|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 September, 2011

ஊழலுக்கு வித்திட்ட தயாநிதி பிரதமருக்கு எழுதிய aகடிதம் அம்பலம்!

தயாநிதி தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் சுதந்திரமாக செயல்பட்டு தனது துறையே முடிவு செய்வதற்கு அனுமதிக்குமாறும், அமைச்சரவை குழுவின் அறிவுரை ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார். இதற்கு பிரதமர் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துக்கொண்டதால் ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு பிரதமரும் காரணமாக அமைந்து விட்டதாகவும், இவரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் அரசியல் மேலும் சூடு பிடிக்கும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

2 ஜி ஸ்பெகட்ரம் முறைகேடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி விழுங்கி நிற்கிறது. இந்த ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்து மத்திய அமைச்சர் ராஜா முதல் கனிமொழி மற்றும் மெகா கம்பெனிகளின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிற வேளையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊழலுக்கு வழி ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனால் சிதம்பரம் பதவி விலக வேண்டும்; இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரி வருகின்றன.

இந்நிலையில் தொலை தொடர்பு துறையில் ( 2004 முதல் 2007 வரை ) மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி ( ஊழல் காரணமாக அமைச்சர் பதவியை இழந்தவர்) ஸ்பெக்ட்ரம் விதி நிர்ணயம் மற்றும் எந்த அளவுக்கு விற்கலாம் என்ற விஷயத்தில் அமைச்சரவை குழு எடுத்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியிருக்கிறது. இந்த கடிதம் மூலம் தானே விலை நிர்ணயத்தில் ராஜாங்கம் நடத்தி ஆதாயம் தேட தயாநிதி முயற்சித்துள்ளார் என்று தெரிய வந்திருக்கிறது. தகவல் அறியும் சட்டம் மூலம் விவேக்கார்க் என்பவர் இந்த கடித நகலை பெற்றுள்ளார். 

2006 ஜனவரி மாதம் பாதுகாப்பு துறை பரிந்துரையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பது மற்றும் விலை நிர்ணயத்திற்கு அமைச்சரவை குழு பரிந்துரைக்க ஒப்புதல் வழங்கினார் பிரதமர். இதன்படி அமைச்சரவை குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால் பிரதமரும், தயாநிதியும் சந்தித்து ( பிப். 1ல் ) பேசிய பின்னர் தலைகீழாக மாறியது.

"சீக்ரெட்" லெட்டர் ஊருக்கு தெரிந்தது: பரிந்துரைகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சரவை குழுவிற்கு பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் வெளியானதை தொடர்ந்து தயாநிதி பொறுமினார். இதனையடுத்து அவர் பிரதமருக்கு 2006 பிப்., 28 ம் தேதி கடிதம் ஒன்று எழுதி அனுப்புகிறார். இந்த கடிதம் “ சீக்ரெட் “ என்று மேலிடத்தில் குறியிடப்பட்டுள்ளது. இதில், அமைச்சரவை குழுவின் பரிந்துரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அந்தக்குழுவிற்கு தாங்கள் அளித்துள்ள அறிவுரைகள் நாம்பேசிக்கொண்டதற்கு மாறாக உள்ளது. இது எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைதொடர்பு துறையே சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதற்கு பிரதமர் பிரதமர் மவுனம் காத்தார். இவரது அலுவலகம் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை .

இதனையடுத்து தயாநிதி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரத்தை விற்க துவங்கினார். இதே வழியில் 2008 ல் பதவிக்கு வந்த ராஜாவும் பின்பற்றியிருக்கிறார். இதனால் ஸ்பெக்ட்ரம் பெரும் ஊழலில் சிக்கியது. இதன் மூலம் இந்த ஊழலுக்கு வித்திட்டவர் தயாநிதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. இதன் காரணமாக பிரதமரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் வலுப்படுகிறது,கூட்டணி தர்மம் காக்க வேண்டியுள்ளது: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்தரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இந்த அரசாங்கம் பல்வேறு முடிவுகளை எடுக்கும் போது கூட்டணி தர்மத்தையும் காக்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



சி.பி.ஐ.,விசாரிக்குமா தயாநிதியை ? : ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் ஸ்பெகட்ரம் கேட்டு விண்ணப்பித்தபோது இவருக்கு தயாநிதி உரிமம் வழங்காமல் காலம் தாமதித்து வந்தார். இதனால் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்க வேண்டியதாயிற்று. இதனை வாங்கிய மலேசிய மாக்ஸிஸ் துணை நிறுவனம் சன்குழுமத்தில் பல கோடிகளை பங்குகளை வாங்கியது. இதன் முன் நடவடிக்கையாக மிரட்டியதாகவும் இவர் அளித்த புகாரின்படி தயாநிதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின இதன் அடிப்படையில் தயாநிதியிடம் சி.பி.ஐ., விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதில் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் தொடர்ந்து விசாரிக்க முடியாமல் இருக்கிறோம் என சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் முழுமையாக கைவிட்டு விட்டோம் என்று சொல்ல முடியாது என்று சி.பி.ஐ., தெரிவித்தது. மேலும் வரும் 30 ம் தேதிக்குள் 3 வது குற்றச்சாட்டுக்கள் பதியவிருப்பதா இருந்தது இன்னும் தள்ளிப்போகும் என தெரிகிறது . இதில் சி.பி.ஐ., தயாநிதி குறித்து நிலை தெரிய வரும் என சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியாகியிருப்பதால் இது ஸ்பெக்ட்ரம் ஊழலின் சங்கிலி தொடர் விசாரணைக்கு துணையாக இருக்கும் என தெரிகிறது. 

நான் செய்தது தவறு என்றால் எனக்கு முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த அனைவரும் சிறையில் தள்ளப்பட வேண்டும் என கோர்ட்டில் ராஜா அளித்த வாதத்தின்படி தயாநிதியிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்துமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும். இதற்கிடையில் தே.ஜ., கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வத்ந்சிங்கிடம் இன்று ( 24 ம் தேதி) சி.பி.ஐ., விசாரணை நடத்தி அவர் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறது.

பிரதமர் டில்லிக்கு எப்போது வருவார் ? பிரதமர் மன்மோகன்சிங் தற்போது ஐ.நா., குழு கூட்டத்தில் பங்கேற்க சென்றிருப்பதால் அவர் டில்லிக்கு எப்போது திரும்புவார் ( வரும் செவ்வாய்க்கிழமை) என அரசியல் கட்சிகள் காத்து நிற்கின்றன. இவர் வந்ததும் சிதம்பரம் குறித்த நிதி அமைச்சக கடிதம் மற்றும் தயாநிதி பிரதமருக்கு அனுப்பிய கடிதம் குறித்து கேள்விகள் எழுப்பப்படும். இதற்கு என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்து அரசியலின் அடுத்த நகர்வுகள் இருக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...