|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 September, 2011

அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் சட்டசபைத் தேர்தலில் அமைத்த கூட்டணியை கலைத்துவிட்டு, தனித்தனியாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன!


அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் சட்டசபைத் தேர்தலில் அமைத்த கூட்டணியை கலைத்துவிட்டு, தனித்தனியாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன. முக்கிய கட்சிகளான இவை இரண்டும் எடுத்த முடிவால், அக்கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு, தனித்தனியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின், கூட்டணி இல்லாத ஒரு தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் என, ஏழு முனை போட்டி உருவாகியுள்ளது. இவர்கள் தவிர, பா.ஜ.,வும், கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்துள்ளன.

அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சிகளையும் மையமாக வைத்தே கூட்டணிகள் அமைந்து வந்தன. அவ்விரு கூட்டணிகளில் எந்தக் கூட்டணி வெற்றி பெறுகிறதோ, அக்கூட்டணியில் உள்ள கட்சிகளும் வெற்றியைத் தழுவின. இதனால், தனிக் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு புலப்படாமலேயே இருக்கிறது. கடந்த பல தேர்தல்களில் இந்த நிலையே நீடித்து வந்தது. முதன் முறையாக முக்கிய கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. இதில் வாங்கும் ஓட்டுகளே அவற்றுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை வெளிப்படுத்தும். எனவே, கணிசமான ஓட்டுகளைப் பெற, ஒவ்வொரு கட்சியும் பலத்த போட்டியில் இறங்குகின்றன. இதனால், வேட்பாளர்கள் தேர்வில் ஒவ்வொரு கட்சியும் தனி கவனம் செலுத்துகிறது. மக்கள் மத்தியில், குற்றச்சாட்டு உள்ளவர்களை தவிர்க்கும் வகையிலேயே, வேட்பாளர்கள் தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் கட்சிகளைக் கடந்து வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வேட்பாளர் தேர்வில் இதுவும் முக்கிய இடம் பிடிக்கிறது.

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம், உள்ளாட்சித் தேர்தலில் தொடரும் என்ற கணிப்புகள் உள்ளன. ஆனால், ஏழு முனை போட்டி என்ன மாற்றத்தை உருவாக்குமோ? என்ற பரபரப்பு அதிகரித்து வருகிறது. சட்டசபைத் தேர்தலில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க., தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியோடு, நில அபகரிப்பு வழக்கு என கடும் நெருக்கடியில் உள்ள தி.மு.க., மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சியில் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கூட்டணி இல்லை என்ற நிலையில் தே.மு.தி.க., அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியிடுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தல், இக்கட்சிக்கு புதிய முகவரியை ஏற்படுத்தியது. சட்டசபைத் தேர்தல், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இப்போது மீண்டும் தனித்துப் போட்டியிடுவதால், மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை உறுதி செய்து கொள்ளும் நிலையில் தேர்தலைச் சந்திக்கிறது. காங்., - பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு, உள்ளாட்சித் தேர்தல் பெரும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தனித்துப் போட்டி என்பது இக்கட்சிகளுக்கு பலப்பரீட்சையாகவே இருக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...