சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிக்கப் போவதாக உறுதியளித்துள்ளது என இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலின் 19 வது கூட்டம் துவங்கியது. கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய கமிஷனர் நவநீதம் பிள்ளை, தனது உரையில் இலங்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சிரியா விவகாரம் தற்போது சூடுபிடித்திருப்பதால் அது பற்றி மட்டுமே குறிப்பிட்டார். எனினும், கவுன்சிலுக்கு அளிக்கப்படும் பரிந்துரையின் அடிப்படையில், உறுப்பு நாடுகளில் ஆய்வு செய்யும் சர்வதேச அமைப்பு எதையும் கவுன்சில் உருவாக்கவில்லை என்று மட்டும் தெரிவித்திருந்தார்.
என்ன தீர்மானம்? இலங்கை அரசு நியமித்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியும், அவ்விதம் இலங்கை செயற்படுத்தாத போது, இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்றை அமைத்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரியும், அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கவுன்சிலில் கொண்டு வரத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தீர்மானம் மார்ச் இரண்டாம் வாரத்தில் தாக்கலாகலாம் எனத் தெரிகிறது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, சில தென் அமெரிக்க நாடுகள் ஆகியவை ஆதரவளிக்கும் எனவும் தெரிகிறது.
இலங்கை தொடர் பிரசாரம்: இந்த ஆதரவை முறியடிக்கும் விதத்தில், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஒரு வாரத்திற்கு முன்பே ஜெனீவா சென்று அங்கு சர்வதேச பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். இலங்கை அமைச்சர்கள் மேலும் சிலர், ஆப்ரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டனர். அதிபர் ராஜபக்ஷேவும், சிங்கப்பூர், பாகிஸ்தானுக்குச் சென்று வந்தார். இந்நிலையில், அமைச்சர் பீரீஸ் மீண்டும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அவசரமாக சென்றுள்ளார் என இலங்கை பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
அமைச்சர்கள் பேச்சு: நேற்று முன்தினம் ஜெனீவா கூட்டத்தில் பேசிய இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க,"தீர்மானத்தை தோற்கடிப்பதில் இந்தியா எங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம். எல்.எல்.ஆர்.சி., பரிந்துரைகளை ஏற்கனவே அமல்படுத்தத் துவங்கி விட்டதால் அதுகுறித்து ஒரு தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை' எனத் தெரிவித்தார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியில், "இவ்விவகாரத்தில் இந்தியா எங்கள் பக்கம் இருக்கிறது. இதுகுறித்து இந்தியாவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டது. இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என 100 சதவீதம் நம்புகிறோம்' என்றார். இதே கருத்தை, அமைச்சர் திஸ்ஸ விதரணவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு ஆதரவாக, இலங்கைக்கு இந்தியா துரோகம் செய்யாது எனக் கூறியுள்ளார். இலங்கை கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இதுகுறித்துக் கூறுகையில்,"மேற்குலக நாடுகளின் தீர்மானத்தைத் தோற்கடிக்க ஆதரவு தருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலாஹி உறுதியளித்துள்ளார்' என்றார்.
ஆர்ப்பாட்டங்கள்: அதேநேரம், தீர்மானத்தை எதிர்த்து இலங்கை முழுவதும் நேற்று முன்தினம் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என மக்களை அரசு நிர்பந்தப்படுத்தி வரச் செய்ததன் மூலம் தனது குறைகளை மறைக்க முயல்வதாக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இத்தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு சரிவரத் தெரியாத நிலையில் இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு இந்திய அரசியல் உலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பிரதமருக்கு வைகோ கடிதம்: ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதுகுறித்து எழுதியிருப்பதாவது: இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மகிந்த சமரசிங்கே கூறியிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இந்திய ஐகமிஷனர் அசோக் கே. காந்தா, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து, இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாக உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகள் உண்மை தான் என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா இழைக்கப் போகும் மன்னிக்க முடியாத மாபெரும் வஞ்சனையாக இது இருக்கும். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்குமானால், தமிழர் இனப் படுகொலைக்கு எதிரான கூட்டுக் குற்றவாளியாக இந்தியா நிற்க வேண்டி வரும். இவ்வாறு வைகோ அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.