ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
26 March, 2012
சமூக விழிப்புணர்வுக்கு ஒரு ப(பா)டம் காயம்...
விரைவில் இலங்கை மீது பொருளாதாரத் தடை...
பொருளாதாரத் தடையை மீறி ஈரானிடமிருந்து தொடர்ந்து எரிபொருள் இறக்குமதி செய்து வரும் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.அணு ஆயுத பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எரிபொருள் இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளை எச்சரித்துள்ளது. இருந்தும் இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தைவான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் கச்சா எண்னை மற்றும் எரிபொருளை அதிகளவில் இறக்குமதி செய்து வருகின்றன.எனவே இந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன் நடவடிக்கையாக இலங்கை மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த நிர்பந்தத்தை சீனா வன்மையாக கண்டித்துள்ளது
10ம் வகுப்புவரை அத்தனையும் இலவசம்!
12-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அரசு நிதி நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்டு அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தபின் வட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 313.13 கோடி ரூபாய் மாணவர்கள் பெயரில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.வரும் நிதியாண்டில் 21.36 லட்சம் மாணவ- மாணவிகள் பயனடையும் வகையில் இத்திட்டத்திற்கு இந்த வரவு- செலவுத் திட்டத்தில் 366.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டவாறு இந்த அரசு 2012-2013ம் ஆண்டிலிருந்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலை ஏதுமின்றி நான்கு ஜோடி சீருடைகளை வழங்கும்.மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு 6-ம் வகுப்பில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டையும், பெண்களுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படும். 48.63 லட்சம் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்குவதற்காக இந்த வரவு- செலவுத்திட்ட மதிப்பீடுகளில் 329.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், 1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் விலையில்லாக் காலணிகள் வழங்கும் திட்டத்தையும், 2012-2013-ம் ஆண்டிலிருந்து இந்த அரசு தொடங்கி செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக இந்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 81 லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள்.1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புத்தகப்பைகளும், 6-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு ஜியாமெட்ரி பெட்டிகளும், ஒன்றாம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வண்ணப் பென்சில்களும், 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு உலக வரை படம் புத்தகமும் வழங்கப்படும்.
இதற்காக இந்த வரவு- செலவு திட்டத்தில் 136.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அத்தனைப் பொருள்களும் விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கிய பிறகு, மாணவர் தேவைக்கு எஞ்சியிருப்பது நோட்டுப் புத்தகம் மட்டுமே. எனவே, நோட்டு புத்தகங்களையும் விலையில்லாமல் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கென 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் பிற துறைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக, எப்போதும் வழங்கப்படாத உயர் அளவாக, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த 2012-2013ம் ஆண்டு வரவு- செலவு திட்டத்தில் 14, 552.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம் என்றார் அவர்.இதன் மூலம் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் முற்றிலும் இலவசமாக படிப்பு தொடர்பான பொருட்களைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ்!
கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக செய்தி ஒளிபரப்பிய சன் டிவிக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இது குறித்து கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தரப்பில் கூறப்படுவதாவது, உதயகுமாருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கடந்த 24-03-12 அன்று 6.30 மணி முதல் சன் டிவியில் ஒளிபரப்பான செய்தி அவதூறானது, உள்நோக்கம் கொண்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஸ், விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, அணு உலை எதிர்ப்பாளர் முகிலன் போன்றவர்களை எந்த வித காரணமும் இன்றி காவல் துறை கைது செய்தது. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டது. அதாவது அணு உலைக்கு எதிரான இந்த போராட்டம் இப்போது சர்வதேச அளவில் ஒரு செய்தியாக உருவானதால் தமிழக அரசுக்கு இது பெருத்த அவமானத்தை தேடித் தந்ததுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கூடங்குளத்தை இப்போது உற்று நோக்கிக் கொண்டிருகின்றன. எந்த வழியில் அணு உலை போராளிகளை சிக்க வைக்கலாம் என்று குழம்பிப் போன அரசு இப்போது அணு உலை போராளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்ற கட்டுக் கதையை அவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளது.
அதன் விளைவாக தான் சதீஸ், வன்னி அரசு கைது நாடகம். இவர்கள் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதால் இவர்களை தீவிரவாதிகளாக காட்டி இவர்களுக்கும் உதயகுமாருக்கும் தொடர்பு இருப்பதாக அரசு ஒரு சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்ச்சியில் சன் டிவி யும் முக்கிய பங்கேற்பாளராக உள்ளதால் இந்த தொலைக்காட்சி தொடர்ந்து உதய குமாருக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்கிறது. இந்த பொய்யை முறியடிக்கும் வகையில் உதயகுமார் சன் நிறுவனம் இந்த செய்தி தவறானது என்று மன்னிப்பு கேட்டு தினகரன் நாளிதழில் அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தனது வக்கீல் மூலம் சன் தொலைக்காட்சிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது.
துளசியின் மகத்துவம் ...
துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. துளசி அனைத்து இலை பூ, வேர்கள், கிளைகள், நிழல் எல்லாம் ஆன்மீகமானவை. பக்தியுடன் துளசியின் இலையை கிருஷ்ணருக்கு அளிப்பவர் அவர் அருகிலேயே வாழ்வர். துளசியின் மண்ணை எடுத்து உடலில் பூசிக்கொண்டு கிருஷ்ணரை வணங்குபவர், ஒவ்வொரு நாளும் நூறு நாள் பூஜை செய்த பயனை அடைவர். துளசியின் மருத்துவ குணங்கள்: எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
வந்தாச்சு அடுத்தப்பிரச்சனை தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை!
இனி திமுகாவின் டெபாசிட் காலியான பிரச்சனை, இலங்கை தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனை,கூடாங்குலம் அணுமின் வேண்டுமா வேண்டாமா! இன்னும் தாக்கப்படும் மீனவர்கள் எதுவுமே என்மக்களுக்கு மறந்து போகுமே அய்யகோ தமிழகமே... கர்நாடகாவில் உற்பத்தியாகி, தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்கள் வழியாக வங்கக் கடலில் கலக்கும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, நீரை ஏரிகளில் சேமித்து வைக்க, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் தரிசாகி, பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின், சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்க்கம் மலைப் பகுதியில், தென்பெண்ணையாறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து 400 கி.மீ., தெற்கு, கிழக்கு பகுதி வழியாக ஓடி, தமிழகத்தில் நுழைகிறது. கர்நாடகாவில் தக்ஷ்ணபினாகினி என்றும், தமிழகத்தில் பெண்ணையாறு, தென்பெண்ணையாறு என்ற பெயரிலும் இந்த நதி அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியத்திலும், தேவாரப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்நதிக்கரைகளில், ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இந்த ஆற்றில், மழைக் காலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஓசூர் அருகே கேளவார்பள்ளி அணையும், கிருஷ்ணகிரி அருகே கிருஷ்ணகிரி அணையும் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், பல லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தென்பெண்ணையாற்றில் இருந்து பாசன வசதி பெறுகின்றன. பல இடங்களில் குடிநீர் திட்டங்களும் தென்பெண்ணையாற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தென்பெண்ணையாறு கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஒரத்தூர் ஏரியில் கலந்து அங்கிருந்து, தமிழகத்திற்குள் வருகிறது. ஒரத்தூர் ஏரியில் 13 கோடி ரூபாய் செலவில் ஒரு தடுப்பணை கட்டி, ஏரி நீர் மட்டத்தை அதிகரித்து, அங்கிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளில் நீர் நிரப்ப வேண்டும் என்பது கர்நாடக அரசின் திட்டம். இதற்கான ஆய்வுப் பணிகளை அம்மாநில அரசு முடித்துவிட்டது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், தமிழகத்தின் பல வட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி இல்லாமல் பாலைவனமாகிவிடும் என்று அப்பகுதி விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் விழிப்புணர்வு அமைப்பின் துரைசெல்வம் கூறும்போது, "தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபாக்கம், பாரூர் பகுதியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்' என்றார். ஏற்கனவே, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதில் ஆந்திர மாநிலம் மும்முரமாக உள்ளது. இதனால், தமிழகத்தின் பல லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டி, நீரை தடுப்பதன் மூலம், தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயிகளின் நிலை மேலும் மோசமாகும்.
தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டத் திட்டமிட்டுள்ளது குறித்து, தமிழக பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்து: தடுப்பணை கட்டுவதாகக் கூறப்படும் இடத்தை வல்லுனர் குழு ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அடுத்த கட்டமாக, அணை கட்டுவதால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து அரசு செயலர், கர்நாடக மாநில அரசு செயலருக்கு கடிதம் எழுதுவார். அதற்கு, அங்கிருந்து கிடைக்கும் பதில் சாதகமாக இருக்கும் பட்சத்தில் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் அல்லது நீதிமன்றம் மூலம் தீர்வு பெற நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக, மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னைகளை, சென்னையில் உள்ள காவேரி டெக்னிகல் செல் எனும் அமைப்பு தான் கவனித்து வருகிறது. காவிரி, பாலாறு பிரச்னைகள் இங்கு தான் உள்ளன. இதே அமைப்பு தான், தென்பெண்ணை ஆறு பிரச்னையையும் கவனிக்கும். இவ்வாறு அவர் கூறினார். தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை, தமிழக அரசு எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதே வட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் பாடாய் படுத்தும் கள்ளக்காதல்... நெதர்லாந்து பெண் மாமல்லபுரத்தில் மரணம்!
நெதர்லாந்து பெண்ணை கொலை செய்த வழக்கில், அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ரெம்கோ எலிசபத் மார்ட்டின் ஜோசப்,32. படகு மெக்கானிக். அதே நாட்டைச் சேர்ந்தவர் ஜோகானா கார்னிலியா லாம்பெர்டோ,35. இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர். ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆண்டுதோறும் வழக்கமாக இந்திய சுற்றுலா வரும் இவர்கள், கடந்த 10ம் தேதி சென்னை வந்தனர்.
செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவிலில், ஏற்கனவே அறிமுகமான நவநீதம்மாள் என்பவர் வீட்டில் தங்கினர். பின் கடந்த 20ம் தேதி, மாமல்லபுரத்தில் தனியார் கடற்கரை விடுதியில் தங்கினர். மறுநாள், பகல் 12 மணிக்கு, மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் மீனவர் குப்பத்தில் அப்துல் அமீது என்பவர் வீட்டில் தனியாகத் தங்கியிருந்தனர்.
மழுப்பலான பதில் :கடந்த 22ம் தேதி, ரெம்கோ சிங்கபெருமாள்கோவிலுக்குச் சென்றார். நவநீதம்மாள் அவரிடம், ஜோகானாவை ஏன் அழைத்து வரவில்லை என கேட்டார். அதற்கு சரியான பதில் கூறாமல் அங்கிருந்து நழுவினார். அதன்பின், 23ம் தேதி காலை 10 மணிக்கு, மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதலி இறந்து விட்டதாகத் தெரிவித்தார். ஜோகானாவின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. வீட்டில் லேப்டாப், கேமரா, மொபைல்போன், பெண்கள் கருத்தடை சாதனம், போதை மருந்து ஊசிகள் சிதறிக் கிடந்தன. சுவரில் ரத்தக்கரை படிந்திருந்தது. மோப்ப நாயை வரவழைத்து போலீசார் சோதனை செய்தனர். மோப்பநாய் வீட்டிற்குள்ளேயே சுற்றி வந்தது.
சந்தேகம்:இதையடுத்து, ரெம்கோவிடம் போலீசார் விசாரித்தனர். 21ம் தேதி இரவு சிலர் தன்னைத் தாக்கிவிட்டு வீட்டிற்குள் புகுந்ததாகவும், தான் மயங்கி விட்டதால் நடந்த விவரம் எதுவும் தெரியாது என்றும் கூறினார். முன்னுக்குப்பின் முரணாகக் கூறியதால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.மாமல்லபுரத்திலும், வெண்புருஷத்திலும், பொதுமக்களிடம் போலீசார் விசாரித்தனர். இவர் அடிக்கடி போதையில் காதலியிடம் தகராறு செய்தது தெரியவந்தது. கடந்த 22ம் தேதி, ஒரு சூட்கேசுடன் வெளியேறியதும் தெரியவந்தது. இந்த தகவல்களால் சந்தேகம் அதிகமான போலீசார், துருவித் துருவி விசாரித்தும் உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஜோகானாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், அவரது தலை, மார்பு ஆகிய இடங்களில் உள்காயம் ஏற்பட்டிருந்ததும், விலா எலும்பு உடைந்திருந்ததும், வயிற்றுப்பகுதியில் ரத்தம் கட்டியிருந்ததும் தெரிந்தது. அவர் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்தது உறுதியானது. தீவிரமாக விசாரித்தபோது, ஜோகானாவை தாக்கியதை ஒப்புக் கொண்டார்.
போதையில் தகராறு:தாக்கியதற்கு கள்ளக்காதலும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. மாமல்லபுரம் அடுத்த, மணமை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ஏற்கனவே நெதர்லாந்து காதலர்களுக்கு அறிமுகமாகியிருந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மோகன் மனைவி வள்ளியுடன், ரெம்கோவிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் சந்தித்துள்ளனர். மாமல்லபுரம் வந்தவுடன் ரெம்கோ, வள்ளியைத் தேடியுள்ளார். அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாகத் தெரியவந்தது. இதனால் விரக்தியடைந்த ரெம்கோ,போதை மருந்து ஊசிகளைப் பயன்படுத்தியுள்ளார்.
கடந்த 21ம் தேதி, மாலை பயணத் திட்டம், பணச் செலவு, வள்ளியுடன் தொடர்பு ஆகியவை பற்றி ஜோகானா, ரெம்கோ இடையே விவாதம் நடந்துள்ளது. இதில் கடும் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது. தாக்குதலில் ஜோகானா இறந்துள்ளார். கொலையை மறைத்து, தப்பிக்க ரெம்கோ முயன்றுள்ளார். நெதர்லாந்து நாட்டில் உறவினர்களிடம் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளார். அவர்கள் போலீசாரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியதால், மீண்டும் வந்து போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து, ரெம்கோவை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் கூடுதல் எஸ்.பி., பாஸ்கரன் கூறும்போது, ""வெளிநாட்டுப் பயணி என்பதால் கவனத்துடன் விசாரித்தோம். அவர் கொலை செய்ததை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், அவர் தான் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால், அவரை கைது செய்துள்ளோம்,'' என்றார்.
இதே நாள்...
- வங்கதேச விடுதலை மற்றும் தேசிய தினம்(1971)
- ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்(1953)
- மியான்மரின் புதிய தலைநகராக நாய்பிடோ நகரம் ராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது(2006)
- யு.கே.,ல் வாகன ஓட்டுனர்களுக்கான தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது(1934)
மக்களால் நடத்தப்படும் போராட்டம் கொச்சைப்படுத்தாதீர் அச்சத்தை போக்குங்கள் சீமான்.
’கூடங்குளத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளனர் என்கிற பரப்புரையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக காவல் துறை கைது செய்துள்ள இரண்டு பேர், நெல்லையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்கள் நக்சலைட்டுகள் என்றும், அவர்களுக்கும் கூடங்குளத்தில் போராடிவரும் மக்கள் போராட்டக் குழுவினருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை புலனாய்வு செய்வோம் என்று கூறுவதும் அப்பகுதி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
அணு உலையால் தங்கள் உயிருக்கும், வாழ்வாதரங்களுக்கும், எதிர்காலத்திற்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்த மக்கள் கடந்த 8 மாத காலமாக சாத்விக வழியில் நின்று போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை தவறாக சித்திரிக்க முற்பட்ட மத்திய அரசு, போராட்டத்திற்கு அயல் நாட்டில் இருந்து பணம் வருகிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமியைக் கொண்டு என்று பேச வைத்தது. அது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று கூறி, விசாரணையும் நடத்தினார். ஆனால் தாங்கள் கூறிய பொய்யை மத்திய அரசால் நிரூபிக்க முடியவில்லை. அது மக்களால் நடத்தப்படும் போராட்டம்தான் என்பது உறுதியானது. இப்போது புதிதாக ஒரு ஐயத்தை ஏற்படுத்தி அந்தப் போராட்டத்தைக் களங்கப்படுத்த கம்யூனிச தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பதாகச் செய்திகளை பரப்புகின்றனர்.
8 மாத காலமாக வராத நக்சலைட்டுகள் இப்போது வந்து பின்னால் நிற்கின்றனரா? ஊடக பலத்தைக் கொண்டு இப்படிப்பட்ட பரப்புரைகளைச் செய்தால் தமிழ்நாட்டு மக்கள் நம்பிவிடுவார்கள் என்று எதிர்பார்த்து இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நாட்டின் வளத்தை ஒப்பந்தம் கொடுத்து கொள்ளையடிக்க வழிவகுத்த கட்சி காங்கிரஸ். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இருந்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வரை பல லட்சம் கோடிகள் கொள்ளை போக துணை நின்ற கட்சி காங்கிரஸ். அப்படிப்பட்ட கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்துகொண்டு, நாட்டின் நலனிற்காக தாங்கள் பாடுபட்டு வருகிறோம் என்று கூறும் நகைச்சுவையைக் கண்டு மக்கள் ஏளனமாகப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட தூயவர்கள்தான் அணு உலை ஆபத்து அற்றது என்று ஒவ்வொரு நாளும் பறைசாற்றுகின்றனர்.
கூடங்குளம் அணு உலை இயங்காமல் போனால், 50க்கும் மேற்பட்ட அணு உலைகளை அயல் நாடுகளில் இருந்து வாங்கி நாடு முழுவதும் நிறுவும் தங்கள் திட்டம் எங்கே கானல் நீராகிவிடுமோ என்று அஞ்சுகிறது மத்திய காங்கிரஸ் அரசு. அதனால்தான் அணு உலைகள் ஆபத்தற்றவை என்று தொடர்ந்து பரப்புரையும் செய்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து இவர்கள் வாங்கி நிறுவியுள்ள கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால், அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தை அந்த ரஷ்ய நிறுவனமான ஆட்டம்ஸ்டிராய் ஏற்க மறுப்பது ஏன்? அது மட்டுமல்ல, பல அணு உலைகள் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ், ஜெனரல் எலக்டிரிக், பிரான்சின் ஆரீவா ஆகிய நிறுவனங்களும் அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருவது ஏன்? மத்திய அமைச்சர் நாராயணசாமி விளக்குவாரா?
அணு உலை தயாரிக்கும் நிறுவனங்களே அவைகளின் பாதுகாப்புத் தொடர்பாக உறுதியளிக்கத் தயங்கும்போது, இவர்கள் அது பாதுகாப்பானது என்று தொடர்ந்து கூறுவது மக்கள் நலன் காக்கவா? அல்லது அதிலிருந்து கசியும் காசிற்காகவா? எத்தனைக் காலம்தான் மக்களை இவர்கள் ஏமாற்றுவார்கள்.காங்கிரஸ்காரர்களின் சொல்லைக் கேட்டு மக்கள் ஏமாந்தக்காலம் மலையேறிவிட்டது என்பதைத்தான் கூடங்குளத்தில் தொடர்ந்து நடந்துவரும் மக்கள் போராட்டம் காட்டுகிறது. எனவே கூடங்குளத்தில் மக்கள் நடத்திவரும் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அவர்களின் நியாயமான அச்சத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
உடனே விவாகரத்து புதிய விதி, இந்தியாவின் குடும்ப கலாசாரத்துக்கு முரணானதாகும்.
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் டி.அருள் துமிலன், பொதுச் செயலாளர் எஸ்.மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில், ’’கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருமணச் சட்டத் திருத்த மசோதாவில், தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வந்துள்ள திருத்தங்கள், ஆண்களை பெண்கள் அடிமைப்படுத்தும் விதத்தில் உள்ளது. அதோடு மனைவி விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லாமல் போகிறது. தமிழகத்தில் 2008-10-ம் ஆண்டில் மட்டும் 890 கள்ளக்காதல் கொலைகள் நடந்தேறியுள்ளன. இனி சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையில் உடனே விவாகரத்து வழங்கும் புதிய விதி, இந்தியாவின் குடும்ப கலாசாரத்துக்கு முரணானதாகும். எனவே இதுபோன்ற சட்ட திருத்தங்களை உடனே கைவிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். இல்லாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தை எங்கள் சங்கம் நடத்தும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)