|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 February, 2013

பிரபாகரன் வாழ்க்கை சினிமா!



விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:- 
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். விடுதலைப்புலிகள் தரப்பில் இந்த படத்தை எடுப்பதற்காக ஆட்சேபனை இருக்காது என்று கருதுகிறேன். 

இதற்கான நிறைய தகவல்களை அவர்கள் எனக்கு கொடுத்து உள்ளனர். வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் படமாக எடுத்துள்ளேன். பதினோரு வருடங்கள் வீரப்பன் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வீரப்பனிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர்களிடம் விசாரித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். உண்மையான கேரக்டர்களே இதில் உள்ளன. யாரையும் புண்படுத்தும் சீன்கள் படத்தில் இல்லை. 
இப்படத்துக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சில சீன்கள் நீக்கப்பட்டு உள்ளன. பிப்ரவரி 14-ல் படம் ரிசீலாகிறது. வேந்தர் மூவிஸ் மதன் படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தில் அர்ஜுன், கிஷோர், லட்சுமிராய், விஜயலட்சுமி, சுலக்ஷனா, ஜெயபாலன், அருள்மணி, சம்பத்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

எப்படி கும்பிடனும்!

வீட்டில் பூஜை செய்யும் போது கைகளைக் குவித்து வழிபடுவோம். ஆனால், கோயில் வழிபாட்டில் கைகளைத் தலைக்கு மேலே குவித்து வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம். கோயில் மூலவருக்கு இந்த முறை பொருந்தும். சிலருக்கு பிரதான சிவனை விட தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்றவர்கள் இஷ்டதெய்வமாக இருக்கும். இஷ்ட தெய்வத்தின் சந்நிதியில் கைகளை உச்சிக்கு நேராக நன்கு உயர்த்தி தலையில் படாமல் கும்பிட வேண்டும்.  குருநாதரை வணங்க புருவத்திற்கு நடுவிலும், தந்தையை வணங்க வாய்க்கு நேராகவும், தாயாரை வணங்க வயிற்றுக்கு நேராகவும், மற்றவர்களை மார்புக்கு நேராகவும் கைகுவித்து வணங்க வேண்டும்.

புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகள்!



தமிழகத்தில், 14 மாவட்டங்களில், பெண் குழந்தை எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1,000 ஆண்களுக்கு, 900 பெண்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த, 2000ம் ஆண்டில், 2015க்குள் எட்டப்பட வேண்டிய நாட்டின் தேவைகள் குறித்து, பட்டியலிடப்பட்டது. இதற்கு, "புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகள்' என, பெயரிடப்பட்டது. இந்த இலக்குகளை அடைவதற்கு, மத்திய, மாநில அரசுகள் எந்த வகையில் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து, இளங்குழந்தைகள் உரிமை பேணும் நிறுவனம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அதில், குழந்தை பாலின விகிதம் குறித்து சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் கண்டறியப்பட்டவை:
* பல தலைமுறைகளாக, நம் நாட்டில், பெண் பாலின குழந்தை விகிதம் குறைந்துள்ளது. புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால், 1991ம் ஆண்டு, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 945 பெண் குழந்தைகள் பிறந்தன. 2001ம் ஆண்டு, பெண் குழந்தைகள் எண்ணிக்கை, 914 ஆக குறைந்தது.



* தமிழகத்தில், குழந்தை பாலின விகிதம் உற்சாகமளிப்பதாக இல்லை. அரசின் கணக்கீடுகள், குறுகிய காலத்தை மட்டும் அடிப்படையாக கொண்டவை. கருவுறும் முன் மற்றும் கருவுறுதலுக்கு பின், பரிசோதனை நுணுக்கங்கள் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்) சட்டம் - 1994 மற்றும் மருத்துவக் கருக்கலைப்பு சட்டம் - 1971 ஆகியவை அமல்படுத்தப்படவே இல்லை.



* தமிழகத்தில், கருவுற்ற பெண்களை பதிவு செய்வதற்கும், பாதுகாப்பதற்குமான மையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அரசில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை வெறும், 4560 மட்டுமே. இப்பிரச்னையில், ஆவண பராமரிப்பும் சிறப்பாக நடைமுறைப்படுத்தவில்லை.



* தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் ஆகியவை பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதை விட, சமத்துவமற்ற நிலையை உண்டாக்கியுள்ளன.



*தமிழகத்தில், 14 மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதம், 1,000 ஆண்களுக்கு, 900 பெண்கள் என்ற நிலை அதிர்ச்சியூட்டுவதாகவும், கவலை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.



* குடும்பத்திற்குள்ளேயே, பாலின வேறுபாடு காணப்படுகிறது. எனவே, குழந்தை உரிமையின் பல்வேறு நிலைகளான, வாழ்வுரிமை வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமென, ஆய்வில் தெரிய வந்துள்ளது.



* உயர் கல்வி படிக்க வைப்பதற்கு, ஆண் குழந்தைகளே வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். இதனால், பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்தி விட்டு, குழந்தை தொழிலாளர்களாக மாறி விடுகின்றனர்.



* 3,000 பெண் குழந்தைகள் உள்ள கிராமத்தில், 10ம் வகுப்பு படிக்க வைக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, வெறும், 3 மட்டுமே.



* பெண்களுக்கு கூலித்தொகை வழங்குவதிலும் பாகுபாடு நீடிக்கிறது.


* பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்து அழித்து விடுதால், குழந்தை பாலின விகிதம் குறைந்து வருகிறது.இவ்வாறு ஆய்வில்

காலையுணவு அறிவுத்திறனை வளர்க்கும்!


 காலைநேரத்தில் சாப்பிடும் உணவு, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பென்சில்வேனியா ஸ்கூல் ஆப் நர்சிங் துறை மாணவர்கள், 6 வயதான 1,269 குழந்தைகளிடம் இந்த ஆய்வை நடத்தினர். காலை உணவின் அளவு மற்றும் அறிவுக்கூர்மை இதில் முக்கிய காரணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, காலையுணவை சீராக சாப்பிடாத குழந்தைகளுக்கு வார்த்தைகளை உச்சரிக்கும் திறன் 5.58 புள்ளிகள் என்ற அளவிலும், அவர்களின் செயல்பாடு மிகக்குறைந்த அளவு அதாவது 2.50 புள்ளிகள் மற்றும் அவர்களின் அறிவுக்கூர்மை (திறன்) 4.6 புள்ளிகள் என்ற அளவிலேயே உள்ளது. சரியான நேரத்தில் மற்றும் ஒழுங்காக காலை உணவு சாப்பிடாத நிகழ்வு, பல்வேறு உடற் குறைபாடுகளுக்கு வழிவகுப்ப‌தோடு மட்டுமல்லாது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களான புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்கள் உள்ளிட்டவைகளுக்கு வழிகோலும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமைதீர்ப்பாயம் என்றால் என்ன?


தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி, 21ன் படி, 2010, அக்., 18ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை, தாமாகவே "விரைவு கோர்ட்' முறையில் விசாரிக்கிறது.இதன் தலைமையிடம் டில்லியில் உள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் எளிதாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சென்னை, போபால், புனே, கோல்கட்டா ஆகிய இடங்களில், இதன் பெஞ்ச் செயல்படுகிறது. சுற்றுச்சூழல், காடுகள், அனைத்து விதமான இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றை பேணிக் காப்பது, இதன் கடமை. இயற்கை வளங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது, சேதப்படுத்துவது போன்ற பிரச்னைகளின் போது, ஆராய்ந்து முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உள்ளது.இயற்கை இடர்பாடுகள் மூலம் தனிநபருக்கு ஏற்படும் இழப்புக்கு, இழப்பீடு பெற்று தரும் பணியையும் செய்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு எடுத்துக் கொள்வதால், ஐகோர்ட்டின் பணி குறைக்கப்படுகிறது.

இம்மாதம் 28 நாள் 23 படம்!


இந்த மாதத்தில் மொத்த நாள்கள் 28 தான். 23 புதுப்படங்களின் ரிலீசை சந்திக்கிறது. இது எந்த மாதத்திலும் நிகழாத சாதனை ஆகும். ஏற்னவே ‘கடல்’, ‘டேவிட்’, படங்கள் கடந்த 1-ந்தேதி ரிலீசாகி ஒடிக் கொண்டிருக்கின்றன.  நாளை (7ந்தேதி) கமலின் ‘விஸ்வரூபம்’ ரிலீசாகிறது. இதில் நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடத்துள்ளனர். ரூ.90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. 8-ந்தேதி ‘சுடச்சுட’, ‘நினைவோடு கலந்துவிடு’, ‘அறியாதவன் புரியாதவன்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீசாகின்றன.  வருகிற 14-ந்தேதி ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’, ‘நேசம் நேசப்படுதே‘, ‘வனயுத்தம்‘, ‘நான்காம்பிறை‘ ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’ படத்தில் விமல், ஒவியா ஜோடியாக நடத்துள்ளனர். ‘வனயுத்தம்‘ படம் சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய கதை. போலீஸ் அதிகாரியாக அர்ஜூன், வீரப்பன் கேரக்டரில் கிஷோர் நடத்துள்ளனர். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயங்கியுள்ளார். ‘நான்காம் பிறை’ பேய் கதை, பிரபு முக்கிய கேரக்டரில் வருகிறார்.  

வருகிற 15-ந்தேதி ‘பரதேசி’, ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ படங்கள் ரிலீசாகின்றன. ‘பரதேசி‘ படத்தை பாலா இயக்கியுள்ளார். அதர்வா நாயகனாக நடித்துள்ளார். ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். இந்தி, தமிழில் இப்படம் வருகிறது.  பிப்ரவரி 22-ந்தேதி அமீர் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த ‘ஆதிபகவன்’. விமல், சிவகார்த்திகேயன் நடத்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, சினேகா நடித்த ‘ஹரிதாஸ்’, தருண்கோபி நடித்த ‘பேச்சியக்கா மருமகன்’, தலக்கோணம், கருணாஸ் நடித்த ‘சந்தமாமா’ ஆகிய 6 படங்கள் ரிலீசாகின்றன. ‘கீரிப்புள்ள’, ‘ஆண்டவ பெருமாள்’, ‘கண்பேசும் வார்த்தைகள்’, ‘சொன்னா புரியாது’, ‘அர்ஜூனன் காதலி’ போன்ற படங்களும் இம்மாதம் வருகின்றன.

மருத்துவமனை செயல்பட தடை!

தி.மு.க. ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடம் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்து, அதற்கான பணிகளைத் தொடங்கியது. இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரமணி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், அரசின் கொள்கை முடிவுகளில் கோர்ட் தலையிட முடியாது என்று கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். சுப்ரீம் கோர்ட்டில் வீரமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது. இதையடுத்து தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வீரமணி மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம், தலைமைச் செயலக கட்டிடத்தில் மருத்துவமனை செயல்பட இடைக்கால தடை விதித்தார். மேலும், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றக்கூடாது என்றும் அவர் கூறினார்.

கொலைகாரன்பேட்டை?


பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்திருந்தாலும் தங்கள் ஊர் பெயரை சொல்ல கூச்சப்படும் கிராமத்து இளைஞர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். காரணம், நகர வாசிகள் அந்த பெயரை கேட்டு எள்ளி நகையாடுவதுதான். ஆனால் நாகரீகத்தின் உச்சாணி கொம்பில் இருப்பதாக கருதும் சென்னை வாசிகளில் குறிப்பிட்ட ஒரு தெருவில் வசிப்பவர்கள் தங்கள் தெரு பெயரை சொல்லவே வெட்கப்படுகிறார்கள். அவ்வளவு கண்றாவியான பெயர் சென்னையில் இருக்கிறதா? என்று நினைக்கிறீர்களா? "கொலைகாரன் பேட்டை" - இதுதான் அந்த தெருவின் பெயர்.

இந்த பெயரை எப்படீங்க 10 பேர் மத்தியில் சொல்வது என்று ஆதங்கப்படுகிறார்க்ள. இந்த பகுதி வாசிகள். சென்னையின் முக்கிய பகுதியான ராயப்பேட்டையில்தான் கொலைகாரன் பேட்டை 1-வது தெரு மற்றும் 2-வது தெரு உள்ளது. இந்த தெருக்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்த பெயரை மாற்ற கோரி மாநகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் மாநகராட்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ன வரலாற்று பின்னணியில் வைத் தார்களோ நமக்கேன் வம்பு என்று மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

வங்கிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் போது முகவரியை எழுதினால் முகவரியையும், எங்களையும் மாறி மாறி ஒரு மாதிரியாக பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்கள் என்று கொலைகாரன்பேட்டை வாசிகள் கூனி குறுகுகிறார்கள். சிலரிடம் முகவரி கேட்டால் பக்கத்து தெருவான கவுடியா மடம் சாலை என்று கூறி தப்பிக்கிறார்கள். அந்த பகுதியில் வசிக்கும் முதியவர்களிடம் கேட்ட போது அந்த காலத்தில் (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்) சினிமாவில் நடித்த பெண்கள் இந்த பகுதியில் திறந்த வெளி மைதானத்தில் "கோலாட்டம்" ஆடி பயிற்சி எடுப்பார்கள். அதை மையமாக வைத்து இந்த பெயர் வந்து இருக்கலாம் என்றார்.

இந்த பெயர் காரணத்துக்காக குறிப்பிட்ட வரலாற்று பதிவுகள் எதுவுமில்லை. ஆனால் இந்த பகுதியில் "கல்லுக்காரன் பேட்டை" என்ற பகுதி இருந்துள்ளது. இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கல் உடைக்கும் தொழில் செய்து இருக்கிறார்கள். இந்த பெயர் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் சந்தோஷத்தை இழந்துள்ளனர். சில நேரங்களில் வாலிபர்கள் கருப்பு பெயின்டால் தெரு பெயரை அழித்து விடுவதும் உண்டாம். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மஞ்சள் பெயின்டில் கருப்பு எழுத்துக்களில் "கொலைகாரன் பேட்டை" என்று மீண்டும் எழுதி விடுவார்களாம். எதற்கெல்லாமோ போராடி நாட்டாமை தீர்ப்புகள் மாற்றப்படுகிறது. பாவம், இந்த பகுதி மக்களின் கஷ்டம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...