|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 August, 2011

தங்கம் விலை.. ஒரே நாளில் 320 உயர்வு!!

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்து நிற்கிறது. தங்க விற்பனை வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் பார்த்திராத வகையில், சவரன் ரூ 18000 என உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ 168 உயர்ந்த தங்கம், இன்று மேலும் ரூ 376 வரை உயர்ந்து அதிர்ச்சி தந்துள்ளது.

இந்தியாவில் கலாச்சார அடையாளமாகவும், சமூக அந்தஸ்தின் சின்னமாகவும் பார்க்கப்படும் தங்கம் எண்பதுகள் வரை விலை குறைந்திருந்தது. ஆனால் 2000 ஆண்டுக்குப் பிறகுதான் விலை தாறுமாறாக உயர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக 2009 முதல் சாமானியர்கள் வாங்க முடியாத அளவுக்கு தங்கம் விலை உச்சத்துக்குப் போய்விட்டது.

நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ. 152 குறைந்து ரூ. 17 ஆயிரத்து 456-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று விலை மீண்டும் ஏறத்தொடங்கியது. நேற்று ஒரு கிராம் ரூ. 2,203 விற்றது. ஒரு பவுன் தங்கம் ரூ. 17 ஆயிரத்து 624 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்தது. இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கு என்பதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்தது. இன்று நல்ல நாள் என்பதால் போட்டி போட்டு நகை வாங்கினார்கள். அதனால்தானோ என்னவோ தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 47 அதிகரித்தது. இதனால் நேற்று ரூ. 2,203க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் ரூ. 2,250 ஆக உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 376 அதிகரித்து 18 ஆயிரம் ரூபாயை எட்டியது. சர்வதேச அளவில் ஏற்படும் நிலைமை, அமெரிக்கப் பொருளாதார பின்னடைவு மற்றும் டாலர் மதிப்பு போன்றவை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இனி வரும் மாதங்கள் அடுத்தடுத்து பண்டிகைகளும், சுபமுகூர்த்த தினங்களும் வர உள்ளதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் கடைகாரர்கள். இதனால் தங்கத்தின் விலை இந்த ஆண்டே ரூ 20 ஆயிரத்தைத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் இனத்தைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவை கடுமையாக தண்டிக்க வேண்டும்- நடிகை அஞ்சலி!

தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு தண்டனை தரவேண்டும். அதற்கான இயக்கத்துக்கு என் ஆதரவு உண்டு. நானும் இதற்காக கையெழுத்திட்டுள்ளேன், என்று இளம் நடிகை அஞ்சலி கூறினார்.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக்காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து வாங்கி வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்ணன், சீனு, நடிகை ரோஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், வேலு பிரபாகரன், ஆர்.கே.செல்வமணி என ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.

தற்போது நடிகை அஞ்சலியும் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் இயக்க செய்தி தொடர்பாளர் வன்னி அரசு தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சென்று கையெழுத்து வாங்கினர். இயக்குனர் மு.களஞ்சியத்திடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.

இதுகுறித்து நடிகை அஞ்சலி கூறுகையில், "இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு சண்டை நடந்த போது இந்த செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். ஆனால் சமீபத்தில் டி.வி.யில் நேரடியாகவே அந்த படுகொலைகளை பார்த்து அதிர்ச்சியானேன். பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களை கொன்று குவித்திருந்தனர். எங்கும் ஒரே பிண மயம். அதைப் பார்த்து அழுதேன். சாப்பிடக் கூட பிடிக்கவில்லை.

ஈழத் தமிழ் இனத்தை இப்படி கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவுக்கு கடும் தண்டனை வழங்க விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்துவது பாராட்டுக்குரியது. இதற்கு என் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் நானும் அதில் கையெழுத்திட்டுள்ளேன்," என்றார்.

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகைக்கும் இப்படிக் கூற தைரியம் இல்லை. ஆனால் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அஞ்சலி ராஜபக்சேவை கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லோக் ஆயுக்த நீதிபதியாக சிவராஜ் பாட்டீல் பதவியேற்பு!

கர்நாடக லோக் ஆயுக்த நீதிபதியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  லோக் ஆயுக்த நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டேவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2-ம் தேதி முடிவடைந்ததையொட்டி அந்தப் பதவிக்கு சிவராஜ் பாட்டீல் நியமிக்கப்பட்டார்.

 
பெங்களூரில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கன்னடத்தில் பதவிப் பிரமாணமும் ரகசியக்காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார் சிவராஜ் பாட்டீல்.  துணை நீதிபதி: லோக் ஆயுக்தவின் துணை நீதிபதியாக ஆர்.குருராஜன் பதவியேற்றுக் கொண்டார்.  நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, பாஜக மூத்தத் தலைவர் எடியூரப்பா, அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா, மாநில அரசின் புதுதில்லி பிரதிநிதி தனஞ்செய்குமார், என்.வெங்கடசாலையா, தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத், மாநில டிஜிபி நீலம் அச்சுதராவ் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.  கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், மலட்கய் கிராமத்தில் 1940-ம் ஆண்டு பிறந்த சிவராஜ் பாட்டீல் வழக்குரைஞராகவும், சட்டக் கல்லூரி விரிவுரையாளராகவும், சட்டக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

நுழைவுத் தேர்வு: "எய்ம்ஸ்' மீது சிபிஐ 4 புதிய வழக்கு!

அகில இந்திய விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகம் (எய்ம்ஸ்) மீது புதன்கிழமை சிபிஐ 4 புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. விடைத்தாள் திருத்தம், நுழைவுத் தேர்வு முடிவு, முதுகலைப் படிப்பில் மூன்று புதிய படிப்புகள் தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


2010-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற முதுகலை தேர்வு தொடர்பாக 7 மாணவர்களின் விடைத்தாள் மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் எம்டி மற்றும் எம்எஸ் படிப்புகளுக்கு வேறு மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. இதற்காக விடைத்தாளில் திருத்தம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வு முடிவுகள் மூலம் பிற மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி பெறலாம். இதேபோல இளங்கலை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகள் குறித்தும் சிபிஐ மற்றொரு வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தவிர 2010-ம் ஆண்டு நவம்பர் மற்றும் 2011-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற முதுகலை தேர்வுகள் தொடர்பாகவும் வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. 2010-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்வில் 8 மாணவர்களின் விடைத் தாள்களில் தில்லுமுல்லு நடைபெற்றுள்ளது.2011-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் நான்கு மாணவர்களின் விடைத்தாளில் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக கடந்த ஜூன் 2-ல் எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகத்தின் முதுநிலை நுழைவுத் தேர்வில் தில்லுமுல்லு நடந்தது குறித்து மே 8-ம் தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய தரத்தில் சமச்சீர் புத்தகங்கள் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு!

தேசிய தரத்துக்கு இணையாக சமச்சீர் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்படாத காரணத்தால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் பி.பி. ராவ் கூறினார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.  கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிரியர்கள், பெற்றோர்களின் வாதம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் தமிழக அரசு சார்பில் பி.பி. ராவ் வாதாடினார்.

 அவரது வாதம்:
 
சமூக நீதி, அனைவருக்கும் தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  சமூக நீதி காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்பதால் சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தவில்லை.
 
சமச்சீர் கல்வி தொடர்பாக முத்துக் குமரன் குழு அளித்த பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தவில்லை என்று அவரே கூறியுள்ளார்.
 தரமான பாடப் புத்தகங்கள், அதனை அமல்படுத்த தேவையான விதிமுறைகள் உருவாக்கப்பட்ட பின் அடுத்த ஆண்டோ அல்லது அதன் பின்னரோ சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சமச்சீர் கல்விக்கான விதிமுறைகள் இன்னும் இயற்றப்படவில்லை என்பதால் இந்த ஆண்டு அமல்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
 மாநில அரசு உருவாக்கிய சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தரமானதாக உள்ளதா என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் ஒப்புதல் பெறவில்லை.

 அவசர கதியில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக கல்வித்துறை ஒரே நாளில் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சமச்சீர் கல்வி புத்தகங்கள் தேசிய தரத்துக்கு இணையாக இல்லை என்று உறுதியாகிவிட்டது.
 ஆகையால் தரமான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான விதிமுறைகளை உருவாக்கிய பிறகு தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைபடுத்தப்படும் என்று பி.பி.ராவ் வாதிட்டார்.
 
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இரண்டு மாதங்களாக புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.
 "இரண்டு மாதங்களாக மாணவர்களுக்கு இணைப்புப் பாடம் (பிரிட்ஜ் கோர்ஸ்) நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளி மாணவர்களும் தடையில்லாமல் படித்து வருகிறார்கள்' என்று ராவ் கூறினார்.  சமச்சீர் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்கள் அப்படியே தொடரும்; ஆனால் தரமான கல்வியை உருவாக்கிய பின் சமச்சீர் முறை அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அரசின் வாதம் வியாழக்கிழமையும் தொடர்கிறது. இந்த வழக்கின் வாதத்தை வியாழக்கிழமையுடன் முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் வழக்குரைஞர்களுக்கு அறிவுறுத்தினர். முன்னதாக ஆசிரியர்கள் சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்தினால் 90 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் பயனடைவர். அவர்களுக்காக இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்.  மீதமுள்ள 10 சதவீத தனியார் பள்ளிகள் பழைய பாடத் திட்டங்களை இந்த ஆண்டு பின்பற்றிவிட்டு அடுத்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று வாதாடினார்.

மக்கள் முட்டாள்களல்ல!

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்கிற நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு மத்திய அரசின் நடவடிக்கை இருக்கிறது. ""காமன்வெல்த் விளையாட்டு ஊழலுக்குக் கல்மாடியை நியமித்தது பாஜக அரசுதான்'' என்று இப்போது ஒரு புதிய தப்பித்தல்வாதத்தில் ஈடுபட்டிருக்கிறது.


காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழுத் தலைவரான கல்மாடியை, அமைச்சர்கள் குழு பரிந்துரையைப் புறக்கணித்து நியமித்தது பிரதமர் அலுவலகம்தான் என்று இப்போது மத்திய தலைமை தணிக்கைக் குழு (சி.ஏ.ஜி.) குறிப்பிட்டுள்ளதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானதால், இந்த அளவுக்குப் பதற்றத்துடன் மறுப்புத் தெரிவித்துள்ளது பிரதமர் அலுவலகம்.

 அதாவது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்தான், காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழுவின் தலைவராக இருப்பார் என்ற விதியை ஏற்படுத்தியது அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான். அதனால்தான் கல்மாடி காமன்வெல்த் விளையாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் அப்படி நியமிக்கப்பட்டதால்தானே இந்த ஊழல் நிகழ்ந்தது. அதனால், இத்தனை ஊழல்களுக்கும் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் பொறுப்பு என்று சொல்லாமல் சொல்கிறது பிரதமர் அலுவலகம்.

இந்த வாதம் எந்த அளவுக்கு ஏற்புடையது? 2004-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவு அப்படியே தொடரத்தான் வேண்டும் என்பது என்ன கட்டாயம்? பாஜக ஆட்சி இத்தகைய முடிவை மேற்கொண்ட ஓராண்டு காலம் கழித்து, பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன் புதிய முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது என்று யாராவது இவர்களைத் தடுத்தார்களா?

 இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்தான் காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழுத் தலைவராக இருப்பார் என்கிற விதிமுறையை மாற்றிவிட முடியாத அளவுக்கு அல்லது நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றுத்தான் திருத்தம் செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அது என்ன அரசியல் நிர்ணயச் சட்டமா? கல்மாடியை நீடிக்கச் செய்ததன் காரணம் என்ன என்பது இன்று ஊழலின் ஊற்றுக்கண்களில் அடைபடாமல் வெளியே கசிந்து கொண்டே இருக்கும் ஊழலுக்கு அவர் துணை நின்றார் என்பதால்தானே!
 2ஜி அலைக்கற்றை வழக்கிலும் இதே அணுகுமுறையைத்தான் மத்திய அரசு மேற்கொண்டது. தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஆ. ராசா பதவி விலகியதும், அப்பதவிக்குப் பொறுப்பேற்ற கபில் சிபல் அளித்த முதல் பேட்டியிலேயே, பாஜக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் காலத்திலிருந்து தொலைத்தொடர்புத் துறையில் தனியாருக்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் தொடங்கி, இன்றைய நாள் வரைக்கும் அளிக்கப்பட்டுள்ள உரிமங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
 இவையாவும் பாரதீய ஜனதா கட்சியை மிரட்ட வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், ஊழல் என்கிற முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா?
 ஞாபகமறதி வியாதியில் சிக்கியதாகச் சொல்லப்பட்ட கல்மாடியை மீண்டும் சி.ஏ.ஜி. ஞாபகப்படுத்தக் காரணம், இப்போது இன்னும் அவையின் முன்பாக வைக்கப்படாத, மற்றொரு சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகள், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளன. அதாவது, ரூ.5,000 மதிப்புள்ள விளக்குகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை ரசீது கொடுத்து ஒப்பந்த நிறுவனங்கள் பணம் பெற்றுள்ளன. இதற்கு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ரூ.31 கோடிக்கு அனுமதி அளித்துள்ளார். இதனால் அரசுக்கு ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்தத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


 இதுகுறித்தும் மக்களவையில் தன்னிச்சையாக விளக்கம் அளித்த விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான், தில்லி யூனியன் பிரதேசம் இந்த விளையாட்டைப் பொறுப்பேற்று நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த முடிவைச் செயல்படுத்தத் தடையாக இருந்த அப்போதைய பாஜக அரசுதான் இன்றைய இந்த நிலைமைக்குக் காரணம். தில்லி அரசைப் புறக்கணித்துவிட்டுக் காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழுவின் மூலம் நடத்தப்பட்டதால்தான் இந்த நிலைமை என்று விளக்கம் அளித்துள்ளார். ஆனால், ஷீலா தீட்சித் பற்றி கேட்டால், அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படவில்லை, அத்தகைய அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பின்னர் அதைப் படித்துப் பார்த்துத்தான் பதில் சொல்ல முடியும் என்று சொல்கிறார்.

 ஷீலா தீட்சித் பற்றிக் கேட்டால், அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் வைக்கப்படாத, பத்திரிகைகளில் மட்டும் வெளியான செய்திக்குப் பிரதமர் அலுவலகம் மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறது, கல்மாடி பொறுப்பேற்றதற்குக் காரணமே முந்தைய பாஜக தலைமையிலான அரசுதான் என்று!

காமன்வெல்த் விளையாட்டு நடைபெற முடியாத அளவுக்குச் சிக்கல்கள் இருப்பதாக "காமன்வெல்த் கேம்ஸ் பெடரேஷன்' குறை கூறியபோது, 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த எம்.எஸ். கில் பேட்டியளித்தார். ""1982-ல் தில்லியில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளுக்குப் பிறகு இப்போதுதான் மிகப்பெரிய அளவில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. காமன்வெல்த் விளையாட்டின் முன்பாக தனிநபர்கள் யாரும் முக்கியமில்லை என்று பிரதமர் என்னிடம் கூறினார். ஆகையால், இந்த விளையாட்டு எந்தக் குறைவும் இல்லாமல் நடைபெறும்'' என்றார்.



 2009-ம் ஆண்டிலும்கூட, கல்மாடியை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வேறு நபரை அல்லது அதிகாரிகளை நியமித்து காமன்வெல்த் விளையாட்டை நடத்தியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? அத்தனை ஊழல்கள் நடப்பதையும் கண்டும் காணாமலும் இருந்துவிட்டு, பத்திரிகைகளும், ஏன், காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனமே பல விதிமுறை மீறல்களையும், தவறுகளையும் சுட்டிக்காட்டியதை எல்லாம் புறக்கணித்துவிட்டு, இப்போது முந்தைய அரசின்மீது பழிசுமத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் கயமைத்தனத்துக்கு முடிவே கிடையாதா?


கேப்பையில் நெய் வழிகிறது என்று சொன்னால் அதை நம்பும் முட்டாள்கள் அல்ல, இந்தியத் திருநாட்டு மக்கள்!

ஆக. 15-ல் கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றுவோம்: அர்ஜுன் சம்பத்!

கச்சத்தீவில் நமது உரிமையை நிலைநாட்டும் வகையில், ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று அத்தீவில் தேசியக் கொடி ஏற்றும் முயற்சியில் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் ஈடுபடுவார்கள் என்று, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: ÷அமர்நாத் புனித யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களுக்கு, ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படுவது போன்ற சலுகைகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும். அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் 3 நாள்கள் வரை மலைப்பிரதேசத்தில் தங்கிச் செல்ல வேண்டிய நிலையில், தங்குமிட வசதி, பாதை சீர்ப்படுத்தும் பணிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும்.


கடந்த ஜூலை 23-ல் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேர் எனது தலைமையில் அமர்நாத் யாத்திரை சென்று 31-ம் தேதி திரும்பினோம். அங்கு துணை ராணுவப் படையினர், எல்லை பாதுகாப்புப் படையினர் பணியாற்றி வருகின்றனர். 
பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளையும் இவர்களுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
ஆக. 14-ல் நெல்லையில், நெல்லையப்பர் கோயிலில் பிரிவினைவாத எதிர்ப்பு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம், பாரத மாதா வழிபாடு, 108 தொண்டர்களின் காவிக்கொடி அணிவகுப்பு ஆகியவற்றை நடத்த உள்ளோம்.
தமிழக மீனவர்களின் நலன் காக்கும் வகையில், இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் கச்சத்தீவில் தேசியக் கொடியை ஏற்றும் முயற்சியில் ஆக. 15-ம் தேதி ஈடுபடுவார்கள். பாஜக நடத்தும் கடல் முற்றுகைப் போராட்டத்தையும் ஆதரிக்கிறோம்.


மத்திய அரசால் கொண்டுவரப்படும் மதக் கலவர வன்முறை தடுப்பு மசோதா, இந்து இயக்கத்தினரை ஒடுக்கும் திட்டத்துடன் உள்நோக்கத்தோடு பாரபட்சமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இவ்விஷயத்தில் தனது உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதற்காக அவருக்கு இந்து மக்கள் கட்சி நன்றி தெரிவிக்கிறது. வரும் 9-ம் தேதி சென்னையில் இம்மசோதாவின் நகல் எரிப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். வரும் 16-ம் தேதி முதல் அண்ணா ஹசாரே நடத்தும் அறப் போராட்டத்தில் இ.ம.க. தொண்டர்களும் பங்கேற்பார்கள் என்றார்.

அரசின் உத்தரவு ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்!

உத்தரபிரதேச மாநில அரசு, ஜோதிபா புலே நகர் என்ற இடத்தில் ஜெயில் கட்டிடம் கட்ட, விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தியது. இதை எதிர்த்து விவசாயிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.தத்து ஆகியோர் விசாரித்தனர்.


விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை மீறி, அவர்களது நிலத்தை அரசு கட்டிடத்துக்காக கையகப்படுத்துவது தவறு. விவசாயிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும். உ.பி. அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது'' என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நொய்டாவில் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்திய வழக்கில், சமீபத்தில் உ.பி. அரசின் உத்தரவை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல வடிவேலு!


சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார். அப்புகார் மனுவில்,  தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியதாகவும் அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்று இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் வடிவேலு பதில் அளித்துள்ளார்.அவர்,  ’’நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, சென்னையில் இருப்பேன். இல்லாட்டி மதுரைக்கு போவேன். போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல. 

 இரும்புலியூர் இடத்தை பொறுத்தவரை பத்திரம் காணாமல் போச்சுன்னு பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை காட்டி எனக்கு விற்றனர். இ.சி. போட்டு பார்த்தேன். சரியாதான் இருந்தது. 2002-ல் அந்த நிலத்தை விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். அப்ப இன்னொருத்தவர் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன். போலி பத்திரம் வச்சி விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன்.

அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும். பழனியப்பன் என்பவர் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன். மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க.

நான் என் பொண்டாட்டி, குழந்தை, அப்பா எல்லோரும் போலி பத்திரம், தயாரிச்சிட்டா இருக்கோம். போலி பத்திரம் தயாரிக்கிறது வேற ஆள். நான் அத பார்த்து ஏமாந்த ஆள். எனக்கு படிப்பறிவு குறைவு பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்’’என்று கூறியுள்ளார்.

இளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத்!

சினிமா இணையதளம் நடத்திய, இன்றைய இளைஞர்களின் மனதில் இருக்கும் யூத்ஐகான் யார் என்ற கேள்விக்கு, அதிகப்படியான பேர் அஜீத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழகத்தின் பிரபல வார இதழின் சினிமா இணையதளத்தில், இப்போது இருக்கும் இளைஞர்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் யூத்ஐகான் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. யூத்ஐகான் பட்டியலில் அஜீத், விஜய், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு, ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.கடந்த ஜூன் 23ம் தேதி முதல் துவங்கிய இந்த சர்வே ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்து, சர்வேயின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கட்டத்தட்ட 38நாட்கள் நடந்த இணையதள சர்வேயில் மொத்தம் 63, 434ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் 43,384 ஓட்டு பெற்று அஜீத் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விஜய் 18,271 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கமல் 455 ஓட்டும், ரஜினி 376 ஓட்டும், சிம்பு 199 ஓட்டும், ஆர்யா 107 ஓட்டும், விக்ரம் 73 ஓட்டும், தனுஷ் 39 ஓட்டும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

இதில் விஷேம் என்னவென்றால் ஜூன் 23ம் தேதியிலிருந்து விஜய் தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் கடைசி மூன்று நாட்களில் விஜய்யை பின்னுக்கு தள்ளிவிட்டு, அஜீத் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதற்குகாரணம் விஜய்யை காட்டிலும், அஜீத்திற்கு தான் இணையதள ரசிகர்கள் அதிகம். இதற்கு முன்பு ஒருமுறை,  வடஇந்திய இணையதளம் நடத்திய சர்வேயிலும் அஜீத்தான் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்'!

ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு , மானிய விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வரும், மானியத்தை குறைக்க, மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. சமையல் காஸ் விற்பனை மூலம் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக தள்ளிவைத்து வந்தன. சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றின் அடக்கவிலை 642.35 ரூபாயாக உள்ளது. இது ஒவ்வொரு நகரத்திற்கும் உள்ளூர் வரிக்கு ஏற்ப வேறுபடுகிறது. சென்னையில் சிலிண்டர் விலை, 405 ரூபாயாக உள்ளது. இதில், மானியமாக, 242 ரூபாய் அளிக்கப்படுகிறது. இந்த மான்யத்தை முற்றிலும் நீக்கும் வகையில், படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில், முதற்கட்டமாக ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதை நிறுத்த வேண்டும் என, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதை அரசு ஏற்கும் பட்சத்தில், ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள், காஸ் சிலிண்டருக்கான சந்தை விலையை ( ரூ.642) முழுமையாக செலுத்த வேண்டும். இதன்மூலம், அரசு வழங்கிவரும் மான்யத்தால் ஏற்படும் இழப்பை ஓரளவு சரிக்கட்ட முடியும். வசதி படைத்தவர்கள், முழு விலையை செலுத்த முன்வரும்போது, கிராமப்புறங்களில் மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை விரிவுபடுத்த முடியும் என்று பார்லிமென்ட் குழு தன் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூட்டம், கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. இதில், வீடுகளுக்கான, மானிய விலை காஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு நான்கு மட்டுமே வழங்குவது என, முடிவு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், கூட்டம் தள்ளிப்போனதால் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது பார்லிமென்ட் நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையைத் தொடர்ந்து, விரைவில் அமைச்சர்கள் குழு கூடி, இதற்கான முடிவை எடுக்க உள்ளது.

இதே நாள்...


  •  தேம்ஸ் ஆற்றின் கீழே கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது(1902)
  •  சிட்னியில் மத்திய ரயில் நிலையம் அமைக்கப்பட்டது(1906)
  •  நாசாவின் பீனிக்ளு் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)
  •  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்(1961)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...