தமிழ்நாடு வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் ராமசாமி முதலியார்-அகிலாண்டவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ராமசாமி முதலியார் காவேரிப்பாக்கத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நமச்சிவாயர் தம் இளமைக்கால கல்வியைக் கற்றார். நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த இவர், தமது பதினாறாவது அகவையில், காவேரிப்பாக்கத்தை விட்டு நீங்கி, சென்னைதண்டையார்பேட்டையில் தங்கி, அங்கிருந்த ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். 1906-ஆம் ஆண்டு சுந்தரம் என்னும் அம்மையாரை நமச்சிவாயர் மணந்து ஆண்மக்கள் இருவரையும் பெண் மக்கள் இருவரையும் பெற்றெடுத்தார். தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்த மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளையிடம் மாணாக்கராக இருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பன்னிரண்டு ஆண்டுகள், தண்டையார்பேட்டையிலிருந்து மயிலாப்பூருக்கு ஞாயிறுதோறும் நடந்தே சென்று பாடம் கேட்டுவந்தார் நமச்சிவாயர். மகப்பேறு இல்லாத மகாவித்துவான், நமச்சிவாயரைத் தமது மகனாகவே கருதி தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தந்தார்.
தமிழாசிரியராகப் பணியாற்ற விரும்பிய நமச்சிவாயருக்குத் தொடக்க காலத்தில் அப்பணி எளிதில் கிட்டவில்லை. 1895-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு அதிலிருந்து நீங்கி, சென்னை செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். பின்னர், ராயபுரத்தில் இருந்த "நார்த்விக்' மகளிர் பாடசாலையிலும் அதன்பிறகு "சிங்கிலர்' கல்லூரியிலும் தமிழ்ப் பணியாற்றினார். 1902 முதல் 1914 வரை சென்னைவேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது புனித பால்ஸ் பள்ளியில்) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1914-ஆம் ஆண்டில் பெண்களுக்கென அரசினரால் தொடங்கப்பட்ட ராணிமேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஆண்கள் எவரும் பணியாற்ற முன்வராத நிலையில், துணிவோடு அப்பணியை ஏற்றுச் சிறப்பித்தார் நமச்சிவாயர். இறுதியாக, ராஜதானிக் கல்லூரி (மாநிலக் கல்லூரி) யில் தமிழ்ப் பேராசிரியர் பணி இவரைத்தேடி வந்தது. உ.வே.சாமிநாதய்யர், மறைமலை அடிகளார், திரு.வி.க., ஆகியோர் நமச்சிவாயர் காலத்து வாழ்ந்த சான்றோர்களாவர். சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, சென்னை விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை மேனாள் தலைவர் சி.ஜெகந்நாதாசாரியார், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.கைலாசம், மேனாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன் ஆகிய பெருமக்கள் பேராசிரியர் கா.நமச்சிவாயரிடம் பயின்ற மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment