ஐரோம் ஷர்மிளா சானு... மணிப்பூர் மாநிலத்தின் இரும்புப் பெண்மணி. 'ஆணின் போக நுகர்வுக்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டது பெண்ணுடல்’ என்று காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட கற்பிதத்தைத் தகர்த்துத் தரை மட்டமாக்கி, தன் உடலை ஆதிக்க அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு வலிமை மிக்க போர்க் கருவியாக்கிய காந்தியப் போராளி ஷர்மிளா. ஜனநாயக உரிமைகளை முற்றாக மறுதலிக்கும் ஒரு கொடிய ராணுவச் சட்டத்துக்கு எதிராக, 10 ஆண்டுகளுக்கு மேல் இன்று வரை தொடர்ந்து இது வரை உலகம் கண்டறியாத உண்ணாவிரதப் போரை, மகாத்மாவை மனதில் நிறுத்தி நடத்தி வரும் நம் வாழ்காலத் தேவதையே ஷர்மிளா. மணிப்பூர் மாநிலம், மலை சூழ்ந்த பூமி; வட கிழக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் தீவிரவாத அமைப்புகளின் சரணாலயம்; சீரான வளர்ச்சி இல்லாத, புறக்கணிக்கப்பட்ட பிரதேசம். மணிப்பூரை ஒரு சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுயேச்சை நாடாக்கும் முயற்சி 1964-ல் தொடங்கியது. அதற்கு முன்பே, நாகர்களுக்குத் தனி நாடு தாகம் உருவாகிவிட்டது. பிரிவினைவாதிகள் ஆயுதம் தாங்கி, வன்முறைக் கிளர்ச்சிகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். பேச்சுவார்த்தைகள் பெரும் பயன் அளிக்காததால், இந்திய அரசு ராணுவ சட்டங்களைக் கடுமையாக்கியது. பலாத்காரத்தை வெல்வதற்கு பலாத்காரத்தால் இயலாது என்பதை, உலகம் முழுவதும் உள்ள ஆட்சியாளர்கள் உணர்வது இல்லை. நெருப்பை அணைக்க நெய்யைப் பயன்படுத்தும் மத்திய அரசின் அணுகுமுறையில் மணிப்பூர் மக்கள் மனம் கசந்தனர்.
இந்திய வரைபடத்தில் இருந்து மணிப்பூரைப் பிரித்தெடுக்க, 34 போராளிக் குழுக்கள் முயன்று வருகின்றன. இவற்றுள், ஐக்கிய விடுதலை முன்னணி, மக்கள் புரட்சிகர இயக்கம், மணிப்பூர் மக்கள் விடுதலைப் படை ஆகிய மூன்றும் முக்கியமானவை. இந்த மூன்று தீவிரவாத அமைப்புகளிலும் ஏறக்குறைய 7,000 பேர் இயங்குகின்றனர். இவர்களை ஒடுக்கவே இந்திய அரசு, ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் இயற்றியது. ஆயுதப் படை அதிகாரிகள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, சந்தேகத்துக்கு உரிய யாரையும் கைது செய்யலாம்; கலவரத்தில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கி சூடு நடத்தலாம்; எந்த இடத்தையும் முன் அனுமதி இன்றிச் சோதனையிடலாம்; இவர்களுடைய நடவடிக்கைகளை நீதித் துறை உட்பட எந்த அமைப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. இந்தச் சூழலில்தான், ஐரோம் ஷர்மிளா காந்திய ஆயுதத்தைக் கையில் எடுத்தார்.
'மலோம்’ என்ற பெயரில் அழைக்கப்படும் கிராமம் 'இம்பால்’ விமான நிலையத்துக்கு அருகில் உள்ளது. அங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் 2 நவம்பர், 2000 அன்று எந்தக் குற்றத்திலும் ஈடுபடாத 10 அப்பாவி மக்கள் குழுமி இருந்தனர். வன்முறையாளர்கள் நடத்திய வெடிகுண்டு சம்பவத்தில் வெறியேறிப்போன பாதுகாப்புப் படையினர் ஒரு ராணுவ வாகனத்தில் வேகமாக வந்து இறங்கினர். அவர்கள் பொழிந்த துப்பாக்கி மழையில் 10 அப்பாவிகளும் பலியாகினர். இதயத்தில் ஈரம் இல்லாதவர்கள் கண நேரத்தில் நடத்திய ஊழிக் கூத்தில் பெருக்கெடுத்த ரத்தம் மலோம் மண்ணை ஈரப்படுத்தியது. அடுத்த நாள் ஊடகங்கள் சுமந்து வந்த இந்த சோகத்தால், ஷர்மிளாவின் மனம் அதிர்ச்சிக்குள்ளானது. அவர் எந்த அமைப்பையும் சார்ந்தவர் இல்லை. எந்தப் பின்புலமும் அவருக்கு இல்லை. ஆனால், மனிதநேயம் அவரைத் தனி ஒரு காந்தியப் போராளியாகக் களத்தில் இறங்கத் தூண்டியது. தன் தாயின் நல்லாசியுடன் 'மலோம் படுகொலை’ நடந்த இடத்தில் உண்ணாவிரதப் போரைத் தொடங்கினார். 'ராணுவ சட்டம் ரத்தாகும் வரை, என் உண்ணாவிரதம் தொடரும்’ என்று அவர் 5 நவம்பர், 2000 அன்று அறிவித்தார். 10 ஆண்டுகளுக்கு மேல் அவருடைய லட்சியப் போர் நீடிக்கிறது. உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் உண்ணாவிரதம் இருப்பவர் ஷர்மிளா. இது எப்படி அவருக்கு சாத்தியமானது?
உண்ணாவிரதம் தொடங்கியபோது ஷர்மிளாவின் வயது 28. அவர் உண்ணாவிரத்தில் அமர்ந்த மூன்றாம் நாள் கைது செய்யப்பட்டார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஒரு பொய் வழக்கு போடப்பட்டது. நீதிமன்றக் காவலிலும் அவருடைய உண்ணாவிரதம் நீடித்ததால், உடல்நிலை மோசமானது. ஜவஹர்லால் நேரு மருந்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷர்மிளாவின் மூக்கு வழியாக வலுக்கட்டாயமாக உணவைச் செலுத்த முற்பட்டனர். முடியவில்லை. தண்ணீர் அருந்தவும் மறுத்துவிட்டார். நாட்கள் நடந்தன. மரண வாசல் ஷர்மிளாவின் விழி முன் விரிந்தது. லட்சியம் நிறைவேறுவதற்குள் உயிர் துறப்பது விவேகம் இல்லை என்ற தெளிவு பிறந்தது. மூக்கின் வழியே குழாய் மூலம் வெறும் திரவத்தை மட்டும் மருத்துவர் செலுத்த அனுமதித்தார். ஓர் ஆண்டு இந்த நிலை நீடித்தது. தற்கொலை முயற்சிக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 309 அதிகபட்சம் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை மட்டுமே குறிப்பிடுவதால், ஷர்மிளா 21 நவம்பர் 2001-ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான ஷர்மிளா வீட்டுக்குச் செல்லவில்லை. இம்பாலில் பொது இடத்தில் மீண்டும் உண்ணாவிரதப் போரைத் தொடர்ந்தார். காவல் துறை கைது செய்தது. ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் காவல் துறை ஷர்மிளாவை விடுவிப்பதும், உண்ணா விரதத்தில் ஈடுபடும்போது சிறைப்படுத்துவதுமாகப் 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மணிப்பூரில் பாமோன் காம்பு பகுதியைச் சேர்ந்த தங்கஜம் மனோரமா என்ற பெண், பாதுகாப்புப் படையினரால் 11 ஜூலை, 2004-ல் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. 'அஸ்ஸாம் ரைஃபிள்ஸ்’ தலைமை அலுவலகத்தின் முன்பு ஊர்வலம் நடத்திய பெண்களில் 12 பேர் ஆடையின்றி நிர்வாணமாக நின்றனர். அவர்களில் சிலர் 'ராணுவமே! எங்களைக் கற்பழிக்க வா!’ என்ற வாசகம் அடங்கிய விரிப்பைப் பிடித்தபடி தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அப்போதுதான் இந்திய ஊடகம் மணிப்பூரில் கால் பதித்தது. ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போரை அறிந்துகொண்டது.
ஒவ்வோர் ஆண்டு முடிவிலும் விடுவிக்கப்படுவதுபோல், 2006 அக்டோபரிலும் விடுவிக்கப்பட்ட ஷர்மிளா, அரசின் கண்காணிப்பை மீறி, ஆதரவாளர்களுடன் புது டெல்லி புறப்பட்டார். காந்தி அடிகளின் ராஜ்காட் சமாதியில் நுழைந்தவர், 'மகாத்மா இன்று உயிரோடு இருந்தால், மணிப்பூரில் ராணுவ சட்டத்துக்கு எதிராக மக்கள் இயக்கம் நடத்துவார். எங்களுடைய போராட்டத்துக்கு இந்திய மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அங்கே இருந்து நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜன்தர் மந்தரில் வந்து உண்ணா விரதத்தில் அமர்ந்தார். திரவ உணவையும் நிராகரித்துவிட்டு மூன்று நாட்கள் உண்ணா விரதம் இருந்தவரின் உடல்நிலை மோசமானதும், காவல் துறை கைது செய்து, அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் கொண்டுசேர்த்தது. பின்னர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஷர்மிளா, மீண்டும் இம்பாலை அடைந்தார். தற்கொலை முயற்சி என்ற பெயரில் திரும்பத் திரும்ப அவர் கைது செய்யப்படுகிறார். அவருடைய மூக்கில் ரப்பர் குழாய் நிரந்தரமான இடத்தைப் பெற்றுவிட்டது.
'உங்கள் மீது அரசு 'தற்கொலை முயற்சி’ என்ற குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கு உங்கள் பதில் என்ன?’ என்று கேட்டபோது, 'தற்கொலை செய்துகொள்ள நான் விரும்பினால், மின்சாரத்தில் கை வைக்கலாம். தூக்கில் தொங்கலாம். உண்ணா விரதம் ஏன் இருக்க வேண்டும்?’ என்று சிரிக்கிறார் ஷர்மிளா. நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, 'புகழுக்கும் பரிசுக்கும் விருந்துக்கும் நான் உண்ணாவிரதம் இருக்கவில்லை’ என்றார். 'வன்முறை கொதி நிலையில் உள்ள மண்ணில் மகாத்மாவின் போர் முறையைப் பின்பற்றும் மனம் எப்படி வந்தது?’ என்று கேட்டால், 'ஆன்மிக உணர்வுக்கு வடிவம் தருவதுதான் மகாத்மாவின் உண்ணா நோன்பு. பகைமையற்ற புரிந்துணர்வின் அடிப்படையில்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்’ என்று பதில் தருகிறார் அந்த தேவதை.
ராணுவ சட்டங்களால் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கு மேல், தன் மெல்லிய உடம்பை ஆயுதமாகக்கொண்டு நடத்தும் யுத்தத்தில், இன்று ஷர்மிளா இளமைப் பொலிவிழந்து, உள்ளுறுப்புகள் அனைத்தும் உருக்குலைந்து, மாதவிடாய் சுழற்சி முற்றாக முடிந்து, எழுந்து நிற்கும் சக்தி இழந்து, உயிர் உடம்பில் ஊசலாட, 30 கிலோ எடை உள்ள வெறும் எலும்புக்கூடாய், ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் மானுட சுதந்திரத்துக்காக நம்பிக்கையோடு சிலுவை சுமக்கிறார். ஆயுதப் படையின் சிறப்பு அதிகார சட்டம் அரசினால் திரும்பப் பெறப்படுமா? அல்லது... மனித இனம் காலப் பெருவெளியில் அரிதினும் அரிதாகக் காணக்கூடிய ஐரோம் ஷர்மிளா சானு என்ற தேவ மகளின் உயிர் மூச்சு விரைவில் ஒரு நாள் காற்றில் கலந்துவிடுமா? காலம் பதில் சொல்லும்!
நன்றி: ஜூ.வி.