|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 April, 2012

உழைக்கும் மக்களே....



மனித குலம் வாழ உழைப்பும், உழைப்பினால் உற்பத்தியும் தேவையாகிறது. உழைப்பவர்களால் தான் உணவுப் பொருட்கள் உயிரினம் வாழ உதவுகிறது. தொழிலாளர்களின் உழைப்பால் தேவைப்படும் பண்டங்கள் சரக்குகள் உற்பத்தியாகின்றன. இவற்றைக் கொண்டே மனிதகுலம் வாழ்ந்து, முன்னேறிவருகிறது. மனிதகுலத்தையே வாழ்வித்தும், வளர்த்தும் வரும் உற்பத்தியாளர்களான உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு, உலகம் முழுவதிலும் சுரண்டப்படுகிறது. உரிமைகள் மறுக்கப்படுகிறது.மனித குலத்தையே வாழ்வித்துவரும் தொழிலாளர்கள், வாழ்வாதாரத்துக்காகவே போராடுகிறார்கள் உரிமைகள் மறுக்கப்படுவதால், போராடுவதற்காகவே வாழ்ந்து வருகிறார்கள்.
உரிமைப் போராட்டத்தின் முதல் பெரும் எழுச்சியாக அமெரிக்கக்கண்டத்தில், சிகாகோவில் 1886-ம் ஆண்டு மே முதல் நாளன்று திரண்டு உரிமைக் குரல் எழுப்பிய நாளாகும். தொழிலாளர்கள் காலை முதல் நள்ளிரவு வரை கால வரம்பின்றி உழைக்க அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலம் அது.


- எனவே எட்டு மணிநேர வேலை
- இழந்த சக்தியை மீட்டுப்பெற எட்டு மணிநேர ஓய்வு
- சமுதாயத்திதோடு வாழ எட்டு மணிநேரம்
- என்ற அடிப்படை கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது.


அது ராணுவமும், காவல்துறையும் கட்டவிழ்த்து விட்டு துப்பாக்கிப் பிரயோகத்தால் பலரது உயிரைப் பறித்தது. ரத்தக்காடாயிற்று, மைதானம். தலைமை தாங்கியோர் கைது செய்யப்பட்டு, பொய்க் குற்றச்சாட்டுக்களால் ஜோடிக்கப்பட்ட வழக்கில் - இறுதியில் தூக்கிலிடப்பட்டனர். இது நிகழ்ந்தது 1886-ல், 1890-ல் பாரிஸ் மாநகரில் திரண்ட உழைப்பாளர் மாநாட்டில், காரல் மார்க்சும், ஏங்கல்சும், இனி ஆண்டுதோறும் மே முதல் நாளை, உலகத் தொழிலாளர்கள், உலகத் தொழிலாளர்களின் உரிமை போர் முழக்க நாளாகக் கடைப்பிடிக்க அறைகூவல் விட்டனர்.இப்போது உலகம் முழுவதிலும் மே தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் எட்டு மணி நேர வேலை என்பது சட்டமாக்கப்பட்டு, நடைமுறைக்கும் வந்துள்ளது.தொழிலாளர் எழுப்பி, ரத்தம் சிந்திய முதல் கோரிக்கை வென்று தொடர்ந்து முன்னேறி வருகிறது.இதைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் பல உரிமைப் போராட்டங்களை நடத்தி, பல அரசுகளிடம் பல உரிமைகளைப் பெற்றுள்ளனர்.
சட்டம் இருந்தாலும் அது மீறப்படுவது நடக்கிறது.


தொழிலாளர்கள், சங்கம் அமைத்துப் போராடும் உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது.
தொழிலாளி வர்க்கம் ஊதிய உயர்வு பசஞ்ப்படி, போனஸ், என சில உரிமைகளைப் பெற்று இருந்தாலும், விலையேற்றம், பணி நீக்கம், ஆலை மூடல் என்பதோடு, அவர்கள் எந்தத்துறையில் எவ்வளவு பாதுகாப்புடன் பணிபுரிந்தாலும், அனைவருமே சுரண்டப்படுவதிலிருந்து விடுதலை பெறவே இல்லை.
தன்னையும் விடுவித்துக் கொண்டு மனித குலத்தையும் விடுவிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உலகத் தொழிலாளி வர்க்கம் நிறைவேற்ற, தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
முதலாளித்துவம் அசுர வளர்ச்சியைக் கண்டதால், பலத்தையும் பெற்று, உலகத்தையே ஒரு சந்தையாக ஆக்கி, தன் ஆதிக்கத்திற்குள் பிடித்து வைப்பதில் முன்னேறியிருப்பதோடு, உச்ச வரம்பே இல்லாத லாப வெறிகாரணமாக உலக முதலாளித்துவம் இயற்கைச் செல்வங்களைச் சிதைத்து சீரழித்து வருகிறது. இதனால் பூமண்டலமே வெப்பமனடந்து வெடிப்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது.
லாபப் பேராசைக்கு ஒரு கடிவாளம் போடும் மக்கள் நல அரசுகள் மலர வேண்டும். இயற்கைச் சூழல் காக்கப்பட வேண்டும் இயற்கை அழிவைத் தடுப்பதன் மூலமே பூமண்டல அழிவையும் தடுக்க இயலும் ஆதலால், சமதர்ம சமூதாயம் மலர, தொழிலாளவர்க்கம் அரசியல் தலைமை ஏற்க முன்னேற வேண்டும்.உயிரினம் வாழ உதவி வந்த தொழிலாளி வர்க்கம், இப்பூமண்டலத்தை அழிவிலிருந்து தடுத்து உயிரினத்தைக் காத்திட இந்த மேதின நாளில் உறுதி வேண்டுகிறேன். மே தின புரட்சிகர வாழ்த்துக்களை...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...