|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 February, 2013

கொலைகாரன்பேட்டை?


பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்திருந்தாலும் தங்கள் ஊர் பெயரை சொல்ல கூச்சப்படும் கிராமத்து இளைஞர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். காரணம், நகர வாசிகள் அந்த பெயரை கேட்டு எள்ளி நகையாடுவதுதான். ஆனால் நாகரீகத்தின் உச்சாணி கொம்பில் இருப்பதாக கருதும் சென்னை வாசிகளில் குறிப்பிட்ட ஒரு தெருவில் வசிப்பவர்கள் தங்கள் தெரு பெயரை சொல்லவே வெட்கப்படுகிறார்கள். அவ்வளவு கண்றாவியான பெயர் சென்னையில் இருக்கிறதா? என்று நினைக்கிறீர்களா? "கொலைகாரன் பேட்டை" - இதுதான் அந்த தெருவின் பெயர்.

இந்த பெயரை எப்படீங்க 10 பேர் மத்தியில் சொல்வது என்று ஆதங்கப்படுகிறார்க்ள. இந்த பகுதி வாசிகள். சென்னையின் முக்கிய பகுதியான ராயப்பேட்டையில்தான் கொலைகாரன் பேட்டை 1-வது தெரு மற்றும் 2-வது தெரு உள்ளது. இந்த தெருக்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்த பெயரை மாற்ற கோரி மாநகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் மாநகராட்சியோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ன வரலாற்று பின்னணியில் வைத் தார்களோ நமக்கேன் வம்பு என்று மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

வங்கிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் போது முகவரியை எழுதினால் முகவரியையும், எங்களையும் மாறி மாறி ஒரு மாதிரியாக பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்கள் என்று கொலைகாரன்பேட்டை வாசிகள் கூனி குறுகுகிறார்கள். சிலரிடம் முகவரி கேட்டால் பக்கத்து தெருவான கவுடியா மடம் சாலை என்று கூறி தப்பிக்கிறார்கள். அந்த பகுதியில் வசிக்கும் முதியவர்களிடம் கேட்ட போது அந்த காலத்தில் (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்) சினிமாவில் நடித்த பெண்கள் இந்த பகுதியில் திறந்த வெளி மைதானத்தில் "கோலாட்டம்" ஆடி பயிற்சி எடுப்பார்கள். அதை மையமாக வைத்து இந்த பெயர் வந்து இருக்கலாம் என்றார்.

இந்த பெயர் காரணத்துக்காக குறிப்பிட்ட வரலாற்று பதிவுகள் எதுவுமில்லை. ஆனால் இந்த பகுதியில் "கல்லுக்காரன் பேட்டை" என்ற பகுதி இருந்துள்ளது. இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கல் உடைக்கும் தொழில் செய்து இருக்கிறார்கள். இந்த பெயர் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் சந்தோஷத்தை இழந்துள்ளனர். சில நேரங்களில் வாலிபர்கள் கருப்பு பெயின்டால் தெரு பெயரை அழித்து விடுவதும் உண்டாம். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மஞ்சள் பெயின்டில் கருப்பு எழுத்துக்களில் "கொலைகாரன் பேட்டை" என்று மீண்டும் எழுதி விடுவார்களாம். எதற்கெல்லாமோ போராடி நாட்டாமை தீர்ப்புகள் மாற்றப்படுகிறது. பாவம், இந்த பகுதி மக்களின் கஷ்டம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...