’கூடங்குளத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள அணு மின் நிலையத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளனர் என்கிற பரப்புரையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக காவல் துறை கைது செய்துள்ள இரண்டு பேர், நெல்லையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்கள் நக்சலைட்டுகள் என்றும், அவர்களுக்கும் கூடங்குளத்தில் போராடிவரும் மக்கள் போராட்டக் குழுவினருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை புலனாய்வு செய்வோம் என்று கூறுவதும் அப்பகுதி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
அணு உலையால் தங்கள் உயிருக்கும், வாழ்வாதரங்களுக்கும், எதிர்காலத்திற்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்த மக்கள் கடந்த 8 மாத காலமாக சாத்விக வழியில் நின்று போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை தவறாக சித்திரிக்க முற்பட்ட மத்திய அரசு, போராட்டத்திற்கு அயல் நாட்டில் இருந்து பணம் வருகிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமியைக் கொண்டு என்று பேச வைத்தது. அது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று கூறி, விசாரணையும் நடத்தினார். ஆனால் தாங்கள் கூறிய பொய்யை மத்திய அரசால் நிரூபிக்க முடியவில்லை. அது மக்களால் நடத்தப்படும் போராட்டம்தான் என்பது உறுதியானது. இப்போது புதிதாக ஒரு ஐயத்தை ஏற்படுத்தி அந்தப் போராட்டத்தைக் களங்கப்படுத்த கம்யூனிச தீவிரவாதிகளின் தொடர்பு இருப்பதாகச் செய்திகளை பரப்புகின்றனர்.
8 மாத காலமாக வராத நக்சலைட்டுகள் இப்போது வந்து பின்னால் நிற்கின்றனரா? ஊடக பலத்தைக் கொண்டு இப்படிப்பட்ட பரப்புரைகளைச் செய்தால் தமிழ்நாட்டு மக்கள் நம்பிவிடுவார்கள் என்று எதிர்பார்த்து இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நாட்டின் வளத்தை ஒப்பந்தம் கொடுத்து கொள்ளையடிக்க வழிவகுத்த கட்சி காங்கிரஸ். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இருந்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வரை பல லட்சம் கோடிகள் கொள்ளை போக துணை நின்ற கட்சி காங்கிரஸ். அப்படிப்பட்ட கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்துகொண்டு, நாட்டின் நலனிற்காக தாங்கள் பாடுபட்டு வருகிறோம் என்று கூறும் நகைச்சுவையைக் கண்டு மக்கள் ஏளனமாகப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட தூயவர்கள்தான் அணு உலை ஆபத்து அற்றது என்று ஒவ்வொரு நாளும் பறைசாற்றுகின்றனர்.
கூடங்குளம் அணு உலை இயங்காமல் போனால், 50க்கும் மேற்பட்ட அணு உலைகளை அயல் நாடுகளில் இருந்து வாங்கி நாடு முழுவதும் நிறுவும் தங்கள் திட்டம் எங்கே கானல் நீராகிவிடுமோ என்று அஞ்சுகிறது மத்திய காங்கிரஸ் அரசு. அதனால்தான் அணு உலைகள் ஆபத்தற்றவை என்று தொடர்ந்து பரப்புரையும் செய்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து இவர்கள் வாங்கி நிறுவியுள்ள கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால், அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தை அந்த ரஷ்ய நிறுவனமான ஆட்டம்ஸ்டிராய் ஏற்க மறுப்பது ஏன்? அது மட்டுமல்ல, பல அணு உலைகள் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ், ஜெனரல் எலக்டிரிக், பிரான்சின் ஆரீவா ஆகிய நிறுவனங்களும் அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருவது ஏன்? மத்திய அமைச்சர் நாராயணசாமி விளக்குவாரா?
அணு உலை தயாரிக்கும் நிறுவனங்களே அவைகளின் பாதுகாப்புத் தொடர்பாக உறுதியளிக்கத் தயங்கும்போது, இவர்கள் அது பாதுகாப்பானது என்று தொடர்ந்து கூறுவது மக்கள் நலன் காக்கவா? அல்லது அதிலிருந்து கசியும் காசிற்காகவா? எத்தனைக் காலம்தான் மக்களை இவர்கள் ஏமாற்றுவார்கள்.காங்கிரஸ்காரர்களின் சொல்லைக் கேட்டு மக்கள் ஏமாந்தக்காலம் மலையேறிவிட்டது என்பதைத்தான் கூடங்குளத்தில் தொடர்ந்து நடந்துவரும் மக்கள் போராட்டம் காட்டுகிறது. எனவே கூடங்குளத்தில் மக்கள் நடத்திவரும் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அவர்களின் நியாயமான அச்சத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment