|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 October, 2011

கிருஷ்ணா டிவி- நாளை முதல் ஒளிபரப்பு!


தமிழில் இன்னொரு புதிய ஆன்மீக சானல் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா டிவி என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சி வியாழக்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. பிரபல விளம்பர நிறுவன அதிபர் எஸ்.கிருஷ்ணசாமி இந்த சானலை தொடங்குகிறார். இதன் ஒளிபரப்பு நாளை முதல் தொடங்குகிறது. அரசு கேபிள் கட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 37,000 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் இது ஒளிபரப்பாகவுள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சென்னையில் இதன் ஒளிபரப்பு அடுத்த மாதம் தொடங்குகிறதாம். இந்தப் பேட்டியின்போது கிருஷ்ணசாமியின் மனைவி மோகனா மற்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆஸ்பிரின் சாப்பிட்டால் பார்வை பறிபோகும்!


வலி நிவாரணியாக உட்கொள்ளப்படும் ஆஸ்பிரின் மாத்திரைகளால் கண்பார்வையை பாதிக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி ஒருமுறை அல்லது இரண்டுமுறை ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்பவர்களுக்கு பிற்காலத்தில் கண்பார்வை பாதிக்கும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஐரோப்பாவில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வயதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி தினசரி இரண்டு வேளை ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக்கொண்டவர்கள் கண்பார்வை தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

வலிநிவாரணி மாத்திரைகள்: கண் வலி ஏற்படுவது இல்லையென்றாலும்,படிப்பது, டிரைவ் செய்வது, தொலைக்காட்சி பார்ப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். பல்வேறு நோய்களுக்காக வலி நிவாரணியாக உட்கொள்ளப்படும் ஆஸ்பிரின் மாத்திரைதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.நெதர்லாந்தில் உள்ள நியூரோசயின்ஸ் அக்கடமிக் மெடிக்கல் சென்டரில் பணிபுரியும் பால்ஸ் டி ஜாங் என்பவர் தனது குழுவினருடன் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இதயநோய் பாதிப்புகளுக்காக ஏராளமானோர் ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரைகள் மூலம் விழித்திரைகள் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோவதாகவும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.கேன்சர் குணமாகும் : இருப்பினும் தினமும் குறைந்த அளவான 75 மில்லி கிராம் அளவு ஆஸ்பரின் மாத்திரை சாப்பிட்டு வந்தால் கோலான் எனப்படும் குடல் புற்றுநோய் குணமடைவதாக ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக லான்செட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டு தோறும் கோலோன் கேன்சர் நோயால் 6லட்சத்து 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.ஆஸ்பரின் மாத்திரை புற்று நோயை கட்டுப்படுத்துவதாக ஆக்ஸ்போர்டு பல்கலை கழக் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ரோத்வெல் கூறுகிறார். கடந்த 20 ஆண்டு கால ஆராய்ச்சியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேன்சரால் பாதிக் கப்பட்ட 8 ஆயிரத்து 282 பேருக்கு இந்த மாத்திரையை பயன்படுத்த அறிவுரை கூறியதில் 119 பேர் மட்டு மே இறப்பை தழுவியுள்ளனர். வரும் காலத்தில் இந்த மாத்திரை மற்ற கேன்சர் நோய்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமையும் என்று உறுதியாக கூற முடியும் என தெரியவந்துள்ளதாக பேராசிரியர் ரோத்வெல் கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் அதிகளவில் நீர்!


செவ்வாய் கிரகத்தில் முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீரின் அளவை காட்டிலும், அதிகளவிலான நீர் மூலக்கூறுகள் இருப்பதை புதிய ஆராய்ச்சிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் செவ்வாய் எக்ஸ்பிரஸ் குழு மற்றும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் குழுவின் உதவியுடன் அமெரிக்காவின் நாசா வி்ஞ்ஞானிகள் சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த ஆராய்ச்சிகளில் செவ்வாய் கிரகத்தில் ஆங்காங்கே தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய ஆராய்ச்சி மூலம் செவ்வாய் கிரகத்தில், பூமியில் உள்ளதை போல மேகங்கள் போன்ற வாயு நிலை நீர் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது எதிர்பார்த்ததை விட 100 மடங்கு அதிக அளவிலான தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த நீரை தரையில் பார்க்க முடியாது. இருப்பதும் தெரியாது. வாயு நிலை உள்ள இந்த நீர் துகள்கள் தூசி மற்றும் காற்றில் கலந்துள்ள மற்ற துகள்களோடு கலந்து செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகிறது. இது கிரகத்தில் சில இடங்களில் பனிப்பாறையாக உள்ளது.

காற்றில் தொடர்ந்து தூசு சுற்றிக் கொண்டிருப்பதால், அந்த நீர் துகள்கள் நிலத்தை அடைய முடியாமல் உள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்தில் பார்க்கும் போது தண்ணீர் இல்லாவிட்டாலும், கிரகத்தின் எல்லா இடங்களிலும் நீர் நிறைந்து காணப்படுகிறது.

உறைய' வைத்த கண்டுபிடிப்பு!


உலகம் இறுதியில் எப்படி அழியும்?. இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில் உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும் என்பது. இதற்காகத்தான் அவர்களுக்கு 2011ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு கிடைத்துள்ளது.

இந்த மூன்று அமெரிக்க வி்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இந்த மூவருக்குமே கூட தங்களது கண்டுபிடிப்பு பெரும் வியப்பையே அளித்ததாம். அவர்களால் கூட இதை நம்ப முடியவில்லையாம்.  
சூப்பர் நோவா எனப்படும் வெடிக்கும் நட்சத்திரக் கூட்டங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும்.

14 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிங் பாங் எனப்படும் மிகப் பெரிய அண்டவெடிப்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். பிங் பாங்குக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய வெப்பம் படிப்படியாக குளிர்ந்து நட்சத்திரக் கூட்டம், கிரகஙக்ள் உள்ளிட்டவை உருவாகின. பிரபஞ்சமும் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. அந்த செயல் இன்றும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 
இந்த வேகம் அதிகரித்தால் இறுதியில் உலகம் முழுவதும் பனிப் பிரதேசமாகி உறைந்து போய் விடும் என்பதுதான் இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.

இந்த மூவருமே தனித் தனி அணியாக செயல்பட்டு ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள். ஒரு குழுவுக்கு சால் பெர்ல்மட்டர் தலைமை தாங்கினார். இன்னொரு குழுவுக்கு பிரையன் ஸ்மிட் தலைவராக இருந்தார். பெர்ல்மட்டர் தலைமையிலான குழு தனது ஆய்வை 1998ல் தொடங்கியது. பிரையன் தலைமையிலான குழு தனது ஆய்வை 1994ல் தொடங்கியது. இந்தக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர் ஆடம் ரீஸ்.

தொலைதூர சூப்பர் நோவாவை இவர்கள் கண்டறிந்து அதை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். பூமி மற்றும் விண்வெளியிலிருந்து அதி நவீன தொலை நோக்கிகள் மூலம் இந்த ஆய்வு நடந்தது. இதற்காக அதிக சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இவர்களது ஆய்வுக்குப் பெரும் வரப்பிரசாதமாக வந்தது டிஜிட்டல் இமேஜிங் சென்சார் கருவி. இதைக் கண்டுபிடித்தவருக்கு 2009ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

12க்கும் மேற்பட்ட சூப்பர் நோவாக்களை இவர்கள் ஆய்வு செய்தபோதும் லா சூப்பர்நோவா என்ற ஒன்றை மட்டும் குறிப்பாக தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த சூப்பர் நோவா, பூமியை விட சிறியது, சூரியனின் எடையை விட அதிகமானது. இந்த ஒரு சூப்பர்நோவா மட்டும் ஒரு முழுமையான கேலக்ஸி வெளிப்படுத்தும் வெளிச்சத்தை விட பல மடங்கு அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்துவதை இந்த வி்ஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது.

இதேபோல மொத்தம் 50 சூப்பர் நோவாக்கள் வரை இவர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனர். ஒரு சூப்பர் நோவாவுக்கே இந்த அளவு வெளிச்சம் வரும்போது 50 சூப்பர் நோவாக்களும் சேர்ந்து எவ்வளவு வெளிச்சம் தர வேண்டும்?. ஆனால் அப்படி தரவில்லை. வி்ஞ்ஞானிகள் குழு எதிர்பார்த்த அளவிலான வெளிச்சத்தை அவர்களால் காண முடியவில்லை. இதன் மூலம் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர். 

பிரபஞ்சத்தின் 5 சதவீத பகுதியில்தான் கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமி உள்ளிட்டவை உள்ளன. மீதமுள்ள 95 சதவீத பகுதி டார்க் எனர்ஜி எனப்படும் அறியப்படாத சக்தி அடங்கியவை. எனவே தற்போது இந்த மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துக் கூறியுள்ள தகவல்கள், பிரபஞ்சம் குறித்த ஆய்வுகளுக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. மேலும் நம் முன் விரிந்து கிடக்கும், நம்மால் இன்னும் அறியப்படாத பல புதிர்களுக்கு விடை காண இந்த ஆய்வுகள் முதல் படியாக அமையும் எனக் கருதப்படுகிறது.

அறிவியலில் எதுவும் சாத்தியமே என்பதை இந்த மூவர் குழு மீண்டும் நிரூபித்துள்ளது.

துரைசாமிக்கு ஆதரவாக களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்!


ரசிகர்கள் அவரவர் விருப்பப்பட்ட கட்சிக்கு ஆதரவளிக்கலாம். ஆனால் அவர்கள் எங்கிருந்தாலும் தேவைப்படும்போது 'அழைத்துக் கொள்வேன்'!' -ரசிகர்களின் அரசியல் விஷயத்தில்ரஜினியின் நிலைப்பாடு இதுதான். எனவே திமுக, அதிமுக என்ற கட்சிக் கரைகளைக் கடந்து, தங்களின் சூழலுக்கேற்ப ரஜினி ரசிகர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்த உள்ளாட்சித் தேர்தலில், சென்னை ரஜினி மன்றத்தின் முக்கிய பிரமுகரான சைதை ரவி, தனது ஆதரவை சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிடும் சைதை துரைசாமிக்கு தெரிவித்துள்ளார். சைதை ரவியுடன் உள்ள ஏராளமான ரசிகர்களும் துரைசாமிக்கே தங்கள் ஆதரவு என்றதோடு, களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமை மன்றத்துக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற்றுக் கொண்டுள்ளார் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரவி கூறுகையில், "அண்ணன் சைதை துரைசாமி அவர்களை குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளராக நாங்கள் பார்க்கவில்லை. அதையெல்லாம் தாண்டிய மரியாதைக்குரியவர் அவர். எங்கள் பகுதிக்கு நாங்கள் கேட்காமலே அவர் செய்து கொடுத்துள்ள வசதிகள் கொஞ்சமல்ல. அடிப்படை பிரச்சினை முதல் உயர்கல்வி வரை எந்த உதவி வேண்டுமானாலும் உடனடியாக நாங்கள் போய் நிற்பது சைதை துரைசாமியிடம்தான். அப்படிப்பட்ட மனிதர் சென்னை மேயரானால், இந்த நகருக்கே புதிய பொலிவு கிடைக்கும். மக்களின் மேயராக சைதையார் திகழ்வார்," என்றார்.

ரஜினியைச் சந்தித்து ஆசி பெற அனுமதி கோரியுள்ளார் சைதை துரைசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

பெருவில் செக்ஸ் அடிமைகளாக இருந்த உட்பட 300 இளம்பெண்கள் மீட்பு!


பெரு நாட்டில் செக்ஸ் அடிமைகளாக இருந்த 10 சிறுமிகள் உட்பட 300 இளம்பெண்களை அந்நாட்டு போலீசார் விடுவித்தனர். பெரு நாட்டில் உள்ள சுரங்கங்களில் இருந்து அதிகளவிலான தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. தங்கம் உற்பத்தியில் உலகிலேயே பெரு 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பெரு நாடு பலான விஷயத்திலும் கொஞ்சம் அப்படி இப்படி தான் என்பது சமீபக் கால போலீஸ் ரெய்டுகள் மூலம் தெரிய வருகிறது.

பெரு நாட்டில் உள்ள அமசான் பகுதியில் பல வர்த்தக பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் சட்டவிரோதமான தங்க சுரங்கத் தொழிலும் அதிகமாக நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் 400 பேர் அடங்கிய போலீஸ் படை, அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து, ரெய்டு நடத்தினர்.

இதில் அங்கு இயங்கி வந்த பல கடைகளில் இளம்பெண்களே அதிகளவில் வேலை செய்து வருவது தெரிந்தது. மேலும் அவர்கள் மறைமுகமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது தெரிந்தது. அந்த வகையில் இங்கிருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை சோதனையிட்டு, விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 300 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் 10 பேர் 15 வயதை கூட எட்டாதவர்கள்.

அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்திய 4 பேரை பியூர்டோ மால்டோநன்டோ என்ற இடத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வயதிற்கு கூட வராத சிறுமிகளுக்கு இங்குள்ள கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டி இங்கு கூட்டி வரப்படுகின்றனர். இதற்காக சில பெண் புரோக்கர்கள் உள்ளனர்.

இதேபோல கடந்த மாதம், மேட்ரி டி டியோஸ் மாநிலத்தில் செயல்படும் சட்டத்திற்கு புறம்பான சுரஙகளில் செக்ஸ் அடிமைகளாக கொடுமைப்படுத்தப்பட்ட 1,100 சிறுமிகளை தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டது. இதுமட்டுமின்றி நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள உரிமை பெறாத பார்களில் பெண் அடிமைகளை வைத்து விபச்சாரம் நடந்து வருவதையும், அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இந்த தகவலை பெரு நாட்டு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

காதலனை பார்க்க துறவி வேடம் போலி விசா பெற்ற பெண் கைது!


அமெரிக்காவில் உள்ள காதலனை பார்க்க விரும்பிய, நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண் புத்து துறவி வேஷத்தில் போலி பாஸ்போர்ட் பெற்று கைதானார். பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்பவர் சாம்சோ டோல்மா (25). இவர் அமெரிக்க செல்ல விசா கேட்டு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரது ஆவணங்களை பரிசோதித்த அதிகாரி, அவர் 2 பாஸ்போர்ட்களை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

பிறந்த தேதி, போட்டோ, பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் போலியாக சமர்ப்பித்து, கடந்த 2005ம் ஆண்டு கொல்கத்தாவில் புத்த துறவியை போல வேஷமிட்டு முதல் பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார்.

அதன்பின் 2010ம் ஆண்டு டெல்லியில் உண்மையான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக, சாம்சோ-வை, ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில் சாம்கோ கூறியதாவது, நேபாள சேர்ந்த நான் குடும்பத்தில் 3வது பெண்பிள்ளை. 10ம் வகுப்பு படிப்பை முடித்து எனது 2 மூத்த சகோதரிகளை போல நானும் புத்த துறவியாக செல்லும்படி குடும்பத்தாரால் நிர்பந்திக்கப்பட்டேன். முதலில் அதற்கு ஒப்பு கொண்ட போதும், தற்போது அமெரிக்காவில் உள்ள ஒருவர் மீது காதல் வயப்பட்டேன்.

இதனால் துறவறத்தில் இருந்து விலகி, கொல்கத்தா வந்தேன். அங்கு பாஸ்போர்ட் ஏஜன்ட் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்து, அமெரிக்க செல்ல முயன்றேன். அதில் தோல்வியடைந்து, பாஸ்போர்ட்டும் தொலைத்துவிட்டேன். பின் 2010ம் ஆண்டு டெல்லி சென்று உண்மையான பெயரில் பாஸ்போர்ட் எடுத்து அமெரிக்க செல்ல தற்போது முயன்ற போது, அதிகாரிகளிடம் சிக்கினேன், என்றார். இதையடுத்து சாம்சோ-வை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

சிகரெட்டால் 40 மல்லியன் மக்கள் பலி!

புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக 2050ல் 40 மில்லியன் மக்கள் பலியாவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து கலிபோர்னியா பல்கலை சார்பில் இந்தியவை சேர்ந்த மருத்துவர் சஞ்சய் பாது மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இவர்களது ஆய்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புகைப்பிடிக்கும் காரணமாக 2010 முதல் 2050 வரை 40 மில்லியன் மக்கள் பலியாõர்கள் என்றும், 18 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்படுவார்கள் எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

32 ஆண்டுகளுக்குப் பின் புதிய பாடத் திட்டம்!


மேல்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வி பிரிவின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு, 32 ஆண்டுகளுக்குப் பின், நடப்பு கல்வியாண்டில் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த, 60 பாடப் பிரிவுகளில், போணியாகாத, 54 பாடப் பிரிவுகளை நீக்கிவிட்டு, புதிய பாடப் பிரிவுகளுடன், 12 பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டப்படி, வரும் மார்ச்சில் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள, 2,400 மேல்நிலைப் பள்ளிகளில், 1,605 பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதில், ஒன்றரை லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.32 ஆண்டுகளாக மாற்றமே இல்லைகடந்த, 1978ல் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, தொழிற்கல்விப் பிரிவும் அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்பின், கலை, அறிவியல் பிரிவு பாடத் திட்டங்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்த நிலையிலும், தொழிற்கல்வி பிரிவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் ஒதுக்கி வைக்கப்பட்டன.இதன் காரணமாக, 32 ஆண்டுகளாக, காலத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படாமல் இருந்தது.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகிகள், தற்போது வேலை வாய்ப்பு அதிகம் உள்ள துறைகளை கண்டறிந்து, அதற்கேற்ப புதிய பாடத்திட்டம் எழுத வேண்டும் என்று, தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக, புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

9 புதிய பாடப் பிரிவுகள்: 1. பொது இயந்திரவியல்2. மின் இயந்திரங்களும், சாதனங்களும்3. மின்னணு சாதனங்கள்4. துணிகளும், ஆடை வடிவமைத்தலும்5. வேளாண் செயல்முறைகள்6. உணவு மேலாண்மையும், குழந்தை நலனும்7. செவிலியத் துறை8. கட்டட பட வரைவாளர்9. அலுவலக மேலாண்மை
3 பழைய பாடப் பிரிவுகள்10. கணக்குப்பதிவியலும், தணிக்கையியலும்11. ஆட்டோ மெக்கானிக்12. டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி

இடியும் நிலையில் தாஜ்மகால் ஆராய்ச்சியாளர்கள்!


யமுனை ஆற்றின் மாசுபாடு காரணமாக தாஜ்மகாலின் அடிக்கட்டுமானத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடருமானால், இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ்மகால் இடியும் நிலை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காதல் மனைவி மும்தாஜூக்காக யமுனை நதிக்கரையில் 358 ஆண்டுகளுக்கு முன் ஹாஜகான் கட்டிய காதல் ஓவியம் தாஜ்மகால். முற்றிலும் பளிங்கு கற்களால் பளீரென கட்டப்பட்ட இந்த மாளிகை மெல்ல மெல்ல தன் பொலிவை இழந்து வருகிறது. ஆக்ரா நகரின் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் மாசுக்கள், காடுகள் அழிப்பு மற்றும் யமுனை நதி மாசுபாடு காரணமாக தாஜ் மகால் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. யமுனை நதி மாசு காரணமாக, தாஜ் மகாலின் அடிக்கட்டுமானத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரிப்பு தாஜ்மகால் முழுமையையும் சிதைக்க தயாராகி வருகிறது.

இந்நிலையில், தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ஆக்ரா எம்.பி., ராம்சங்கர் கதேரியா, தாஜ்மகாலை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் அது முற்றிலும் இடிந்து விடும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தாஜ்மகாலின் அடித்தளம் கடினமான மரத்தால் ஆனது. யமுனையின் மாசு காரணமாக அதில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு அதை பார்க்க அனுமதிப்பது இல்லை என்று தெரிவித்தார். 

ஜாக்கிசானின் 100வது படம் தமிழகம் முழுவதும்!


அதிரடி மன்னன் ஜாக்கி சான் நடித்திருக்கும் 100வது படமான "1911" அக்டோபர் 13ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தை தமிழகம் முழுவதும் வால்மார்ட் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறது. ஹாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகர்களில் ஜாக்கிசானும் ஒருவர். அசத்தும் அதிரடி சண்டைக்காட்சிகளிலும், குறும்புதனமான காமெடியாலும் ரசிகர்களை கவர்ந்தவர். 57வயதான ஜாக்கிசான் இப்போதும் சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் 1911. ஜாக்கிசானின் 100வது படமான இப்படம் புரட்சி படமாகும். 

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பசி, பட்டினி, வறட்சி என்று கடுமையான நெருக்கடி நிலைக்கு சீனா ஆளாகிறது. நாட்டை ஆளும் குயிங் வம்சத்தை சேர்ந்த ஏழு வயது அரசனும், அவரது இரக்கமற்ற அம்மாவும் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை அடிமைப்படுத்துகின்றனர். இதனால் நாட்டில் கிளர்ச்சி ஏற்படுகிறது. கிளர்ச்சியை ஒடுக்க ராணுவத்தை ஈடுபடுத்துகிறது குயிங் அரசு. இந்தசமயத்தில் ஜப்பானிலிருந்து அதிநவீன ராணுவ பயிற்சியை முடித்து நாடு திரும்புகிறார் ஜாக்கிசான். குயிங் வம்சத்திடம் நாடு அடிமைப்பட்டு கிடப்பதை பார்த்து, மக்களோடு மக்களாக நின்று போர் புரிந்து நாட்டை மீட்க போராடுகிறார். கடைசியில் அதில் வெற்றி‌ பெற்றாரா... இல்லையா... என்பதே படத்தின் கதை.

படத்தின் போர்காட்சிகள் உட்பட ஒவ்வொரு காட்சியையும் தத்ரூபமாக படமாக்கியுள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் சிலநாடுகளில் ரிலீசாகியுள்ளது. இந்தியாவில் வருகிற அக்டோபம் 13ம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதில் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை வால்மார்ட் பிலிம்ஸ் பெற்றுள்ளது.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்த முடியும்!

புற்றுநோய் பற்றி ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும் என சென்னை அடையாறு புற்றுநோய் மையத் தலைவர் டாக்டர் சாந்தா தெரிவித்தார். சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் 50 ஆண்டு கால தலைவரும், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.ராமன் பேத்தியும், நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர் மருமகளும், பத்மஸ்ரீ, பத்மபூசன் விருது பெற்றவருமான டாக்டர் சாந்தா காயல்பட்டணம் வருகை தந்தார். காயல்பட்டணம் கே.எம்.டி.ஆஸ்பத்திரியில் வைத்து பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு காயல்பட்டணம் கே.எம்.டி.ஆஸ்பத்திரி செயலாளர் முஹம்மது அபூபக்கர் தலைமை வகித்தார். தொழிலதிபர் செய்யத் அஹ்மது, அடையாறு புற்றுநோய் மையத்தின் ரேடியேஷன் துறை தலைவர் டாக்டர் செல்வலெட்சுமி, எபிடமோலஜி பிரிவு துறை தலைவர் டாக்டர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் தர்வேஷ் முஹம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சாலி ஹ் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட டாக்டர் சாந் தா தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் ஒருவர் வயதான காலகட்டத்தில் கேன்சர் வந்து இறந்துவிட்டால் கருமவியாதி என கூறினர். இதனை குணப்படுத்த முடியாது என்றனர். ஆனால் இன்று விஞ்ஞான வளர்ச்சியினால் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. கேன்சர் வந்துவிட்டால் இனி அவ்வளவுதான் என்று நினைத்து விட்டு வெளியில் கூறவதற்கே பயப்படுகின்றனர். இதனை மறைக்கின்றனர். ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது. கேன்சர் ஒரு நோய் அல்ல. ஒவ்வொரு கேன்சரும் ஒவ்வொரு மாதிரி உள்ளது. நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு காரணங்களினால் உண்டாகிறது. இதனை ஆரம்ப காலத்திலேயே கண்டு சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது. புகையிலையினால் ஏற்படும் கேன்சர் ஆண்களுக்கு 40 சதவீதம் ஏற்படுகிறது. கேன்சராக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்து கொள்வதற்கு 7 அடையாளங்கள் உள்ளன. உடலில் தசை தடிப்பு பகுதியில் கட்டிகள் அதிகம் ஆகிக் கொண்டே இருந்தாலோ, உடலில் வாய், மூக்கு, கண் போன்று 7 துவார பகுதி உள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் இருந்து ரத்தமோ, துர்நாற்ற கசிவோ இருந்தாலோ தொடர்ந்து அஜீரண கோளாறு இருந்தாலோ, உரிய மருத்துவ சிகிச்சை பெற்றும், தொடர்ந்து இருமல், தொண்டை கரகரப்பு இருந்தாலோ, மச்சம், மறு போன்றவை பெரிதாகி கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக உரிய டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மொபைல்போன் அதிகமாக பேசக்கூடாது. முற்றிலும் குணப்படுத்தப்பட்ட மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கு 85 சதவீதம் வாய்ப்பு இல்லை. மீண்டும் வந்தால் அது முதலாவது வந்ததனால்தான் என்றில்லை. புதிதாக இருக்கலாம் இவ்வாறு டாக்டர் சாந்தா தெரிவித்தார்

அபிராமி சொந்த ஊர் சேலம்!


ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து, இன்று டில்லியில் உள்ள அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய தேர்வாகியுள்ள அபிராமி: என் சொந்த ஊர் சேலம். நான் பிளஸ் 2வில், 1,101 மார்க் எடுத்தேன். எனக்கு இன்ஜினியராக வேண்டும் என்று ஆசை. ஆனால், என் குடும்பச் சூழ்நிலையால், என்னால் படிக்க முடியவில்லை. அதனால், மனதை தேற்றிக் கொண்டு, பி.எஸ்சி., இயற்பியல் சேர்ந்தேன். அதன் பின், பி.எட்., முடித்துவிட்டு, ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன். இந்த சமயத்தில் தான், குரூப் தேர்வுகளை எழுத ஆரம்பித்தேன். அதற்காக இடைவிடாமல் படித்தேன். வங்கித் தேர்வுகள் உட்பட ஒன்றுவிடாமல் எழுதினேன். கடைசியில், தபால் துறையில் கிளர்க் வேலை கிடைத்தது. அதன் பின்பும், குரூப் தேர்வுகள் எழுதுவதை விடவில்லை. அப்போது தான், ஸ்டாப் செலக்ஷன் கமிஷனில் இருந்து அறிவிப்பு வந்தது. இந்த தேர்விற்காக நான்கு மாதம் முழு முயற்சியுடனும், ஈடுபாட்டுடனும் படித்தேன்.
என் முயற்சிக்கான பலன் கிடைத்து விட்டது. இந்தத் தேர்வில், தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள ஆட்களில், நானும் ஒருத்தி. டில்லி மத்திய அமைச்சரவை அலுவலகத்தில் வேலை. வரும் நவம்பர் மாதம் போஸ்டிங் கிடைக்கும். நான் ஒவ்வொரு தேர்வு எழுதும் போதும், வேதனைப்பட்ட விஷயம், ஊழல் தான். எங்கு திரும்பினாலும், பணம் கேட்டு நச்சரித்தனர். கையில் பணத்துடன் போனால், வேலை சுலபமாக முடிந்துவிடும் என்ற நிலை இன்று, நிறைய இடங்களில் உள்ளது. அந்த நிலையை மாற்ற, நான் முயற்சி செய்வேன். ஊழலற்ற அதிகாரியாக நான் எப்போதும் செயல்படுவேன். இன்று, டி.என். பி.எஸ்.சி., மட்டும் தான் உள் ளது என்று நிறைய பேர் நினைக்கின்றனர். நிறைய வாய்ப்புகள் உள்ளன. முறையான தேடுதலும், அதற்கான கடின உழைப்பும் நம்மிடம் இருந்தால், அனைத்திலும் சாதிக்கலாம்; இதற்கு நானே உதாரணம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...