மாமனார், மாமியார் மீது அன்பு செலுத்துங்கள். ஆமா கிடக்குதுங்க கிழவன், கிழவி என்று முகத்தை சுளிக்க வேண்டாம். அவர்கள் இல்லாமல் உங்கள் கணவர் இல்லை. உங்கள் பெற்றோரைக் கவனிப்பது போன்று நினைத்து மாமனார், மாமியாரையும் அன்பாகப் பார்ததுக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களை அவர்கள் தங்கள் உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். உங்கள் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை அடிக்கடி சமைத்து அசத்துங்கள். அவர் வயிறு நிறையும்போது மனமும் நிறையும். அடடா என் மனைவி எனக்கு பிடித்த உணவையே சமைக்கிறாளே என்று பெருமிதப்படுவார்.
அவர் ஆபீசுக்கு கிளம்புகிறாரா? அவரது உடை, ஷூ, பேக் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து கொடுத்து உதவுங்கள். அது அவரின் மனதை இலேசாக்கும். என் மனைவி பார்த்து, பார்த்து பணிவிடை செய்கிறாள் என்று கூறி பெருமைபடுவார். அவர் பணிக்கு செல்லும்போது நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். அவ்வாறு செய்தால் அன்றைய நாள் அவருக்கு இனிய நாளாக இருக்கும். பணி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மீண்டும் நெற்றியில் முத்தமிடுங்கள். அது மாலைப் பொழுதை இனிமையாக்கும். அவருக்கு பிடித்த மாதிரி உடை அணியுங்கள். குண்டானவரா, உடம்பைக் குறைக்கும் வழியைப் பாருங்கள். கணவரின் கண்ணுக்கு சிக்கென்று தெரியும்படி இருங்கள். பேச்சைக் குறைத்து அவரைப் பேசவிட்டு கேளுங்கள். எப்பொழுது பார்த்தாலும் தொண, தொணத்தாலும் ஆண்களுக்கு பிடிக்காது. அது அவர்களை எரிச்சலடையச் செய்யும். படுக்கை அறையில் அவர் தேவை அறிந்து நடந்து கொள்ளுங்கள். இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய செய்யலாம்...!