"சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, இந்தியா எங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்கும் என நம்புகிறோம்' என, இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது, போர் குற்றம் நடந்ததாகவும், அது குறித்து சர்வதேச அளவில், நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இந்த தீர்மானத்தின் மீதான விவாதம், நாளை துவங்குகிறது. இது தொடர்பான ஓட்டெடுப்பு, வரும் 21ம்தேதி, நடக்கிறது.இந்த தீர்மானத்தின் போது நடக்கும் விவாதத்தில், தங்கள் நாட்டு தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பதற்காக, இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கா, ஜெனிவாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே, இலங்கை வெளியுறவு செயலர் கருணதிலகா அமுனுகாமா குறிப்பிடுகையில், ""அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, கடைசி நேரத்தில், இந்தியா, எங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.