|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2011

கொரியருக்காக வந்த கிரெடிட் கார்டுகளை வைத்து மோசடி!


நாளொறு மேனியும், பொழுதொரு மோசடியுமாய், உலகம் மாறி விட்டது என்பதற்கு, சென்னையில் நடந்துள்ள, நூதன கிரெடிட் கார்டு மோசடி, வாடிக்கையாளர்களை கலங்கடிக்கிறது. இந்த மோசடி, கிரெடிட் கார்டோடு மட்டும் நில்லாமல், கொரியர் மூலம் அனுப்பப்படும் பல பொருட்களையும், "பதம்' பார்க்கும் சூழல் உருவாவதற்கு முன், சம்பந்தப்பட்டவர்கள், ஏதாவது செய்தே தீர வேண்டும். வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு, கூரியர் மூலம் செல்லும் கிரெடிட் கார்டுகளில் இருந்து விவரங்களை திருடி, புதிய கார்டு தயாரித்து, பண மோசடி செய்த கூரியர் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட நால்வரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்து, வாடிக்கையாளர்களிடம் கார்டு செல்லும் முன்பே, அதில் விவரங்களை பெற்று, புதிய கார்டு தயாரித்து, புதிய, "டெக்னிக்'கை பயன்படுத்தியுள்ள இவர்கள், தாங்கள் தயாரித்த கார்டு மூலம், பலரை ஏமாற்றியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

மோசடியில் இது புதுசு: சென்னை, அண்ணா சாலையில் உள்ள சிட்டி பாங்க், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது. இந்த வங்கியில், கார்டுக்காக விண்ணப்பித்த ஒருவருக்கு, கார்டு வருவதற்கு முன்பே, அவரது கணக்கில், 8,000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியுள்ளதாக, வங்கிக்கு புகார் வந்தது. இது போல், பல வாடிக்கையாளர்கள், வங்கிக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவு மேலாளர் , சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்தார். புகாரில், வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை, ஸ்கிம்மர் மூலம் திருடிய யாரோ ஒருவர், 2 லட்சத்து, 53 ஆயிரத்து, 687 ரூபாய் திருடி விட்டதாக தெரிவித்திருந்தார்.

புகார் தொடர்பாக, மத்திய குற்றப் பிரிவில் வழக்கு பதியப்பட்டு, துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், வங்கி மோசடி தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் ஜான்ரோஸ் தலைமையில், தனிப்படை போலீசார், விசாரணையை துவக்கினர். வாடிக்கையாளரிடம் கார்டு கிடைக்கும் முன்பே, பணம் திருடப்பட்டதால், வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு கார்டை வினியோகிக்கும், "புளூ டார்ட்' கூரியர் நிறுவன ஊழியர்கள் மீது, போலீசின் பார்வை திரும்பியது. போலீசார், அங்கு பணியாற்றும், வியாசர்பாடியைச் சேர்ந்த ஸ்ரீதர், 30, ராயபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 20, ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது, தங்களுக்கு ஆட்டோ டிரைவராக பணியாற்றிய, மூலக்கடையைச் சேர்ந்த பாலாஜி, 32, என்பவரின் பெயரை அவர்கள் ஒப்பித்தனர்.

விசாரணையில், "பகீர்:' தொடர்ந்து, பாலாஜியும் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாவது: பாடிகுப்பத்தைச் சேர்ந்த வினோத், 28, என்ற வாலிபர், ஆட்டோ டிரைவரான பாலாஜியை அணுகி, கூரியர் மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு செல்லும் கார்டு விவரங்களை, ஸ்கிம்மரை பயன்படுத்தி எடுத்துத் தந்தால், ஒரு கார்டு தகவலுக்கு, 1,000 ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இந்த விவரத்தை, கூரியர் நிறுவன பணியாளர்கள் ஸ்ரீதர் மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் கூற, அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் பின், சிட்டி பேங்கில் இருந்து, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும், கூரியர் தபால்களை, வெப்பக்காற்று வீசும் புளோயர் இயந்திரத்தின் மூலம் பிரித்து, கார்டுகளை எடுத்து, அதில் உள்ள விவரங்களை, ஸ்கிம்மர் மூலம் பதிவு செய்து விட்டு, மீண்டும் ஒட்டி, தபால்களை, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விடுவர். அந்த ஸ்கிம்மர் உதவியுடன், கோயம்பேட்டில் உள்ள வினோதின் வீட்டில் வைத்திருக்கும், மும்பையில் வாங்கப்பட்ட என்கோடர், எம்போசர், இ.டி.சி., இயந்திரங்கள் மூலம் புதிய கார்டு தயாரித்து, அதன் மூலம் பணம், பொருள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளது தெரிந்தது.

விக்னேஷ், ஸ்ரீதர், பாலாஜியைத் தொடர்ந்து, வினோதையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கார்டு தயாரிக்கும் இயந்திரங்கள், வாடிக்கையாளர்கள் விவரம், பதிவு செய்யப்படாத காலி கிரெடிட் கார்டுகள், ஸ்கிம்மர்கள், வாட்ச், கேமரா, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள், ஹேமந்த் குமார் என்பவர், சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில், இருவேறு போட்டோக்கள், பிறந்த தேதி மற்றும் தந்தை பெயர் விவரங்களை அளித்து வாங்கிய இரண்டு பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை, போலீசார் தேடிவருகின்றனர்.

கண்டுபிடிப்பதும், தடுப்பதும் கடினம்! கிரெடிட் கார்டு மோசடியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தவிர, சென்னை திருவொற்றியூர், சரஸ்வதி தெருவில் செயல்பட்டு வந்த, திருட்டு டி.வி.டி., தொழிற்சாலையை போலீசார் சோதனையிட்டு, அங்கிருந்த, 250 டி.வி.டி., ரைட்டர்கள் மற்றும் 25 ஆயிரம் சி.டி.,க்களையும் கைப்பற்றினர். இவற்றை, சென்னை குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அபெய்குமார் சிங் பார்வையிட்டார். உடன், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் இருந்தனர்.அப்போது, அபெய்குமார் சிங் கூறும் போது, ""இதற்கு முன்பு பிடிபட்ட கும்பலும், இவர்களும் தனித்தனியாக செயல்பட்டு வருபவர்கள். ஒரு கார்டில் இருந்து டேட்டா திருட, 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. கார்டுகள் மூலம் பணம் திருடப்படுவது தொடர்பாக, தினசரி, புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சைபர் கிரைம் தொடர்பான இந்த குற்றங்களில் எவ்வளவு பேர் ஈடுபட்டிருக்கின்றனர். எங்கிருந்து இவர்கள் செயல்படுகின்றனர் என்பதை கண்டுபிடிப்பது கடினம். இவற்றை தடுப்பதும் கடினம்,'' என்றார்.

பின் நம்பரை மாற்றுங்கள்! மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா கூறும் போது, ""கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஏ.டி.எம்., இயந்திரத்தில் பயன்படுத்துவோர் ஏராளம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுத்தவர்கள் பணத்தை திருடுபவர்களும் அதே அளவிற்கு பெருகிவிட்டனர். எனவே, கார்டுகளை பயன்படுத்துவோர், அடிக்கடி ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றிக் கொண்டால் நல்லது. ஏ.டி.எம்., மூலம் பணம் எடுப்பவர்கள், அதற்கான தனி வங்கிக் கணக்கை கூட பராமரிக்கலாம்,'' என்றார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...