ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த திரில்லைக் கொடுக்கிறது இந்த ஹோட்டலும், அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மற்றும் உள்ளே நடக்கும் விஷயங்களும். தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அரணின் கீழ் உள்ள இந்த ஹோட்டலுக்குள் அவ்வளவு சீக்கிரம் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது.
அந்தேரியில் உள்ள இந்த ஹோட்டலில் கடந்த வாரம் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போதுதான் உள்ளே நடந்து வந்த அலங்கோலங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஹோட்டலில் எந்தப் பக்கம் போனாலும் விபச்சாரம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து போலீஸார் பயந்து போய் விட்டனராம். அத்தோடு மதுவும் லிட்டர் கணக்கில் ஊற்றி ஓடிக் கொண்டிருந்தது. கண்களைக் கூச வைக்கும் அரைகுறை ஆடைகளுடன் நடந்த கண்மண் தெரியாத ஆட்டமும் போலீஸாரை அதிர வைத்தது. படு ரகசியமாக இந்தத் 'தொழிலை' நடத்தி வந்துள்ளது இந்த ஹோட்டல் நிர்வாகம். அதை விட முக்கியமாக படு தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளனர்.
இங்கு ஒரு இரவுக்கு ரூ. 6 லட்சம் கட்டணம் வாங்கி வந்துள்ளனர். அந்த இரவு முழுவதும் நம் இஷ்டப்படி உள்ளே கொட்டமடிக்கலாம். விடிய விடிய குடிக்கலாம், விரும்பும் வரை டான்ஸ் ஆடலாம், போர் அடித்தால் பொழுதுபோக்க பெண்களையும் ஏற்பாடு செய்து தரும் ஹோட்டல் நிர்வாகம். அவர்களுடன் கூத்தடிக்கலாம். எல்லாவற்றுக்கும் கட்டணம்தான் இந்த ரூ. 6 லட்சம். அதேசமயம், யார் வேண்டுமானாலும் போய் பணத்தைக் காட்டி உள்ளே போய் விட முடியாது. மாறாக, இந்த ஹோட்டலுக்கு ரெகுலராக வருவோர் யாராவது ரெபரன்ஸ் செய்தால்தான் அனுமதி கிடைக்கும்.
ஹோட்டலுக்குள் திடீரென யாராவது 'எதிரிகள்' (அதாவது போலீஸார்) புகுந்து விட்டால், தப்பித்து வெளியேறுவதற்காக ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளையும் செய்து வைத்துள்ளது இந்த ஹோட்டல் நிர்வாகம். இதற்காக ரகசியப் பாதைகளையும் அமைத்து வைத்துள்ளனர். உள்ளே 'ஆடி'க் கொண்டிருப்பவர்களுக்கு சிக்னல் கொடுக்க எலக்ட்ரானிக் சிஸ்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் டான்ஸ் ஆடுவோர் உடை மாற்றிக் கொள்ளவும் பல ரகசிய அறைகளை அமைத்து வைத்துள்ளனர்.
ஹோட்டலுக்கு வெளியே பார்த்தால் படு சாதாரணமாகத்தான் காட்சி தருகிறது. ஆனால் உள்ளே போனால் யாரும் மிரண்டு விடுவார்கள். அத்தனை நவீன வசதிகளுடன் உள்ளது இந்த ஹோட்டல். இரவுதான் இந்த ஹோட்டலுக்கு வேலையே. காலை 6 மணி வரை படு பிசியாக இருக்குமாம் இந்த ஹோட்டல். இந்த ஹோட்டலுக்கு வருவோர் பெரும்பாலும் தொழிலதிபர்கள்தான்.
ரெய்டுக்குப் பின்னர் ஹோட்டலின் உரிமையாளர் லால்ஜி சிங் என்கிற வினோத் சிங் உள்ளிட்ட 45 ஆண்களும், 6 பெண்களும் கைது செய்யபப்ட்டுள்ளனர். இதில் உரிமையாளர் சிங்கை, துபாய் போலீஸாரும் ஒரு மோசடி வழக்கில் தேடிக் கொண்டுள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவருக்கு எதிராக இன்டர்போல் அலர்ட்டும் நிலுவையில் உள்ளதாம்.
சிங்குக்கு துபாய், மொரீஷியஸிலும் ஹோட்டல்கள் உள்ளனவாம். அங்கும் இதுபோலத்தான் தொழில் நடந்து வருகிறதாம்.