|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 August, 2011

தங்கம் விலை.. ஒரே நாளில் 320 உயர்வு!!

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்து நிற்கிறது. தங்க விற்பனை வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் பார்த்திராத வகையில், சவரன் ரூ 18000 என உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ 168 உயர்ந்த தங்கம், இன்று மேலும் ரூ 376 வரை உயர்ந்து அதிர்ச்சி தந்துள்ளது.

இந்தியாவில் கலாச்சார அடையாளமாகவும், சமூக அந்தஸ்தின் சின்னமாகவும் பார்க்கப்படும் தங்கம் எண்பதுகள் வரை விலை குறைந்திருந்தது. ஆனால் 2000 ஆண்டுக்குப் பிறகுதான் விலை தாறுமாறாக உயர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக 2009 முதல் சாமானியர்கள் வாங்க முடியாத அளவுக்கு தங்கம் விலை உச்சத்துக்குப் போய்விட்டது.

நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ. 152 குறைந்து ரூ. 17 ஆயிரத்து 456-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று விலை மீண்டும் ஏறத்தொடங்கியது. நேற்று ஒரு கிராம் ரூ. 2,203 விற்றது. ஒரு பவுன் தங்கம் ரூ. 17 ஆயிரத்து 624 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்தது. இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கு என்பதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்தது. இன்று நல்ல நாள் என்பதால் போட்டி போட்டு நகை வாங்கினார்கள். அதனால்தானோ என்னவோ தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 47 அதிகரித்தது. இதனால் நேற்று ரூ. 2,203க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் ரூ. 2,250 ஆக உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 376 அதிகரித்து 18 ஆயிரம் ரூபாயை எட்டியது. சர்வதேச அளவில் ஏற்படும் நிலைமை, அமெரிக்கப் பொருளாதார பின்னடைவு மற்றும் டாலர் மதிப்பு போன்றவை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இனி வரும் மாதங்கள் அடுத்தடுத்து பண்டிகைகளும், சுபமுகூர்த்த தினங்களும் வர உள்ளதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் கடைகாரர்கள். இதனால் தங்கத்தின் விலை இந்த ஆண்டே ரூ 20 ஆயிரத்தைத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...