திருச்சி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தடுக்கும் நோக்கில் தொகுதி
மற்றும் பகுதிகளில் போலீசார்- தேர்தல் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளனர். இதில் நேற்று நள்ளிரவில் நடத்திய சோதனையில் ரூ. 10 கோடி
மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் சிக்கியது. திருச்சி மேற்கு
தொகுதி இடைத்தேர்தல் அக்- 13 ல் நடக்கிறது. பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி
சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள கருமண்டபம்
சோதனைச்சாவடி எண்1-ல் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, ஏட்டுகள் தங்கசாமி,
ரவி ஆகியோர் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து வந்த ஒரு காரை சோதனையிட்டனர். காரில் 3 பைகள்
இருந்தபைகளில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுக்கள், தங்க நகைகள் இருந்தது.
இதில் மொத்தம் ரூ.40 லட்சம் பணமும், 34 கிலோ (8,080 பவுன்) எடை கொண்ட தங்க
நகைகளும் இருந்தன. நகைகளின் மதிப்பு ரூ.9 1/2 கோடி ஆகும். தகவல் அறிந்த
மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஜெயஸ்ரீ, உதவி கலெக்டர் சம்பத்
ஆகியோரும் விரைந்து வந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த காரை திருச்சி
கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். காரில் இருந்த இருவரது பெயர்
ரமேஷ் மற்றும் ரவிச்சந்திரன் என்றும் திருச்சி பெரிய கடைவீதியில்
அங்காளம்மன் கோவில் அருகே பிரபல நகை கடை நடத்தி வருவதாகவும் கூறினர்.
தேனிக்கு
சென்று நகைகளை விற்று விட்டு திருச்சிக்கு திரும்பி வருவதாக தெரிவித்தனர்.
வாக்காளர்களுக்கு கொடுக்க நகை-பணம் எடுத்து வரப்பட்டிருக்குமோ என்ற
அடிப்படையில் கைப்பற்றிய 34 கிலோ தங்க நகைகள், ரொக்க பணம் ரூ.40 லட்சம்
ஆகியவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காட்டி திரும்ப
பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். கடந்த சட்டசபை தேர்தலின்போது
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.5 கோடி பணத்தை
இதுவரை யாரும் கேட்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment