|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2012

வந்தாச்சு அடுத்தப்பிரச்சனை தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை!

இனி திமுகாவின் டெபாசிட் காலியான பிரச்சனை, இலங்கை தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனை,கூடாங்குலம் அணுமின் வேண்டுமா வேண்டாமா! இன்னும் தாக்கப்படும் மீனவர்கள் எதுவுமே என்மக்களுக்கு மறந்து போகுமே அய்யகோ தமிழகமே... கர்நாடகாவில் உற்பத்தியாகி, தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்கள் வழியாக வங்கக் கடலில் கலக்கும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, நீரை ஏரிகளில் சேமித்து வைக்க, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் தரிசாகி, பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின், சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்க்கம் மலைப் பகுதியில், தென்பெண்ணையாறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து 400 கி.மீ., தெற்கு, கிழக்கு பகுதி வழியாக ஓடி, தமிழகத்தில் நுழைகிறது. கர்நாடகாவில் தக்ஷ்ணபினாகினி என்றும், தமிழகத்தில் பெண்ணையாறு, தென்பெண்ணையாறு என்ற பெயரிலும் இந்த நதி அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியத்திலும், தேவாரப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்நதிக்கரைகளில், ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் வறண்டு கிடக்கும் இந்த ஆற்றில், மழைக் காலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஓசூர் அருகே கேளவார்பள்ளி அணையும், கிருஷ்ணகிரி அருகே கிருஷ்ணகிரி அணையும் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், பல லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தென்பெண்ணையாற்றில் இருந்து பாசன வசதி பெறுகின்றன. பல இடங்களில் குடிநீர் திட்டங்களும் தென்பெண்ணையாற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தென்பெண்ணையாறு கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஒரத்தூர் ஏரியில் கலந்து அங்கிருந்து, தமிழகத்திற்குள் வருகிறது. ஒரத்தூர் ஏரியில் 13 கோடி ரூபாய் செலவில் ஒரு தடுப்பணை கட்டி, ஏரி நீர் மட்டத்தை அதிகரித்து, அங்கிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளில் நீர் நிரப்ப வேண்டும் என்பது கர்நாடக அரசின் திட்டம். இதற்கான ஆய்வுப் பணிகளை அம்மாநில அரசு முடித்துவிட்டது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், தமிழகத்தின் பல வட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி இல்லாமல் பாலைவனமாகிவிடும் என்று அப்பகுதி விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் விழிப்புணர்வு அமைப்பின் துரைசெல்வம் கூறும்போது, "தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபாக்கம், பாரூர் பகுதியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்' என்றார். ஏற்கனவே, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதில் ஆந்திர மாநிலம் மும்முரமாக உள்ளது. இதனால், தமிழகத்தின் பல லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டி, நீரை தடுப்பதன் மூலம், தமிழகத்தின் வட மாவட்டங்களில் விவசாயிகளின் நிலை மேலும் மோசமாகும்.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டத் திட்டமிட்டுள்ளது குறித்து, தமிழக பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்து: தடுப்பணை கட்டுவதாகக் கூறப்படும் இடத்தை வல்லுனர் குழு ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அடுத்த கட்டமாக, அணை கட்டுவதால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து அரசு செயலர், கர்நாடக மாநில அரசு செயலருக்கு கடிதம் எழுதுவார். அதற்கு, அங்கிருந்து கிடைக்கும் பதில் சாதகமாக இருக்கும் பட்சத்தில் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் அல்லது நீதிமன்றம் மூலம் தீர்வு பெற நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக, மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னைகளை, சென்னையில் உள்ள காவேரி டெக்னிகல் செல் எனும் அமைப்பு தான் கவனித்து வருகிறது. காவிரி, பாலாறு பிரச்னைகள் இங்கு தான் உள்ளன. இதே அமைப்பு தான், தென்பெண்ணை ஆறு பிரச்னையையும் கவனிக்கும். இவ்வாறு அவர் கூறினார். தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை, தமிழக அரசு எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதே வட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...