|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 September, 2011

இதே நாள்...


  • கம்போடியா, அரசியலமைப்பு தினம்
  •  முகமது நபி, மெக்காவில் இருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்தார்(622)
  •  உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது(1979)
  •  ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது(1948)
  •  அமெரிக்க ஐகோர்ட் நிறுவப்பட்டது(1789)
  • திருச்சி தேர்தல் ரூ.40 லட்சம் பணமும், 34 கிலோ (8,080 பவுன்) எடை கொண்ட தங்க நகைகளும் பறிமுதல்!


    திருச்சி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்கும் நோக்கில் தொகுதி மற்றும் பகுதிகளில் போலீசார்- தேர்தல் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் நேற்று நள்ளிரவில் நடத்திய சோதனையில் ரூ. 10 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் சிக்கியது. திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அக்- 13 ல் நடக்கிறது. பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள கருமண்டபம் சோதனைச்சாவடி எண்1-ல் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, ஏட்டுகள் தங்கசாமி, ரவி ஆகியோர் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    திண்டுக்கல்லில் இருந்து வந்த ஒரு காரை சோதனையிட்டனர். காரில் 3 பைகள் இருந்தபைகளில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுக்கள், தங்க நகைகள் இருந்தது. இதில் மொத்தம் ரூ.40 லட்சம் பணமும், 34 கிலோ (8,080 பவுன்) எடை கொண்ட தங்க நகைகளும் இருந்தன. நகைகளின் மதிப்பு ரூ.9 1/2 கோடி ஆகும். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஜெயஸ்ரீ, உதவி கலெக்டர் சம்பத் ஆகியோரும் விரைந்து வந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த காரை திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். காரில் இருந்த இருவரது பெயர் ரமேஷ் மற்றும் ரவிச்சந்திரன் என்றும் திருச்சி பெரிய கடைவீதியில் அங்காளம்மன் கோவில் அருகே பிரபல நகை கடை நடத்தி வருவதாகவும் கூறினர்.

    தேனிக்கு சென்று நகைகளை விற்று விட்டு திருச்சிக்கு திரும்பி வருவதாக தெரிவித்தனர். வாக்காளர்களுக்கு கொடுக்க நகை-பணம் எடுத்து வரப்பட்டிருக்குமோ என்ற அடிப்படையில் கைப்பற்றிய 34 கிலோ தங்க நகைகள், ரொக்க பணம் ரூ.40 லட்சம் ஆகியவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காட்டி திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். கடந்த சட்டசபை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.5 கோடி பணத்தை இதுவரை யாரும் கேட்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி தேசிய விருது வென்ற ஆதாமிண்டே மகன் அபு படம் ஆஸ்கருக்கு செல்கிறது!


    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் போது, சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர்  விருதுக்கு இந்தியாவில் இருந்து ஒரு படம் தேர்வு செய்யப்படும். எடிட்டர் பி.லெனினைத் தலைவராகக் கொண்ட 14 பேர் கொண்ட குழு இந்தியாவிலிருந்து, இந்த ஆண்டு அனுப்பப்படும் படத்தைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கங்கை அமரன், ஏ.எஸ்.பிரகாசம் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். 

    இந்தியாவின் பல்வேறு மொழி படங்களில், தமிழில் இருந்து தெய்வத்திருமகள், கோ, ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து படங்களுடன் மொத்தம் 16 படங்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான, "ஆதாமிண்டே மகன் அபு" படம் தேர்வானது. சலிம் அகமது இயக்கியிருந்த இந்தபடத்தில் ஹீரோவாக சலிம் குமார் நடித்து இருந்தார். மாநில விருது, தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

    ஊழலுக்கு வித்திட்ட தயாநிதி பிரதமருக்கு எழுதிய aகடிதம் அம்பலம்!

    தயாநிதி தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் சுதந்திரமாக செயல்பட்டு தனது துறையே முடிவு செய்வதற்கு அனுமதிக்குமாறும், அமைச்சரவை குழுவின் அறிவுரை ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார். இதற்கு பிரதமர் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துக்கொண்டதால் ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு பிரதமரும் காரணமாக அமைந்து விட்டதாகவும், இவரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் அரசியல் மேலும் சூடு பிடிக்கும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

    2 ஜி ஸ்பெகட்ரம் முறைகேடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி விழுங்கி நிற்கிறது. இந்த ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்து மத்திய அமைச்சர் ராஜா முதல் கனிமொழி மற்றும் மெகா கம்பெனிகளின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிற வேளையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊழலுக்கு வழி ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனால் சிதம்பரம் பதவி விலக வேண்டும்; இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வருகின்றன.

    இந்நிலையில் தொலை தொடர்பு துறையில் ( 2004 முதல் 2007 வரை ) மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி ( ஊழல் காரணமாக அமைச்சர் பதவியை இழந்தவர்) ஸ்பெக்ட்ரம் விதி நிர்ணயம் மற்றும் எந்த அளவுக்கு விற்கலாம் என்ற விஷயத்தில் அமைச்சரவை குழு எடுத்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியிருக்கிறது. இந்த கடிதம் மூலம் தானே விலை நிர்ணயத்தில் ராஜாங்கம் நடத்தி ஆதாயம் தேட தயாநிதி முயற்சித்துள்ளார் என்று தெரிய வந்திருக்கிறது. தகவல் அறியும் சட்டம் மூலம் விவேக்கார்க் என்பவர் இந்த கடித நகலை பெற்றுள்ளார். 

    2006 ஜனவரி மாதம் பாதுகாப்பு துறை பரிந்துரையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பது மற்றும் விலை நிர்ணயத்திற்கு அமைச்சரவை குழு பரிந்துரைக்க ஒப்புதல் வழங்கினார் பிரதமர். இதன்படி அமைச்சரவை குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால் பிரதமரும், தயாநிதியும் சந்தித்து ( பிப். 1ல் ) பேசிய பின்னர் தலைகீழாக மாறியது.

    "சீக்ரெட்" லெட்டர் ஊருக்கு தெரிந்தது: பரிந்துரைகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சரவை குழுவிற்கு பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் வெளியானதை தொடர்ந்து தயாநிதி பொறுமினார். இதனையடுத்து அவர் பிரதமருக்கு 2006 பிப்., 28 ம் தேதி கடிதம் ஒன்று எழுதி அனுப்புகிறார். இந்த கடிதம் “ சீக்ரெட் “ என்று மேலிடத்தில் குறியிடப்பட்டுள்ளது. இதில், அமைச்சரவை குழுவின் பரிந்துரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அந்தக்குழுவிற்கு தாங்கள் அளித்துள்ள அறிவுரைகள் நாம்பேசிக்கொண்டதற்கு மாறாக உள்ளது. இது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைதொடர்பு துறையே சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதற்கு பிரதமர் பிரதமர் மவுனம் காத்தார். இவரது அலுவலகம் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை .

    இதனையடுத்து தயாநிதி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரத்தை விற்க துவங்கினார். இதே வழியில் 2008 ல் பதவிக்கு வந்த ராஜாவும் பின்பற்றியிருக்கிறார். இதனால் ஸ்பெக்ட்ரம் பெரும் ஊழலில் சிக்கியது. இதன் மூலம் இந்த ஊழலுக்கு வித்திட்டவர் தயாநிதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. இதன் காரணமாக பிரதமரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் வலுப்படுகிறது,கூட்டணி தர்மம் காக்க வேண்டியுள்ளது: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்தரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இந்த அரசாங்கம் பல்வேறு முடிவுகளை எடுக்கும் போது கூட்டணி தர்மத்தையும் காக்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    சி.பி.ஐ.,விசாரிக்குமா தயாநிதியை ? : ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் ஸ்பெகட்ரம் கேட்டு விண்ணப்பித்தபோது இவருக்கு தயாநிதி உரிமம் வழங்காமல் காலம் தாமதித்து வந்தார். இதனால் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்க வேண்டியதாயிற்று. இதனை வாங்கிய மலேசிய மாக்ஸிஸ் துணை நிறுவனம் சன்குழுமத்தில் பல கோடிகளை பங்குகளை வாங்கியது. இதன் முன் நடவடிக்கையாக மிரட்டியதாகவும் இவர் அளித்த புகாரின்படி தயாநிதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின இதன் அடிப்படையில் தயாநிதியிடம் சி.பி.ஐ., விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இதில் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் தொடர்ந்து விசாரிக்க முடியாமல் இருக்கிறோம் என சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் முழுமையாக கைவிட்டு விட்டோம் என்று சொல்ல முடியாது என்று சி.பி.ஐ., தெரிவித்தது. மேலும் வரும் 30 ம் தேதிக்குள் 3 வது குற்றச்சாட்டுக்கள் பதியவிருப்பதா இருந்தது இன்னும் தள்ளிப்போகும் என தெரிகிறது . இதில் சி.பி.ஐ., தயாநிதி குறித்து நிலை தெரிய வரும் என சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியாகியிருப்பதால் இது ஸ்பெக்ட்ரம் ஊழலின் சங்கிலி தொடர் விசாரணைக்கு துணையாக இருக்கும் என தெரிகிறது. 

    நான் செய்தது தவறு என்றால் எனக்கு முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த அனைவரும் சிறையில் தள்ளப்பட வேண்டும் என கோர்ட்டில் ராஜா அளித்த வாதத்தின்படி தயாநிதியிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்துமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும். இதற்கிடையில் தே.ஜ., கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வத்ந்சிங்கிடம் இன்று ( 24 ம் தேதி) சி.பி.ஐ., விசாரணை நடத்தி அவர் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறது.

    பிரதமர் டில்லிக்கு எப்போது வருவார் ? பிரதமர் மன்மோகன்சிங் தற்போது ஐ.நா., குழு கூட்டத்தில் பங்கேற்க சென்றிருப்பதால் அவர் டில்லிக்கு எப்போது திரும்புவார் ( வரும் செவ்வாய்க்கிழமை) என அரசியல் கட்சிகள் காத்து நிற்கின்றன. இவர் வந்ததும் சிதம்பரம் குறித்த நிதி அமைச்சக கடிதம் மற்றும் தயாநிதி பிரதமருக்கு அனுப்பிய கடிதம் குறித்து கேள்விகள் எழுப்பப்படும். இதற்கு என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்து அரசியலின் அடுத்த நகர்வுகள் இருக்கும்.

    அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் சட்டசபைத் தேர்தலில் அமைத்த கூட்டணியை கலைத்துவிட்டு, தனித்தனியாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன!


    அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் சட்டசபைத் தேர்தலில் அமைத்த கூட்டணியை கலைத்துவிட்டு, தனித்தனியாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன. முக்கிய கட்சிகளான இவை இரண்டும் எடுத்த முடிவால், அக்கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு, தனித்தனியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின், கூட்டணி இல்லாத ஒரு தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் என, ஏழு முனை போட்டி உருவாகியுள்ளது. இவர்கள் தவிர, பா.ஜ.,வும், கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்துள்ளன.

    அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சிகளையும் மையமாக வைத்தே கூட்டணிகள் அமைந்து வந்தன. அவ்விரு கூட்டணிகளில் எந்தக் கூட்டணி வெற்றி பெறுகிறதோ, அக்கூட்டணியில் உள்ள கட்சிகளும் வெற்றியைத் தழுவின. இதனால், தனிக் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு புலப்படாமலேயே இருக்கிறது. கடந்த பல தேர்தல்களில் இந்த நிலையே நீடித்து வந்தது. முதன் முறையாக முக்கிய கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. இதில் வாங்கும் ஓட்டுகளே அவற்றுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை வெளிப்படுத்தும். எனவே, கணிசமான ஓட்டுகளைப் பெற, ஒவ்வொரு கட்சியும் பலத்த போட்டியில் இறங்குகின்றன. இதனால், வேட்பாளர்கள் தேர்வில் ஒவ்வொரு கட்சியும் தனி கவனம் செலுத்துகிறது. மக்கள் மத்தியில், குற்றச்சாட்டு உள்ளவர்களை தவிர்க்கும் வகையிலேயே, வேட்பாளர்கள் தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் கட்சிகளைக் கடந்து வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வேட்பாளர் தேர்வில் இதுவும் முக்கிய இடம் பிடிக்கிறது.

    சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம், உள்ளாட்சித் தேர்தலில் தொடரும் என்ற கணிப்புகள் உள்ளன. ஆனால், ஏழு முனை போட்டி என்ன மாற்றத்தை உருவாக்குமோ? என்ற பரபரப்பு அதிகரித்து வருகிறது. சட்டசபைத் தேர்தலில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க., தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியோடு, நில அபகரிப்பு வழக்கு என கடும் நெருக்கடியில் உள்ள தி.மு.க., மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சியில் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    கூட்டணி இல்லை என்ற நிலையில் தே.மு.தி.க., அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியிடுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தல், இக்கட்சிக்கு புதிய முகவரியை ஏற்படுத்தியது. சட்டசபைத் தேர்தல், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இப்போது மீண்டும் தனித்துப் போட்டியிடுவதால், மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை உறுதி செய்து கொள்ளும் நிலையில் தேர்தலைச் சந்திக்கிறது. காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு, உள்ளாட்சித் தேர்தல் பெரும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தனித்துப் போட்டி என்பது இக்கட்சிகளுக்கு பலப்பரீட்சையாகவே இருக்கும்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...