கர்நாடக லோக் ஆயுக்த நீதிபதியாக உச்ச நீதிமன்ற முன்னாள்
நீதிபதி சிவராஜ் பாட்டீல் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர்
எச்.ஆர்.பரத்வாஜ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். லோக் ஆயுக்த நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டேவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 2-ம்
தேதி முடிவடைந்ததையொட்டி அந்தப் பதவிக்கு சிவராஜ் பாட்டீல் நியமிக்கப்பட்டார்.
பெங்களூரில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கன்னடத்தில் பதவிப்
பிரமாணமும் ரகசியக்காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார் சிவராஜ் பாட்டீல். துணை நீதிபதி: லோக் ஆயுக்தவின் துணை நீதிபதியாக ஆர்.குருராஜன் பதவியேற்றுக்
கொண்டார். நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, பாஜக மூத்தத் தலைவர் எடியூரப்பா, அமைச்சர்
வி.எஸ்.ஆச்சார்யா, மாநில அரசின் புதுதில்லி பிரதிநிதி தனஞ்செய்குமார்,
என்.வெங்கடசாலையா, தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத், மாநில டிஜிபி நீலம் அச்சுதராவ்
உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர். கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், மலட்கய் கிராமத்தில் 1940-ம் ஆண்டு
பிறந்த சிவராஜ் பாட்டீல் வழக்குரைஞராகவும், சட்டக் கல்லூரி விரிவுரையாளராகவும்,
சட்டக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment