மாதம் இருமுறை சஷ்டி வரும். ஆனாலும், ஐப்பசியில் வரும் கந்தசஷ்டி தனி
விசேஷம் பெற்றது. பழநியில் கந்தசஷ்டியின் போது சின்னக்குமாரர்,
மலையிலிருந்து இறங்கி நான்கு பக்கங்களிலும் நெருங்கும் அசுரர்களைக் கொன்று
குவித்து வெற்றிவாகையுடன் திரும்புவார். இதுதான் சூரசம்ஹாரம். ஏழாம் நாள்
முருகன், வள்ளியை மணந்து கொள்வார். இலஞ்சி ஐப்பசி கந்தசஷ்டி திருநாளில்
முதல்நாள் முதல் ஐந்து நாட்களுக்கு முறையே அயன், அரி, அரண், மகேஸ்வரன்,
சதாசிவனாக கோலம் பூண்டருள்வார் இந்த முருகன். ஆறாம் நாள் வெள்ளிமயில் ஏறி
சூரசம்ஹாரம் செய்வார். கந்தசஷ்டி கவசத்தை இயற்றியவர் பாலன்தேவராயன். எந்தத்
தலத்தில் அரங்கேற்றலாம் என முருகனை வேண்டியதும் சென்னிமலையில்
அரங்கேற்றுமாறு அசரீரி கிடைக்க அவ்வாறே செய்துள்ளார்.
மருதமலை மாமணி: கோவையிலிருந்து 11 கி.மீ., தொலைவில் உள்ள தலம் மருதமலை. இங்குள்ள
முருகப்பெருமான் மருதாச்சல மூர்த்தி என்று போற்றப்படுகிறார்.
மலையடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் வீற்றிருக்கிறார். இவர் சுயம்பு
மூர்த்தியாவார். மலைப்பாதையின் நடுவழியில் இடும்பன் சந்நிதி உள்ளது.
மலையின் மேலே பாம்பாட்டிச் சித்தர் குகையும், சுனையும், மருத தீர்த்தமும்
உள்ளன. சுனையில் உள்ள தண்ணீர் மிகவும் சுவையாக, மருத்துவ குணமுள்ளதாக
உள்ளது. மூலஸ்தானத்தில் நான்கு அடி உயரத்தில் முருகன் காட்சி தருகிறார்.
இத்தலம் அருகிலுள்ள வெள்ளியங்கிரி மலை சிவனாகவும், நீலிமலை அம்பிகையாகவும், இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள மருதமலை முருகனாகவும்
இருப்பதாக ஐதீகம். மலைகளின் அமைப்பு சோமாஸ்கந்த வடிவில் உள்ளது.
கச்சியப்பமுனிவர் எழுதிய பேரூர் புராணத்திலும் இம்மலை பற்றிய குறிப்பு
உள்ளது.
ஆறுமுகனின் அழகு தரிசனம்! சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்த முருகப்
பெருமானின் திருவிளையாடல்கள் எண்ணில் அடங்காதவை. முருகனை நம்பினோர்
கைவிடப்படார் எனச் சொல்வதுண்டு. அந்த ஆறுமுகன் காட்சி தரும் ஆலயங்கள் சில
உங்கள் தரிசனத்துக்காக. கண்குளிர கண்டு மகிழுங்கள்.
மயிலம் முருகன் ! கந்தக் கடவுளை அவன் வாகனமான மயில் வழிபட்ட தலம், மயிலம். திண்டிவனத்தில்
இருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 10கி.மீ.யில் இருக்கிறது. முருகன்
இங்கே வள்ளி, தேவசேனாவுடன் கல்யாண சுப்ரமணியனாகக் காட்சி தருகிறார். விசேஷ
நாட்களில் இவர் தங்கமயில் வாகனத்தில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி.
இத்தலத்தில் திருமுருகனை வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது
நிச்சயம்!
ராதாநல்லூர் முத்துக்குமார சுவாமி: நாகைமாவட்டம், பந்தநல்லூர் பேருந்து தடத்தில் மணல்மேட்டிலிருந்து
1கி.மீ. தொலைவில், ராதாநல்லூரில் உள்ளது வைத்தியநாதசுவாமி ஆலயம். இங்கு
மேற்குப் பிராகாரத்தில் தன் துணைவியர்களுடன் அருள்பாலிக்கிறார்
முத்துக்குமார சுவாமி. இத்தல இறைவனுக்காக வேல் ஊன்றி முத்துக்குமரன்
உருவாக்கிய நதி இங்கு ஓடுகிறது. சுப்ரமணிய நதி என்று முன்பு அழைக்கப்பட்ட
அந்த நதி மண்ணியாறு என்ற பெயரோடு தற்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது.
விளத்தொட்டி பாலமுருகன்: நாகை மாவட்டம், பந்தநல்லூர் - சீர்காழி பேருந்து தடத்தில்
பந்தநல்லூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில், விளத்தொட்டியில் உள்ளது
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மேற்குத் திருச்சுற்றில்
தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார் பாலமுருகன். முருகப் பெருமான்
குழந்தையாய் தொட்டிலில் வளர்ந்த தலம் இது. வளர்தொட்டி என்று முன்பு
அழைக்கப்பட்ட இத்தலம் தற்போது விளத்தொட்டி என அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமான் இங்கு தொட்டிலில் வளர்ந்ததால் இவ்வூர் மக்கள் தங்கள்
வீட்டுக்குழந்தைகளை பிறந்து 10 நாட்கள் வரை தொட்டிலில் போடுவதில்லை. தூளியில் போட்டுத்தான் தாலாட்டுகின்றனர்.
பீமநகர் பால தண்டாயுதபாணி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2கி.மீ. தொலைவில் உள்ள பீமா
நகரில் அமைந்துள்ளது பால தண்டாயுதபாணி ஆலயம். மாதந்தோறும் வளர்பிறை
சஷ்டியில் இங்கு முருகனுக்கு, சத்ரு சம்ஹார மஹா ஹோமம் நடைபெறுகிறது.
காலையில் தொடங்கி இரவு 9 மணி வரை நீடிக்கும் இந்த ஹோமத்தில் ஏராளமான
பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இங்கு செவ்வாய்க்கிழமைகளில் ராகுகால
நேரத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ளும் கன்னியரின் செவ்வாய் தோஷப்
பாதிப்பு விலகி, அவர்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறுவதாக பயனடைந்த
பக்தர்கள் கூறுகின்றனர்.
உறையூர் முருகன்: திருச்சி உறையூரில் உள்ள பாளையம் பஜாரில் உள்ளது சுப்ரமண்ய சுவாமி
திருக்கோயில். இங்கு சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் நான்கு
கரங்களுடன் காட்சி தருகிறார். பிரிவால் பாதிக்கப்பட்ட தம்பதியர் இந்த ஆலயம்
வந்து முருகப் பெருமானை ஏழு செவ்வாய், வெள்ளி நாட்களில் தீபமேற்றி
வழிபட்டு வந்தால், பிணக்கு தீர்ந்து, தம்பதியர் ஒன்று சேர்வது நிஜம்
என்கின்றனர் பக்தர்கள். தம்பதி சமேதராய் அருள்புரியும் முருகன் தம்பதியரை
சேர்த்து வைப்பது வியப்பான விஷயமே.
அய்யப்ப நகர் முருகன்: திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கே.கே. நகர் செல்லும்
சாலையில், நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அய்யப்ப நகரில் அமைந்துள்ளது அழகான
முருகன் ஆலயம். வள்ளி, தெய்வானையுடன் அருள் புரியும் இந்த முருகப்பெருமானை
ஆதவன் கந்தசஷ்டி திருவிழாவின்போது ஆறு நாட்கள் தன் பொற்கதிர்களால்
ஆராதிப்பதைக் காண கண் கோடி வேண்டும். அந்த ஆறு நாட்களும் ஆலயம்
திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
பெருவளநல்லூர் முருகன்: திருச்சி-அன்பில் பேருந்து சாலையில் லால்குடியிலிருந்து 6 கி.மீ.
தொலைவில் உள்ள பெருவளநல்லூரில் அமைந்துள்ளது பிரகதீஸ்வரர் ஆலயம். இந்த
ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார் வள்ளி,
தெய்வானை சமேத முருகன். மிகவும் வரப்பிரசாதியான இவர் மணப்பேறு, மகப்பேறு
உள்பட சகல பேறுகளையும் அருளக்கூடியவர். ஆறுமுகங்களுடன், பன்னிரண்டு
கரங்களுடன் ஒரே கல்லில்வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முருகப்பெருமானை இங்கு தரிசனம் செய்யலாம்.
திருச்சி கல்யாண பாலசுப்ரமணியர்: திருச்சி புகைவண்டி சந்திப்பிலிருந்து 4கி.மீ. தொலைவில் உள்ள
எஸ்.எம்.ஈ.எஸ். காலனியில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் மேல்
திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண
சுப்ரமணியர். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறவும், தாமதமாகும்
திருமணம் இனிதே நடக்கவும் இந்தக் கல்யாண பாலசுப்ரமணியர் அருள்புரியக்
கூடியவர். அதுமட்டுமல்லாமல் குழந்தைப்பேறு, விரும்பிய கல்வி, பொருத்தமான
வேலை, ஆரோக்கியத்தில் அபிவிருத்தி, கடன் தொல்லையிலிருந்து விடுபடல் எனப்
பல்வேறு நற்பலன்களையும் அருளக்கூடியவர் இவர் என்ற நம்பிக்கை இப்பகுதி
மக்களுக்கு நிறையவே உள்ளது.
பூவாளூர் தண்டாயுதபாணி: திருச்சி-லால்குடி சாலையில், லால்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில்
பூவாளூரில் அமைந்துள்ளது திருமூலநாத சுவாமி ஆலயம். இந்த ஆலயத்தின் மேற்குப்
பிராகாரத்தில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார் தண்டாயுதபாணி. தன்னை
நாடும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்து அருள்பாலிக்கிறார்.
ஈச்சனாரி பாலசுப்ரமணிய சுவாமி: கோவை - பொள்ளாச்சி சாலையில், காந்திபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில்,
ஈச்சனாரியில் அமைந்துள்ளது பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம். குருபெயர்ச்சி
மற்றும் பிற கிரகப் பெயர்ச்சி நாட்களில் இங்கு 108 மூலிகைகளைப் பயன்படுத்தி
விசேஷ யாகம் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்வதால் கிரகப் பெயர்ச்சியின்
பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடை உள்ள
பெண்கள் இங்கு இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றனர்
No comments:
Post a Comment