் பேசி முடிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 30 லட்சம் வரை வழங்கப்பட்டு விட்டது. இதனை வைத்து கோர்ட்டிற்கு வெளியே சமரசம் மூலம் நாங்கள் பேசி முடித்து கொள்கிறோம். என மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.
கப்பல் மற்றும் 2 இத்தாலியர்களை விடுவிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தங்களுக்கு மன வேதனையை தருவதாகவும், இது அனுமதிக்க முடியாது என்றும், இது போன்ற புதிய ஒரு நடைமுறை நிறைவேற்றுவது தவறானது. இந்திய சட்டமைப்புகளுடன் இத்தாலி விளையாட வேண்டாம் என்றும் கூறினர். கேரள அரசு எப்படி இதனை ஏற்றுக்கொண்டது என்றும் கேள்வி எழுப்பினர். இந்த மனு மீதான உத்தரவு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் இத்தாலியினர் விடுதலைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது