|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 August, 2011

ஆக. 15-ல் கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றுவோம்: அர்ஜுன் சம்பத்!

கச்சத்தீவில் நமது உரிமையை நிலைநாட்டும் வகையில், ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று அத்தீவில் தேசியக் கொடி ஏற்றும் முயற்சியில் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் ஈடுபடுவார்கள் என்று, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: ÷அமர்நாத் புனித யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களுக்கு, ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படுவது போன்ற சலுகைகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும். அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் 3 நாள்கள் வரை மலைப்பிரதேசத்தில் தங்கிச் செல்ல வேண்டிய நிலையில், தங்குமிட வசதி, பாதை சீர்ப்படுத்தும் பணிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும்.


கடந்த ஜூலை 23-ல் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேர் எனது தலைமையில் அமர்நாத் யாத்திரை சென்று 31-ம் தேதி திரும்பினோம். அங்கு துணை ராணுவப் படையினர், எல்லை பாதுகாப்புப் படையினர் பணியாற்றி வருகின்றனர். 
பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளையும் இவர்களுக்கும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
ஆக. 14-ல் நெல்லையில், நெல்லையப்பர் கோயிலில் பிரிவினைவாத எதிர்ப்பு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம், பாரத மாதா வழிபாடு, 108 தொண்டர்களின் காவிக்கொடி அணிவகுப்பு ஆகியவற்றை நடத்த உள்ளோம்.
தமிழக மீனவர்களின் நலன் காக்கும் வகையில், இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் கச்சத்தீவில் தேசியக் கொடியை ஏற்றும் முயற்சியில் ஆக. 15-ம் தேதி ஈடுபடுவார்கள். பாஜக நடத்தும் கடல் முற்றுகைப் போராட்டத்தையும் ஆதரிக்கிறோம்.


மத்திய அரசால் கொண்டுவரப்படும் மதக் கலவர வன்முறை தடுப்பு மசோதா, இந்து இயக்கத்தினரை ஒடுக்கும் திட்டத்துடன் உள்நோக்கத்தோடு பாரபட்சமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இவ்விஷயத்தில் தனது உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதற்காக அவருக்கு இந்து மக்கள் கட்சி நன்றி தெரிவிக்கிறது. வரும் 9-ம் தேதி சென்னையில் இம்மசோதாவின் நகல் எரிப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். வரும் 16-ம் தேதி முதல் அண்ணா ஹசாரே நடத்தும் அறப் போராட்டத்தில் இ.ம.க. தொண்டர்களும் பங்கேற்பார்கள் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...