ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
25 October, 2011
முருங்கைப் பூ...!
முருங்கை மரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில்
பூக்களின் மருத்துவ பண்புகள் அலாதியானது. உடலின் வெப்பத்தை தணித்து
குளிர்ச்சி தரக்கூடிய சக்தி முருங்கைப் பூக்களுக்கு உண்டு. கண்களை
பாதுகாக்கும், பித்த மயக்கம் போக்கும். நல்ல தாது பலம் கொடுக்கும்.
மொத்தத்தில் முருங்கைப் பூவானது பிணி தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
உடல்சூடு தணிய: சிலருடைய
உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால்
காய்ச்சல் அடிப்பது போல காணப்படும். அத்தகையவர்கள் ஒரு கைப்பிடியளவு
முருங்கைப் பூக்களைச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து இரண்டு
தேக்கரண்டியளவு அளவு பசு நெய் விட்டு வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி
நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து
காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஏழே நாட்களில் உடல் சூடு தணிந்து சம
அளவை அடையும்.
விந்து விருத்தியடையும்: ஒரு
பிடி அளவு முருங்கைப் பூவை சுத்தமாக ஆய்ந்து அலம்பி, பசும் பாலில் போட்டுக்
காய்ச்சி கற்கண்டு தூள் போட்டுக் கலக்கி மாலை 6 மணிக்கு சாப்பிட்டால் உடல்
வலுப்பெறும் தாது விருத்தியாகும். முருங்கைப் பூவுடன் முருங்கைப்
பிஞ்சையும், தோலுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வெப்பம் தவிர்த்து ஆண்மை
பெருகும்.
வீக்கத்தை கட்டுப்படுத்த: முருங்கைப் பூவை அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போடலாம். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று விழுங்கலாம்.
கண் வலிக்கு: இரவு
நேரத்தில் முருங்கைப் பூவை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை பூவின் சாறை 2
துளிகள் வீதம் கண்களில் விட கண் வலிகள் நீங்கும். விரை வீக்கம் சுருங்க
முருங்கைப் பூவை அவித்து விரை மீது மூன்று நாட்கள் கட்டினால் நீர் வற்றி
சுருங்கி விடும்.வயிற்று வலிக்கு: பிரண்டை,
முருங்கைப் பூ, பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன்றையும் வகைக்குக்
கைப்பிடியளவு எடுத்து மூன்றையும் ஆவியில் வேகவைத்து அம்மியில் வைத்து
நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்து விட்டால் வயிற்றுவலி
நின்றுவிடும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்க எது நல்ல நேரம்?
நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை காலை எந்த நேரத்தில்
தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்பது குறித்து ஜோதிடர்கள்
தெரிவித்துள்ளனர். தீபாவளி என்றதும் பட்டாசு, இனிப்பு, புத்தாடைதான்
முதலில் நினைவுக்கு வரும். ஆனால் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்
குளிப்பதுதான் மிக முக்கியமானது. தீபாவளியன்று தலைக்கு எண்ணெய் வைத்துக்
கொள்வதற்கும் கூட நல்ல நேரம் பார்ப்பது அவசியம்.
வழக்கமாக எண்ணெய்
தேய்த்துக் குளிப்பதற்கு நிறைய பார்க்க வேண்டும் என்பார்கள். இரவு
நேரங்களில் குளிக்கக் கூடாது. சூரிய அஸ்தமனம், உதய காலங்கள், பிறப்பு
நேரம், மரண நேரம் உள்ளிட்டவற்றிலும் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ளக்
கூடாது. சனி, புதன், திங்கள் ஆகிய கிழமைகளில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக்
குளிக்கலாம் என பல சம்பிரதாயங்கள் உள்ளன.
இருப்பினும் தீபாவளிக்கு
இதிலிருந்து விதி விலக்கு உண்டு. காரணம், அன்றைய தினம் நாம் எண்ணெய்
தேய்த்துக் குளிப்பது என்பது கங்கையில் குளிப்பதற்குச் சமம் என்பார்கள்.
அதனால்தான் இதற்கு கங்காஸ்னானம் என்று பெயர். இப்படிப்பட்ட
தீபாவளிக் குளியலுக்கு நல்ல நேரம் பார்ப்பது அவசியம் இல்லையா. இந்த ஆண்டு
அதாவது நாளை அதிகாலை 3 மணி முதல் 4.53 மணிக்குள் குளிப்பது நல்லது
என்கிறார்கள். அந்த நேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை
அணிந்து, வீட்டில் தீபமேற்றி பூஜை செய்வது உகந்தது.
பொன்
கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. அப்படிப்பட்ட அருமையான
புதன்கிழமையன்று இந்த ஆண்டு தீபாவளி வருவது கூடுதல் சிறப்பாகும். அதை விட
மகா சிறப்பான விஷயம் என்னவென்றால், விஷ்ணுவுக்கு உகந்த இந்த நாளில்,
இந்திரனின் நட்சத்திரமான சித்திரையும் கூடி வருவதுதான். எனவே இந்த ஆண்டு
தீபாவளி மிகவும் சிறப்பான நேரத்தில் வருகிறது.
இப்படிப்பட்ட
தீபாவளிப் பண்டிகையை உரிய குளியல் நேரத்தில் தலைக்குக் குளித்து தீபமேற்றி
கடவுள்களை வணங்கி, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, உற்றார்,
உறவினர்கள், நண்பர்கள் சகிதம் இனிய முறையில் கொண்டாட அனைவருக்கும்
வாழ்த்துகள். அன்புடன் விவேக் !
நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு!
மனிதர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது அவர்களின் நுண்ணறிவுத்திறனே.
தங்களின் அறிவுத்திறனை பயன்படுத்தி அவர்கள் பிரச்சினைகளுக்கு எளிதில்
தீர்வுகாண்பதன் மூலமே அவர்களால் எளிதில் வெற்றிபெற முடிகிறது. இந்த
நுண்ணறிவுத் திறனுக்கு உடல் ஆரோக்கியம் அவசியம் என்று ஆய்வு ஒன்று
தெரிவிக்கின்றது. மனிதர்களின் சிறந்த நுண்ணறிவுத் திறனுக்கு (ஐ
க்யூ) அவரது கல்வியை விட, நல்ல ஆரோக்கியமே முக்கிய பங்கு வகிக்கிறது என்று
அந்த ஆய்வில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய்களால் பாதிப்புஅமெரிக்காவின்
நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களின் குழு, அமெரிக்கா
முழுவதும் பரவலாக, மக்களின் நுண்ணறிவுத் திறனை(IQ) சோதித்ததில், தொற்று
நோய்கள், IQ திறன்களை பாதிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று
தெரிவிக்கின்றனர்.மனிதர்கள், குறிப்பாக குழந்தைகள், தங்களின் மூளை
இயங்குவதற்கு, அதிகளவிலான ஆற்றலை செலவழிக்கின்றனர். ஆனால், தொற்றுநோய்
போன்ற வியாதிகள் தாக்கும்போது, இந்த ஆற்றல் பெருமளவில் உறிஞ்சப்பட்டு,
நுண்ணறிவு மேம்பாடு தடைபெறுகிறது.இந்த தொற்றுநோய்கள்தான், உலகின்
பல்வேறு பகுதிகளில், மனிதனின் IQ வேறுபட்டிருப்பதற்கான காரணம். இது எங்கே
அதிகமாக இருக்கிறதோ, அங்கே IQ குறைவாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு
தெரிவிக்கிறது.
நுண்ணறிவுத்திறன் விகிதம்ஒரு
மனிதன் தனது பூர்வீக இருப்பிடத்தை விட்டு, வாழ்வதற்காக வேறிடம் சென்று
குடியேறும்போது, புதிய சூழலை பழகிக்கொள்வதற்காக மூளையானது சிறப்பாக
தயாராகிறது. இதனால், அத்தகைய மனிதர்களின் IQ அதிகமாக உள்ளன என்று முந்தைய
ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த
ஆய்வானது, அந்த கருத்தினை பொய்யாக்கி விட்டது. ஏனெனில், அமெரிக்காவில் ஒரே
நிலையிலுள்ள பல மாநிலங்களில் நுண்ணறிவுத் திறன் விகிதங்கள் மாறுபட்டு
இருந்தன.ஐ க்யூ விகிதங்கள் குறைந்திருந்த மாநிலங்களில், தொற்றுநோய்
பிரச்சினைகள் இருந்தன. ஐ க்யூவிகிதம் அதிகமிருந்த மாநிலங்களில் அந்த
பிரச்சினைகள் இல்லை. மற்றபடி, அந்த மக்களுக்கும், மாநிலங்களுக்கும்
வித்தியாசங்கள் எதுவுமில்லை. அதேசமயம், நுண்ணறிவுத் திறன் சிக்கலானது, ஜீன்
தொடர்புடையதாக இருந்தால், அதை மாற்றுவது கடினம் என்றும் அந்த ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
உங்களின் குழந்தை ஒரு மேதை!
உங்களின் குழந்தை தற்போது வெற்றிகரமான வாழ்க்கை என்னும் மாபெரும் கடலின் கரையில் நின்று கொண்டுள்ளது. அந்தக் கடலை கடப்பதற்கு உங்களின் குழந்தைக்கு 3 விதமான அம்சங்கள் கட்டாயம் தேவை. அவை,
படைப்பாக்க ஆர்வம்(Creative curiosity)
ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன்(Inspired imagination)
சுதந்திரம்(Independence)
ஒரு குழந்தை வெற்றிகரமான மனிதனாக உருவாதலில், இந்த மூன்று அம்சங்களும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
உங்கள் குழந்தையின் செயல்பாடுகள் மீதான உங்களின் அணுகுமுறை தொடர்பாக
ஆராய, சில கேள்விகள் இங்கே கேட்கப்பட்டுள்ளன. அவற்றை கவனமாகப் படிக்கவும்.
* பிஸ்கட்டுகள் நிறைந்த ஒரு டப்பாவை உங்களின் 2 வயது குழந்தை திறக்க
முயற்சிக்கும்போது, நீங்கள் அதைக் கண்டித்து, குழந்தையிடமிருந்து டப்பாவை
பிடுங்கி விடுவீர்களா?
* உங்கள் குழந்தை சகதியில் விளையாடிக் கொண்டிருந்தால், சத்தம்போட்டு,
குழந்தையை சுத்தப்படுத்தி, வீட்டிற்குள், சுத்தமான பொம்மைகள் நிறைந்துள்ள
இடத்தில் விடுவீர்களா?
* நீங்கள் சமையல் வேலையில் மும்முரமாக இருக்கையில், உங்கள் குழந்தை சில
காலி அட்டைப் பெட்டிகளை வெளியில் எடுக்கும் சத்தம் கேட்டு நீங்கள் அங்கு
சென்று பார்க்கையில், மேலும் ஒரு அட்டைப் பெட்டிக்காக உயரமான அலமாரியில்
உங்கள் குழந்தை ஏறிக்கொண்டுள்ளது. இதனால் கோபம் கொண்டு குழந்தையை
கடிந்துகொண்டு, அந்த இடத்திலிருந்து குழந்தையை அப்புறப்படுத்தி,
தொலைக்காட்சியை இயக்கி அதன் முன்பாக குழந்தையை அமர வைப்பீர்களா?
* உங்களின் குழந்தை தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்து, கார்டூன்
சேனல்களையோ அல்லது வர்த்தக விளம்பரங்களையோ ஆர்வமாக பார்த்துக்
கொண்டிருந்தால், உங்கள் குழந்தையைப் பார்த்து, சமர்த்து என்று சொல்வீர்களா?
* ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கையிலேயே, வேறொரு நாற்காலியை
இழுக்கும்போதோ, தொலைக்காட்சி சேனலை மாற்றும்போதோ அல்லது இடத்தை விட்டு
இறங்கி வேறு எதையாவது தேடி அலைந்து திரியும்போதோ, நீங்கள் பொறுமையை இழந்து,
குழந்தையை அதட்டி அதன் பழைய இடத்திலேயே அமர வைப்பவரா?
* உங்களின் உதட்டு சாயத்தை(Lipstick) குழந்தைப்பார்த்து, அதை எடுத்து
தனது உடலில் சாயம் பூசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் நீங்கள் பொறுமையை
இழக்கிறீர்களா?
* உங்களின் பத்து வயது பிள்ளையானது, பல வண்ணங்களில் ஒரு கோணல்மானலான
படத்தை வரைந்து வந்து உங்களிடம் காட்டினால், நீங்கள் அதை சில நொடிகள்
கடமைக்காக பார்த்துவிட்டு, Good என்று சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள்
வேலையில் ஆழ்ந்து விடுவீர்களா?
* உங்கள் குழந்தை வரைந்ததை என்ன என்று கேட்டு, அதற்கு ஏதேனும் ஒரு
மிருகத்தையோ, பறவையையோ அல்லது பொருளையோ உங்கள் குழந்தை சொன்னால்,
அதைக்கேட்டு ஏளனமாக சிரித்து, குழந்தை சொன்னதை மறுப்பீர்களா?
* உங்கள் 12 வயது குழந்தை உங்களிடம் வந்து, தான் ஒரு விஞ்ஞானியாக
போகிறேன் அல்லது தத்துவ ஞானி ஆகப் போகிறேன் என்று சொன்னால், அது மிகவும்
கஷ்டம் அல்லது முடியாத காரியம் என்று சொல்பவரா நீங்கள்?
* உங்கள் 6 வயது பெண் குழந்தை, தனது அண்ணனின் துப்பாக்கி பொம்மை அல்லது
கட்டுமான அமைப்பை எடுத்து விளையாடினால், நீங்கள் அவளிடம் இது
பெண்களுக்கானதல்ல, எனவே உனக்கான பொம்மையை எடுத்து விளையாடு என்று சொல்பவரா? மேற்கண்ட 10 கேள்விகளுக்கு உங்களின் பதில் NO என்று இருந்தால், நீங்கள்
ஒரு PERFECT பெற்றோர். உங்கள் குழந்தை மேதையாக ஆகும் செயல்பாட்டில்,
நீங்கள் முழுமையாக ஒத்துழைக்கிறீர்கள் என்று அர்த்தம். அதேசமயம், 7 முதல் 9 வரை உங்களின் பதில்கள் NO என்று இருந்தால், உங்கள்
குழந்தையின் மேம்பாட்டிற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்று அர்த்தம்.
எனவே, உங்களின் இதர பலவீன பகுதிகளை சரிசெய்து கொள்ளுங்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு 6 மற்றும் அதற்கும் குறைவாக உங்களின் பதில் NO
என்று இருந்தால், உங்கள் குழந்தையின் மேதமை வளர்ச்சியை நீங்கள்
தடுக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, உங்களின் மனநிலை மற்றும் தன்மையை
நீங்கள் நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
உங்களின் குழந்தை மேதையாக மாறுதல்: ஒரு மேதை என்பவர் படைப்புத்திறன் உள்ளவர். அவர் வெறுமனே விஷயங்களை
எளிதாக புரிந்து கொள்பவர் அல்ல. அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர். அவர்
தனக்கான ஒரு தனித்தன்மையை இந்த சமூகம் மற்றும் இந்த உலகிலிருந்து
பெறுகிறார். எனவே, ஒரு குழந்தையின் படைப்புத்திறன் பெரியளவில் எழுச்சிப்
பெறுவதற்கு, படைப்பாக்க ஆர்வம், கற்பனை மற்றும் சுதந்திரம் ஆகியவை அதற்கு
கட்டாயம் தேவை.
படைப்பாக்க ஆர்வம்: படைப்புத்திறனுக்கான அடிப்படை தன்மையாக இந்த படைப்பாக்க ஆர்வம்
திகழ்கிறது. படைப்புத்திறனை உங்கள் குழந்தையினுள் உருவாக்க, பலவித
விஷயங்களைப் பற்றி கேள்விக் கேட்கும் பழக்கத்தை தூண்டுங்கள். குழந்தையானது,
புதிய அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள். இதன்மூலம்
அக்குழந்தைக்கு புதிய எண்ணங்கள் பிறக்கும். ஒரு குழந்தை கேள்வி கேட்கும்போது, உங்களின் முழு கவனத்தையும் அதன்பால்
செலுத்தவும். ஏனெனில் இதில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. பெரியவர்களை
மதிக்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு பொதுவாக கற்றுத் தரப்படுகிறது.
நாமும் அதைத்தான் அவர்களிடம் சொல்கிறோம். ஆனால் நாம் ஒன்றை யோசித்துப்
பார்க்க வேண்டும். நாம் சிறுவர்களாக இருந்தபோது, நம்மை உதாசீனப்படுத்திய
பெரியவர்களை நாம் விரும்பியிருக்கிறோமா? அல்லது மனதுக்குள்
மதித்திருக்கிறோமா? எனவேதான், குழந்தைக்கான முக்கியத்துவத்தை நாம் நிச்சயம்
வழங்கியாக வேண்டும். உங்கள் குழந்தையை வெளியே அழைத்துச் செல்லும்போது, கண்ணால் காணும்
காட்சிகள் தொடர்பாக கேள்விகள் கேட்கலாம். (உ.ம். அந்த மனிதர் ஏன் செடிக்கு
நீர் ஊற்றுகிறார், நின்று கொண்டிருந்த கார் எவ்வாறு ஓடியது, ஏன் கடை
வைத்திருக்கிறார்கள்) இதன்மூலம் சிந்தனைத்திறன் மேம்படும். ஏன், எதற்கு என்று யோசிப்பார்கள். அதற்கு விடைகாண முயல்வார்கள்.
கற்பனை: பள்ளியில் ஒரு குழந்தைக்கு, வரலாறு, புவியியல், சமூகவியல், அறிவியல்,
கணிதம் போன்ற பல பாடங்களைப் பற்றிய அம்சங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால்
அவற்றுடன் கற்பனைத்திறன் சேர்வது மிகவும் முக்கியம். கற்பனையற்ற அம்சங்கள்
என்பவை பசுமையில்லாத தாவரங்களைப் போன்றவை. எனவே, பாடத்திட்டத்தில்,
ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் என்ற அம்சம் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஏ¦னினில், படைப்புத்திறனின் ஆக்ஸிஜனாக இந்த ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன்
திகழ்கிறது. உதாரணமாக, ஒரு விஞ்ஞானி ஒரு விஷயத்தை முதலில் கற்பனை செய்து,
பின்னர் அதை நிஜமாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அது
தோல்வியடையும்போது, மீண்டும் வேறொரு கற்பனையை மேற்கொண்டு, தனது முயற்சியில்
ஈடுபடுகிறார். இந்த செயல்முறைதான் அனைத்து வகை துறைகளிலும் இருக்கிறது. உங்கள் குழந்தையின் கற்பனை சமயத்தில் அபத்தமாகவும், தவறாகவும்
உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதற்காக அதை திட்டுவது அதைவிட அபத்தமானது.
ஏனெனில், இதன்மூலம் கற்பனை செய்யவே பிற்காலத்தில் குழந்தை பயப்படும்.
ஏனெனில் இதுபோன்ற கற்பனைகள்தான் வருங்காலத்தில் செம்மையான சிந்தனைகளாக
மாறும்.
சுதந்திரம்: ஒரு மேதைக்கு, சுதந்திரம் என்பது ஜீவ நீரைப் போன்றது. அந்த
சுதந்திரத்திற்கு தடை ஏற்பட்டால், ஒரு இளம் மேதை தன்னை ஒரு நல்ல
படைப்பாளியாக உருவாக்கிக் கொள்வதில் பலவிதமான சிக்கல்களை ஏற்படும். ஒரு
வளரும் மேதைக்கு பெரியளவிலான புறக்கணிப்பு ஏற்படக்கூடாது. அப்போதுதான்,
அந்த மேதை இன்னும் புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். ஒரு
இளம் மேதையின் சுதந்திரமானது, பெற்றோர் காட்டும் அன்பு மற்றும் ஆதரவில்தான்
அடங்கியுள்ளது.
பழைய நடைமுறைகள் மற்றும் விதிகளை மீறினால்தான் புதிய கண்டுபிடிப்புகள்
உருவாகும். அதுதான் உலக நியதி. எனவே, உங்கள் குழந்தை அந்த விதிகளை
மீறினால், நீங்கள் அதிர்ச்சியடையாமல், ஆச்சர்யமடைந்து, உங்களின் குழந்தையை
ஊக்குவிக்க வேண்டும்.
An Elegy Written in the Country Churchyard என்ற
ஆங்கில கவிதையில், தாமஸ்கிரே(Thomas Gray) என்ற கவிஞர், ஒரு கிராமத்து
மயானத்தில் நின்று கல்லறைகளைப் பார்த்து இவ்வாறு பாடுவார்,
அமைதியாய் உறங்குபவர்களே,
உங்களுக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால்
உங்களில் பலர் மில்டன்(இலக்கிய சாதனையாளர்) போன்றோ, ஆலிவர் கிராம்வெல்(அரசியல் புரட்சியாளர்) போன்றோ ஆகியிருப்பீர்கள்!ஆனால் உங்களின் சூழலுக்கு நீங்கள்பலியாகிவிட்டீர்கள்.வறுமையும், வாய்ப்புகள் கிடைக்காமையும்உங்களின் சாதனையை தடுத்துவிட்டன.உங்களின் அபூர்வ திறமைகள் அனைத்தும் வெளிவராமலேயே வீணாகிவிட்டன. ஐயோ! என்ன கொடுமை இது!
நமது குழந்தைகள் பலருக்கும் இதே நிலைதான். வறுமை என்பது ஒரு சிறு
தடைதான். அதை மீறி சாதனை புரிந்தவர்கள் எத்தனையோ பேர். முறையான ஆதரவு,
உற்சாகமளித்தல், திறமையை கண்டுகொண்டு உதவுதல், சுதந்திரம் அளித்தல்,
சோதனைகள் வந்தாலும் குழந்தையின் பக்கமே இருத்தல் போன்ற பலவித உதவிகள்
கிடைக்காமல் காணாமல் போகும் மேதைகள்தான் அதிகம்!
எனவே, அவர்களுள் ஒருவராக, உங்களின் குழந்தையும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
இதே நாள்...
கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி!
நாளொறு மேனியும், பொழுதொரு மோசடியுமாய், உலகம் மாறி விட்டது என்பதற்கு,
சென்னையில் நடந்துள்ள, நூதன கிரெடிட் கார்டு மோசடி, வாடிக்கையாளர்களை
கலங்கடிக்கிறது. இந்த மோசடி, கிரெடிட் கார்டோடு மட்டும் நில்லாமல், கொரியர்
மூலம் அனுப்பப்படும் பல பொருட்களையும், "பதம்' பார்க்கும் சூழல்
உருவாவதற்கு முன், சம்பந்தப்பட்டவர்கள், ஏதாவது செய்தே தீர வேண்டும்.
வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு, கூரியர் மூலம் செல்லும் கிரெடிட்
கார்டுகளில் இருந்து விவரங்களை திருடி, புதிய கார்டு தயாரித்து, பண மோசடி
செய்த கூரியர் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட நால்வரை, மத்திய குற்றப்பிரிவு
போலீசார் கைது செய்தனர்.
கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்து, வாடிக்கையாளர்களிடம் கார்டு
செல்லும் முன்பே, அதில் விவரங்களை பெற்று, புதிய கார்டு தயாரித்து, புதிய,
"டெக்னிக்'கை பயன்படுத்தியுள்ள இவர்கள், தாங்கள் தயாரித்த கார்டு மூலம்,
பலரை ஏமாற்றியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
மோசடியில் இது புதுசு: சென்னை, அண்ணா சாலையில் உள்ள சிட்டி
பாங்க், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் கிரெடிட் கார்டுகளை வழங்கி
வருகிறது. இந்த வங்கியில், கார்டுக்காக விண்ணப்பித்த ஒருவருக்கு, கார்டு
வருவதற்கு முன்பே, அவரது கணக்கில், 8,000 ரூபாய்க்கு பொருட்கள்
வாங்கியுள்ளதாக, வங்கிக்கு புகார் வந்தது. இது போல், பல வாடிக்கையாளர்கள்,
வங்கிக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வங்கியின் கிரெடிட் கார்டு
பிரிவு மேலாளர் , சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார்
அளித்தார். புகாரில், வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை,
ஸ்கிம்மர் மூலம் திருடிய யாரோ ஒருவர், 2 லட்சத்து, 53 ஆயிரத்து, 687 ரூபாய்
திருடி விட்டதாக தெரிவித்திருந்தார்.
புகார் தொடர்பாக, மத்திய குற்றப் பிரிவில் வழக்கு பதியப்பட்டு, துணை
கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், வங்கி மோசடி தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர்
ஜான்ரோஸ் தலைமையில், தனிப்படை போலீசார், விசாரணையை துவக்கினர். வாடிக்கையாளரிடம்
கார்டு கிடைக்கும் முன்பே, பணம் திருடப்பட்டதால், வங்கியில் இருந்து
வாடிக்கையாளர்களுக்கு கார்டை வினியோகிக்கும், "புளூ டார்ட்' கூரியர் நிறுவன
ஊழியர்கள் மீது, போலீசின் பார்வை திரும்பியது. போலீசார், அங்கு
பணியாற்றும், வியாசர்பாடியைச் சேர்ந்த ஸ்ரீதர், 30, ராயபுரத்தைச் சேர்ந்த
விக்னேஷ், 20, ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது, தங்களுக்கு
ஆட்டோ டிரைவராக பணியாற்றிய, மூலக்கடையைச் சேர்ந்த பாலாஜி, 32, என்பவரின்
பெயரை அவர்கள் ஒப்பித்தனர்.
விசாரணையில், "பகீர்:' தொடர்ந்து, பாலாஜியும் கைது
செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது: பாடிகுப்பத்தைச்
சேர்ந்த வினோத், 28, என்ற வாலிபர், ஆட்டோ டிரைவரான பாலாஜியை அணுகி, கூரியர்
மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு செல்லும் கார்டு விவரங்களை, ஸ்கிம்மரை
பயன்படுத்தி எடுத்துத் தந்தால், ஒரு கார்டு தகவலுக்கு, 1,000 ரூபாய்
தருவதாக கூறியுள்ளார். இந்த விவரத்தை, கூரியர் நிறுவன பணியாளர்கள் ஸ்ரீதர்
மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் கூற, அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்
பின், சிட்டி பேங்கில் இருந்து, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும்,
கூரியர் தபால்களை, வெப்பக்காற்று வீசும் புளோயர் இயந்திரத்தின் மூலம்
பிரித்து, கார்டுகளை எடுத்து, அதில் உள்ள விவரங்களை, ஸ்கிம்மர் மூலம் பதிவு
செய்து விட்டு, மீண்டும் ஒட்டி, தபால்களை, சம்பந்தப்பட்டவர்களுக்கு
அனுப்பி விடுவர். அந்த ஸ்கிம்மர் உதவியுடன், கோயம்பேட்டில் உள்ள வினோதின் வீட்டில்
வைத்திருக்கும், மும்பையில் வாங்கப்பட்ட என்கோடர், எம்போசர், இ.டி.சி.,
இயந்திரங்கள் மூலம் புதிய கார்டு தயாரித்து, அதன் மூலம் பணம், பொருள்
உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளது தெரிந்தது.
விக்னேஷ், ஸ்ரீதர், பாலாஜியைத் தொடர்ந்து, வினோதையும் கைது செய்த
போலீசார், அவரிடம் இருந்து கார்டு தயாரிக்கும் இயந்திரங்கள்,
வாடிக்கையாளர்கள் விவரம், பதிவு செய்யப்படாத காலி கிரெடிட் கார்டுகள்,
ஸ்கிம்மர்கள், வாட்ச், கேமரா, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள், ஹேமந்த்
குமார் என்பவர், சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில், இருவேறு போட்டோக்கள்,
பிறந்த தேதி மற்றும் தந்தை பெயர் விவரங்களை அளித்து வாங்கிய இரண்டு
பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை,
போலீசார் தேடிவருகின்றனர்.
கண்டுபிடிப்பதும், தடுப்பதும் கடினம்! கிரெடிட் கார்டு மோசடியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தவிர, சென்னை
திருவொற்றியூர், சரஸ்வதி தெருவில் செயல்பட்டு வந்த, திருட்டு டி.வி.டி.,
தொழிற்சாலையை போலீசார் சோதனையிட்டு, அங்கிருந்த, 250 டி.வி.டி.,
ரைட்டர்கள் மற்றும் 25 ஆயிரம் சி.டி.,க்களையும் கைப்பற்றினர். இவற்றை,
சென்னை குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அபெய்குமார் சிங் பார்வையிட்டார்.
உடன், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர்
சுதாகர் ஆகியோர் இருந்தனர்.அப்போது, அபெய்குமார் சிங் கூறும் போது,
""இதற்கு முன்பு பிடிபட்ட கும்பலும், இவர்களும் தனித்தனியாக செயல்பட்டு
வருபவர்கள். ஒரு கார்டில் இருந்து டேட்டா திருட, 1,000 ரூபாய்
கொடுக்கப்பட்டுள்ளது. கார்டுகள் மூலம் பணம் திருடப்படுவது தொடர்பாக,
தினசரி, புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சைபர் கிரைம் தொடர்பான இந்த
குற்றங்களில் எவ்வளவு பேர் ஈடுபட்டிருக்கின்றனர். எங்கிருந்து இவர்கள்
செயல்படுகின்றனர் என்பதை கண்டுபிடிப்பது கடினம். இவற்றை தடுப்பதும்
கடினம்,'' என்றார்.
பின் நம்பரை மாற்றுங்கள்! மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா கூறும் போது, ""கிரெடிட்
மற்றும் டெபிட் கார்டுகளை ஏ.டி.எம்., இயந்திரத்தில் பயன்படுத்துவோர்
ஏராளம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுத்தவர்கள் பணத்தை
திருடுபவர்களும் அதே அளவிற்கு பெருகிவிட்டனர். எனவே, கார்டுகளை
பயன்படுத்துவோர், அடிக்கடி ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றிக் கொண்டால்
நல்லது. ஏ.டி.எம்., மூலம் பணம் எடுப்பவர்கள், அதற்கான தனி வங்கிக் கணக்கை
கூட பராமரிக்கலாம்,'' என்றார்.
4.9 லட்சம் பேருக்கு விசா வழங்கியுள்ளது அமெரிக்கா!
நடப்பு நிதியாண்டில், 4.9 லட்சம் பேருக்கு
தற்காலிக அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளது. கல்வி, சுற்றுலா, வர்த்தகம்
உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும்
அதிகரித்து வருகிறது. இந்த காரணங்களுக்காக விண்ணப்பித்த 4 லட்சத்து 90
ஆயிரம் பேருக்கு, அமெரிக்க தூதரகம், நடப்பு நிதியாண்டில் விசா
வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.3 சதவீதம் அதிகம். டில்லி,
மும்பை, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய அமெரிக்க தூதரக அலுவலகங்கள்
மூலம், இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. விசா வேண்டி விண்ணப்பிப்பவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக
அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 60 சதவீத ஊழியர்கள்
அதிகரிக்கப்பட்டுள்ளனர். விசா நேர்காணல் மொழியை, விண்ணப்பத்தாரர்கள் தமிழ்,
தெலுங்கு, இந்தி, பெங்காலி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளில் தேர்வு
செய்யவும் தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் ஒரே சமயத்தில் 2 பேரை காதலித்து ஒருவரை மணந்த பெண்! - கலிகாலம்!!
ஒரே சமயத்தில் 2
பேரைக் காதலித்து வந்த சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமண நாளன்று ஒரு
காதலரை ஏமாற்றிவிட்டு மற்றொருவரை திடீரென திருமணம் செய்துகொண்டதால்
சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறி்த்த விவரம்: சேலம்
கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தபிரியா. அவர் அதே பகுதியைச் சேர்ந்த
ரமேஷ் என்பவரை காதலித்து வந்தார். ரமேஷைக் காதலிக்கும்போதே
வசந்தபிரியாவுக்கு மேட்டூரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் மீதும் காதல் வந்தது. இதையடுத்து அவர் 2 பேரையும் காதலித்து வந்தார். இந்த
நிலையில் கணேஷின் வீட்டிற்கு அவர்கள் காதல் தெரிய வந்து அவர்கள்
வசந்தபிரியாவை திருமணம் நிச்சயம் செய்தனர். கடந்த 19ம் தேதி மேட்டூரில்
உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. வசந்தப்பிரியா
தனது குடும்பத்தாருடன் கடந்த 18ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு லாட்ஜில்
தங்கினார். அதிகாலையில் திடீரென மணப்பெண் மாயமானார். இதனால் கணேஷ்
அதிர்ச்சி அடைந்தார்.
அங்கிருந்து மாயமான வசந்தபிரியா தனது இன்னொரு
காதலனான ரமேஷை பழனியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தம்பதி
சகிதமாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த
கணேஷ் மற்றும் வசந்தபிரியா குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு
வசந்தபிரியாவை கணவனுடன் பார்த்த கணேஷ் மனமுடைந்தார். திருமண
ஏற்பாடுகளுக்காக செய்த செலவைத் திருப்பித் தருமாறு கணேஷ் குடும்பத்தார்
வசந்தபிரியா குடும்பத்தினரிடம் தகராறு செய்தனர். இதையடுத்து அந்த 2
குடும்பத்தார்களையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இங்கிலாந்தை 5-0 என வென்று பதிலடி கொடுத்தது இந்தியா!
இங்கிலாந்துக்கு
எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா இந்தத் தொடரை
5-0 என்ற கணக்கில் வென்றது. அண்மையில் இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்த
இந்திய அணி ஒருநாள் போட்டி, 20-20, டெஸ்ட் என அனைத்திலும் தோல்வி கண்டது.
அதற்கு பதிலடியாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணியை 5 ஒருநாள்
போட்டிகளிலும் வென்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் துவங்கிய 5 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது.
இந்திய
அணியில் துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய ரஹானே, காம்பிர் இருவரும்
நிதானமான துவக்கத்தை அளித்தனர். அணியின் எண்ணிக்கை 80 ஆக இருந்தபோது,
காம்பிர் ஃபின்னின் வேகத்தில் போல்டானார். அதே ஓவரில் அடுத்து வந்த விராத்
கோலியும் அவுட் ஆக, இந்திய அணி 80க்கு 2 விக்கெட்களை இழந்தது. அடுத்த
ஓவரிலேயே ரஹானேவும் அவுட் ஆக, 80க்கு 3 விக்கெட்கள் என்ற நிலை ஏற்பட்டது.
அடுத்து வந்த திவாரியும் சுரேஷ் ரெய்னாவும் நிலைத்து நின்று ஆடினர்.
இருவரும் இணைந்து ஆடி அணியின் எண்ணிக்கையை 123 என்று உயர்த்தியபோது, திவாரி
24 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வழக்கம்போல் நடுவரிசையில் இறங்கிய
தோனி-ரெய்னா ஜோடி நன்கு ஆடியது. பவுண்டரியும் சிக்ஸரும் அடித்துவந்த
ரெய்னா, 38ரன்களில் ரன் அவுட் ஆனார். முன்னதாக ரன் ஏதும் எடுத்திராத
நிலையில் இவர் கொடுத்த எளிய கேட்சுகள் இரண்டை இங்கிலாந்து வீரர்கள்
தவறவிட்டனர்.
பின்னர் ஜடேஜா, அஸ்வின், பிரவீண்குமார் ஆகியோர்
தோனியுடன் இணைந்து ரன் சேர்த்தனர். அதிரடி காட்டிய தோனி 75 ரன்கள்
குவித்தார். தொடர்ந்து அவுட் ஆகாமல் விளையாடி வரும் தோனி நட்சத்திர வீரராக
ஜொலித்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து
271 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது. இங்கிலாந்து தரப்பில் படேல் 3, ஃபின் 2, பிரெஸ்னன் 1, மீகர் 1 என விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து
ஆட வந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினர். அந்த அணி
நல்ல ரன்ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது. அந்த அணி விக்கெட்
இழப்பின்றி 20 ஓவர்களிலேயே 128 ரன்களை எடுத்தது. கீஸ்வெட்டர் 63, கேப்டன்
குக் 60 என இருந்த நிலையில், இந்த ஜோடியினை இந்தியாவின் புதிய வேகப் பந்து
வீச்சாளர் ஆரூன் பிரித்தார். இவருடைய வேகத்துக்கு முதலில் குக் போல்டானார்.
அடுத்து, கீஸ்வெட்டர் ஜடேஜாவின் சுழலில் அவுட்டானார். அடுத்து விளையாட
வந்த வீரர்கள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப
ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4
விக்கெட்களும், அஸ்வின் 3 விக்கெட்களும், ஆரூன், ரெய்னா, திவாரி ஆகியோர்
தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இறுதியாக இங்கிலாந்து அணி 37 ஓவர்களில்
அனைத்து விக்கெட்களையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி
ஒருநாள் போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த
இங்கிலாந்து அணியைத் தோற்கடித்து இந்திய அணி முழு வெற்றியைப் பெற்று, தக்க
பதிலடி கொடுத்தது இந்திய ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆட்ட நாயகன் விருதை பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் ஜொலித்த ரவீந்திர ஜடேஜா பெற்றார். தொடர் நாயகன் விருதை அனைத்து ஆட்டங்களிலும் அவுட் ஆகாமல் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் தோனி பெற்றார்.
கணவன் திருந்தாததால் வெட்டிக்கொன்றேன் மனைவி ஹேமலதா வாக்குமூலம்!
ஒசூர் ராயக்கோட்டை ஹட்கோ வீட்டு வசதி வாரிய
குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (38). பெயிண்டர். இவரது
மனைவி ஹேமலதா (35). இவர்களுக்கு திருமணமாகி 14 வருடமாகிறது.
கிருஷ்ணபிரசாத்துக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி
இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதுபோல நேற்று முன்தினம் மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில்
ஆத்திரமடைந்த ஹேமலதா கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி வெட்டிக் கொலை
செய்தார். இதுகுறித்த தகவலறிந்த ஒசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹேமதாவை கைது செய்தனர்.
விசாரணையில் ஹேமலதா
பரபரப்பு தகவலை தெரிவித்தார். திருமணம் ஆன நாள் முதல் குடித்து விட்டு
கொடுமை செய்துள்ளார். போதையில் அடித்து, உதைப்பது, ஆபாசமாக பேசி திட்டி
வந்துள்ளார். எவ்வளவே கண்டித்தும் கணவர் திருந்தவில்லை.எச்சரிக்கை விடுத்தும் திருந்தவில்லை.
பொருத்து பொருத்து பார்த்தும் திருந்தததால் கணவனை வெட்டிக் கொலை செய்ததாக
ஹேமலதா வாக்குமூலம் அளித்துள்ளார்.
72 அடி நீளத்தில் தயாரான பிரமாண்ட தேசியக்கொடி: ஜெய்ப்பூரில் பறக்க விடப்பட்டது!
இந்தியாவில் இதுவரை இல்லாதபடி மிகப்பிரமாண்டமான தேசியக்கொடி ஒன்று
ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேசியக்கொடி 48 அடி
அகலமும் 72 அடி நீளமும் கொண்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த கொடி
தயாரிக்கப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை பகல்- இரவு என்று 24 மணி நேரமும்
பறக்க தடை இருந்தது.
இதை எதிர்த்து குருஷேத்திரா
தொகுதி எம்.பி. நவீன் ஜிண்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை
விசாரித்த கோர்ட்டு தேசியக்கொடியை பகல், இரவில் எப்போதும் பறக்க விடலாம்
என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து மத்திய உள்துறையும் இந்த பிரமாண்ட
தேசியக்கொடியை பகல், இரவு எப்போதும் பறக்க விடலாம் என்று அனுமதி கொடுத்தது.
இந்த
நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அந்த பிரமாண்ட தேசியக்கொடி பறக்க
விடப்பட்டது. அங்குள்ள சென்டிரல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அந்த கொடியை
ராஜஸ்தான் முதல்- மந்திரி அசோக் கெலாட் ஏற்றி வைத்தார். 100 அடி உயர
கம்பத்தில் அந்த பிரமாண்ட தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இரவில் அந்த
தேசியக்கொடி பறப்பதை கண்டு ரசிக்கும் வகையில் மின்னொளி வசதி
செய்யப்பட்டுள்ளது.
இந்தியா செல்வதை தவிர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகள் எச்சரிக்கை!
இந்தியாவில் தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அடுத்து பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக பண்டிகைகள் வர
உள்ளன. பண்டிகை சீசனில் மக்கள் கூடும் இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள்
தற்கொலை தாக்குதல் நடத்த முயற்சி செய்யக்கூடும் என்று உலகின் பல்வேறு
நாட்டு உளவுத்துறைகள் எச்சரித்துள்ளன.
இதையடுத்து
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகள்
தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளன. சுற்றுலா
செல்வதை தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு சென்றால் மிகவும் கவனமாக இருக்க
வேண்டும் என்று அந்த எச்சரிக்கை குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையத்
தளங்களில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 5 நாடுகளின் எச்சரிக்கை
அறிவிப்பால் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதம்
குறைந்துள்ளது. பலர் தங்கள் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டனர். இது
மத்திய சுற்றுலா துறையை கடும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. இந்தியா பற்றி
தேவை இல்லாமல் அச்ச உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று
வெளியுறவு துறை மூலம் 5 நாடுகளுக்கும் தெரிவிக்க சுற்றுலா துறை கோரிக்கை
விடுத்துள்ளது
வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது!
மத்திய, மாநில அரசுகளின் முதன்மை வங்கியாக ரிசர்வ் வங்கி உள்ளது.
நாடெங்கும் 22 கிளைகளுடன் செயல்படும் ரிசர்வ் வங்கி, நாட்டின் நிதி
கொள்கையை உருவாக்குதல், வங்கிகளின் பண கை இருப்பை முறைப்படுத்துதல்,
அன்னியச் செலாவணியை முறைப்படுத்துதல், இந்திய ரூபாய், நாணயம் அச்சிடுதல்
உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்து வருகிறது.
ரிசர்வ்
வங்கி தனது நிதிக் கொள்கையை ஒவ்வொரு அரையாண்டும் வெளியிடுவது வழக்கம்.
அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அரையாண்டு நிதிக் கொள்கையை மத்திய ரிசர்வ்
வங்கி வெளியிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வங்கி மாற்றி
அமைத்துள்ளது. சமீப காலமாக பண வீக்கம் உயர்ந்துள்ளதால், அதை
கட்டுப்படுத்துவதற்கு ஏற்ப கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த
ஆண்டு நாட்டின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததால் வட்டி விகிதத்தை
3.5 சதவீதம் அளவுக்கு ரிசர்வ் வங்கி அதிகரித்தது. கடந்த ஆகஸ்டு மாதம்
நாட்டின் விலைவாசி உயர்வு விகிதம் 9.78 சதவீத மாக இருந்தது. தற்போது உணவு
பணவீக்கம் 10.6 சத வீதமாக உள்ளது. இதற்கு ஏற்ப வட்டி விகிதத்தை மாற்றும்
போது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள்
எச்சரித்துள்ளனர். என்றாலும் கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த
19 மாதங்களில் ரிசர்வ் வங்கி தற்போது 13-வது தடவையாக கடன் விகிதத்தில்
மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட
கொள்கை குறிப்பில் 25 அடிப்படை புள்ளி அளவுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடு மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள்
மீதான கடன் வட்டி உயரும். எனவே இனி வங்கிகளில் வீடு வாங்க கடன்
வாங்குபவர்கள் கூடுதல் வட்டி கொடுக்க வேண்டியதிருக்கும். இது நடுத்தர
மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதைத்
தொடர்ந்து வீடு வாங்க ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன்
வாங்குபவர்களுக்கு அதில் ஒரு சதவீதத் தொகையை மானியமாக கொடுத்து உதவ மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள்
(வியாழக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு!
போர்க்குற்றம் புரிந்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா
கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழர் அருணாசலம்
ஜெகதீஸ்வரன். ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இவர் ஜெகன்வரன் என
அழைக்கப்படுகிறார். இவர் மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இலங்கை
அதிபர் ராஜபக்சே மீது தனது வக்கீல் லூசியன் ரிக்டர் மூலம் வழக்கு
தொடர்ந்துள்ளார்.
அதில், கடந்த 2007 பிப்ரவரி முதல்
2009 மே மாதம் வரை இலங்கையில் பணிபரிந்தேன். அப்போது
விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில்
தமிழர்கள் வாழும் பகுதியில் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், முகாம்கள் மற்றும்
அனாதை இல்லங்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுக்ள
வீசப்பட்டன.
எனவே லட்சக்கணக்கான அப்பாவிகள்
கொல்லப்பட்டனர். அந்த படுகொலைகளை நான் நேரில் பார்த்தேன். இந்த படுகொலைகள்
நிகழ்த்தப்பட்டதன் மூலம் ராஜபக்சே போர்க்குற்றம் புரிந்துள்ளார்.இலங்கை
ராணுவத்தின் முப்படைக்கும் தலைவராக அதிபர் ராஜபக்சே உள்ளார். எனவே
இதுகுறித்து அவர் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என
கூறியுள்ளார்.
இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் வருகிற நவம்பர் 29-ந் தேதிக்கு வழக்கு விசாரணைக்கு வருவதாக
மெல்போர்ன் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு அறிவித்துள்ளார். காமன்வெல்த்
நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே ஆஸ்திரேலியாவின் பெர்த்
நகருக்கு வருகை தர உள்ளார். எனவே அவரிடம் போர்க்குற்றம் குறித்து விசாரணை
நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தன் மீது கூறப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகளை இலங்கை அதிபர் ராஜபக்சே மறுத்துள்ளார்
முருகனுக்கு பல பெயர்கள் காரணங்கள்!
சரவணபவ: நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம:
குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம்
(8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீமுத்துஸ்வாமி
தீட்சிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம்
அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.
ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).
ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).
வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம்.
ஸ்கந்த நாமச் சிறப்பு: ஸ்கந்தர் என்றால் துள்ளிக் கொண்டு வெளிப்பட்டவர் என்று அர்த்தம்
பரமேச்வரனுடைய சக்தி நேத்ர ஜ்யோதிஸ்ஸாக (நெற்றிக்கண்ணில் இருந்து
வெளிப்பட்ட ஒளி) ஒரே துடிப்போடு, லோகாநுக்ரஹம் பண்ண வேண்டுமென்ற
துடிப்போடு, துள்ளிக்கொண்டு வெளிப்பட்டே ஸ்கந்தமூர்த்தி உத்பவமானார். அந்த
விசேஷத்தால் தான் அவருக்கு ஸூப்ரஹ்மண்யர், கார்த்திகேயர், குமாரர்,
சரவணபவர் என்றிப்படி அநேக நாமாக்கள் இருந்தபோதிலும், அவரைப் பற்றிய
புராணத்திற்கு ஸ்கந்த புராணம், ஸ்காந்தம் என்றே பெயரிருக்கிறது. அவருடைய
லோகத்துக்கு ஸ்கந்தலோகம் என்றே பெயர். அவர் ஸம்பந்தமான விரதத்தை ஸ்கந்த
ஷஷ்டி என்றே சொல்கிறோம். அம்பாளோடும் முருகனோடும் இருக்கும்
பரமேச்வரமூர்த்திக்கும் சோமாஸ்கந்தர் என்றே பேர் இருக்கிறது. முருகன் என்று
அவருக்குச் சிறப்பாகத்தமிழ்ப்பெயர் கொடுத்திருக்கும் நம் பாஷையிலும், கந்தர நுபூதி,
கந்தரலங்காரம், கந்தர் கலிவெண்பா என்றே ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. சென்னை
பட்டணத்தில் சிறப்பாகக் கந்த கோட்டம் இருக்கிறது.
ஆறுமுகம் பெயர் காரணம்! சமயங்களில் ஆறு, கோசங்கள் ஆறு, ஆதார கமலங்கள் ஆறு, சாஸ்திரங்கள் ஆறு,
நான்கு வேதங்களும், ராமாயண, மகாபாரதமும் சேர்ந்து ஆறு, ஞான சாதனைகள் ஆறு
(சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை) இப்படிப் பல விஷயங்கள்
ஆறாகிப் பெருகி நிற்பதால், சிவனவன் தன் சிந்தையுள் நிறைந்துள்ள பஞ்சாட்தரி
மந்திரத்துடன் ஓம் என்ற ஓங்காரத்தையும் சேர்த்து, ஆற்றாக்கி, ஆறுமுகனைப்
படைத்தான். இது வடமொழியில் சடக்கரம் என்று வழங்கப் பெறும். இதுவே ஆறுமுனின்
பெயர்க் காரணம்.
சோமாஸ்கந்தர்: முருகனை நடுவில் வைத்து சிவனும், பார்வதியும் கொஞ்சி மகிழும் கோலத்தை
சோமாஸ்கந்த வடிவம் என்பர். பாலமுருகன் உலகைச் சுற்றி வந்த பிறகும்,
அவருக்கு கனி கிடைக்கவில்லை. ஞானத்தை தரும் கனி என்பதால், அந்த
ஞானப்பண்டிதன் மற்றொரு ஞானக்கனியைப் பெற வேண்டும் என்பதில் ஆவலாக
இருந்தார். ஒரு முறை தந்தையிடம் கரிய நிறத்தில் நாவல்பழம் போல் கழுத்தில்
உருண்டையாக தங்கியிருக்கும் விஷத்தைக் கேட்டு அடம் பிடித்தார். சிவன்,
விஷம் என்று எடுத்துக்கூறியும், குழந்தை முருகன் கேட்கவில்லை. தந்தையின்
கழுத்தை பிடித்து இழுத்து, விஷ உருண்டையை வெளியே கொண்டு வர முயற்சித்தார்.
சிவன் குழந்தையின் பிடி தாங்காமல் மூச்சு திணறினார். அந்த இக்கட்டான
சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி, முருகனை தன் மடியில் இருத்தி ஞானப்பால்
ஊட்டி பார்வதி அமைதிப்படுத்தினாள். இதுவே சோமாஸ்கந்தர் கோலமானது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இந்த வடிவத்தை காணலாம்.
பிரம்ம சாத்தன்: குமரன், தேவசேனாபதி, சரவணன், கார்த்திகேயன், கந்தசாமி, சக்திதரன்,
சண்முகன், வேலவன், வடிவேலன், அழகன், முருகன் என்றெல்லாம் போற்றிப்
புகழப்படும் தமிழ்க் கடவுளுக்கு பிரம்ம சாத்தன் என்றொரு பெயரும்
உண்டு.அந்தப் பெயர் வரக் காரணமாக ஒரு புராண சம்பவம் சொல்லப்படுகிறது. ஒரு
சமயம் திருக்கயிலாயத்திற்கு சிவ தரிசனம் செய்ய வந்த படைக்கும் கடவுளான
பிரம்ம தேவன், சிவகுமாரனாகிய முருகனை சிறிதும் மதிக்காமல் சென்றார். அவரது செருக்கடக்க எண்ணிய முருகப்பெருமான்,
வீரபாகுவை அனுப்பி பிரம்மனைப் பிடித்து வரச் செய்து, பிரணவத்தின் பொருள்
யாது? என்று வினவினார். பிரணவத்தின் பொருள் கூற மாட்டாது நின்ற பிரம்மனை
தலையில் குட்டி, சிறையிலும் அடைத்து விட்டார், முருகப்பெருமான். இதனால்
படைப்புத் தொழிலை மேற்கொள்ள, தனது ஆறுமுகங்களையும், பன்னிரு கண்களையும்,
வேலும், மயிலும் துறந்து, ஒற்றைத் திருமுகமும், நான்கு கரங்களும் கொண்ட
திருவுருவமேந்தி, வலக்கரத்தை அபய ஹஸ்தமாகவும் இடக்கரத்தினை வரமளிக்கும் வரத
ஹஸ்தமாகவும் கொண்டு, நின்ற திருக்கோலமாகக் காட்சி தந்தார். பிரம்மனின்
படைப்புத் தொழிலைச் சில காலம் ஏற்று நடத்தியதால் முருகனுக்கு பிரம்ம
சாத்தன் என்ற திருநாமம் உண்டு. இன்றும் கூட திருப்போரூர் மற்றும் காஞ்சி
குமர கோட்டத்தில் முருகப் பெருமான் இத்திருவுருவிலேயே பக்தர்களுக்குக்
காட்சி தருவதைக் காணலாம்.
சரவணப் பொய்கையில் குழந்தையானதால் சரவண பவன்.
கங்கை ஏந்தியதால் காங்கேயன்.
கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டதால் கார்த்திகேயன்.
விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
அக்னி ஏந்தியதால் அக்னி பூ.
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், ஷண்முகன்.
ஆறு குழந்தைகள் ஒன்றியதால் ஸ்கந்தன், கந்தன்.
தமிழில் முருகு என்றால் அழகு; அழகானவன்-அதனால் முருகன்.
விசாகம், கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டவன் முருகன்.
இதுவும் ஒரு சிறப்பு. கந்தனின் அவதார சமயத்தில் சிவன் பார்வதியுடன்
கங்கையும் அக்னியும் அங்கிருந்தனர். அவன் யார்மீது அதிக அன்பு
வைத்திருக்கிறான் என்பதை அறிய விரும்பி, ஒரே சமயத்தில் நான்கு பேரும்
குழந்தையை அழைத்தனர். அவன்தான் சிவஞான பண்டிதனாயிற்றே!
சிவன் தந்தை; அக்னி வளர்ப்புத் தந்தை.
பார்வதி தாய்; கங்கை வளர்ப்புத் தாய்.
அவன் ஸ்கந்தன், விசாகன், சாகன், நைகமேயன் என நான்கு உருவம் கொண்டான்.
சிவனிடம் ஸ்கந்தனும், பார்வதியிடம் விசாகனும், அக்னியிடம் சாகனும்,
கங்கையிடம் நைகமேய னுமாகத் தாவிச்சென்று அனைவரையும் மகிழ்வித்தானாம்.
முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். இதில் மற்றொரு தத்துவமும்
உண்டு. அத்ரிக்கும் அனுசூயா தேவிக்கும் வினோதமாக உதித்த குழந்தை
தத்தாத்ரேயர். பிரம்மா, விஷ்ணு, சிவ ஐக்கியமான உடல்; மூன்று தலை; ஆறு கைகள். இதற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?
மு என்றால் முகுந்தன்- அதாவது விஷ்ணு.
ரு என்றால் ருத்ரன்- அதாவது சிவன்.
கு என்றால் கமலத்தில் உதித்தவன்- அதாவது பிரம்மன்.
அதிகமாக மகாராஷ்டிரத்தில் தத்தாத் ரேயரை பரமகுருநாதராக வணங்குவர். மகா
விஷ்ணுவை ஹயக்ரீவ அவதாரத்தில் ஞானகுருவாக வைணவர்கள் வணங்குவர். கிருஷ்ண
அவதாரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு என
போற்றப்படுகிறார்.
பரமசிவன் தட்சிணாமூர்த்தியாக- ஞானமௌன குருவாக மதிக்கப்படுகிறார்.
பிரம்மன் வேதத்தையே கையில் கொண்டிருந்தாலும் அவர் பொய்யுரைத்ததால் அவரை
யாரும் கோவில்களில் வணங்குவதில்லை. சதுர்வேத புருஷன் என்று அவரைக்
கூறினாலும், ஓம் என்னும் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல முடியாமல் முருகனால்
சிறையிலிடப்பட்டார். நீ அறிவாயோ என சிவன் கேட்க, கேட்கும் முறையில்
கேட்கத் தயாராயிருந்தால் சொல்வோம் என்று, தந்தைக்கு உபதேசம் செய்த
சுவாமிநாதன்- சிவகுருநாதன்- தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்றவன் முருகன்!
சிவன், பிரம்மன் மட்டுமல்ல; மாமன் விஷ்ணுவும் முருகனைப் பணிந்தவரே.
விஷ்ணுவின் சக்கரம் திருத்தணிகை முருகன் மார்பில் பதிந்து விட்டபோது, அதை
பெருமாள் பணிந்து கேட்க, முருகன் எடுத்து அளித்தானாம். இன்றும் தணிகேசனின்
மார்பில் சக்கரம் பதிந்த அடையாளம் இருக்கி றது. அதை சந்தனத்தால்
மூடுகிறார்கள். எனவே, ஸ்கந்தன் (ஒன்றியவன், சேர்ந்தவன்) ஞானஸ்கந்தன்-
ஞானபண்டிதன்- ஞானகுருநாதனாக வணங்கப்படுகிறான். குகன் என்ற பெயர்,
பக்தர்களின் இதயக் குகையில் இருக்கும் எந்தக் கடவுள்களுக்கும் ஒப்பும்
என்றாலும், முருகனுக்கே அது உரியதாக உள்ளது. காசியிலிருந்து திரும்பிய
முத்துசுவாமி தீட்சிதர் திருத்தணிகை வந்து, முதன்முதலாக ஸ்ரீநாதாதி
குருகுஹோ ஜயதி என்று பாடினார்.
ஸ்ரீவைகுண்டம் வாழ் குமரகுருபரன் ஊமையாக இருக்க, திருச்செந்தூரில் 42
நாட்கள் விரதமிருந்து பயன் கிட்டாததால் கடலில் விழ யத்தனித்தபோது,
அர்ச்சகர் வடிவில் வந்த முருகன் பூவைக் காட்ட, ஊமையாக இருந்த குமரகுருபரன்
பூமருவும் என்று தொடங்கி கந்தர் கலிவெண்பா பாடினான் என்றால், முருகனின்
அருளை என்னவென்று சொல்வது!
குமரகுருபரர் - தமது கந்தன் வரலாறான கந்தர் கலிவெண்பாவில் இவ்வாறு கூறுவார்:
(ஊமை பக்தருக்கு திருச்செந்தூர் முருகன் அடி எடுத்துக் கொடுக்கப் பாடியது.)
சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
ஞானம் அருள ஒரு முகம்
அக்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.
உயிரை மாய்த்துக் கொள்ள, கோபுரத்தினிற்று விழுந்தவரை ஏற்று, முத்தைத்
தரு....... என்று பதம் எடுத்துக் கொடுத்த முருகன் அருளால் அருணகிரிநாதர்
இவ்வாறு பாடுவார்:
ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
காஞ்சி குமரக்கோட்டத்திலும் கச்சியப்ப சிவாச்சாரியருக்கு திகடச்சக்கர என
ஆனைமுகன் பாடலை அடி எடுத்துக் கொடுத்து தமிழில் கந்தபுராணம் பாட வைத்தார்.
அக்கோவிலிலேயே அரங்கேற்றம் செய்தபோது- அந்த ஆரம்ப அடியே இலக்கணக் குற்றம்
என ஒரு புலவர் சொல்ல, முருகனே முதிர்ந்த புலவனாக வந்து தெளிவு படுத்தி
தரிசனம் தந்தார். காஞ்சி குமரப் பெருமானால் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு
கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் முருகன் அவதாரத்தை
இவ்வாறு கூறுவார்:
அருவமும் உருவமாகி
அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப்
பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு
உதித்தனன் உலகம் உய்ய!
இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம். - நாரதர்
பழம் ஒன்றை சிவனிடம் வழங்க கணபதி சிவபார்வதியை வலம் வந்து பழத்தைப் பெற,
கோபம் கொண்ட பாலன் தண்டம், கௌபீனம் அணிந்து பழனி ஆண்டியானான்.
முற்காலத்தில் பஞ்சாயதன பூஜை என்ற வழக்கமிருந்தது. சிவன், அம்பிகை, கணபதி,
விஷ்ணு, சூரியன் ஆகியோரே அதற்குரிய தெய்வங்கள். சிவ பஞ்சாய தனம் என்றால்,
சிவன் நடுவே இருப்பார். மற்ற நான்கு தெய்வ வடிவங்கள் நான்கு புறமும்
இருக்கும். இதனில் முருகன் இல்லை. திருச்செந்தூர் முருகன் ஆதிசங்கரரிடம்
சிறிது விளையாடினான். சங்கரருக்கு நோய் ஏற்பட்டது. செந்தூர் முருகன்மீது
அவர் புஜங்கம் பாட, நோய் தீர்ந்தது. அதன்பின் முருகனை பஞ்சாயதன தெய்வ
ரூபங்களுடன் சேர்த்து ஷண்மதம் என போற்றி வழிபட வகுத்தார். ஷண்முகனே ஷண்மதம்
என போற்றும் அளவுக்கு பக்தர்கள் வழிபடு கிறார்கள். எனவே முருகனை நாம்
நம்பிக்கையுடன் வழிபட்டால் நமது வினைகள் அனைத்தையும் தீர்த்திடுவான்
என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. கந்தசஷ்டியில் முருகனை வழிபட்டு அவன்
அருளைப் பெற்றிடுவோம்.
திருச்செந்தூரின் கடலோரத்தில் .... உலகில் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதனை அழித்திட
ஆண்டவன் அவதாரம் செய்கிறான். அகங்காரம், காமவெறி கொண்ட இராவணணை மகாவிஷ்ணு,
ராம அவதாரம் எடுத்து அழித்தார். இரண்ய கசிபுவின் ஆணவத்தை அடக்க மகாவிஷ்ணு
நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தார். சூரபத்மாதியர்களை பரமசிவனே
மறுவுருவமாக- சுப்ரமண்யனாக உதித்து அழித்தார். மற்ற அசுரர்களின் அழிவை வதம்
என்று கூறும் நாம் சூரபத்ம அழிவை மட்டும் ஏன் சம்ஹாரம் என்கிறோம். மாமரமான
சூரனை முருகன் வேலால் துளைக்க, அதன் ஒரு பாதி மயிலாகி முருகனுக்கு
வாகனமாகியது. மறுபாதி சேவலாகி, அதனைக் கந்தன் கொடியாக ஏந்தினான். அவர்கள்
ஒப்பந்தமும் அவ்வாறே. இருவரும் மற்றவரை ஏந்த வேண்டும். இந்த மாதிரியான
வினோதம் முருகப் பெருமானுக்கு மட்டுமே.
கஜமுகாசுரனை வென்ற கணபதிக்கு அசுரன் எலியாகி வாகனமானான்; ஆனால் அவனை
கணபதி ஏந்தவில்லை. சுப்ரமண்யன் உதித்தது வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று.
விசாக நட்சத்திரத்தில் தோன்றிய மற்ற இருவர்- கணபதியும் ராதாதேவியும். ராதை-
கண்ணன் மணமும் அந்த நாளில்தான் நடந்தது. சூரசம்ஹாரம் நடந்தது
திருச்செந்தூர் என்பதால், கந்தனின் அவதார தின வைகாசி விசாகப் பெருவிழாவும்
திருச்செந்தூரில் சிறப்பாக நடக்கிறது. மற்ற எல்லா ஆலயங்களிலும் இவ்விழா
விமரிசையாகவே கொண்டாடப்படுகின்றன.
ஆறுமுகமான பொருள் நாம் மகிழ வந்தான்: இறைவனை அடைவதற்குரிய அகச்சமயங்கள் ஆறு. அவை சைவம், வைணவம், காணாபத்யம்,
கவுமாரம், சாக்தம்,சவுரம் என்பன. இந்த ஆறு சமயங்களுக்கும் தனிப்பெரும்
தலைவராக விளங்குபவர் சண்முகநாதர். சமயங்களுக்குரிய சாத்திரப் பொருளாக
நிற்கும் புனித மூர்த்தியும் அவரே ஆவார். ஒரு பெரிய நகரத்திற்கு ஆறு
வழிகள்; அவை பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. பல வகையாக வளைந்து
வருகின்றன. முடிவில் அவை அந்த நகரத்திலேயே வந்து முடிகின்றன. அதுபோல, ஆறு
சமயங்களும் பல்வேறு வகையாக தொடங்கி, பல்வேறு விஷயங்களை போதித்தாலும்
இறுதியில் அவை முழுமுதல் கடவுளான முருகப்பெருமானிடமே முடிவடைகின்றன. ஆறு சமயங்களுக்கும் தலைவன்அவனே என்பதற்கு அறிகுறியாகவே, குமரப்
பெருமானுக்கு ஆறு திருமுகங்கள் விளங்குகின்றன. அந்த ஆறு முகங்களிலும்
ஈஸ்வரனுடைய ஆறு குணங்கள் இலங்குகின்றன. சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம்,
அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களுடன், அம்பிகையின் ஒரு
முகமும் சேர்ந்து முருகப்பெருமான் ஆறு திருமுகம் கொண்டு எழுந்தருளினார்.
சுப்பிரமணிய மூர்த்தியின் ஆறு முகங்களில் ஒரு முகம் ஓம்கார வடிவத்தைஉடையது.
அது இன்பத்தை தருவதாகும். மற்றொரு முகம் ஞான மொழியை மொழியும்.
இன்னொரு
முகம் சரவணபவ என்ற ஆறெழுத்தைக் கூறும் பக்தர்களின் வினைகளைத் தீர்க்கும்.
ஒரு முகம் ஞானசக்தியை ஏவி இன்னருளை தரும். மற்றும் ஒரு முகம் அற
மார்க்கத்திலிருந்து வழுவிய சூரர்களை அழித்தது போல் வீரத்தை தரும். இன்னொரு
முகம், வள்ளி நாயகியின் மனம் கவர்ந்தது போல், பக்தனை தன் பக்கம்
ஈர்க்கும். முருகப்பெருமான் நவரத்ன மாலைகளை அணிந்த மார்பைக் கொண்டவர். மணி
மகுடங்களை உடையவர். அவரது வனப்பை எடுத்துரைக்க மிகச்சிறந்த
எழுத்தாளர்களாலும் முடியாது. இதனால்தான் அருணகிரிநாதர் அவரது ஆறு
முகங்களையும் எழுதரிய அறுமுகமும் என்று பாடினார். அழகில் சிறந்த மன்மதர்கள்
ஆயிரம் கோடிபேர் ஒன்று சேர்ந்தாலும் குமரக்கடவுளின் பாத அழகுக்குக்கூட இணை
வராது. மன்மதனை தன் அழகால் முருகன் ஏளனம் புரிபவன். எனவே, அந்தப்
பெருமானுக்குகுமாரன் என்ற திருநாமம் இலங்குகின்றது. நாம் உலகில் காணும்
அழகெல்லாம் அழிகின்ற அழகு. குமரப்பெருமானின் அழகோ என்றும் அழியாத அழகு.
அவனது அழகை எத்தகைய கைதேர்ந்த சிற்பிகளும் எழுதமுடியாது. முழுமதி போன்ற ஆறு
முகங்களும் ஒளிவீசும் 12 மலர்விழிகளும், வைரம் பதித்த செஞ்சுட்டி போன்ற
திருவாபரணங்கள், ரத்தின குண்டலங்கள் அணிந்த 12 காதுகளும் செந்தாமரை மலர்ந்தது போன்ற 12 திருக்கரங்களும், பவள மலைமேல் வெள்ளியருவி
ஓடுவது போன்ற திருமேனியில் மிளிரும் முப்புரி நூலும், புகழ்பெற்ற
ஆடைகளும், அரைஞாண் மணிகளும், பலவினை அகற்றும் பாதாரவிந்தங்களும் கொண்ட
அவனது திரு உருவத்தின் பேரழகை வர்ணிக்க வார்த்தை இல்லை. கந்தசஷ்டி
திருநாளில் அவன் பாதம் பணிவோம்.
-
வரவேற்கிறார் வாரியார்: ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண
நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின்
நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள்.
சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள்.
அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் - ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை
நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர்
அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள். பெற்ற
தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து
வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம்
ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும்
பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற
வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின்
வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு
ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர
காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம்
ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை
உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை
அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக
ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும்,
குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது. பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான்.
நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான்
பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை
அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை
நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர்
வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும்
செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன்
என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி,
எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும்
திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி
மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம்
நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும்
வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர். அதைப் போல கார்த்திகை
மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும்
கூறுவார்கள். இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர்.
குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார்.
செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக
வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத்
திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்று
வள்ளிமலை சச்சிதானந்தா சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். தென்காசிக்கு
அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு
நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள்.
இவ்விழாவில் படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது.
திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை இவ்வாறு கூறுகிறது: ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்
ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே
ஷடரிம் - காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு
அவகுணங்களை போக்குபவன் கந்தன். ஷட்விகாரம் - உண்டாக்குதல், இருத்தல்,
வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல், என்ற ஆறு செயல்கள் அற்றவன்.
ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு
நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு,
துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் -
ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு
சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம்,
வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல்
ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் -
சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத
அங்கங்களாக இருப்பவன். ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம்,
ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும்
உள்ளவன்.
வடமாநிலங்களில் சட்பூஜை! தமிழ்நாட்டில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை (தீபாவளி) க்குப் பின்
வரும் சஷ்டி திதி அன்று முருகப் பெருமானைப் போற்றி வழிபடுகின்றனர். அன்று
விரதம் கடைப்பிடித்து சஷ்டி விழா கொண்டாடுவதுபோல், வடமாநிலங்களில் சில
இடங்களில் ஐப்பசி மாத சஷ்டியன்று சட் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு
நடைபெறுகிறது. இந்த விழா நீர் நிலைகளில் நடைபெறும் விழாவாகும். தங்கள்
குடும்பத்தினரும், உறவினர்களும் நலமுடன் இருக்க சுமங்கலிப் பெண்கள் மூன்று
நாட்கள் விரதம் கடைப்பிடித்து இவ்வழிபாட்டினைச் செய்கிறார்கள். கங்கை நதி
ஓரங்களிலும்; பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆறு, ஏரி,
குளம் போன்ற நீர் நிலைகளிலும் சூரிய பூஜையை நடத்துவது வழக்கம். பூஜைப்
பொருட்களான வெற்றிலைப் பாக்கு, பூ, பழங்கள், தேங்காய், சந்தனம், கரும்பு,
இனிப்புகள், பலகாரங்களை பெரிய கூடையில் வைத்து ஆண்கள் நீர் நிலைக்கு
எடுத்து வருவார்கள். நதிக்கரையோரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம்
செய்து, கரும்புகளால் கூடாரம்போல் அமைத்து, அதில் பூஜைக்குரிய பொருட்களை
வைப்பார்கள். சுமங்கலிகள் சஷ்டி அன்று மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையிலும், மறுநாள்
விடியற்காலையிலும் நீராடி, சூரியன் உதயமானதும் நீர் நிலைக்குள் நின்று
சூரியனுக்கு அர்க்கியம் விட்டு, மந்திரம் சொல்லி பூஜை செய்வார்கள்.
மாலையிலும் காலையிலும் சூரியனை வழிபடுவதன் நோக்கம்- இரவும் பகலும் எப்படி
சமமாக உள்ளதோ (ஐப்பசியில் இரவும் பகலும் சமமாக இருக்கும்) அதுபோல வாழ்வில்
இன்பமும் துன்பமும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக. தாங்களும், தங்கள்
குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் நலமுடனும் சுகமுடனும்
வாழவேண்டும் என்று சூரியனை வணங்குவதே சூரிய சஷ்டி வழிபாட்டின்
குறிக்கோளாகும். இந்தப் பூஜையை சட் பூஜை, ரவிசஷ்டி என்று வடமாநிலத்தவர்கள்
போற்றுகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)